புதன், 8 ஜூன், 2016

சங்கீத சங்கதிகள் - 77

எப்படிப் பாட வேண்டும்?
மதுரை மணி ஐயர் 




ஜூன் 8. மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.

‘தினமணி’யில் 2014-இல் வெளிவந்த ஒரு கட்டுரை இதோ!  ( இது மணி ஐயரின் 'சங்கீத கலாநிதி' விருது ஏற்புரையிலிருந்து ஒரு பகுதி என்று நினைக்கிறேன். )
==========


சரளி வரிசை, அலங்காரம், கீதம், வர்ணம், கீர்த்தனை இவைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்று நன்றாக வந்த பிறகே மற்றொன்று என்ற முறையில் நல்ல தாளக்கட்டுடனும், கால ப்ரமாண சுத்தத்துடனும், சாதகம் செய்து அப்பியசித்தால் வர்ணம் பாடும்பொழுது சாரீரத்தில் காலம் விவரமாகவும் தெளிவாகவும் பாடும்படியான நிலைமை ஏற்படும்.

ஒவ்வொரு மாணவனும் குறைந்த பக்ஷம் பதினைந்து வர்ணங்களாவது கற்க வேண்டும்; வர்ணம் இரண்டு காலங்கள் அழுத்தமாகப் பாட வந்த பிறகே கீர்த்தனைகள் கற்றுக் கொள்ள வேண்டும். இளம் வித்வான்கள், ஸீனியர் வித்வான்களின் கச்சேரிகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கத் தவறக் கூடாது.

மாலை நேரங்களில் தம்புரா சுருதியுடன் இணைந்து பாடிப் பழக வேண்டும்; சாஹித்யங்களைத் தெளிவாக உச்சரித்து அந்த வார்த்தைகளின் பொருளை உணர்ந்து பாட வேண்டும். இதனால் ரஸிகர்கள் சாஹித்யத்தின் கருத்தை அறிந்து சந்தோஷப்பட சந்தர்ப்பம் வாய்க்கும்.

கச்சேரி செய்யும்பொழுது பாவமுள்ள ராகங்களை அதிகமாகக் கையாள வேண்டும். அப்பொழுதுதான் ஜனங்களுக்கு இவர்கள் பாடுவது நன்றாகப் புரியும். ஏதாவது ஒன்றிரண்டு அபூர்வ ராகங்கள் பாடலாம்.

கீர்த்தனைகள் பாடும்பொழுது அநுபல்லவியையாவது, சரணத்தையாவது நிரவலுக்கு எடுத்துக் கொள்ளும் பதங்கள் கூடுமான வரையில் உயர்ந்த பாவங்களைத் தெரிவிக்கும் முறையில் அமைவது சிறந்ததாயிருக்கும். நினைத்த இடங்களில் எல்லாம் நிரவல் செய்வது பாட்டின் பாவத்தைக் கெடுத்துவிடும். பாட்டின் பொருளை அறிந்து, அதன் பாவத்தை உணர்ந்து எந்த இடத்தில் நிரவல் செய்தால் கீர்த்தனை சோபிக்குமோ அந்த இடத்தை எடுத்துக் கொள்வதுதான் நலம்.

ஸ்வரங்களை ராக பாவத்துடன் பாட வேண்டும். அப்படிப் பாடினால் சாரீரம் சுருதியைவிட்டு நகராமல் இருக்கும். எவ்வளவு பாடினாலும் தெவிட்டாமல் இருக்கும். ராக பாவம் கெடாமல் எவ்வளவு விநயமாகப் பாடினாலும் நல்லதுதான்.

தாளக்கட்டுடனும் ஸ்வரப் பிடிப்புடனும் ஸ்வரம் பாடுவது நிரம்ப முக்கியம். கமக சுத்தமாக ஸ்வரம் பாட வேண்டும். ஸ்வரத்தை ராக பாவத்துக்குப் பொருத்தமாக அசைவுகளுடன் பாட வேண்டும். ஆரோஹண, அவரோஹண கிரமங்களை நன்றாக அநுசரித்து சுருதியுடன் இணைந்து ஸ்வரங்களை நன்றாக உச்சரித்துப் பாட வேண்டும்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

மதுரை மணி

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்



கருத்துகள் இல்லை: