கல்லுக்குள் ஈரம்
நெல்லை கண்ணன்
ஏப்ரல் 20. பிரபல எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாளின் நினைவுதினம்.
அவர் மறைந்தபோது, ‘தினமணி’யில் வந்த கட்டுரை இதோ.
=====
அண்ணாச்சி ர.சு.நல்லபெருமாள் இன்று உடலோடு இல்லை. இயற்கை எய்தினார் இறைவனடி சேர்ந்தார் என்று பலபடச் சொன்னாலும் காலமானார் என்று சொல்லுவதுதான் சாலப் பொருந்தும் அந்தப் பெருமகனாருக்கு. ஆமாம், கல்கியின் அன்புக்குப் பெரிதும் பாத்திரப்பட்டவர் அண்ணாச்சி. அவரது வாழ்க்கை வருங்கால இளையவர்க்குப் பெரும் பாடமாக அமையும். மிகுந்த அன்பு கொண்டவர் அண்ணாச்சி. அதிர்ந்து பேசாத பண்பாளர்.
எந்தவித தீயபழக்கங்களும் இல்லாத தூயவர். அவரது சித்தப்பா சங்கரபாண்டியம் பிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரு அவையில். இன்றோ அவரது உறவில் தம்பி ஏ.எல்.எஸ். திருநெல்வேலி மாநகரத் தலைவர். எனினும், அண்ணாச்சிக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம்.
வழக்கறிஞர் படிப்புப் படித்திருந்தாலும் நீதிமன்றம் செல்லாதவர். பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட வைக்கும் எளிமையான தோற்றம் கொண்டவர். அவரது எழுத்துகள் மிக மிக இயல்பானவை. அவரது கல்லுக்குள் ஈரம் நாவல்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அவரது இளைய வயதில் போராளியாக்கியது என்று பிரபாகரனே சொல்லியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தை அவர் எழுதியிருக்கும் பாங்கு நமக்கே அந்தப் போராட்டத்தில் பங்குபெற்றதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
"இந்தியச் சிந்தனை மரபு' படிக்க வேண்டிய குறிப்பாக எதிர்காலத் தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல். விரித்துக்கொண்டே போகலாம். என்னோடு பத்துத் தினங்களுக்கு ஒரு தடவையாவது உரையாட விழைவார்.
மரணம் உறுதி என்றும் உண்மை என்றும் உணர்ந்திருந்தும் நாம் மறந்து போகிறோமே, அது இறைவனின் விளையாடல். நான் பார்த்த மனிதர்கள் சிலரை அவர்கள் தம் ஒழுக்கமான வாழ்க்கையின் அடிப்படையில், அன்பு வாழ்க்கையின் அடிப்படையில் நூறாண்டுகள் வாழப் போகின்றவர்கள் என்று நம்புவதுண்டு. அண்ணாச்சி ர.சு.நல்லபெருமாளையும் அப்படித்தான் கருதினேன். இறைவனைக் கருதாத காரணமோ என்னவோ அண்ணாச்சி இன்று பூத உடலோடு இல்லை. ஆனால், அவர் புகழ் என்றும் என்றும் இருக்கும்.
சிரித்த முகம் சிந்தனையைத் தூண்டும் உரையாடல் என்று அவர் என் வாழ்க்கையின் ஒரு முக்கிய பங்கு. பாளையங்கோட்டையில் அவர் வாழ்ந்த வீடு இருக்கும் மேடை போலீஸ் ஸ்டேஷன் தெருகூட அண்ணாச்சி வாழ்ந்ததனாலேயே அமைதியாக இருந்ததோ என்று நான் வியந்ததுண்டு. பாரதி வாழ்ந்த கடையத்துக்குப் பக்கத்து ஊரான ரவணசமுத்திரத்தில் சுப்பையாபிள்ளை சிவஞானத்தம்மாள் மகனாகப் பிறந்திருந்தாலும் பாளையங்கோட்டை வாழ்க்கையைச் சுவைத்திருந்தார்.
அவரது கல்லுக்குள் ஈரம் நாவல் கல்கியின் பொன்விழா ஆண்டு போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றிருந்தது. விடுதலைப் போராட்டத்தை அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடந்த போராட்டத்தை அவர் எழுதியிருந்த விதம், அதில் பாத்திரமாகியிருந்த பலரை நாங்கள் நேரில் தரிசிக்கிற பாக்கியம் பெற்றிருந்ததனால் பெருமை கொண்டிருந்தோம்.
ஆனால், பிரண்ட் லைன் ஆங்கில வார இதழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் உங்களுக்குப் போராளியாக உந்து சக்தி எது என்று ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. அவர் பதில் தருகின்றார். ர.சு.நல்லபெருமாள் அவர்களின் "கல்லுக்குள் ஈரம்' நாவல் என்று. உடன் நமது அரசின் புலனாய்வுத் துறை அண்ணாச்சியை விசாரிக்கத் தொடங்கியது. அண்ணாச்சியின் எழுத்தின் வலிமை அது. புலனாய்வுத்துறைக்குப் புரியுமா எழுத்தின் வலிமை?
அண்ணாச்சியோடு பழகியவர்களுக்கு அவரின் எழுத்துகளில் அவர் காட்டும் சமூகக் கோபத்தைக் கண்டு வியப்பு. ஆமாம், "எண்ணங்கள் மாறலாம்' முழுக்க முழுக்க மருத்துவத் துறையை அதைச் சீரழிக்கிற மருத்துவர்களைக் குறித்தும் அதனால் சமூகம் படுகிற துன்பங்களையும் துயரங்களையும் குறிக்கும்.
"திருடர்களோ' நீதித்துறைக்குப் படித்துவிட்டுச் சமூக விரோதிகளாக வலம் வருகிற வழக்காடுவோரைப் பற்றியும் அதனால் ஏற்படும் சமூக அவலங்களைப் பற்றியும் விவரிக்கும்.
"போராட்டங்கள்' நாவல் பொது உடைமைத் தோழர்களை அண்ணாச்சிக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தும் நிலைக்குத் தள்ளியது. அந்தப் போராட்டங்கள் நாவல் இந்தியில் சங்கர்ஷ் என்று மொழி பெயர்க்கப்பட்டது. தனக்குச் சரியென்று பட்டதை அண்ணாச்சி எழுத்து வடிவில் தரும்போது பாரதியின் நேர்படப் பேசு என்ற வரியே நம் முன்னே நின்று ஆடும்.
ஆண் தெய்வங்களைப் பெண்கள் விரும்பியதாகச் சொல்லுகிற சமூகத்தில் ஒரு ஆண், பெண் தெய்வத்தை விரும்புகின்றான் என்று ஒரு நாவல் எழுத விரும்பியபோது அபிராமி பட்டரையே அதற்கு ஆதாரமாகக் கொண்டு எழுதிய நாவல் "நம்பிக்கைகள்' (கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளை விருது 1983 )
அவரின் ஒரே சிறுகதைத் தொகுப்பு சங்கராபரணம். சமீபத்தில் அவரது "மருக்கொழுந்து மங்கை' சரித்திர நாவலை யாரோ படமெடுக்க விரும்புவதாகச் சொன்னவுடன் ஒரு சிறு குழந்தையைப்போல் அவங்களுக்கு எழுதிக் கொடுத்துவிட வேண்டுமோ என்றார். அதன்பின்னர் தான் அதற்குப் பணம் கேட்க வேண்டும் என்றபோது அவ்வளவு கேட்கலாமா தம்பி என்றார் அந்தக் குழந்தை.
1971-ல் புத்த மதம் குறித்து அவர் எழுதிய "சிந்தனை வகுத்த வழி'க்கு சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது.
எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை சார்பாக "உணர்வுகள் உறங்குவதில்லை' நூல் 1991-ல் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்திய வரலாற்றை அவருக்கே உரிய பார்வையில் "பாரதம் வளர்ந்த கதை' என்று அண்ணாச்சி எழுதியுள்ளதைப் படித்தால் அவர் பெருமை விரியும்.
அவரது இன்னொரு தத்துவ நூல் "இந்திய சிந்தனை மரபு'. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருநாள், தம்பி இருட்டு பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அதனை இந்தத் தமிழ் நாட்டுக்குத் தர வேண்டும் என்றார்.
நானும் எனது தமிழ்நாடும் ஒரு உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட ஒரு தமிழ்ப் பெரியவரை இழந்து இருட்டில் நிற்கிறோம். ஆனால், அவரின் நேர்மையான எழுத்துகள் ஒளியாய் எம்மை வழிநடத்தும். அவரைப் புரியாதவர்கள் அவர் கல்லோ என்றுகூடக் கருதுவார்கள். ஒரு கல் முழுவதும் ஈரமாகவே இருந்ததை எல்லோரும் அறிவார்கள்.
[ நன்றி: தினமணி ]
தொடர்புள்ள பதிவுகள்:
ர.சு.நல்லபெருமாள்
ர. சு. நல்லபெருமாள் : விக்கிப்பீடியாக் கட்டுரை

2 கருத்துகள்:
https://siliconshelf.wordpress.com/2011/04/29/அஞ்சலி-ர-சு-நல்லபெருமாள்/
அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது நான் செய்த புண்ணியம்..
கருத்துரையிடுக