புதன், 15 ஜூன், 2016

கிருஷ்ணஸ்வாமி அய்யர்

கிருஷ்ணஸ்வாமி அய்யர் என்ற மாமனிதர்
 பிரபா ஸ்ரீதேவன்


ஜூன் 15. வி.கிருஷ்ணசுவாமி ஐயரின் பிறந்த தினம். 2013-இல்  தினமணியில் வந்த ஒரு கட்டுரை இதோ!   
 =====

வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் நூற்று ஐம்பதாவது நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. பள்ளிப்படிப்பு முடித்து சென்னை வந்து பட்டப்படிப்பு முடித்தார். அவரை சட்ட படிப்பு படிக்குமாறு அறிவுரை தந்தவர் ஹிந்து பத்திரிகை நிறுவனர் கஸ்தூரிரங்க அய்யங்காரின் தமையனார் ஸ்ரீனிவாச ராகவ அய்யங்கார். 1885 இல் வக்கீல் சன்னது பெற்று பாலாஜி ராவ் சேம்பர்ஸில் சேர்ந்தார். பிறகு 1888 இல் வக்கீலாக தன் முத்திரையை பதித்து நன்கு சம்பாதிக்க தொடங்கினார். 1911 இல் அவர் வாழ்க்கைப் பயணம் முடிந்தது.

கல்வி, சமூகவியல், சுற்றுப்புறசூழல், அரசியல், வணிகவியல், மருத்துவம், சட்டம், கலாசாரம், இலக்கியம், சமயம் என்று அவர் தடம் பதித்த துறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். மறக்க முடியாத மாமனிதர். மறக்க கூடாத மாமனிதர். இன்று மெரினாவிற்கு காற்று வாங்கப்போனால் அவருக்கு நன்றி கூறவேண்டும். ஏன் என்று சொல்கிறேன்.

1890 களில் தென்னிந்திய ரயில்வே, மயிலையையும் கிண்டியையும் இணைத்து ஒரு ரயில் தடம் அமைக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தது. அதற்கு மெரினா வழியாகவே தடம் செல்லவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . 1903 இல் வேலை துவங்கும் நிலையில் ஒரு மாபெரும் கூட்டத்தை வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் கூட்டினார். அந்தக் கூட்டத்தைக்கண்டு அரசு அஞ்சியது என்று சரித்திர ஆர்வலரும் எழுத்தாளருமான வி. ஸ்ரீராம் கூறுகிறார். அங்கே வி. கிருஷ்ணஸ்வாமி "இந்த கடற்கரைதான் இந்த நகரத்தின் நுரையீரல், அதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள்' என்றார். அரசு அத்திட்டத்தைக் கைவிட்டது.

எப்படிப்பட்ட தொலைநோக்குப்பார்வை? இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் . "நீ என்ன கூட்டம் கூட்டுவது நான் என்னக் கேட்பது' என்று அரசு பொதுமக்களின் உணர்வுகளை புறக்கணிக்கவில்லை. மெரினா அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது . நம் சென்னைக்கு இயற்கை அளித்த செல்வத்தை இன்றும் அவர் சிலையாக நின்று பார்த்து மகிழ்கிறார்.

நாட்டுப்பற்றும் தேசிய உணர்வும் தனது கலாசாரத்தைப்பற்றிய பெருமையும் உள்ள ஒருவர் எப்படி சிந்திப்பார் என்பதற்கு அவர் 1910 இல் அலாகாபாதில் ஒரு கூட்டத்தில் பேசியதே சான்று ""நம்மிடையே சில அதிர்வுகள் இருக்கலாம்; நம் நாட்டின் முன்னேற்றத்தை ஏதோ தடுப்பது போல தோன்றலாம்; சாதிப் பிரிவுகளோ மதப்பிரிவுகளோ இருக்கலாம்; வெளியில் தெரியும் மாறுபாடுகள் நம் மக்கள் முன்னேறி பீடு நடைபோடுவதைத் தடுப்பது போல தோன்றலாம்; ஆனால் "ஒற்றுமையான இந்தியா' என்ற அடித்தள உயிர்ப்பு இருக்கிறது அது நிச்சயம் மெய்ப்படும். அந்த நாள் வரும்பொழுது, நம் நாடு இளங்காலையாக இல்லாமல் உச்ச்சத்தில் ஜொலிக்கும் கதிரவனாக இருக்கும். கடந்த காலம் ஒரு பொற்காலமாக இருந்த நமக்கு எதிர்காலமும் நிச்சயம் ஒளிரும்''

இந்தச் சொற்பொழிவை சென்னை சம்ஸ்க்ருத கல்லூரியின் பொன் விழா மலரில் படித்தேன். அன்று அவர் பேசப்பேச கரகோஷங்கள் ஒலித்திருக்கின்றன. "நிறுத்தட்டுமா' என்று அவர் கேட்டும் அரங்கத்தினர் அவரைத் தொடரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

சென்னை சர்வகலாசாலையில் அவர் செனட், சிண்டிகேட் இரண்டிலும் அங்கத்தினராக இருந்தார். 1911 ஆம் ஆண்டு பட்டமளிப்பு உரையின் முடிவில் அவர் கூறுகிறார், "நம் கடமை நம் நலத்தைப் பேணுவதில் மட்டும் முழுமை அடையாது, நமக்குப் பின்னால் வருபவர்கள் நன்மைக்காக நாம் உழைக்க வேண்டும். புத்தன் முழுமை பெற்றது பிறர் நலனுக்காக உழைத்தபோதுதான். கப்பல் படைகளோ, ஆயுதங்களோ , பன்னாட்டு வணிகமோ, அரசியல் அமைப்புகளோ, பொருள் வளமோ இவை எதுவுமே அறிவுச்செல்வத்திற்கு ஈடாகாது. கல்வியும் அறிவுமே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உலக அமைதிக்குப் பணியாற்ற வழி வகுக்கும்'.

இன்று அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அவர் அன்றே அதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்தார். மைசூர் கலாசாலையில் முதல் முதலாக பி.ஏ பட்டம் பெற்ற இரு பெண்மணிகளை சென்னைக்கு வரவழைத்து கெüரவித்தார்.

அவர் மகன் சந்திரசேகரன் அவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றில் சொல்கிறார், "அப்பொழுது கலாசாலைகளில் தீண்டத்தகாதவர் என்றும் கீழ்சாதியினர் என்றும் கூறி பட்டம் பெறுவதில் தடைகள் இருந்தன. கள்ளிக்கோட்டையில் இருந்த ஒரு கல்லூரி சென்னை சர்வ கலாசாலையில் சேர்க்கப்படாமலே இருந்து வந்ததாம். அதை சேர்த்தால் அங்கு கல்வி பெறும் தீண்டத்தகாதவர் என்று கூறப்பட்ட இனத்தைச்சேர்ந்தவர்கள் பயனடைவார்கள் என்று கருதினார்கள்.

சர்வகலாசாலை ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் அந்த கல்லூரியை இணைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தார். இப்படி அக்கலாசாலையை சென்னை சர்வகலாசாலையுடன் சேர்த்ததால் பிற்பாடு தீண்டத்தகாதவர்கள் என்று புறக்கணிக்கப்பட்டு வந்த சமூகத்தினரை மேல் படிப்பிலிருந்து விலக்க வழியில்லாமல் போய்விட்டது. அவருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்துடன் ராரிச்சன் மூப்பன் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி அவருக்கு ஒரு தீபஸ்தம்பம் உயர்த்தினார்கள் என்று கி. சந்திரசேகரன் எழுதுகிறார்.

அவர் இன்னும் அதிக காலம் வாழ்ந்திருப்பாரேயானால், மற்ற ஊர்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பிரச்னைகளைத் தீர்க்க வழி செய்திருப்பார் என்றும் எழுதியுள்ளார்.

""ஒருமுறை ஒரு சமஸ்கிருத பண்டிதர் சமஸ்கிருதத்தின் பெருமைபற்றி பேசினாராம். கிருஷ்ணஸ்வாமி அய்யர் நானும் அவைகளைப் படித்திருக்கிறேன். உயர்ந்த அர்த்தம் அவைகளில் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் பாடிய மாத்திரத்தில் மனதைக் கவ்விக்கொண்டு உருக்குவதில் தேவார திருவாசகங்களுக்குச் சமமாக ஏதோ ஒன்று இரண்டுதான் அப்படி இருக்கலாம்'' என்று அழுத்தமாகக் கூறினார் என்று அவருடைய தமிழபிமானத்தைப்பற்றி மகாமஹோபாத்யாய டாக்டர் உ.வே சாமிநாத அய்யர் பதிவு செய்கிறார்.

வி.கிருஷ்ணஸ்வாமி அய்யர் பாரதியாரை பல பாடல்களைப் பாடச்சொல்லி அவற்றை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார். ஒருமுறை திருவாசகம் பாடிக்கொண்டிருந்த பாடகரை வேறு பாட்டை பாட சொன்னவரிடம் "தேவாமிர்தத்தைச் சாப்பிட்டுகொண்டிருக்கும்போழுது கொஞ்சம் பிண்ணாக்கு கொண்டுவா வென்று சொல்வதுபோலிருக்கிறது உம் பேச்சு' என்றாராம்.

அர்பத்னாட்டு வங்கி மூழ்கியதும் அதற்கு காரணமாக இருந்த சர் அர்பத்னாட்டை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் மிக பிரசித்தம். அந்த வங்கி திவாலான பின்தான் அவர் இந்தியர்களுக்காக இந்தியன் வங்கி துவக்க முடிவெடுத்தார்.

அக்காலங்களில் பாரிஸ்டர்கள் மட்டுமே இன்சால்வன்சி நடவடிக்கைகளை நடத்த முடியும். வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் பாரிஸ்டர் அல்ல வக்கீல்தான். ஆகையால் நீதிமன்றத்தில் வக்கீல் அங்கியைக் கழற்றி தான் சுதேச நிதியின் சார்பில் பணம் இழந்தவராக (பார்ட்டி இன் பெர்சன்) வாதிட்டார்.

அன்று வானொலி கிடையாது. தொலைக்காட்சி கிடையாது. அவருடைய குறுக்கு விசாரணையைக் கேட்க மக்கள் நீதிமன்றத்தில் கூடுவார்களாம். அவரது குறுக்கு விசாரணைகளை பத்திரிகைகள் அப்படியே பிரசுரித்தனவாம். அவருடைய கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் குற்றவாளிகள் திணறியதை சரித்திரம் பதித்துள்ளது.

ஈகைக்குணம் அவருடனே பிறந்தது என்று சொல்லலாம். ஒருமுறை அவர் உணவருந்திக்கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் பிரச்னை தீர ஒரு குறிப்பிட்ட தொகை பண உதவி கேட்டு அவர் கிராமத்திலிருந்து ஒருவர் வந்தார். கொடுக்கிறேன் என்று சொல்லி பாதி உணவிலேயே எழுந்துவிட்டாராம். ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் கேட்ட தொகை முழுவதும் கொடுக்கலாம் என்று இப்பொழுது எண்ணுகிறேன். சில நிமிடம் சென்றால் மனம் மாறிவிடலாம், அதனால்தான் என்றாராம்.

கொடுக்கவேண்டும் என்று தோன்றினால் கேட்பது எந்த ஒரு ஸ்தாபனமோ, மனிதரோ, அவர் கை கொடுத்துவிடும். சுவாமி விவேகானந்தர் சிகாகோவிற்கு உலக மதங்கள் மாநாட்டிற்கு செல்வதற்கு வழியனுப்பவும், சுவாமி திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளில் அவரும் ஒருவர். சுவாமி விவேகானந்தருக்கு நூற்று ஐம்பதாவது ஆண்டு விழா நடக்கும் இவ்வாண்டில் இந்தக் கட்டுரையின் நாயகருக்கும் விழா நடப்பது பொருத்தமே. 49 ஆண்டுகளே வாழ்ந்த அவர் எப்படி இத்தனை சாதனைகள் புரிந்தார் என்பது வியப்பாக இருக்கிறது.

கோகலே, ரானடே பண்டிட் மதன் மோகன் மாளவியா போன்று நாடெங்கும் அவரை அறிந்தவர் பலர். அவர் இறந்த அன்று நாள் முழுவதும் அவ்வப்பொழுது பீரங்கி வெடித்து அரசு தனது இரங்கல் மரியாதையை அறிவித்தது. நம் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் அவரை "மகாபுருஷர்' என்று வர்ணித்தார்.

எனக்கு ஏதாவது பெருமை இருக்குமானால், அது நான் வி. கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பதுதான். எனது எண்ணத்தில் தெளிவும், செயல்பாடுகளில் நேர்மையும், தீர்ப்புகளில் நியாயமும் இருக்குமானால் அதற்கும் காரணம் நான் வி. கிருஷ்ண ஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பதுதான்!

கட்டுரையாளர்: உயர்நீதின்ற நீதிபதி (ஓய்வு).

[ நன்றி : தினமணி ] 


தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: