ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 35

டி.கே.பட்டம்மாள் -3
[ நன்றி; dkpattammal.org ]

முந்தைய பதிவுகள் :

( தொடர்ச்சி ) 
டி.கே.பி அவர்கள் மனம் திறந்து தன் வாழ்க்கை விவரங்களைப் பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். இப்படி ‘ஒரு திறந்த புத்தகமாய்’ப் பேசிய இசைமேதைகள் ஒரு சிலரே. சில கட்டுரைகளிலும் அவை பதிவாகியிருக்கின்றன. ‘ஸ்ருதி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் முதல் இரு இதழ்களில் ( அக்டோபர் , நவம்பர் 83) வெளிவந்த கௌரி ராம்நாராயணனின் ஆங்கிலக் கட்டுரை அவற்றுள் ஒன்று. அதே போல் ‘ஸரிகமபதநி’ என்ற தமிழ்ப் பத்திரிகையில் டிசம்பர் 2000-இல் வெளிவந்த தமிழ்க் கட்டுரையும் ஒன்று. அந்தத் தமிழ்க் கட்டுரையிலிருந்து , டி.கே.பட்டம்மாளின் சொற்களிலேயே, அவருடைய சில வாழ்க்கை நிகழ்வுகளையும், சில இசை நினைவுகளையும் இப்போது பார்ப்போம்.
எனது இசைப்பயணம் -1
டி.கே.பட்டம்மாள்  
[ ஒரு தொகுப்பு; நன்றி: சங்கர் வெங்கட்ராமன், ஸரிகமபதநி ]
நான் மூணு மாசக் குழந்தையாய் இருந்தபோது, எங்கள் அப்பாவும், அம்மாவும் திருவண்ணாமலையில் அருளாட்சி செய்துவந்த மகான் ஸ்ரீரமண மகரிஷி அவர்களது காலடியில் என்னைப் போட்டனர். அப்போ, பகவான் ரமணர் தேன்துளிகளை என் நாக்கில் தெளித்து ஆசீர்வாதம் செய்தாராம். இப்பேர்ப்பட்ட பாக்கியத்தை அடைய நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கணும்!

[ ஒரு குறிப்பு: தான் பிரபலமாக்கிய ”வள்ளி கணவன் “ என்ற கிளிக்கண்ணி மெட்டில் அமைந்த “வள்ளல் ரமணர் பேரை வழிபோக்கர் பாடினாலும் ...” என்ற ஒரு பாடலை டி.கே.பி பலமுறை பாடியிருக்கிறார். ] 
வட ஆற்காடு மாவட்டம் ஆரணியிலிருந்து, ‘தெலுங்கு வாத்தியார்னு ஒருத்தர். ஒரு கல்யாணத்துல நானும் என் அண்ணா ரங்கநாதனும் பாடினதைப் பார்த்துட்டு அப்படியே என்னை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்து “நான்தான் உனக்குப் பாட்டு சொல்லிக் கொடுபேன்”னார். எனக்கு அப்போ 6 வயசுதான். அவராகவே ஆசைப்பட்டு “கொலுவமரகத” “கோரினவரமு”, “லேகனா” “துளசி பில்வ” போன்ற கிருதிகளைச் சொல்லிக் குடுத்தார். நான் பிரபல பாடகியானதுக்கு அப்புறமா ஒருநாள் எங்காத்துக்கு ஒரு வயசான கிழவர், தலையெல்லாம் நரைச்சுப்போய் தள்ளாடிண்டு வந்தார். கடைசியிலே பார்த்தா இவர்தான். நான் அப்படியே அழுதுட்டேன். எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த குருவாச்சே. வேஷ்டி, அங்கவஸ்திரம், மற்றும் ஆயிரம் ரூபாய் சன்மானத்தோட கொடுத்தேன். அப்படியே திருப்பிக் கொடுத்துட்டார். “ என் பொண்ணு மாதிரியம்மா நீங்க! என் அன்பளிப்பா இதைக் கருதி வேஷ்டி, அங்கவஸ்திரத்தை என் மாப்பிள்ளைக்குக் கொடுக்கிறேன்”னு திருப்பிக் கொடுத்துட்டார். இன்னி வரைக்கும் அவரோட பெயர் தெரியாது! 
’கவர்ன்மெண்ட் டெக்னிகல் எக்ஸாமினேஷன் இன் மியூஸிக்’ பரிட்சைக்காக அப்பாவும், நானும் மதராஸ் வந்தோம். புரொபசர் சாம்பமூர்த்தி, டைகர் வரதாச்சாரியார் மற்றும் ஸ்ரீமான் அம்பி தீக்ஷிதர் ஆகியோர் எக்ஸாமினர்களாக இருந்தனர். அம்பி தீக்ஷிதர் “ ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே ..” ( காம்போதி) பாடச் சொன்னார். டைகர் வரதாச்சாரியார் பிலஹரியில் “நா ஜீவாதார” பாடச் சொன்னார். பரீட்சை முடிந்ததும் எனக்கு ரொம்ப நல்ல எதிர்காலம் இருப்பதாக ஆசீர்வதித்து, தானே எனக்குப் பாட்டுக் கற்றுக் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார் அம்பி தீக்ஷிதர். இவர் சாட்சாத் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பேரன். எனக்கு வீணையோட பாட்டு சொல்லிக் கொடுத்தார். அப்போதான் குரல் அழகா இழைஞ்சு, குழைஞ்சு வரும்னு சொல்லுவார். 
“பாலகோபால..” “கஞ்சதளாயதாக்ஷி”...கிருதிகளைச் சொல்லிக் கொடுத்து ஆசீர்வதித்தார். என்ன ஒரு மகாபாக்யம்? இது தவிர ராக ஆலாபனை செய்யும் முறைகளை காஞ்சிபுரம் பட்டு ஐயங்கார் அவர்களிடமும் “ரக்ஷபெட்டரே”(பைரவி), “இகநன்னுப்ரோவ” போன்ற கிருதிகளை சின்னமாள்னு ஒரு அம்மாளிடமும் கற்றேன். 
என்னோட மானசீக குருவாக காஞ்சிபுரம் சுப்பிரமணிய பிள்ளை அவர்களைத்தான் கருதுகிறேன். இவர் யார் தெரியுமா? காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையேதான்! வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, டோலக், மோர்சிங் மற்றும் கொன்னக்கோல்னு ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரியைத் துணிஞ்சு நடத்திக் காட்டிய இசைமேதை ஸ்ரீமான் நாயனாப் பிள்ளையவர்கள்தான். ராக பாவத்தையும், லய சமத்காரத்தையும் ஒரே தராசில் நிறுத்தாற்போல் சரிசமமாக பங்கிட்டு அளிப்பார்.



காஞ்சிபுரத்துலே என் பாட்டைக் கேட்டு, ரஸிச்சு தங்கள் வீட்டு நவராத்திரி கொலுவின்போது என்னைப் பாட அழைத்தார். என்னுடைய பாட்டைக் கேட்டுவிட்டு நாயனாப் பிள்ளை மிகவும் மனமகிழ்ந்து பாராட்டினார். அதன் நற்பலனாக அவருடைய தாயார் காமாட்சி அம்மாள் எனக்கு மாஞ்சி ராகத்தில் “ப்ரோவவம்மா” கிருதியைச் சொல்லிக் கொடுத்தார். அந்த சமயத்தில் தான் பிருந்தா-முக்தா ஸகோதரிகள் சின்னப் பெண்களா வருவா ....” 

( தொடரும் )

[ நன்றி : ஸரிகமபதநி, டிசம்பர் 2000 இதழ் ]

தொடர்புள்ள பதிவுகள் :


6 கருத்துகள்:

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

அாிய நிகழ்வுகளை அள்ளி அளித்துள்ளீா்
உாிய நடையில் உவந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Pas S. Pasupathy சொன்னது…

கவிஞரே! வாழ்த்தைக் கனிவுடன் தந்தீர்!
உவகையே கொண்ட(து) உளம்.

Unknown சொன்னது…

ஈராண்டு போயும் பதிவி தெளியோனென்
நீராண்ட கண்பட்ட தாம்!

UK Sharma சொன்னது…

சங்கீத வித்துவான் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளை அவர்களின் சீடர் என்றும், கனகையா என்ற இயற்பெயரைக் கொண்டவர் பின்னர் தன் குருநாதரின் இயற்பெயராகிய சுப்பிரமணிய பிள்ளை என்பதை தனது பெயராகக் கொண்டார் என்றும் படித்திருக்கிறேன்.
நாயனா பிள்ளை பற்றி பாலக்காடு மணி ஐயர் வரலாற்றில் ஒரு குறிப்பு உண்டு. மணி ஐயர் சுமார் பதினைந்து வயதுப் பையனாக இவருக்கு மிருதங்கம் வாசிக்கச் சென்றபோது நடந்த ஒரு சம்பவம் பற்றிப் படித்திருக்கிறேன். இந்த இடத்தில் அதைக் குறிப்பிடுவது பொருத்தமில்லை.

RSR சொன்னது…

May I know the raagam of DKP song 'enthaiyum thaayum makizhnthu kulaavii irunthathum '
https://sites.google.com/site/dkpattammalsongs/home/33-%E0%AE%8E%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE-enthaiyum-thaayum

youtube link also is given in the page

Pas S. Pasupathy சொன்னது…

@RSR. The Ragas sound like Patdheep, Bilahari, Sarasangi and Dhesh. If incorrect, please write here.