புதன், 5 ஏப்ரல், 2017

684. கைலாசபதி - 1

திறனாய்வுத் துறையும் "கலாநிதி' க. கைலாசபதியும்
பி. தயாளன்


ஏப்ரல் 5. கைலாசபதி அவர்களின் பிறந்த நாள்.

தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர்; ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர்; "கலை கலைக்காக' என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர்; இலக்கியத்துக்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர்; சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்; தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்று நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர்; ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவர்; யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர்; இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்; இத்தனை பெருமைக்கும் உரியவர் "ஈழம் தந்த கொடை' கலாநிதி க.கைலாசபதி.


மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் இளைய தம்பி கனகசபாபதி-தில்லைநாயகி நாகமுத்து தம்பதிக்கு 1933-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்தார். தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்ததால், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு ராயல் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.


பல்கலைக்கழகக் கல்வி முடிந்தபின், தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.


பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். "தமிழில் வீரயுகப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து "கலாநிதி' (முனைவர்) பட்டம் பெற்றார். கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார். சங்க இலக்கியத்தைக் கிரேக்க, ஐரிஷ் முதலிய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார். வீரயுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்.


"தமிழில் வீரயுகப் பாடல்கள்' என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது. கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறிமரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல், தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.


ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் யாழ்-வளாகத் தலைவராக இருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மூன்று ஆண்டுகள் செயல்பட்டார்.


அமெரிக்காவிலுள்ள "அயோவோ பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார். அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் "புதியதைப் படைக்கும் எழுத்துகளுக்குரியர்' என இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.


யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு, இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு, இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக்கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.


""இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது; இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்; அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்'' என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.


""கலை, இலக்கியம் முதலியற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; சமூகவியலை பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும்; ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்'' என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். ""உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்'' என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.


""உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன; இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை'' என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.


பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், இலக்கியமும் திறனாய்வும், கவிதை நயம், சமூகவியலும் இலக்கியமும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், திறனாய்வுப் பிரச்சினைகள், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், இலக்கியச் சிந்தனைகள், பாரதி ஆய்வுகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள், இரு மகாகவிகள், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் முதலிய நூல்களைத் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.


இலங்கையில் இருந்து வெளிவந்த, தொழிலாளி, தேசாபிமானி, செம்பதாகை, ரெட்பானர் முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் வடித்துள்ளார். பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் இதழிலும், இலக்கிய இதழான மல்லிகையிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. தமிழ்நாட்டு இதழ்களான தாமரை, சாந்தி, சரஸ்வதி, செம்மலர், தீக்கதிர், ஜனசக்தி, ஆராய்ச்சி முதலியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.


இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான, தத்துவார்த்த நூல், கைலாசபதியின் "தமிழ்நாவல் இலக்கியம்'. தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகிறது.


கல்வித்துறை நிபுணர், இதழாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர், விமர்சகர், பேச்சாளர் எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கினார் கைலாசபதி.


முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி கைலாசபதி 49 வயதில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இயற்கை எய்தினார்.


தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழ நாட்டிலிருந்து எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலாநிதி கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றென்றும் விளங்குவார்!

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவு:

கருத்துகள் இல்லை: