புதன், 28 அக்டோபர், 2015

சங்கீத சங்கதிகள் - 57

பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமன் 




”டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கீத நாடக அகாடெமி விருதுகளை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

சங்கீத நாடக அகாடெமியின் கவுரவ உறுப்பினர் அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசை ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ஜானகிராமன் உள்பட 4 பேருக்கு 2014-ம் ஆண்டுக்கான ரத்ன சதஸ்ய விருதினை ( Academy Fellowship) பிரணாப் முகர்ஜி வழங்கி சிறப்பித்தார்.” 
(  செய்தி : 


பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!  

நான் 2004-இல் டொராண்டோவில் வெளியான 'மெரினா' என்ற இதழில்
அவரைப் பற்றிய எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ]

======================
அன்னையர் தினமும் இன்னிசைத் தனமும்

பசுபதி


தொராந்தோவில் பாரதி கலா மன்றம் ஏப்ரல் 2004-இல் நடத்திய தியாகராஜர் இசை விழாவில் இரண்டாம் நாள் விழா.  பகலில் , யார்க் பல்கலைக் கழகம் வந்தவர்கள் காதில் ஒரு தமிழ்ப் பாடல், ஒரு கம்பீரக் குரலில், கம்பீர நாட்டை ராகத்தில்  ஒலித்திருக்கும். அதுவும், எப்படிப்பட்ட பாடல்அருணகிரிநாதர் , வில்லிபுத்தூராரை வாதில் வெல்லக் காரணமாக இருந்த, 'கந்தர் அந்தாதி' யின் 54-ஆவது பாடல்.

       'திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா' ..

இது முதல் அடி! இப்படியே இன்னும் மூன்று அடிகள்! எல்லாம் '' வின் இன எழுத்துகள் !இதற்கு வில்லிபுத்தூரார் உரை சொல்ல முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார் என்பது சரித்திரம். இதன் பொருளை அறிய விரும்புவோர் :


போய்ப் படிக்கவும்.

இந்தப் பாடல் தெரிந்தவர்களே உலகில் மிகக் குறைவு! இன்று அதைப் பாடலாகப் பாடுபவர் ஒருவர் தான் (அடியேனுக்குத் தெரிந்து) ! அவர்தான் சங்கீத வித்வான், 'சங்கீத கலாசார்ய', கலைமாமணி எஸ். ஆர். ஜானகிராமன் . ஆம், அவர்தான் அங்கே , தன் இசைப் பேருரைக்கு முன்னுரையாகஒரு ஸ்லோகத்திற்குப் பின்  இந்த கந்தர் அந்தாதிப் பாடலையும் வழங்கினார். (இதை ஒரு இறை வணக்கமாகவும் கொள்ளலாம்; அவருக்கு இதைக் கற்றுக்கொடுத்த , அவர் குரு திருப்புகழ் மேதை, இசையியல் அறிஞர் பி.கே. இராஜகோபால ஐயருக்கு அவர் செலுத்திய  குருவணக்கமாகவும்  எடுத்துக் கொள்ளலாம்.)

எழுபத்தாறு ஆண்டு இளைஞர், இசைப் பேரறிஞர் ஜானகிராமன் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள், அவருடைய சீடர்களான, மாகா அங்கத்தினர்கள்  அஸ்வின், ரோஹின் இருவரும் விண்ணேற்றியுள்ள இணையச் சுட்டிக்குள் சென்று படிக்கலாம் :


பேராசிரியர் எஸ்.ஆர்.ஜே தொராந்தோவில் சில நாள்கள் வந்து இருக்கும் வாய்ப்பை நழுவவிடாமல், மாகா-இசை (MACA-music) என்ற யாஹூ  இணையக் குழுவின் தலைவர் திரு  ஸ்ரீநிவாஸன்  இன்னொரு இசைப் பேருரை நமக்குக் கிட்டசுறுசுறுப்புடன் இயங்கி, அதற்கு வழி வகுத்தார். இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக, மிருதங்கக் கலைஞரும், தென்னிசை கற்கும் தொராந்தோ இளைஞரை ஊக்குவிக்கப் பல தொண்டுகள் புரிபவருமான திரு கணபதி அவர்களின் வீட்டில் மே 9, 04 -இல் நடந்தேறியது.

பேராசிரியர் அனந்தநாராயணனின் அறிமுகத்திற்குப் பின், திருவாரூர் மும்முர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று இசையாசிரியர்களில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரைப் பற்றிப் பேசியும், பாடியும், தன் ஆங்கில, ஸம்ஸ்கிருத, ராக, சாஸ்திர, இன்னிசைப் புலமையால் எல்லோரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார் எஸ்.ஆர்.ஜே. (அவரை 'ஸாஸ்திரீய ராக ஜோதி' (SRJ) என்றோ 'ஸாஸ்திரீய ராக ஜாம்பவான்' என்றோ அழைப்பதே பொருத்தம் என்று நினைக்கிறேன்!) திரு கணபதி மிருதங்கத்திலும், டாக்டர் ஸ்ரீராம் கஞ்சிராவிலும் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்து அவர் இசையை மிளிர வைத்தனர். கடைசியாக, நன்றியுரை சொல்லி அவருக்கு  ஒரு வாழ்த்துப்பா (வெண்பா) நான் வழங்கினேன். அது வருமாறு:


புலிவரதர் சீடர்; புலியிவரோ ஆய்வில்;
விலையில் விரிவுரை தேனு -- கலையாசான்,
சங்கீத நக்கீரர்; சாத்திர சந்தேகக்
கங்குல் கனற்றும் கதிரவன் -- பங்கமிலாப்
பன்மொழிப் பாவலர் எஸ்.ஆர்.ஜே தேர்ந்தளிக்கும்
தென்னிசை நம்செவிக்குத் தேன்.


[ புலிவரதர்= 'டைகர்' வரதாச்சாரியார்; விலையில் = விலை மதிக்க முடியாத; தேனு=(காம)தேனு; கங்குல்= இருள் ; கனற்றும்= எரிக்கும். ] 


மே 9 'அன்னையர் தினம்'. பேராசிரியர் எஸ்.ஆர்.ஜே -அவர்களின் இன்னிசை விருந்திற்குப்பின், அந்த நாளை இன்னிசை மாதாவின் தினமாகவே கொண்டாடிய நிறைவுடன் நாங்கள் எல்லோரும் வீடு திரும்பினோம். அன்னையர் தினத்தன்று ஒரு பெருஞ் செல்வமான  இன்னிசையை நமக்களித்த பேராசிரியர் எஸ்.ஆர்.ஜே-அவர்களுக்கு நன்றி!  


~*~o0O0o~*~

பின்னூட்டம்: 

2008-இல் ‘வெண்பா விரும்பி ‘ ( வா.ந.சிவகுமார்) ‘சந்த வசந்தம்’ குழுவில் எழுதிய ஒரு மடல்.) 

வணக்கம்.  தமது எண்பதாம் பிராயத்திற் கர்நாடக இசைப் பண்டித மணியாய்த் திகழும் பேராசிரியர் எஸ். ஆர். ஜானகிராமன் அவர்களுக்குச் சென்னையிற் பாராட்டு விழாவொன்று சமீபத்தில் நடைபெற்றது.  இவ்விழாவை எதிர்நோக்கியானும் எனது இளைய சகோதரனாகிய முனைவர். வா. ந. முத்துகுமாரும் சில மாதங்களுக்கு முன் இணைந்து இயற்றிய பாடல்களைக் கீழே இடுகிறேன்.  இந்த 'நாத கோவித'ரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் சிலவற்றை இங்குக் காணலாம்:


பாடல்களைப் பற்றிய குறிப்புகள் சில:

1.  முதற் செய்யுளில் "வேங்கை" என்றது திரு ஜானகிராமனின் குருவாகிய காலஞ் சென்ற இசை மேதை "Tiger" வரதாசாரியார் அவர்களை.  பின்வரும் கட்டளைக் கலித்துறையில் "வரதன்" என்று சொல்லப்படுபவரும் அம் மகாவித்துவானே.

2.  கடைசிப் பாடலில் "சாரங்க தேவர்" என்ற பெயரைக் காணலாம்.  "சங்கீத
ரத்னாகரம்" என்ற நூலை எழுதிய இசைப் பேரறிஞரிவர்.  இவரையும் பேரா. ஜானகிராமனையும் இணைத்து, ஆங்கிலத்தில் என் சகோதரன் நயம்பட எழுதிய வாக்கியம் வருமாறு: "Why bemoan the absence of Saranga Deva when SR (Sangeetha Rathnakara) is in our midst?"

3.  நான்காம் செய்யுளிற் பாட்டுடைத் தலைவர் "சங்கீத நக்கீரன்" என்று
அழைக்கப்பெறுகின்றார்.  இந்தப் பட்டத்தை அன்னாருக்குச் சில வருடங்களுக்கு முன் ஒரு வெண்பா வாயிலாக வழங்கியவர் எங்கள் சிறிய தந்தையாராகிய பேரா. பசுபதியவர்கள். 
********************
SRJ: பாராட்டுப் பஞ்சகம்

1. (அறுசீர் விருத்தம்)

பேரமரோர் வேங்கையடி பணிந்தவன்பான் முந்துகலை
...பெட்பிற் கற்றிப்
பாரரிதீ தென்றறிய அதனுட்ப முனைந்தாய்ந்து
...பகரு மேலோன்
ஏரருகாத் தென்னிசையின் இருவிழியாத் திகழுமுயர்
...இராகந் தாளம்
சீரணியாய்ப் பூணறிஞன் ஜானகிரா மன்முன்னஞ்
...சென்னி தாழ்க.
*******
பதம் பிரித்து:

பேர் அமர் ஓர் வேங்கை அடி பணிந்து அவன் பால் முந்து கலை பெட்பில் கற்று
இப்
பார் அரிது ஈது என்று அறிய அதன் நுட்பம் முனைந்து ஆய்ந்து பகரும் மேலோன்
ஏர் அருகாத் தென் இசையின் இரு விழியாத் திகழும் உயர் இராகம் தாளம்
சீர் அணியாய்ப் பூண் அறிஞன் ஜானகிராமன் முன் நம் சென்னி தாழ்க.

பேர் அமர்=புகழ் வாய்த்த; முந்து=பழமை; பெட்பில் கற்று=விருப்பத்தின்
காரணத்தாற் கற்று; ஈது=இது; ஏர் அருகா=அழகு குறையாத
********************
2. (அறுசீர் விருத்தம்)

சனகசுதை நாதனிரா மனன்றெதிர்த்துப் போர்தொடுத்த
...தரிய லார்மேல்
கனமழையாய்க் கணையிரண்டு திருக்கரத்தால் எய்தவரைக்
...கடிந்த வாறு
தினமறிவாற் கலைவளர்க்கும் ஜானகிரா மனிசைவலர்
...திமிரந் தாக்கித்
தனதிருகை இலட்சியவி லட்சணங்கொண் டடியொடதைச்
...சாய்ப்பான் மன்னோ.
*******
பதம் பிரித்து:

சனக சுதை நாதன் இராமன் அன்று எதிர்த்துப் போர் தொடுத்த தரியலார் மேல்
கன மழையாய்க் கணை இரண்டு திருக்கரத்தால் எய்து அவரைக் கடிந்தவாறு
தினம் அறிவால் கலை வளர்க்கும் ஜானகிராமன் இசைவலர் திமிரம் தாக்கித்
தனது இரு கை இலட்சிய இலட்சணம் கொண்டு அடியொடு அதைச் சாய்ப்பான் மன்னோ.

தரியலார்=பகைவர்; திமிரம்=அறியாமை
********************
3.  (கட்டளைக் கலித்துறை)

தேனன தேம்பண் விருந்திசைப் பாட்டாற் செவிக்களித்த
கோனனி சால்பார் வரதன் எனுமா குருபயந்த
சானகி ராமப் புலவனின் ஆற்றல் தனையுணர்ந்தம்
மானயந் தீகுந் தனஞ்சேர்த் தடைவோ மதிவளமே.
*******
பதம் பிரித்து:

தேன் அன தேம் பண் விருந்து இசைப் பாட்டால் செவிக்கு அளித்த
கோன் நனி சால்பு ஆர் வரதன் எனும் மா குரு பயந்த
சானகிராமப் புலவனின் ஆற்றல் தனை உணர்ந்து அம்
மான் நயந்து ஈகும் தனம் சேர்த்து அடைவோம் மதிவளமே.

கோன்=தலைவன்/அரசன்; நனி சால்பு ஆர்=மிகுந்த பெருமை பொருந்திய;
மான்=பெரியோன்
********************
4. (அறுசீர் விருத்தம்)

கங்காத ரன்கும்பக் கண்திறந்தும் அவன்குற்றம்
...கண்டித் தோதம்
மங்காத கீர்த்தியுறு தமிழரியின் சிறப்பின்று
...வாய்க்கப் பெற்று
நங்கோத கற்றத்த யங்காத தைத்திருத்து
...நல்லா சானிச்
சங்கீத நக்கீரற் கிப்பாராட் டுச்சாலத்
...தகுந்த தன்றோ.
*******
பதம் பிரித்து:

கங்காதரன் கும்பக் கண் திறந்தும் அவன் குற்றம் கண்டித்து ஓது அம்
மங்காத கீர்த்தி உறு தமிழ் அரியின் சிறப்பு இன்று வாய்க்கப் பெற்று
நம் கோது அகற்றத் தயங்காது அதைத் திருத்தும் நல் ஆசான் இச்
சங்கீத நக்கீரற்கு இப் பாராட்டுச் சாலத் தகுந்தது அன்றோ.

கும்பம்=நெற்றி; ஓதுதல்=சொல்லுதல்; கோது=குற்றம்
********************
5. (அறுசீர் விருத்தம்)

சாரங்க மேவெமது தொல்லிசைக்கோர் நெறிநிறுவொண்
...சாத்தி ரத்தின்
சாரங்க டைந்ததைத்தன் புலத்தாழப் பதித்தெய்து
...தகவான் மேன்மை
சாரங்க ருத்துரைக்கும் ஜானகிரா மப்பெயர்கொள்
...சதுரன் அந்தச்
சாரங்க தேவனையாம் பாராத குறைதீர்த்தான்
...தரணி மீதே.
*******
பதம் பிரித்து:

சார் அங்கம் மேவு எமது தொல் இசைக்கு ஓர் நெறி நிறுவு ஒண் சாத்திரத்தின்
சாரம் கடைந்து அதைத் தன் புலத்து ஆழப் புதைத்து எய்து தகவால்
மேன்மை சார் அம் கருத்து உரைக்கும் ஜானகிராமப் பெயர் கொள் சதுரன் அந்தச்
சாரங்க தேவனை யாம் பாராத குறை தீர்த்தான் தரணி மீதே.

சார் அங்கம் மேவு=அழகிய அங்கங்கள் பொருந்திய (சார்=அழகு); தகவு=தகுதி;
மேன்மை சார் அம் கருத்து=மேன்மை பொருந்திய அழகிய கருத்துகள்
******************** 

[ படம் : நன்றி; அஸ்வின் ]  

3 கருத்துகள்:

usharaja சொன்னது…

அருமையான பாக்கள், நமது புலவர் பசுபதி அவர்களின்.
எஸ்.ஆர்.ஜே. வித்வானுக்கு எமது பாராட்டுக்கள்

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

Great!