ஞாயிறு, 17 டிசம்பர், 2017

936. கி.வா.ஜகந்நாதன் - 7

திருவெம்பாவை -1 : 
ஏதேனும் ஆகாள் 
 கி.வா.ஜகந்நாதன்

[ ஓவியம்: லதா ]

திருவெம்பாவையில் முதல் பாடல்.
====
உலகத்தில் மூன்று சோதிகள் ஒளி விடுகின்றன. சூரியன் சந்திரன், அக்கினி என்ற மூன்றையும் முப்பெரும் சுடர் என்று சொல்வார்கள். அக்கினி நெருப்பாகவும், விளக்காகவும் விளங்குகிறது. சிறிய விளக்கு ஓரிடத்தில் மாத்திரம் வெளிச்சத்தைக் கொடுக்கும். பெரிய விளக்கானால் அகலமான இடத்தில் வெளிச்சத்தைப் பரப்பும். இறைவன் சோதி வடிவமாக இருக்கிறான். அதுவும் பெருஞ்சோதியாக இருக்கிறான் அவ்வளவு பெருஞ்சோதியாக விளங்குபவன் எங்கும் தெரியவேண்டும் அல்லவா? ஆனால் அப்படித் தெரிவதில்லை. அவன் அரும் பெருஞ் சோதியாக இருக்கிறான். ஞானிகள் உள்ளத்தடத்தில் மட்டும் வைத்துப் பார்ப்பவனாக, மற்றவர்களுக்கு அருமையான சோதியாக இருக்கிறான்.

. நம் வீட்டில் நாம் ஏற்றும் விளக்கிற்கு ஆதியும் உண்டு; அந்தமும் உண்டு. சூரிய சந்திர அக்கினிகளுக்கும் சர்வப் பிரளய காலத்தில் அந்த இரண்டும் உண்டு. ஆனால் இறைவனே ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியாக இருக்கிறான். அவனைப் பாடிப் பாவை நோன்பு நோற்பதற்குப் பெண்கள் பலர் கூடி ஒவ்வொரு வீட்டிலும் சென்று உறங்குபவர்களை எழுப்புவார்கள். அப்படி ஒரு கூட்டம் புறப்படும்போது யார் யார் வரவில்லை என்று கவனிப்பார்கள், ஒரு பெண் வரவில்லை என்பதைத் தெரிந்து அவள் ஏன் வரவில்லை என்ற கேள்வி பிறக்கிறது. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவி சொல்கிறாள். ” நாம் இறைவனை வாழ்த்துகின்ற வாழ்த்தைக் கேட்டு எழுந்து விம்மி விம்மிக்கொண்டிருப்பாள். மெய்ம்மறந்து இருப்பாள். பூக்கள் தூவிய படுக்கையிலிருந்து புரண்டு இருப்பாள்" என்று சொல்கிறாள்.

"பெண்ணே, புறப் பொருளைப் பார்ப்பதற்குரிய கூர்மையும், பிறரால் கண்டு மகிழ்வதற்குரிய விசாலமும் உடைய கண்கள் உனக்கு இருக்கின்றனவே! நீ வாள் கடங்கண்ணி அல்லவா? அந்தக் கண்கள் இப்போது மூடி இருக்கின்றன. என்றாலும் காதுகளுக்குக் கதவு இல்லையே! நாங்கள் வீதியின் கடைசியிலிருந்து பாடும் பாட்டைக் கேட்டிருக்கலாமே! அப்படிக் கேட்க முடியாமல் உன்னுடை செவி வலிய செவியா?’ என்று கேட்கிறாள்.

 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் 
சோதியை யாம்பாடக் கேட்டேயும் 

என்று சொல்கிறாள். நீயும் வந்திருந்தால் நாம் எல்லோரும் பாடலாம். இப்போது யாம் மட்டும் பாடுகின்றோமே, இது முறையாகுமா?’ என்பதை யாம் என்ற சொல் குறிக்கிறது.

 - வாள் தடங்கண் மாதே! 

என்று அழைக்கிறாள். புறப் பொருளைக் காண்பதற்குரிய கூர்மையுடையது என்பதை வாள் என்பதும், தடங்கண் என்பது விசாலத்தையும் குறிப்பது. பிறர் கண்டு மகிழ்வதற்குரிய பரப்பை உடையது. நீ உறங்குகிறாயோ, தூங்குகிறாயோ என்று சொல்கிறாள்; அதை,

மாதே வளருதியோ? 

என்று நாகரிகமாகப் பேசுகிறாள். கண் உறங்குவதால் கண் பார்வை வலிமை பெறும். கண் ஒளி மிகும். குழந்தைகள் மிக்க நேரம் உறங்குவதால் அவர்களது கண் பார்வைக்கு வலிமை உண்டாகிறது.

 வன்செவியோ நின்செவிதான்? 

என்று கேட்டவர்கள். 'உன் செவிக்குக் தாழ் போட்டிருக்கவில்லையே, அது திறந்துதான் இருக்கிறது. அது மிகவும் வன்மையுடைய செவியோ?" என்கிறாள்.

வன்செவியோ நின்செவிதான்? 

"மாதே, நாங்கள் வாழ்த்துகிற வாழ்த்தொலிக்கு உரியவன் மகாதேவன். அவன் கழல்கள் நீண்ட கழல்கள். நாங்கள் வாழ்த்துகிற வாழ்த்தும் நெடுந்துரம் கேட்கும். வீதி முழுவதும் கேட்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள் எங்கள் வாழ்க்தொலியைக் கேட்டு எழுந்திருந்து விளக்கை ஏற்றி வீதி மாடத்தில் கொண்டு வந்து வைக்கிறார்கள். வன் செவியோ, நின் செவிதான்?’’

மாதேவன் வார்கமல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து 
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் 
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னே,என்னே! 

பிறகு தங்களோடு வந்த தலைவியைப் பார்த்துச் சொல்கிறார்கள், "அவள் விம்முவாள் என்றும். மெய்ம்மறந்து இருப்பாள் என்றும், அமளியிலிருந்து புரண்டு விழுவாள் என்றும் சொன்னாயே. இங்கே அவள் அப்படி எந்த நிலையும் அடையாமல் வீணே கிடக்கிறாளே. நம்முடைய தோழியின் தன்மை இதுதானா?' என்று கேட்கிறாள்.

மாதே வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்? 
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி, மெய்ம்மறந்து, 
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன் 
ஏதேனும் ஆகாள், கிடந்தாள்என் னேஎன்னே 
ஈதேளம் தோழி பரிசு ஏலோர் எம்பாவாய்! 

திருவெம்பாவையின் ஒவ்வொரு பாட்டும் ஏலோர் எம்பாவாய்' என்று முடியும். நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள். அதை எண்ணிப் பார்’ என்றும் பொருள் சொல்லலாம்.

ஏதேனும் ஆகாள் 

என்றது முன்னே சொன்ன விம்முதல், மெய்ம்மறத்தல், அமளியின்மேல் நின்றும் புரளுதல், முதலிய காரியங்களைக் குறித்தது. .

[ ஓவியம்: சித்ரலேகா; நன்றி: கலைமகள் ] 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் 
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் 
மாதே வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்? 
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்ம்மறந்து 
போதார் அமளியின்மேல் கின்றும் புரண்டுஇங்ஙன் 
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்,என் னேஎன்னே! 
ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய். (1)


[ நன்றி:  இத்தொடரில் வரும் ‘சித்திரலேகா’வின் ஓவியங்கள் : கலைமகள் தீபாவளி மலர் 2003 -இல் வந்தன ]


தொடர்புள்ள பதிவுகள்: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக