சனி, 15 ஏப்ரல், 2017

691. அண்ணாதுரை - 2

யேல் பல்கலைக் கழகத்தில் அண்ணாதுரை
 பசுபதி 


ஏப்ரல் 15, 1968. அண்ணாதுரை யேல் பல்கலைக் கழகத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.  அதற்கு ஒரு வாரம் கழித்து, அவரை நான் யேலில் சந்தித்தேன். மேலே படியுங்கள் !

கீழ்க்கண்ட கட்டுரை ‘ காலம்’ 50-ஆவது இதழில் ( ஜனவரி 2017 ) வெளியாகியுள்ளது. 
======

சென்னையில் 1967 தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, அமெரிக்காவிற்கு வந்தேனோ, அவரை அடுத்த வருடமே நேரில் பார்த்துப் பேசுவேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

1967 –இல்  அமெரிக்காவில் யேல் ( Yale ) பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில்  முனைவர் பட்டப் படிப்புக்காக நான் விண்ணப்பித்திருந்தேன். ஓர் உதவித் தொகையுடன் என்னை ஏற்றுக் கொள்வதாகக் கடிதம் வந்தது. பின்னர் சென்னையில் இருந்த அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அமெரிக்கா செல்லும் எல்லா மாணவர்களுக்கும் ஒரு நாள் முழுதும்  நடந்த பயிலரங்கம் மூலம் அமெரிக்காவைப் பற்றிய முக்கியமான  தகவல்களைப் பலர் எங்களுக்கு எடுத்துரைத்தனர்.

அலுவல அதிகாரியான  அமெரிக்கர் ஒருவர் யேல் பட்டதாரி, நான் யேல் செல்கிறேன் என்று தெரிந்தவுடன் என்னுடன் நிறையப் பேசினார். எப்படி எலிஹு யேல் சென்னையில் ஜார்ஜ் கோட்டைக் கவர்னராய் இருந்தார், பிறகு 1718 –இல் அமெரிக்காவில் ஒரு கல்லூரி நிறுவச் சென்னையிலிருந்து  பணம் அனுப்பினார், அவர் மேலும் நிறைய அனுப்புவார் என்று நினைத்து அந்தப் பல்கலைக் கழகத்திற்கு அவர் பெயரைச் சூட்டினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் நகைச்சுவையாய்ப் பேசிக்கொண்டிருந்தோம்.   

1968 –ஆம் ஆண்டு. ஏப்ரல் மாதம்.

 நான் கனெக்டிகட் மாகாணத்தில், நியூ ஹேவன் நகரில் இருந்த யேலில் சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகியிருந்தன.  தகவல்தொடர்பு பொறியியல் துறையில்  ( Communication Engineering ) ஆய்வுகள் செய்ய நான் படித்துக் கொண்டிருந்த நேரம்.


திடீரென்று எனக்கு ஓர் அழைப்பிதழ் வந்தது. தமிழ்நாட்டில் அப்போது முதல் மந்திரியாய் இருந்த சி.என். அண்ணாதுரை அவர்களைச் சந்திக்கவும், அவருக்குக் கொடுக்கப்படும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வந்த அழைப்பிதழே அது. இதுபோன்ற அழைப்பிதழ் யேலில் படித்துக் கொண்டிருந்த மற்ற பல இந்திய மாணவர்களுக்கும் அனுப்பப் பட்டது என்பதைப் பிறகு அறிந்தேன்.

சப் ஃபெல்லோஷிப் ( Chubb Fellowship ) என்ற திட்டத்தின் கீழ் யேலுக்கு வந்திருக்கிறார்  அண்ணாதுரை என்று அறிந்தேன். நான் முன்பு சென்னையில் சந்தித்த யேல் பட்டதாரியான அமெரிக்க தூதரக அதிகாரிதான் அண்ணாதுரைக்கு இந்த விஷயத்தில் உதவியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

 அண்ணாதுரை அவர்களைப்  பின்னர் வேறு சில சமயங்களிலும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அங்குள்ள அமெரிக்க மாணவர்களுடன் திருக்குறளைப் பற்றித் தான் பல முறை பேசியது  பற்றி எடுத்துரைத்தார் அண்ணாதுரை.



அப்போது, நிரந்தரமாய் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில்    தமிழ் ஒலித்தால், தமிழின் பெரும் இலக்கியங்கள் விளக்கப்பட்டால் எவ்வளவு அழகாய் இருக்கும் என்பது போன்ற எண்ணங்கள் என்னுள்  எழுந்தன. அன்று ஒரு வெறும்கனவாய் இருந்தது இன்று மெல்ல மெல்ல ஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலம் நனவாய் ஆகும்  என்று நம்புகிறேன்.

அண்ணாதுரை உடல் நலமில்லாமல் இருந்தார்  என்பதைப் பற்றி எனக்கு ஒன்றுமே அப்போது தெரியாது. அவரும் அதை ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்தான் எங்களுடன் பேசினார்.

அவருக்கு இசையில் நாட்டம் உண்டு என்பதை நான் அறிவேன்.  கனெக்டிகட்டில் இருந்த வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுப்பதைப் பற்றிக் கூறி, அவர் அங்குச் சென்றாரா என்று கேட்டேன். உற்சாகமாக, அவர் ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் போன்றோரின் நாகஸ்வர ஒலிநாடாக்களைச் சென்னையிலிருந்து கொண்டுவந்து அவர்களுக்குத் தந்ததாகச் சொன்னார்.

அமெரிக்கர்கள் தென்னிசையைப் பாடுவதைக் கேட்டீர்களா என்று வினாவினேன். அவர் சிரித்துக் கொண்டே சொன்னது என் காதில் இன்னும் ஒலிக்கிறது.

, கேட்டேனே!, வெள்ளை வெளேரென்றுஜிப்பாக்கள் அணிந்த தஞ்சாவூர் ராவ்ஜிக்கள் பாடுவது போல இருந்தது ! “ என்றார்.

பிறகு அவர் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்க்டனுக்கு ரயில் வண்டியில் போகும் நாள் வந்தது. நாங்கள் சிலர் நியூ ஹேவன் ரயில் நிலையத்திற்குச் சென்றோம், அவரை வழியனுப்ப.


அண்ணாதுரைக்குச் சிறிது மனவருத்தம். தன்னை விமானம் மூலம் அனுப்பாமல், ரயில் மூலம் அனுப்புகிறார்களே என்றுவிமான நிலையம் செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம், பிறகு விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் செல்லும் காலம் எல்லாவற்றையும் கணக்குப் போட்டால் இதுவே குறைந்த நேரம் பிடிக்கும் என்றும், மேலும் வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே செல்வதற்கும் ரயில் பயணமே மேல் என்று சொல்லி அவரை நாங்கள் சமாதானப் படுத்தினோம்.

மீண்டும் சந்திப்போம்என்று சொல்லி, சிரித்த முகத்துடன் கைகள் அசைத்து அன்று அவரை ரயில் பயணத்தில்  அனுப்பி வைத்தோம்.


அடுத்த ஆண்டில் தமிழ்நாடே கண்ணீருடன் அவரை வேறொரு பயணத்தில் அனுப்பி வைத்தது.   

தொடர்புள்ள பதிவுகள்:

அண்ணாதுரை

கருத்துகள் இல்லை: