வெள்ளி, 27 அக்டோபர், 2017

883. காந்தி - 11

4. சாந்தி நிகேதனம்
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பாகம்-2) என்ற  நூலின் நான்காம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
====
இராஜகோட்டையிலிருந்து காந்திஜி ஸ்ரீ ரவீந்திர நாதரின் சாந்திநிகேதனத்துக்குச் சென்றார். ஏற்கெனவே அவ்விடத்துக்குப் போனிக்ஸ் பண்ணையில் வசித்தவர்கள் போயிருந்தார்கள். அவர்கள் சாந்திநிகேதனத்தில் மிக அன்பாக நடத்தப்பட்டு வந்தார்கள். அவர்களுக்குத் தனியாக இடம் கொடுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்குத் தலைவர் ஸ்ரீ மகன்லால் காந்தி. இவர் சாந்திநிகேதனத்திலும் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடத்திய வாழ்க்கை முறையையே தாமும் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைப்பிடிக்கும்படி செய்துவந்தார்.

காந்திஜி சாந்தி நிகேதனம் அடைந்ததும் அவரை அங்கிருந்த ஆசிரியர்கள் மாணாக்கர்கள் எல்லாருமே அன்பு வெள்ளத்தில் முழுகும்படி செய்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஆண்ட்ரூஸும் பியர்ஸனும் அப்போது அங்கே இருந்தார்கள். இவர்கள் தவிர, பரோடா கங்காநாத் வித்யாலயத்திலிருந்து சாந்திநிகேதனத்துக்கு வந்திருந்த காகாசாகேப் காலேல்கர் என்பவரைக் காந்திஜி இங்கே சந்தித்தார். பிற்காலத்தில் காகா சாகிப் காந்திஜியின் சிறந்த நண்பர்களில் ஒருவர் ஆனார்.

சாந்தி நிகேதனத்தை அடைந்த காந்திஜி வெகு சீக்கிரத்திலேயே அங்கிருந்த ஆசிரியர்கள்--மாணாக்கர்கள் எல்லாருடனும் சிநேகம் செய்து கொண்டார். மறுநாளே அவர்களுடன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதம் செய்ய ஆரம்பித்தார். போனிக்ஸ் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே சமையல் செய்து கொண்டார்கள். அஅதுமாதிரியே சாந்தி நிகேதன மாணாக்கர்களும் சமையற்காரர்களைப் போகச்சொல்லிவிட்டுத் தாங்களே சமையல் செய்து கொண்டால் என்ன என்று மகாத்மா கேட்டார். இதனால் பிள்ளைகளுக்குத் தேகதிடமும் மனோதிடமும் வளரும் என்று சொன்னார். இது சம்பந்தமாக ஆசிரியர்களுக்குள்ளே இரண்டு கட்சிகள் ஏற்பட்டன. ஒரு கட்சியார் மகாத்மாவின் யோசனையை ஆதரித்தார்கள். இன்னொரு கட்சியார் அது நடக்காத காரியம் என்று தலையை அசைத்தார்கள்.

காந்திஜியின் யோசனை மாணாக்கர்களுக்குப் பிடித்திருந்தது. புதுமையான காரியம் என்றாலே பிள்ளைகள் விரும்புவது இயல்பு அல்லவா? மகாகவி ரவீந்திரரிடம் போய்ச் சொன்னார்கள். உபாத்தியாயர்களும் மாணாக்கர்களும் சம்மதித்தால் தமக்கு ஆட்சேபம் இல்லை என்று குருதேவர் சொன்னார். மாணாக்கர்களைப் பார்த்து "சுயராஜ்யத்தின் திறவுகோல் இந்தச் சோதனையில் அடங்கியிருக்கிறது!" என்று கூறினார்.

பின்னர் சாந்திநிகேதனத்தில் ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணாக்கர்களே சமையல் செய்யும் சோதனை சில காலம் நடந்தது. கூட்டம் கூட்டமாகப் பிரிந்து ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது பியர்ஸன் என்னும் ஆங்கிலேய அறிஞர் இந்தப் பரிசோதனையில் பூரண உற்சாகத்துடன் ஈடுபட்டார். தம் உடல் நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர் சமையல் அறையில் வேலை செய்தார். சமையல் அறையையும் சுற்றுப் புறங்களையும் சுத்தம் செய்யும் வேலையை ஆசிரியர்கள் சிலர் ஒப்புக்கொண்டிருந்தார்கள். எம்.ஏ.பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கையில் மண்வெட்டி பிடித்து வேலை செய்வதைப் பார்க்க மகாத்மா காந்திக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

ஆனால் சாந்தி நிகேதனத்தில் இந்தச் சோதனை சில காலந்தான் நடந்தது. சோதனையில் ஈடுபட்டவர்கள் கொஞ்ச காலத்துக்கெல்லாம் களைப்படைந்து போனார்கள். பியர்ஸன் முதலிய சிலர் மட்டும் இறுதிவரை அந்தச் சோதனையை விடாமல் நடத்தி வந்தார்கள்.


காந்தி மகாத்மா சில காலம் சாந்தி நிகேதனத்தில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்திருந்தார். ஆனால் இறைவனுடைய விருப்பம் வேறு விதமாயிருந்தது. ஒரு வாரத்திற்குள்ளே ஸ்ரீ கோகலே மரணமடைந்தார் என்னும் செய்தி வந்து காந்திஜியின் உள்ளத்தைக் கலக்கியது. சாந்தி நிகேதனம் துயரத்தில் மூழ்கியது. மகாத்மா காந்தி தமது பத்தினியையும் ஸ்ரீமகன்லால் காந்தியையும் அழைத்துக் கொண்டு பூனாவுக்குப் பிரயாணமானார்.

இந்தப் பிரயாணத்தின் போதும் காந்திஜி மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் உள்ள கஷ்டங்களை அனுபவித்து அறியும்படியாக நேர்ந்தது. இது சம்பந்தமாக மகாத்மா காந்தி எழுதியிருப்ப தாவது:-
"மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் டிக்கட் வாங்குவதில்கூட எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகவேண்டியிருக்கிறதென்பதை பர்த்வானில் அநுபவித்து அறிந்தோம். 'மூன்றாம் வகுப்பு டிக்கட்டுகள் இதற்குள் தரமுடியாது' என்று முதலில் சொன்னார்கள். அதன்மீது நான் ஸ்டேஷன்மாஸ்டரைக் காணச் சென்றேன். அவரைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாயிருந்தது. யாரோ ஒருவர் தயவு வைத்து அவர் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். அவரிடம் சென்று எங்களுடைய கஷ்டத்தை எடுத்துக்கூறினோம். அவரும் அதே பதிலையே தெரிவித்தார். ஆகவே காத்திருந்து டிக்கட் ஜன்னல் திறந்ததும் சென்றேன். ஆனால் டிக்கட் வாங்குதல் எளிய காரியமாயில்லை." அங்கு "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்னும் சட்டம் அமுலில் இருந்தது. மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும் என்று எண்ணிய பலசாலிகளான பிரயாணிகள் ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னை இடித்துத் தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். ஆகவே முதலில் டிக்கட் வாங்குவதற்குப் போனவனாகிய நான் ஏறக்குறையக் கடைசியில் தான் டிக்கட் பெற முடிந்தது.

வண்டி வந்து சேர்ந்தது. அதில் ஏறுதல் மற்றொருபிரம்மப் பிரயத்தனமாயிற்று. வண்டியில் ஏற்கனவே இருந்த பிரயாணிகளுக்கும், ஏற முயற்சித்த பிரயாணிகளுக்கும் இடையே வசைமொழிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளலும் நிகழ்ந்தது. பிளாட்பாரத்தில் மேலும் கீழும் ஓடி அலைந்தோம். 'இங்கு இடமில்லை' என்னும் பதிலே எங்கும் கிடைத்தது. கார்டினிடம் சென்று சொன்னேன். அவர் 'அகப்பட்ட இடத்தில் உள்ளே ஏற முயற்சி செய்யும்; இல்லாவிடில் அடுத்த வண்டியில் வாரும்' என்றார்.

மூன்றாம் வகுப்பு ரயில்வே பிரயாணிகளின் துயரங்களுக்கு ரயில்வே அதிகாரிகளின் யதேச்சாதிகாரமே காரணம் என்பதில்ஐயமில்லை. ஆனால் பிரயாணிகளின் முரட்டு சுபாவம், ஆபாச வழக்கங்கள், சுயநலம், அறியாமை முதலியவைகள் அத்துயரங்களை அதிகப்படுத்துகின்றன. இதில் பரிதாபமான விஷயம் யாதெனில், தாங்கள் தவறுதலாகவும், ஆபாசமாகவும், சுயநலத்துடனும் நடந்து கொள்கிறோமென்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. தாங்கள் செய்வதெல்லாம் இயற்கையே என்று அவர்கள் விஷயத்தில் படித்தவர்களாகிய நாம் காட்டும் அலட்சியமே என்று கூறலாம்.

மகாத்மா காந்தி பூனா வந்து சேர்ந்து கோகலேயின் சிரார்த்த காரியங்கள் எல்லாம் நிறைவேறிய பிறகு, இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வது பற்றி மற்றும் ஒரு முறை சிந்தனை செய்தார். கோகலேயைக் குரு பீடத்தில் வைத்து மகாத்மா அவரிடம் பக்தி செலுத்தியவர். இப்போது கோகலே காலமாகி விட்டபடியினால் அவர் ஸ்தாபித்த சங்கத்தில் சேர்ந்து அவர் ஆரம்பித்து வைத்த பணிகளை நிறைவேற்றுவது தமது கடமை என்று கருதினார். மீண்டும் இந்திய ஊழியர் சங்கத்தின் அங்கத்தினரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். முன் போலவே அந்த அங்கத்தினர்களுக்குள் அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. சிலர் மகாத்மாவைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்கள். சிலர் கூடாது என்றார்கள். மகாத்மாவைச் சேர்த்துக் கொள்வதை எதிர்த்தவர்கள் இந்திய ஊழியர் சங்கத்தின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் மகாத்மாவின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் அடிப்படையான வேற்றுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்திய ஊழியர் சங்க அங்கத்தினர் கூட்டம் நடத்தி அதில் பெரும்பான்மையினரது அபிப்பிராயத்தின்படி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

மகாத்மா இதை விரும்பவில்லை. தாம் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வதற்கு ஒரு சிலர் விரோதமாயிருந்தாலும் அதில் சேர மகாத்மா இஷ்டப்படவில்லை. சிலருக்கு விரோதமாகப் பெருபான்மை வோட்டுப் பெற்று ஒரு ஸ்தாபனத்தில் சேர்வதில் என்ன நன்மை ஏற்படமுடியும்கோகலேயிடம் தாம் வைத்திருந்த பக்திக்கு அது உகந்ததாகுமா? - இப்படி யோசித்துக் கடைசியாக மகாத்மா தமது விண்ணப்பத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். இதன் காரணமாக இந்தியா தேசம் அடைந்த நன்மைக்கு அளவே கிடையாது என்று சொல்லலாம். தாம் மேற்படி சங்கத்தில் சேராததே நல்லது என்றும் தாம் சங்கத்தில் சேர்வதை எதிர்த்தவர்களே தமக்கு நன்மை செய்தவர்கள் என்றும் பிற்காலத்தில் காந்திஜி கருதினார். மேற்கண்டவாறு விண்ணப்பத்தை வாபஸ் பெற்று கொண்டதனால் சங்கத்தின் அங்கத்தினருடன் மகாத்மா காந்தியின் சிநேக பாந்தவ்யம் வளர்ந்து நீடித்திருந்தது.

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்
[  நன்றி: : http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0385_01.html  ]

கருத்துகள் இல்லை: