வெள்ளம் அளித்த விடை
பசுபதி
( கலைமகள் 2017 தீபாவளி மலரில் வெளியான கவிதை.)
பசுபதி
( கலைமகள் 2017 தீபாவளி மலரில் வெளியான கவிதை.)
அனுமானின் தோளேறி அரக்கருடன் பொருதுகையில்
அனுமானை அடித்ததனால் ஆர்த்தெழுந்தே இராவணனை
தனுவெடுத்து வீழ்த்தியது தாசரதி மனத்தெழுந்த
சினவெள்ளம்(1) அளித்த விடை. (1)
கலிங்கத்தின் மேல்தொடுத்த கடும்போரில் வெற்றிகண்டும்
கலக்கமுற்ற அசோகமன்னன் கருணைவழி தழுவிநின்றான்;
புத்தமதம் பரந்தோங்கல் போர்க்களத்தில் அவன்பார்த்த
ரத்தவெள்ளம் அளித்த விடை.
(2)
பரசமயம் வேரூன்றிப் படராமல் தடுத்தபல
குரவர்கள் மறுமலர்ச்சி கொடுத்தனரே பாக்களினால்
முத்தமிழை வளர்த்ததிரு முறைகள்நற் பாசுரங்கள்
பத்திவெள்ளம் அளித்த விடை. (3)
இரக்கமின்றி செவியறுத்தல் இருந்தவொரு காலத்தில்
பொருள்சொல்ல இயலாமல் போட்டியிலே தோற்றவரின்
இருசெவிவெட் டாதசெயல் அருணகிரி மனம்சுரந்த
அருள்வெள்ளம்(2) அளித்த விடை. (4)
கவியுலகம் புலவர்தம் கடுந்தமிழின் வித்தைகளால்
தவிக்கையிலே தோன்றியநம் தவப்பயனாம் பாரதியின்
அமரத்வக் கவியருவி அவர்மனத்தில் ஊற்றெடுத்த
தமிழ்வெள்ளம் அளித்த விடை. (5)
பெய்தமழை விரைவினிலே பேரிடராய் மாறிவிடக்
கைபிசைந்த அரசாங்கம் கதிகலங்கி நிற்கையிலே
தன்னலமில் மீனவர்கள் தன்னார்வ லர்தொண்டு
சென்னைவெள்ளம் அளித்த விடை. (6)
மார்கழிம கோற்சவத்தில் வாய்திறக்க முடியாமல்
மார்ச்சளி இருமலினால் மனமுடைந்த பாடகர்பின்
பக்குவமாய்ச் சமாளித்துப் ‘பலே’பெறுதல் அவர்குடித்த
சுக்குவெள்ளம் அளித்த விடை. (7)
(1) “சினத்தினால்
தென்னிலங்கைக் கோமானைச் செற்ற “ –திருப்பாவை
(2) “கருணைக்கு அருணகிரி” – பழமொழி
தொடர்புள்ள பதிவுகள்:
2 கருத்துகள்:
"தன்னார்வ லர்தொண்டு" என்று வகையுளி கொண்டாள் வெண்டளை பிறழும். லார்தொண்டு என்பதில் உள்ள ரகர ஒற்று அலகிடப்படாது ஆகையால் அது புளிமா ஆகிவிடும். மாறாக தன்னார் வலர்தொண்டு என்று புளிமாங்காய் வகையுளி கொண்டால் அது இயல்பாய் இருப்பதோடு தளையும் பிறழாது. சுக்குவெள்ளம் என்பது சுக்குவெல்லம் என்பதன் மயன்கோளிப் பிழைபோலத் தோன்றுகிறது. சுக்கை வெள்ளம் என்று உருவகிக்கக் காரணமில்லையே.
நன்றி. இது வெண்கலிப்பா . வெண்டளை தேவையில்லை. நீங்கள் எழுதியது போல், “ தன்னார் வலர்தொண்டு” என்றும் இருக்கலாம்.
From Tamil Lexicon:
சுக்குவெள்ளம் (p. 1495) cukku-veḷḷam சுக்குவெள்ளம் cukku-veḷḷam, n. < id. +. [M. cukkuveḷḷam.] Ginger-water, a stimulant; சுக்குக் கலந்த வெந்நீர். Nāñ.
கருத்துரையிடுக