செவ்வாய், 11 மார்ச், 2014

எஸ். எஸ். வாசன் - 1

எங்கள் ஆசிரியர் 
கொத்தமங்கலம் சுப்பு

மார்ச், 10, 1903. எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள். 


அவர் நினைவில், கொத்தமங்கலம் சுப்பு விகடனில் 1969-இல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.




"கொத்தமங்கலம் சுப்பு ஒரு குழாய்; அதைத் திறந்து விட்டால், கற்பனை கொட்டும் என்று மாலி கூறினார். அதனால், உங்களை மாசம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு வைத்துக் கொள்கிறேன்" என்றார் வாசன்.

அன்பர் பி.எஸ்.ராமையாவும் நானும் 'மதன காமராஜன்' படத்தில் உழைக்கத் துவங்கினோம். வாசனின் மேதாவிலாசத்தை அந்தப் படத்திலேயே கண்டேன்.

'இந்தப் படத்தில் மொத்தம் 31 கரகோஷங்கள் கிடைக்கும்' என்று மதிப்பிட்டார் வாசன். படத்தை முடித்து ஸ்டுடியோவில் பலர் முன்னிலையில் போட்டுக் காட்டியதில், 30 கரகோஷங்கள் தான் கிடைத்தன; மீதி ஒன்று எதனால் விட்டுப்போனது என்று ஆராய்ந்தார். அதைக் கண்டு பிடித்து, அந்தக் காட்சியை மறு படியும் டி.எஸ்.துரைராஜ் அவர் களைக் கொண்டு 'ரீ டேக்' எடுத்துப் பிறகு போட்டுக் காட்டினார். 31 கரகோஷங்களும் கிடைத்தன. 'ஒரு கரகோஷத்திற்கா இந்தப் பாடு' என்று எல்லோரும் எண்ணினார்கள். ஆனால், அந்த ஒரு கரகோஷத்தின் வசூல் ஒரு லட்சம் என்பது அவருக்குத் தெரியும்.

வேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் ஷூட்டிங் மும்முரத்தில் வெறும் ரொட்டியைத் தின்றுவிட்டுப் படம் எடுப் பார். அதிலும், 'சந்திரலேகா' படப்பிடிப்பின்போது அவர் பட்டபாடு சொல்லத் தரமன்று.
ஸ்டுடியோவில் மூலைக்கு மூலை யானைகளும் குதிரைகளும் கட்டிக்கிடக்கும். அகழிகளின் அருகில் காவலர்கள் நிற்பார்கள். எங்கு பார்த்தாலும் அரண்மனைகளாக இருக்கும். அந்தப்புரப் பணிப் பெண்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். போர்ட்டிகோக்களில் அரண்மனைக் கோச்சுகளும், 'நான்கு குதிரை சாரட்'டுகளும் நிற்கும். 'மெஸ்'ஸிலிருந்து அரண்மனைச் சமையல் மணம் வந்துகொண்டே இருக்கும். வாத்தியக்காரர்களும் சங்கீத வித்வான்களும் கொண்ட ஜெமினி ஆர்கெஸ்ட்ரா முழங்கிக்கொண்டே இருக்கும். 'நம்பர் ஒன்' ஸ்டுடியோவில் ஜெர்மன் மாது ஒருத்தி 100 நாட்டிய வனிதைகளை ஆட்டி வைத்துக்கொண்டு இருப்பாள். ஆயுத சாலைகளில் கத்திகள் தயார் ஆகும். ஸ்டன்ட் வீரர்களும், ரஞ்சன், ராதா, சியாம்சுந்தரும், சோமுவும் வாட்போர் நடத்திக் கொண்டே இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோவே ஒரு பெரிய சமஸ்தானமாகக் காட்சி அளிக்கும். ஆனால், 'எங்கே அந்த சமஸ்தான மன்னர்? ராஜா எங்கே?' என்று கேட்டால், ஒரு தொளதொளத்த கதர் சட்டையையும், அதன் மேல் மூன்று முழத் துண்டையும் போட்டுக் கொண்டு, அவர் எங்கும் இருப்பார். 

புதிதாய் அமர்த்திய தொழிலாளர்கள் சிலர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்... "எங்கே தம்பி, முதலாளி? இதைப் பார்க்கவே வரமாட்டேங்கறாரே?"

"பட முதலாளி இல்லியா... எத்தினியோ வேலை இருக்கும்!"
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தங்கள் அருகில் நிற்கும் எளிய மனிதர் தான் முதலாளி என்பது தெரியவில்லை. அந்த முதலாளிக்கும், "நான்தான் உங்கள் முதலாளி" என்று சொல்லத் தோன்றவில்லை. ஏன் என்றால், தான் முதலாளி என்ற எண்ணமே அவருக்கு ஒரு நாளும் தோன்றியதில்லை. 

[ நன்றி : விகடன் ] 


தொடர்புள்ள பதிவுகள்; 


’கல்கி’ பற்றி வாசன் 

எஸ்.எஸ்.வாசன்


கொத்தமங்கலம் சுப்பு

4 கருத்துகள்:

இராய செல்லப்பா சொன்னது…

உழைப்பால் உயர்ந்த தமிழர்களில் எஸ்.எஸ்.வாசனுக்கு என்றுமே உயர்ந்த இடம் உண்டு. சினிமா, பத்திரிக்கை இரண்டிலும் இந்திய அளவில் தமிழனின் மதிப்பை உயர்த்தியவர் அவர்.

Yarlpavanan சொன்னது…

சிறந்த பயனுள்ள பதிவு

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான மனிதர்...... அவரைப் பற்றி உங்கள் கட்டுரைகள் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி.

usharaja சொன்னது…

Very interesting incident
Thanks