செவ்வாய், 7 ஜூன், 2016

பாடலும், படமும் - 13

தப்பிய பிள்ளைகளைத் தாயொடு கூட்டிய அப்பன்! 

ராதா முரளிதரன் 
ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி (1-6-7) (4-8-2) விவரிக்கும் ஸ்ரீமத் பாகவதக் கதை இந்த படத்தில் சித்திரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

கண்ணன் திரு அவதாரம் செய்ததால்  வடமதுரை. விருந்தாவனம், துவாரகையில் உள்ளோருக்கு இன்ப வெள்ளமாகிய அவன் லீலைகளை அனுபவிக்கும் பெரும் பேறு கிடைத்தது. பரமபதத்தில் உள்ளோர் கண்ணனைத்  தம்மிடத்திலே எழுந்தருளப்பண்ண ஆசைகொண்டு ஒரு திட்டம் வகுத்தனர். 

துவாரகையில் வசித்த ஒரு வைதிகனின் பிள்ளைகளைப் பிறந்த நொடியிலேயே கவர்ந்து சென்றனர். வைதிகனும்  சவமாய்க்கிடந்த குழந்தையை அரண்மனை வாயிலில்  கிடத்தி  அரசநிந்தனை செய்தான். அர்ஜுனன் அவன் பிள்ளைகளைக் காப்பதாக வாக்களித்துப் பிரசவ விடுதிக்கு  முன் காவல் இருந்தான். அப்போது பிறந்த குழந்தை உடனே மறைய அர்ஜுனன் தான் உறுதிமொழி கொடுத்தபடி அக்னிப்ரவேசம் செய்ய தயார் ஆனான்.  விரைந்துவந்த கண்ணன் அவனைத் தடுத்து அவனுடனே திவ்யரதமேறி ஸ்ரீவைகுண்டம் சென்றார். அங்குள்ளவர்களுக்கு அருள் புரிந்து  பிள்ளைகளை மீட்டுவந்தார்.

திருவாய்மொழி (3-10-5), பெரியதிருமொழி  (5-8-8) இந்தக் கதையை வர்ணித்துக்  கொண்டாடுகின்றன.

ஸ்ரீ பெரியாழ்வார் (4-8-2) அமுதத்திருவாக்கை ரஸிப்போம்.

"பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த உறைப்பன் ஊர்
மறைப்பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே".

இன்னொரு பாடலில் (1-6-7) பெரியாழ்வார் 

  “தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
        தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டியஎன் 
    அப்ப ! “

 என்று கூறுவதையும் ரசிக்கலாம் 

[ நன்றி: கல்கி தீபாவளி மலர், 1970; ஓவியம் :வினு; http://www.indian-heritage.org/ ] 

தொடர்புள்ள பதிவுகள்:

1 கருத்து:

கருத்துரையிடுக