வெள்ளி, 13 அக்டோபர், 2017

870. வன்முறை : கவிதை

வன்முறை
சுபதி 

’திண்ணை’ மின்னிதழில்  7, அக்டோபர்,  2001 -இல் வந்த கவிதை. 

வன்முறைச் சின்னம் ‘பின் லேடன் ‘ — இவனைக்
கொன்றிடில் வென்றியென்(று) ஆர்ப்பவன் மூடன்.
புகைநடுவில் தீயெரியும் உண்மை — வன்முறைப்
. . புதிரை அவிழ்த்தால் உலகுக்கு நன்மை !
பகைமரம் வெட்டல்மிக எண்மை — அதன்வேர்
. . பரவாமல் செய்வதே கற்றோரின் தன்மை!   (1)
வினையறுக்க முந்துமோர் ஆளு — அவனை
. . ‘வினையை விதைத்தது யாரெ ‘ன்று கேளு !
பனையுயரம் நில்பலாத் காரம் — அதனைப்
. . பாலூட்டிச் சீராட்டல் யாருப சாரம் ?       (2)
கண்ணாடி மாளிகை மக்கள் — பிறர்மேல்
. . கனவிலும் வீசலா மோபெருங் கற்கள் ?
தண்மையே நல்வாழ்வின் சாரம் — உரிய
. . தண்டனை செய்திட வந்திடும் நேரம் !     (3)
கத்தியை நம்பியே வாழ்வான் — முடிவில்
. . கத்தியே காலனாய் வந்துயிர் மாள்வான் !
புத்தியே தந்திடும் சித்தி — இந்த
. . யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும்நல் உத்தி ! (4)
மார்பினில் பாய்வது யாரு ? — மேற்கு
. . வளர்த்த கடாவாம் தாலிபான் பாரு !
தேர்ந்து விரோதியை வெல்லு ! — கூட
. . வேற்றினம் மேலுள் வெறுப்பையும் கொல்லு! (5)
அரசியல் வாதியுப தேசம் — கேட்டு
. . ஆத்திரப் பாதையில் போகுதே தேசம் !
பரஸ்பரம் மானிட நேசம் — இருப்பின்
. . பாரிலே வாழலாம் இன்பமாய் வாசம் ! (6)
வெறுப்பினால் வந்ததித் துக்கம் — நிறைய
. . வேண்டும் நமக்கே இனநல்லி ணக்கம் !
கறுவினால் மூண்டதீ யாண்டும் — அணையக்
. . கருணை மழைபெய்ய ஈசனருள் வேண்டும் ! (7)
*******
வென்றி=வெற்றி; எண்மை=இலேசு; கறு=ஆழ்ந்த பகைமை.
தொடர்புள்ள பதிவுகள்:

3 கருத்துகள்:

Thulakol Soma Natarajan சொன்னது…

Yes.

Instead of cutting down the
Branches the roots of Terrorist Tree
Should be struck down.

Kavingar Jawaharlal சொன்னது…

அருமை பசுபதியாரே.

Pas Pasupathy சொன்னது…

யாவருக்கும் நன்றி.

கருத்துரையிடுக