ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 34

டி.கே.பட்டம்மாள் -2 


[ நன்றி: http://www.dkpattammal.org/  ]

முந்தைய பதிவு :
டி.கே.பட்டம்மாள் -1

( தொடர்ச்சி)
28-1-45 கல்கி இதழில் ’கல்கி’ எழுதியது :

கர்நாடக சங்கீத வித்தை மிக அருமையானது. அந்த வித்தையிலே தேர்ச்சி அடைதல் எளிய காரியமன்று. அதற்கு இயற்கையோடு பிறந்த இசை உணர்ச்சி வேண்டும். இடைவிடாத உழைப்பும் பயிற்சியும் வேண்டும். இப்படி அரிதில் பெற்ற வித்தை நன்கு சோபிப்பதற்கு இனிய சாரீரம் வேண்டும். இந்த மூன்று அம்சங்களும் நன்கு பொருந்திய பாக்கியசாலி, கான ஸரஸ்வதி டி.கே.பட்டம்மாள். மதுரமும் கம்பீரமும் பொருந்திய சாரீரம், அசாதாரண லயஞானம், அழுத்தமான கமகப் பிடிகள், தெளிவான சாஹித்ய உச்சரிப்பு - இவை ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் விசேஷ அம்சங்கள். 

சவுக்க கால தீக்ஷிதர் கிருதிகளைப் பூரண ராக பாவத்துடன் பாடுவதிலும், அபூர்வ லய வேலைப்பாடுகள் பொருந்திய பல்லவிகள் பாடுவதிலும் பெயர் பெற்றவர். தமிழிசை இயக்கத்தின் முன்னணியில் நிற்பவர். ஸ்ரீமதி பட்டம்மாளின் கச்சேரிகளில் சாதாரணமாக எப்போதுமே தமிழ்ப் பாடல்கள் நிறைய இருக்கும். அவருக்கே தனி உரிமையான துக்கடாக்களில் கரகோஷம் நிச்சயம் உண்டு. 
[ நன்றி: பொன்னியின் புதல்வர், ‘சுந்தா’ ] 

‘கல்கி’ பட்டம்மாளைப் பற்றி எழுதினதைப் பார்த்தோம். ஆனால், பட்டம்மாள் ‘கல்கி’யைப் பற்றி எழுதினதைப் படிக்கவேண்டாமா? இதோ, அவர் “ அமரர் கல்கி பாடல்கள்” என்ற நூலுக்கு ( வானதி பதிப்பகம், 2003) கொடுத்த அணிந்துரையில் எழுதியது :

கல்கியின் தமிழ்ப் பற்றும் இசைப் பிரேமையும் அவருடைய ரசிகத்தனமையும் ஒன்று சேர்ந்துதான் பாடல்களாக வெளிப்பட்டன. அநேகம் பாடல்கள், ஏற்கனவே அமைந்த மெட்டுக்குள் பொருந்தும்படி எழுதப்பட்டவை. 

‘பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்’ என்ற பாட்டு, சைகால் பாடிய ஹிந்திப் பாட்டின் மெட்டுக்குள் அப்படியே பிசகாமல் பொருந்தும்.

இந்தப் பாடலை கல்கி எழுதியதும், நான் அதை முதன்முதலில் பாடியதும், பின்னர் அது இசைத்தட்டாக வெளியாகி அமோக வரவேற்பு பெற்றதும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. ‘பூங்குயில் பட்டமாள்’ என்று எனக்கொரு இனிய பட்டமும் வாங்கிக் கொடுத்தது இப்பாடல்! 
அழகான , எளிமையான தமிழ்; வெறும் வார்த்தையால் பாடலை வளர்க்காமல் காட்சி விவரணை மூலம் கதை சொல்லிக் கொண்டு போவது - இவை கல்கி பாடல்களின் முத்திரை.”  
[ நன்றி : அமரர் கல்கி பாடல்கள், வானதி பதிப்பகம், டிசம்பர் 2003 ]  

டி.கே.பட்டம்மாள் கச்சேரியில் பாடுவதற்கென்றே ‘கல்கி’ அவரிடம் நான்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அவை : 1)குழலோசை கேட்டாயோ -கிளியே 2) பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள் 3) திரைகடல் தூங்காதோ 4) இன்பக் கனவொன்று துயிலினில் கண்டேன். 
இவை 1940-களில் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தன.

டி.கே.பட்டம்மாள் திரைப்படங்களில் பாடியுள்ள பாடல்களையும் பலர் அறிவர். முதன் முதலில் எஸ்.எஸ்.வாசன் ’தியாகபூமி’யில் அவரைப் பாட அழைத்தபோது, டி.கே.பட்டம்மாள் போட்ட ‘கண்டிஷன்’ என்ன? அவரே சொல்லட்டும்!

சினிமாவில் பாடுவதற்கு ஜெமினி நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. வாசன் அவர்கள் தான் என்னை வரவேற்று உபசரித்தார்.

“எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நீங்களும் பாட்டுப் பாட வேண்டும். வருகிறீர்களா? “ என்று கேட்டார்.

”மிகவும் மகிழ்ச்சி” என்று சம்மதம் தெரிவித்ததோடு “ஒரேயொரு கண்டிஷன்” என்றேன். 

“என்ன” என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார் வாசன்.

“சினிமாவின் டூயட் பாடல்கள் பாடுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசபக்தி மற்றும் பொதுவான பாடல்கள் பாடுகிறேன்” என்று சொன்னேன்.

வாசனும் சந்தோஷமாகத் தலையசைத்தார். அதன்பின் ‘தியாகபூமி’, ‘மிஸ் மாலினி’ உட்பட சில படங்களில் பாடியிருக்கிறேன்” 
 [ நன்றி : அமரர் வாசன் நூற்றாண்டு மலர், விகடன், 2004]

( பின் குறிப்பு: ‘மிஸ் மாலினி’க்காக டி.கே.பி ‘ஸ்ரீ ஸரஸ்வதி நமோஸ்துதே’ என்ற பாடலைப் பாடினார். ஆனால், வாசன் கடைசியில் அதைப் படத்தில்  பயன்படுத்தவில்லை! ஏனென்றால் மாலினி என்ற அந்த பெண்மணியின் திரைப்படக் குணசித்திரப்படி அவள் அவ்வளவு அழகாக ஒரு பாடலைப் பாடி இருக்கமுடியாது என்று முடிவு செய்தார் ! இது ராண்டார் கை ஒரு கட்டுரையில் கொடுத்த தகவல்! )

‘தியாகபூமி’ படத்தில் ‘கல்கி’ யின் ‘பாரத புண்ணிய பூமி ‘, 'தேச சேவை செய்ய வாரீர்’, ‘பந்தம் அகன்று’ ஆகிய மூன்று பாடல்களையும் டி.கே.பட்டம்மாள் பாடியிருக்கிறார்.


இதோ இன்னும் சில திரையுலகப் பாடல்கள் பற்றிய தகவல்கள்:
[ நன்றி: ஸரிகமபதநி, டிசம்பர் 2000 ]

“பிழைக்கும் வழி” என்ற படத்தில் டி.கே.பி. பாடிய ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! மதுரை சுந்தர வாத்தியார் எழுதிய பாடல். 

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு
பேரின்ப ஞான வீடு (எங்கள்)
கங்கை யமுனை பொருனை
காவேரியும் பாயும்
திங்களும் மும்மாரி பெய்து தீங்கனிகள் ஈயும் (எங்கள்)

தெள்ளுதமிழ் வேதம் தரும் வள்ளுவர் இந்நாடு
அள்ளும் கவி ஔவை கம்பன் அவதரித்த நாடு
சாந்தி தனில் நீந்தும் உயர் காந்தியர் இந்நாடு
தேர்ந்த ஞானி ராஜாஜி நேரு இந்த நாடு
தேர்ந்த வீரர் நேதாஜி நேரு இந்த நாடு (எங்கள்) 

பின் குறிப்பு: 


TAMIL RARE D.K. PATTAMMAL SONG-- Bharatha punya boomi(vMv)--THIYAGA BOOMI 1939


https://www.youtube.com/watch?v=V5tWnLDzoKE&feature=youtu.be


நண்பர் அனுப்பிய  “ குழலோசை கேட்டாயோ?”  என்ற பாடல்:


http://www.4shared.com/mp3/Fj7GTdCEce/Kuzhalosai_Kettayo_DKP.html


குழலோசைஇன்பக் கனவொன்று

பூங்குயில்

( தொடரும்) 
தொடர்புள்ள பதிவுகள் :

டி.கே.பட்டம்மாள்

சங்கீத சங்கதிகள்

DKPATTAMMAL-FILM-SONGS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக