திங்கள், 6 ஜூன், 2016

தொல்காப்பியக் கவியரங்கம்.

பயன்மிகு தொல்காப்பியம் 





ஜூன் 5-ஆம் தேதி , 2016 -இல்  டொராண்டோவில் நடந்த இந்தக் கவியரங்கத்தைப் பற்றி விழாவின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மு.இளங்கோவன் ( தமிழ்த்துறை, பாண்டிச்சேரி பல்கலைக் கழகம்) முகநூலில் எழுதிய தொகுப்பிலிருந்து ஒரு பகுதி :
இளங்கோவன், நான், புகாரி 


” .... பேராசிரியர் பா. பசுபதி அவர்களின் தலைமையில் பயன்மிகு தொல்காப்பியம் என்ற தலைப்பில் கவியரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் பசுபதி அவர்கள் மரபுக்கவிதையில் பெரும்புலமை பெற்றவர் ஆதலால் சந்தக்கவிதை வழங்கி அனைவரின் இதயத்திலும் இடம்பிடித்தார். கவிஞர் அன்புடன் புகாரி தொல்காப்பியம் குறித்து வழங்கிய கவிதை அனைவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. அதுபோல் கவிஞர் சபா. அருள் சுப்பிரமணியம், தீவகம் வே. இராசலிங்கம் ஆகியோர் சிறப்பான கவிதைகளை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்...”  



என்னுடைய கவிதையின் முதல் பகுதியையும், நிறைவுப்  பகுதியையும் இங்கே இடுகிறேன்:

 தலைமைக் கவிதை

======

தொல்காப்பியம் சொல்லும்
  சொன்னத்தமிழ்ப் பெருமை;
சொல்லோவியம் அதனில்
   சொற்பம்வனை வேனே  

மனித மனத்தின் ஒளிவீச்சு --மொழி
  மக்கள் வாழ்வின் உயிர்மூச்சு
இனத்தின் வளத்தை ஒலிபரப்பும் -- மொழி
   எண்ணெ ழுத்தின் பலம்பெருக்கும்
தொனியின் அதிர்வை இசையாக்கும் -- மொழி
   சொல்லின் பொருளைச் சுவையாக்கும்
கனிந்த உணர்வுக் குருக்கொடுக்கும் -- மொழி
   காலக் குரலைச் செவிமடுக்கும்            

தமிழ்
=====
தொன்மை நூல்தொல் காப்பியமாம் - அது
  சொல்லும் தமிழின் பெருமைகளை.  
அன்னை மொழியின் அருமைகளை -- ஓர்
  ஆய்வுக் கண்ணால் பார்த்திடுவோம்                   (1)

மும்மை என்னும் குணமுண்டு -- தமிழ்
   மொழிக்குத் தனியோர் பண்புண்டு
செம்மை என்னும் நிறைவுண்டு -- சங்கத்
   திணைகள் கொடுக்கும் சிறப்புண்டு                    (2)

இயலும் இசையும் கூத்துமென -- வே(று)
   எங்கும் இல்லா முப்பிரிவால்
பயனும் வியனும் விளைந்தனவே -- இப்
   பகுப்பால் மொழியும் உயர்ந்ததுவே !                    (3)

யவனம் லத்தீன் அறிந்தோர்கள் - தமிழ்
   யாப்பு, முழுமை  சிறப்பென்றார்.
புவனப் பேச்சு மொழிசிலவே -  சீர்,
   பொலிவு, திருத்தம், உளதமிழ்போல்                   (4)

பொருளைத் தொல்லி லக்கணத்தில் -- சேர்த்த
   புதுமை தண்ட மிழ்க்குண்டு !
தரமாம் மரபி லக்கியங்கள் -- பல
   தந்த பெருமை அதற்குண்டு !                                         ( 5)

அகமும் புறமும் வழியமைக்கும் - மிக
   அழகாய் நூலை வரையறுக்கும்
சகமே போற்றும் தத்வங்கள் -- செந்
   தமிழை வளர்த்த சமயங்கள் .                                         (6)

 இசையில் பிறந்த இலக்கணத்தால் -- தமிழ்
   இனிமை என்றான் பாரதியும் 
வசியம் செய்யும் தொடையழகில் -- மிக
   மனம கிழ்ந்தான் கூத்தனுமே !                                  (7)

அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்
   யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே
சிகரக் கவிதை வண்ணம்போல் --ஒரு
   சீர்த்தி உண்டோ பிறமொழியில் ?                                (8)

இழைய றாமல் வாழுமொழி -- பெரும்
  இலக்கி யங்கள் இலங்குமொழி
பழமைக் காலத் தொடர்ச்சியிலே -- புதுப்
  படைப்புத் துடிப்பு வெடிக்குமொழி                                 (9)

 தொல்காப் பியரின் தோள்மேலேநாம்
    தொலைநோக் குடனே நின்றிடுவோம்
 நல்லோர் நம்மைப் புகழ்பாடப்புதுமை
    ஞாலம் தமிழில் சமைத்திடுவோம்                 (10)


  நிறைவுக் கவிதை:

எல்லோனென இன்றுஞ்சுடர் வீசுந்தனித் தன்மை;
சொல்லைத்தமிழ் எழுத்தைக்கவின் பொருளைத்தரும் தொன்மை;
வல்லார்பலர் கெல்லப்புதுப் புரிதல்தரும் பன்மை
ஒல்காப்புகழ் பயன்கள்மிகு தொல்காப்பியம் வாழ்க!



பசுபதி
5-06-16

[ நன்றி : மு.இளங்கோவன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

பேராசிரியர் பிழிந்து கொடுத்து இருக்கின்றார் தொல்காப்பியப் பழ(ஞ்)ம் சுவை இனிக்கிறது

Arima Ilangkannan சொன்னது…

அருமை!

நெடுவைஇரவீந்திரன் சொன்னது…

மொழியும் பிறந்து முடிவில் அழியும்
அழியா மொழியாம் அதுவே தமிழாம்
மொழியில் இசையும் முழுதும் இனிமை
பொழியும் தனிமை பொருந்தும் தமிழே!

வாழ்க வளமுடன்

KAVIYOGI VEDHAM சொன்னது…

மிக அழகுச் சொற்களால் பசுபதி அவர்கள் பா தந்தார். எனக்குப்பிடித்த வரிகள்.-
இசையில் பிறந்த இலக்கணத்தால் -- தமிழ்
இனிமை என்றான் பாரதியும்
வசியம் செய்யும் தொடையழகில் -- மிக
மனம கிழ்ந்தான் கூத்தனுமே ! (7)

அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்
யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே
சிகரக் கவிதை வண்ணம்போல் --ஒரு
சீர்த்தி உண்டோ பிறமொழியில் ? (8)

இழைய றாமல் வாழுமொழி -- பெரும்
இலக்கி யங்கள் இலங்குமொழி
பழமைக் காலத் தொடர்ச்சியிலே -- புதுப்
படைப்புத் துடிப்பு வெடிக்குமொழி ... கவியோகி வேதம்

Pas S. Pasupathy சொன்னது…

கருத்துரைத்த யாவருக்கும் நன்றி .

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

சிமிழுக்குள் இருந்த தமிழ் ஒளி
உமிழ்ந்ததுவே உயர்ந்ததுவே!
அகரம் இகரம் என்றிருந்தோம் ஒரு
சிகரம் சுடர்ந்து ஒளிர்ந்திடவே
தமிழ் அறிஞர் தமிழ்க்கூடல் நிறை
தரம் சாற்றி பறை சாற்றுவோம்.
பொன் திருநாள் இத்திருநாள்.
தமிழ் என்றும் வெல்கவே!
தமிழ் என்றும் வாழ்கவே!
___________________________________ருத்ரா