செவ்வாய், 10 ஜூன், 2014

லா.ச.ராமாமிருதம் -8: சிந்தா நதி - 8

4. கண் கொடுக்க வந்தவன்
லா.ச.ரா 


“ அன்று ராமன், அக்கினி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனை சோதரனாக வரித்தான். இன்று, ஐந்தாம் பிள்ளையாக வரிக்க, அக்கினி சாக்ஷி என் எழுத்தா?  --லா.ச.ரா.







    ஐந்தாறு வருடங்களாக, கண்ணில் சதையால், மிக்க அவதியுற்றேன், முதலில் இடக்கண், மறு வருடம் வலது. நாள் ஒரு இம்மியாக, சதை வளர்ந்து அதுவும் கடைசி இரண்டு வருடங்கள். அப்பப்பா, வேண்டாம். என்றால் விடுமா? சாப்பாட்டில், வாய்க்கு வழி கை தானே கண்டுகொள்ளுமானாலும், இலையில் என்னென்ன எங்கே பரிமாறியிருக்கிறது? ஒரே தடவல். வழித்துணையிலாது வெளியே போக முடியாது. சினிமா, டிராமா, கச்சேரி, இலக்கியக் கூட்டங்கள்- முடியாது. படிக்க முடியாது; எழுத முடியாது. டிக்டேஷன்? சரிப்பட்டு வரவில்லை. ஒரு படைப்பு உருவாகும் அந்தரங்கத்தைப் பிள்ளையோடானாலும் பங்கிட்டுப் பழக்கமில்லை. பிறகு வீட்டுக்குள்ளேயே, மேடு பள்ளமாக இடறி விழுந்து இந்திரப்ரஸ்த மாளிகையில் துரியோதனன், திரெளபதியின் சிரிப்புக்கு ஆளானது போல்- எப்போதும், எங்கேயும் திரெளபதிகள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒருமாதிரியாக இற்றுப்போக ஆரம்பித்துவிட்டேன்.

    ஆஸ்பத்திரியில் சோதித்த பெரிய டாக்டர்: "அடாடா, இது ப்ளாக் காட்டராக்ட் அல்லவா? பத்து வருடங்களுக்குக் கத்தி வைக்க முடியாதே! வெச்சால் பெரிய ரிஸ்க். ரேர் கேஸ் உங்களுக்குன்னு வந்திருக்கு."

    தீர்ப்பு எப்படி? ஆயுளுக்கும் படிப்படியாக- ஒருநாள் முழுக் குருடு இல்லை, பத்து வருடங்களுக்குப் பின் இவரிடம் ஆபரேஷன் பண்ணிக் கொள்ள, நான் இப்பவே அடைந்துவிட்ட வயது. இடது கொடுக்க வேண்டாமா? இன்னும் பத்து வருடங்களுக்குப் பாஞ்சாலி சிரிப்பா? பயங்கரம் என்ன வேணும் ?

    மனச்சலிப்பு உயிர்ச் சலிப்பாகத் திரிந்து கொண்டிருக்கையில்- 83 தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. ஒரு நாள் மாலை-

    அவனுக்கு 25/27 இருக்கும். லா.ச.ரா. வீடு தேடி விசாரித்து வந்து என்னைக் கண்டதும் தடாலென்று விழுந்து நமஸ்கரித்து, "என் பெயர் வெங்கட்ராமன், பி.டி.சி.யில் வேலை செய்கிறேன். உங்கள் எழுத்தில் வெகு நாளைய ஈடுபாடு. உங்களை நேரில் காண வேணுமென வெகு நாள் ஆசை. விலாசம் சரியாகக் கிடைக்கவில்லை. லால்குடிக்கே போய் விசாரிக்கலாமான்னு யோசனை பண்ணினதுண்டு. எப்படியோ வேளை வந்துவிட்டது. இந்த மாசம் 14-ம் தேதி என் தங்கைக்குக் கலியாணம். மாமியோடு அவசியம் வரணும்."

    அவன் ஆர்வம், பேச்சு, சுழல்காற்று வேகத்தில் தன்னோடு என்னை அடித்துக்கொண்டு போயிற்று.

    பின்னும் பலமுறை வந்தான்.

    "இங்கே வருவதில், உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் உங்கள் பேச்சைக் கேட்பதில் என் மனதில் ஏதேதோ சந்தேகங்கள் தெளிகின்றன. குழப்பங்கள் பிரிகின்றன. அமைதி தருகிறது."

    அவன் தங்கை கலியாணத்துக்குப் போனேன். எனக்குப் புது வேட்டி மரியாதை. அங்கு அவனுடைய தந்தையைச் சந்தித்தபோது, அவர் கூழாங்கல் கண்ணாடி அணிந்திருப்பது கண்டு, அதையொட்டி அவரை விசாரித்ததில், முந்தைய வருடம்தான் காட்டராக்ட் ஆபரேஷன் பண்ணிக் கொண்டாராம். "லயன்ஸ் க்ளப் ஆஸ்பத்திரியில் நன்றாகக் கவனிக்கிறார்கள். எனக்கு இப்போ கண் நன்றாகத் தெரியறது."

    என் கை என் நெஞ்சக் குழியைத் தொட்டுக் கொண்டது. சபலத்தின் சிறகடிப்பு படபட-

    கலியாணச் சந்தடி ஒய்ந்த பின், வெங்கட்ராமனிடம் பிரஸ்தாபித்தேன்.

    "ஒ, தாராளமா! என் சந்தோஷம்!"

    அம்பத்தூர் எங்கே, ஆஸ்பத்திரி தி. நகரில் எங்கே? முற்பாடு சோதிப்புக்கள் ஏற்பாடுகளுக்காக, ஐந்தாறு முறை வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் சென்று, மீண்டும் வீடு சேர்த்துவிட்டுப் போனான். இதில் எத்தனை நாள் தன் ட்யூட்டி இழந்தானோ?

    பிள்ளைகள் இருக்க, பிறன் ஏன் இத்தனை முயற்சி எடுத்துக்கொள்ளணும்? கேள்விக்குச் சரியான பதில் அற்றவனாக இருக்கிறேன். ஆனால் என் மூத்த பிள்ளை வாயிலிருந்து, அவன் அறியாமலே வந்து விட்டது.

    "நியாயமா நாங்கள் செய்யவேண்டியதை வெங்கட்ராமன் செய்கிறான்."

    திடீரென்று ஒரு நாள், டிசம்பர் 16. காலை, ஆபரேஷன் டேபிளில் படுத்திருக்கிறேன்.

    ஆபரேஷன் செலவு பூரா தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமென முரண்டினான். மிகவும் சிரமப்பட்டு, அவன் மனதைத் திருப்ப வேண்டியிருந்தது.

    ஆபரேஷன் வெற்றி.

    அப்புறமும், கட்டு அவிழ்க்கும்வரை, அவிழ்ந்த பின்னும் வாரம் ஒரு முறை, ஆறு வாரங்களுக்கு வந்து காண்பிக்க வேண்டும்.

    நான்கு முறைகள் வந்து அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டில் கொண்டுவந்து விட்டான்.

    ஐந்தாம் முறை- அவனுக்கு என்ன அசந்தர்ப்பமோ? அடுத்தும் வரவில்லை.

    அப்புறம்- வரவேயில்லை.

    என்னவானான்? உண்மையில் என் கண் ஆபரேஷன் அவனுடைய வெற்றி அல்லவா?

    மீதிக் காரியம் வேறு துணைக்கொண்டு ஒருவாறு முடிந்தது.

    அவன் வராத ஏக்கம், வருத்தத்திற்கு அப்பால், சூட்சும தடத்தில் கொக்கிகள் நீந்தின.

    உண்மையில் இவன், அல்லது இது யார்?

    என்ன செய்வது? அறியாமல், என் நூல் நுனியை நான் அடைந்துவிட்ட சமயத்தில், என் விமோசனத்துக்காகவே, உயிரின் ஊர்கோலத்தினின்று வெளிப்பட்டு, எனக்குக் கண்ணைக் கொடுத்ததும், மீண்டும் வந்தவழியே போய் மறைந்து விட்ட சக்தி அம்சமா?

    தெய்வம் மனுஷ்யரூபேண:

    இவன் தங்கை கலியாணத்துக்குப் போனதால், மனதில் அடித்துக் கொண்ட சபலத்தின் சிறகுகள், கருணையின் அகண்ட சிறகுகளாக மாறி, மேல் இறங்கி கிருபை என்னே!

    சோதனைகள் தீரும் வேளை, விதம், வழி, மூலம்- நமக்குக் காட்டாத மிஸ்டிக்குகள்.

    அவனை 17-சி, 9, ரூட்களில் பார்த்ததாக என் பிள்ளை சொன்னான்.

    அவன் விலாசம், வடபழனி தாண்டி- தெரியும். ஆனால் போகமாட்டேன்.

    அன்று ராமன், அக்னி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனைச் சோதரனாக வரித்தான்.

    இன்று என் ஐந்தாம் பிள்ளையாக வரிக்க, சாக்ஷி அக்னி என் எழுத்தா?

    ஜன்மாவின் தொட்ட பிசுக்கு- தொட்டாப் பிசுக்கு,

    மறு கண் ஆபரேஷனுக்குக் காத்திருக்கிறது. அப்போது வருவாயா?

    அல்லது இன்னொரு வெங்கட்ராமனா?

    சிந்தா நதியில் குமிழிகள் தோன்றுகின்றன. சேர்கின்றன, பிரிகின்றன, மூழ்குகின்றன, மறைகின்றன.
    * * *

[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ]

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் படைப்புகள்

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

visit: http://ypvn.0hna.com/