திங்கள், 1 ஜனவரி, 2018

954. காந்தி - 14

7. எதிர்பாராத வெற்றி
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் எழுதிய ஏழாம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
சம்பரான் குடியானவர்களுடைய குறைகளை விசாரித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் தோட்ட முதலாளிகளையும் சர்க்கார் அதிகாரிகளையும் காந்திஜி சந்தித்துத் தாம் செய்யப் போகும் வேலையைப் பற்றி அறிவித்துவிட விரும்பினார். பீஹார் மாகாணத்தில் ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒரு கலெக்டரும் மூன்று அல்லது நாலு ஜில்லாக்களுக்கு ஒரு கமிஷனரும் உண்டு. கமிஷனர் ஆதிக்கம் வகிக்கும் பிரதேசத்துக்கு டிவிஷன் என்று பெயர். சம்பரான், திர்ஹத் டிவிஷனில் இருந்தது. மகாத்மா திர்ஹத் கமிஷனரைச் சந்திக்க விரும்புவதாகக் கடிதம் எழுதினார். அம்மாதிரியே சம்பரான் தோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசிக்கும் எழுதி அனுப்பினார். .
.
தோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசி தமது மனக் கருத்தைக் காந்திஜியிடம் உள்ளபடி வெளியிட்டார். "நீர் யார், ஐயா, இங்கு வந்து விசாரணை செய்வதற்கு? நீர் இந்த ஜில்லாக்காரரா? இந்த மாகாணத்தைச் சேர்ந்தவரா? தோட்ட முதலாளிகளுக்கும் குடியானவர்களுக்கும் மத்தியில் வந்து குறுக்கிடுவதற்கு உமக்கு என்ன உரிமை? யார் அதிகாரம் கொடுத்தது? பேசாமல் வந்த வழியே திரும்பிப் போய்ச் சேரும்; சொந்தக் காரியம் இருந்தால் போய்ப் பாரும். அப்படி ஏதாவது சொல்லிக்கொள்ள விரும்பினால் காகிதத்தில் எழுதித் தபாலில் அனுப்பும். நீர் சொல்லும் எந்த விஷயத்தையும் இப்போது நான் கேட்கத் தயாராயில்லை!" என்றார். .
.
பிறகு காந்திஜி திர்ஹத் டிவிஷன் கமிஷனரைப் பார்க்கப் போனார். அந்த நாளில் இந்தியாவில் அதிகார வர்க்கத்தின் அமுல் பிரமாதம். ஒவ்வொரு ஜில்லா கலெக்டரும் தம்மை அந்த ஜில்லாவின் யதேச்சாதிகாரியாகவே நினைத்துக்கொள்வார். நாலு கலெக்டருக்கு மேற்பட்ட கமிஷனரைப் பற்றிக் கேட்க வேண்டுமா? காந்திஜியை அவர் அதட்டவும் மிரட்டவும் தொடங்கினார். "திர்ஹத் டிவிஷனை விட்டு உடனே வெளி யேறிப் போய்விடும். அதுதான் உமக்கு நல்லது. வெளியேறவில்லை யென்றால் அதன் பலனை அநுபவிக்க நேரிடும்!" என்று கமிஷனர் எச்சரிக்கை செய்தார். .
.
மகாத்மா காந்தி திரும்பி வந்து விரஜகிஷோர் பாபு முதலிய நண்பர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தார். "தோட்டக்கார முதலாளிகள் வெகு கோபமா யிருக்கிறார்கள். கமிஷனர் துரையோ அவர்களைக் காட்டிலும் கடுமையா யிருக்கிறார். ஆகையால் விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே என்னைக் கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பி விடுவார்கள். எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நான் கைது செய்யப்படுவதாயிருந்தால் மோத்திஹாரிலாவது பெட்டியாவிலாவது கைது செய்யப்படுவது நல்லது" என்று காந்திஜி கூறினார். .
.
மோத்திஹாரி, திர்ஹத் டிவிஷனின் தலைநகரம். பெட்டியா இராஜகுமார் சுக்லாவின் கிராமத்துக்கு அருகில் இருந்த பட்டணம். அந்தப் பிரதேசத்திலேதான் குடியானவர்கள் அதிகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகையினாலேயே மகாத்மா அங்கே சென்று தாம் கைதி யாகவேண்டும் என்று விரும்பினார். .
.

உடனே காந்திஜியும் அவருடைய தோழர்களும் புறப்பட்டு மோத்திஹாரி பட்டணத்தை அடைந்தார்கள். அங்கே பாபு கோரக் பிரஸாத் என்பவர் வீட்டில் தங்கினார்கள். மோத்தி ஹாரிக்கு ஐந்து மைல் தூரத்தில் ஒரு கிராமத்தில் ஏழைக் குடியானவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டதாக அன்று செய்தி வந்தது. மறுநாள் காலையில் மேற்படி கிராமத்துக்கு மகாத்மா வும் பாபு தாராநிதர் பிரஸாத் என்பவரும் யானை மீது ஏறிக் கிளம்பினார்கள். நம்முடைய நாட்டில் மாட்டு வண்டிப் பிரயாணம் எவ்வளவு சாதாரணமோ அப்படி சம்பரானில் யானைப் பிரயாணம் சர்வ சாதாரணமாகும். .
.
காந்திஜி ஏறியிருந்த யானை இரண்டரை மைல் தூரம் போவதற்குள் பின்னால் ஒரு குதிரை வண்டி வந்து யானையைப் பிடித்தது. அந்த வண்டியில் போலீஸ் சேவகன் ஒருவன் இருந்தான். அவன் மகாத்மாவிடம் "போலீஸ்சூபரிண்டெண்ட் துரை தம்முடைய வந்தனத்தை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்!" என்றான். இதன் கருத்து என்னவென்பது காந்திஜிக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே தாரா நிதர்பாபுவிடம் "நீங்கள் மேலே போங்கள்!" என்று சொல்லிவிட்டுக் காந்திஜி போலீஸ் தூதன் கொண்டுவந்த வன்டியில் ஏறிக் கொண்டார். வண்டி நகரத் தொடங்கியதும் போலீஸ் தூதன் ஓர் உத்தரவை மகாத்மாவிடம் கொடுத்தான். அதில், "சம்பரான் ஜில்லாவை விட்டு உடனே வெளியேறவும்" என்று எழுதியிருந்தது. .
.
ம‌காத்மா இற‌ங்கியிருந்த‌ வீடு போய்ச் சேர்ந்த‌தும் போலீஸ் சேவ‌க‌ன் உத்த‌ர‌வைப் பெற்றுக் கொண்ட‌த‌ற்குக் கையொப்ப‌ம் கேட்டான். ம‌காத்மா "ஆக‌ட்டும்; கையொப்ப‌ம் த‌ருகிறேன்" என்றார். உடனே ஒரு காகிதத்தில் "உத்தரவைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் நான் தொடங்கியுள்ள ஆராய்ச்சி முடியும் வரையில் சம்பரானை விட்டுப் போகும் உத்தேசம் இல்லை" என்று எழுதிக் கையொப்பம் இட்டுக் கொடுத்தார். .
.
சிறிது நேரத்துக்கெல்லாம் இன்னொரு உத்தரவு வந்தது. அதில் "144-வது பிரிவின்படி போட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்காக நாளைக்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்து சேரவும்" என்று கண்டிருந்தது. .
.
அன்று இரவெல்லாம் காந்திஜியும் அவருடைய சகாக்களும் தூங்கவேயில்லை. மறுநாள் என்ன நடக்கும் என்பது பற்றியும் காந்திஜி சிறைப்பட்ட பின்னர் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். காந்திஜி தாம் எழுத வேன்டிய கடிதங்களையெல்லாம் எழுதி முடித்தார். .
.
மறுநாள் மோத்தி ஹாரி நகரம் கண்ட காட்சியைப்போல் அதற்குமுன் எந்த நாளிலும் கண்டதில்லை என்று அந்த நகர்வாசிகள் சொன்னார்கள். மகாத்மாவைப் பற்றியோ அவர் தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியப் போராட்டத்தைப் பற்றியோ அந்த இமயமலை அடிவாரப் பிரதேசத்தில் அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க‌ நியாய‌மில்லை. இந்த‌ நாளிலேபோல‌ அப்போது ப‌த்திரிகைக‌ளின் செல்வாக்கும் அதிக‌ம் இல்லை. எனினும் ம‌காத்மா காந்தி வந்‌த‌து, அவ‌ருக்கு 144-வ‌து உத்த‌ர‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து, அத‌ற்கு அவ‌ர் கீழ்ப்ப‌டிய மறுத்தது ஆகிய செய்திகள் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் இரவுக்கிரவே பரவி விட்டன. காலையிலே பார்த்தால் பாபு கோரக் பிரஸாத் வீட்டைச் சுற்றிலும் ஜனங்கள் ஆயிரக் கணக்கிலே கூடியிருந்தார்கள். .
.
இந்தியாவில் பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் ஓர் உத்தரவு போடுவது, அதற்குக் கீழ்ப்படிய மாட்டேன் என்று ஓர் இந்தியர் மறுதளிப்பது, - என்பது அதுவரை என்றும் நடவா நிகழ்ச்சிகள் ஆகும். ஆகையால் அந்த நிகழ்ச்சிகள் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்ததிலும், அத்தகைய அதிசய மனிதரைப் பார்க்க ஜனங்கள் திரண்டு வந்ததிலும் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா? .
.
சம்பரானில் மட்டுமல்ல; இந்தியா தேசம் முழுவதிலுமே அச்செய்தி பரவியபோது மக்கள் சொல்லமுடியாத கிளர்ச்சியை அடைந்தார்கள். மேலே என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள். .
.
மகாத்மா கோர்ட்டுக்குப் போகவேண்டிய நேரம் நெருங்கிற்று. ஜனக்கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாயிற்று. காந்திஜி கோர்ட்டுக்குப் போகப் புறப்பட்டபோது வீதியெல்லாம் ஜனசமுத்திரமாயிருந்தது. கோர்ட்டைச் சுற்றிலும் அப்படியே பெருங்கூட்டம். .
.
இந்தச் சமயத்தில் மக்கள் திரண்டு எழுந்து வந்து தம்மிடம் காட்டிய அன்பைக் குறித்து மகாத்மா கூறுகிறார்:- .
.
"சம்பரானில் என்னை யாருக்கும் தெரியாது. சம்பரான் குடியானவர்களோ கல்வி அறிவு இல்லாதவர்கள். சம்பரான் கங்கை நதிக்கு வெகு வடக்கே நேபாளத்துக்கு அருகில் இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. அந்தப் பிரதேசத்தில் காங்கிரஸைப் பற்றி யாருக்கும் தெரியாது. காங்கிரஸின் பெயரைக் கேள்விப்பட்டிருந்த சிலரும் அதில் சேரப் பயந்திருந்தார்கள். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ வேலை செய்து எங்கள் வருகைக்கு முன் ஏற்பாடுகள் செய்துவைக்கத் தூதர்கள் யாரையும் நாங்கள் அனுப்பிவைக்கவில்லை. எனினும் சம்பரான் குடியானவர்கள் என்னை நெடுங்கால நண்பனைப்போல் வரவேற்றார்கள். இந்தக் குடியானவர்களின் சந்திப்பில் நான் ஆண்டவனையும் அஹிம்சையையும் சத்தியத்தையும் நேருக்கு நேர் தரிசித்தேன். இந்த சத்திய தரிசனம் பெறுவதற்கு என்னை உரியவனாக்கியது எது? ஜனங்களிடம் நான் கொண்டிருந்த அன்பேயல்லாமல் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. சம்பரானில் அந்தத் தினம் என் வாழ்நாளிலேயே என்றும் மறக்க வொண்ணாத தினமாகும். சட்டப்படி விசாரணைக்கு உள்ளானவன் நான் என்றாலும் உண்மையில் அரசாங்கமே அப்போது குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றதாகத் தோன்றியது. கமிஷனர் எனக்கு விரித்த வ்லையில் என்னை அவர் பிடிக்க வில்லை. அந்த வலையில் அரசாங்கத்தையே விழும்படி செய்தார்!" .
.
கோர்ட்டில் விசாரணை ஆரம்பமாயிற்று. ஆனால் சர்க்கார் தரப்பில் அரசாங்க வக்கீலுக்கும் மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் இன்னது செய்வதென்றே தெரிய வில்லை. வழக்கைத் தள்ளிப்போடும்படி சர்க்கார் வக்கீல் மாஜிஸ்ட்ரேட்டைக் கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜி குறுக்கிட்டு, "உத்தரவை மீறிய குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளப் போகிறேன். ஆகையால் வழக்கைத் தள்ளிவைக்க யாதொரு முகாந்திரமும் இல்லை!" என்று சொன்னார். பிறகு தாம் எழுதிக்கொண்டு வந்திருந்த வாக்குமூலத்தைப் படித்தார். அதன் சாராம்சமாவது:- .
.
"அதிகாரிகள் 144-வது பிரிவின்படி போட்ட உத்தரவை நான் மீறி நடப்பதாக வெளிப்படையாகத் தோன்றும். இந்த நடவடிக்கையை நான் மேற்கொண்டதின் காரணத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஜீவகாருண்யத்தொண்டு செய்யும் நோக்கத்துடன் நான் இந்தப் பிரதேசத்துக்கு வந்தேன். இங்குள்ள குடியானவர்கள் தங்களை அவுரித்தோட்ட முதலாளிகள் கொடுமைப் படுத்துவதாகவும், நான் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் என்னை அழைத்தார்கள். ஆனால் உண்மை நிலையை நேரில் கண்டு அறிவதற்கு முன்னால் நான் எதுவும் செய்யமுடியாது என்று சொன்னேன். ஆகையால் அவுரித் தோட்ட முதலாளிகள், சர்க்கார் அதிகாரிகள் இவர்களுடைய ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராய்ந்து தெரிந்துகொள்ள எண்ணி வந்தேன். வேறு நோக்கம் எதுவும் எனக்குக் கிடையாது. என்னுடைய வருகையினால் பொது அமைதிக்குப் பங்கமும் உயிர்ச் சேதமும் நேரிடலாம் என்று உத்தரவில் கண்டிருக்கிறது. இதை நான் நம்பமுடியவில்லை. இத்தகைய காரியங்களில் நான் அதிக அநுபவமுள்ளவன். ஆனால் அதிகாரிகளோ வேறு விதமாக எண்ணுகிறார்கள். அவர்களுக்குக்கிடைத்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக்கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும், நான் சட்டத்துக்கு அடங்கிய பிரஜை. ஆகையால் உத்தரவைப் பெற்றவுடனே அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் அவ்விதம் செய்தால் நான் என்னுடைய கடமையில் தவறியதாகும் என மனச்சாட்சி அறிவுறுத்தியது. நான் யாருடைய நலத்தை முன்னிட்டு இங்கு வந்தேனோ அவர்களைக் கைவிட்டுப் போவதாகவே முடியும். ஆகையால் நானாக இங்கிருந்து போகக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். என் மனச்சாட்சி ஒரு விதமாகவும் சர்க்கார் அதிகாரி களின் முடிவு வேறு விதமாகவும் கட்டளையிடும்போது சர்க்கார் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பை அவர்களுக்கே விட்டு விடுவதுதான் நியாயமாகும். தற்போது இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பின்கீழ் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கைக்கொள்ளக் கூடிய வழி இது ஒன்றுதான். உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டு அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்று அநுபவிக்கத் தயாராயிருக்கிறேன். எனக்கு விதிக்கப்படப் போகும் தண்டனையை எவ்வகையிலும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. சட்டம், அரசாங்க அதிகாரம் இவற்றின்மேல் மதிப்புக் குறைவினால் நான் இந்த உத்தரவை மீறவில்லை. சட்டங்களுக்கெல்லாம் மேற்பட்ட மனச்சாட்சி என்னும் சட்டத்துக்குக் கீழ்ப்படியும் பொருட்டே இந்த 144-வது உத்தரவை மீறத் துணிந்தேன்." .
.
இத்தகைய வாக்குமூலம் காந்திஜி கொடுத்த பிறகு விசாரணையைத் தள்ளிப் போடுவதற்குக் காரணம் ஒன்றும் இல்லை அல்லவா? மாஜிஸ்ட்ரேட்டும் அரசாங்க வக்கீலும் திடுக்கிட்டுப் போனார்கள். இந்த மாதிரி ஒரு அநுபவம் இதற்கு முன் அவர்களுக்கு ஏற்பட்டதே யில்லை. ஆகையால் இன்னது செய்வது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. மாஜிஸ்ட்ரேட் பிற்பாடு தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லி, அதற்காக ஒரு தேதி யும் குறிப்பிட்டார். பின்னர் கோர்ட்டு கலைந்தது. .
.
நடந்ததை யெல்லாம் தெரிவித்து இராஜப் பிரதிநிதிக்கும், பண்டித மாளவியாவுக்கும், பாட்னா நண்பர்களுக்கும் மகாத்மா காந்தி தந்தி கொடுத்தார். .
.
மகாத்மா தந்தி கொடுப்பதற்கு முன்னாலேயே அவர்களுக்குச் செய்தி போய் விட்டது. இந்தியா தேசமெங்கும் அந்தச் செய்தி பரவிவிட்டது. தேசத்தில் அரசியல் அறிவு பெற்றவர்கள் எல்லாரும் அடுத்தபடி என்ன செய்தி வருகிறதோ என்று ஆவலுடன் எதிர்பார்க்கலானார்கள். .
.
பிரிட்டிஷ் அதிகாரி போட்ட உத்தரவைத் தனி மனிதர் ஒருவர் மீறியிருக்கிறார். மீறியதோடல்லாமல் அதைக் கோர்ட்டில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தண்டனை கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார்! இந்த மாதிரி அதிசயத்தை இதற்கு முன்னால் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைப் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்? பிரிட்டிஷ் சிங்கம் என்ன செய்யப் போகிறது? .
.
பிரிட்டிஷ் சிங்கம் கர்ஜனை புரிந்தது. ஆனால் அது போர் கர்ஜனை அல்ல; வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குத் திரும்பிச் செல்லும் கர்ஜனை. கத்தியோ துப்பாக்கியோ ஆள் பலமோ பண பலமோ ஆயுத பலமோ, - ஒன்றும் இல்லாத மனிதரின் ஆத்ம சக்திக்கு முன்னால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் தலை வணங்கிற்று! .
.
வைஸ்ராய் செம்ஸ் போர்டு தமது நிர்வாக சபை அங்கத்தினருடன் கலந்தாலோசித்து பீஹார் லெப்டினன்ட் கவர்னருக்குச் செய்தி அனுப்பினார். லெப்டினன்ட் கவர்னர் திர்ஹத் டிவிஷன் கமிஷனருக்குத் தாக்கீது அனுப்பினார்: கமிஷனர் மாஜிஸ்ட்ரேட்டுக்குச் செய்தி அனுப்பினார். .
.
தீர்ப்புக் கூறுவதற்காகக் குறிப்பிட்ட நாள் வருவதற்கு முன்னதாகவே மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து மகாத்மாவுக்குச் செய்தி வந்தது. "லெப்டினன்ட் கவர்னர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவு அனுப்பியிருக்கிறார். அதன்படி வழக்கு வாபஸ் பெறப்பட்டது" என்று மாஜிஸ்ட்ரேட் தெரிவித்திருந்தார். சம்பரான் ஜில்லா கலெக்டரிடமிருந்து காந்திஜிக்கு ஒரு கடிதம் வந்தது. "அவுரித் தோட்டங்களில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி நீங்கள் உத்தேசித்திருக்கும் விசாரணையைத் தடையின்றி நடத்தலாம். அதற்கு வேண்டிய எல்லா உதவியும் செய்யத் தயாராயிருக்கிறேன்" என்று கலெக்டர் ஹேகாக் எழுதியிருந்தார். .
.
இவ்வாறு காந்தி மகான் இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கிய சாத்வீகச் சட்டமறுப்பு அதி சீக்கிரத்தில் மகத்தான வெற்றியாக முடிந்தது. .
.
அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மகாத்மாஜி சம்பரான் குடியானவர்களின் நிலைமை பற்றிய விசாரணையைச் சாங்கோபாங்கமாக நடத்தினார். இதன் பலனாக அக்குடியானவர்களின் குறைகள் பெரும்பாலும் நிவர்த்தியாயின. .

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: