ஞாயிறு, 7 ஜனவரி, 2018

961. காந்தி - 15

8. கிராமத்தொண்டு
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பாகம் -2) என்ற நூலின்  8-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
====

சம்பரான் ஜில்லாவில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி மகாத்மாவின் விசாரணை ஆரம்பமாயிற்று. குடியானவர்களிடம் அவர்களுடைய கஷ்டங்களைப்பற்றி வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டன. வாக்கு மூலத்தில் உண்மையை அப்படியே சொல்ல வேண்டும் என்றும் கொஞ்சங்கூட மிகைப்படுத்தக் கூடாது என்றும் மகாத்மா வற்புறுத்தினார். ஒவ்வொரு குடியானவனும் வாக்குமூலம் கொடுத்ததும் அவனை நன்றாகக் குறுக்கு விசாரணை செய்தார்கள். குறுக்குவிசாரணையில் எந்த விஷயமாவது சந்தேகத்துக்கு இடம் என்று ஏற்பட்டால் அதைப் பதிவு செய்யாமல் தள்ளிவிட்டார்கள்.

குடியானவர்கள் கூட்டங் கூட்டமாக வாக்குமூலம் கொடுக்க வந்தபடியால் ஏக காலத்தில் ஏழெட்டுப் பேர் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியதா யிருந்தது. இதற்கு மகாத்மாவுக்கு உதவி செய்வதற்காகப் பாபு பிரஜகிஷோர் பிரஸாத், ராஜேந்திர பிரஸாத் முதலிய பிரசித்தமான பீஹார் வக்கீல்கள் வந்திருந்தார்கள். அவர்கள் மகாத்மாவுடன் வசித்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை முறைகளைக் குறித்து மகாத்மா தம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க நேர்ந்தது. ஒவ்வொரு வக்கீலும் ஒரு சமையற்காரனையும் ஒரு வேலைக்காரனையும் அழைத்து வந்திருந்தார்கள். இராத்திரி நடுநிசிக்குத்தான் போஜனம் அருந்துவார்கள். அவர்கள் தங்களுடைய செலவை யெல்லாம் தாங்களே செய்துகொண்ட போதிலும் அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கை மகாத்மாவுக்குப் பிடிக்கவில்லை. சிநேகமுறையில் பரிகாசம் செய்து அவர்களைச் சீர்திருத்த முயன்றார். கடைசியாக அந்த வக்கீல்கள் தங்களுடைய தனித்தனி சமையற்காரர்களையும் வேலைக்காரர்களையும் அனுப்பி விட்டார்கள். மகாத்மாவுடன் தொண்டு செய்து அனைவருக்கும் ஒரே சமையல் சாப்பாடு என்றும், எல்லாரும் ஒரே சமயத்தில் வந்து சாப்பிடவேண்டும் என்றும் ஏற்பட்டது. எல்லாருக்கும் பொதுவாக எளிய சைவ உணவு தயாரிக்கப்பட்டது. இவ்வாறு அந்த ஆரம்ப நாட்களிலேயே காந்திமகான் தம்முடைய சகாக்களைக் கூட தியாக வாழ்க்கைக்குத் தயார் செய்யலானார்.


கிராமங்களுக்குச் சென்று கிராமவாசிகளின் நிலைமையை அறிய அறிய, அவர்களுக்குக் கல்வி அறிவை ஊட்டினால் அன்றி நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படாது என்று தெரியவந்தது. ஆகவே சம்பளதுக்காகவன்றித் தொண்டு செய்தல் என்ற முறையில் கிராமப் பள்ளிக்கூடம் நடத்தக் கூடியவர்கள் தேவை என்று மகாத்மா விண்ணப்பம் விடுத்தார். இந்த வேண்டுகோளின் பேரில் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் வந்தார்கள். மகாத்மாவின் அந்தரங்கக் காரியதரிசியாகயிருந்து அற்புதமான தொண்டுசெய்த ஸ்ரீ மகாதேவதேஸாய் இந்த நாளிலேதான் மகாத்மாவை வந்து அடைந்தார். சத்தியாக்கிரஹ ஆசிரமத்திலிருந்து ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தியும் ஸ்ரீ தேவதாஸ் காந்தியும் இன்னும் சில தொண்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.

முதலில் பரிச்சார்த்தமாக ஆறு கிராமங்களில் ஆறு பள்ளிகூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பள்ளிகூடங்களில் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் கணக்குப்போடவும் கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் அவர்களுக்குத் தூய்மையும் நல்ல பழக்க வழக்கங்களும் கற்பித்தலே முக்கியமானதென்று காந்திஜி வற்புறுத்தினார்.


கிராமத் தொண்டுசெய்ய முன் வந்தவர்களில் பல பெண்மணிகளும் இருந்தார்கள். இவர்களில் ஸ்ரீமதி அவந்திகாபாய் கோகலே நடத்திய பள்ளிக்கூடம் மிகச் சிறந்த மாதிரிப் பள்ளிக்கூடமாக விளங்கிற்று. பள்ளிக்கூடங்கள் நடத்த கிராமங்களிலும் அவற்றுக்குச் சுற்றுவட்டாரங்களிலும் வேறு வகைப்பட்ட சமூகத் தொண்டுகளும் தொடங்கப்பட்டன.

கிராமவாசிகள் பொதுவாக அறியாமையில் மூழ்கியிருந்தார்கள். சுகாதாரம் சம்பந்தமாக அவர்களுடைய அறியாமை பயங்கரமாயிருந்தது. கிராமங்களில் வீதிகளும், சந்துகளும் குப்பை மயமாயிருந்தன. கிணறுகளைச் சுற்றியும் சேறும் கும்பியுமாக கிடந்தன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே சொறி சிரங்கு முதலிய சரும வியாதிகளினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்.

எனவே, மகாத்மாவினால் பள்ளிக்கூடம் நடத்துவதுடன் திருப்தி அடைந்து இருக்க முடியவில்லை. வைத்திய உதவியும் சுகாதார முயற்சியும் தொடங்கவேண்டும் என்று விரும்பினார். இந்த வேலைக்குப் பொறுப்பு வகித்து நடத்த இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஓர் ஊழியரை அனுப்பவேண்டும் என்று எழுதிக் கேட்டார். அதன்படி டாக்டர் தேவ் என்பவர் வந்து சேர்ந்தார்.

கிராமவாசிகள் டாக்டரிடம் சிகிச்சை செய்துகொள்ள வந்தார்கள். ஆனால் சுகாதார விதிகளை அனுசரிப்பதில் அவர்கள் சிரத்தை கொள்ளவில்லை. வயலில் பாடுபட்டு உழைத்து வேலை செய்யும் தொழிலாளிகள் கூடத் தங்கள் வீடு அசுத்தத்தைத் தாங்கள் சுத்தப்படுத்த முன் வரவில்லை. எவ்வளவு சொன்னாலும் அவர்கள் கேட்கும் வழியாக இல்லை.

காந்தி மகான் இதனால் மனம் சோர்ந்து விடவில்லை. நாமே செய்து காட்டவேண்டும் என்று டாக்டர் தேவிடம் சொன்னார். அதன்பேரில் டாக்டர் தேவும் அவர் கீழ் வேலை செய்த தொண்டர்களும் ஒரு கிராமத்தைச் சுத்தம் செய்து காட்டுவது என்று தீர்மானித்தார்கள். தங்களுடைய சக்திகளையெல்லாம் திரட்டி அந்த ஒரு கிராமத்தில் உபயோகப் படுத்தினார்கள். கிராமத்தைச் சென்று அடையும் சாலைபுறங்களையும் வீடுகளின் வாசற்புரங்களையும் கூட்டிச் சுத்தம் செய்தார்கள். கிணறுகளிலிருந்து துரு எடுத்துச் சுத்தப் படுத்தினார்கள். அழுக்குத் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளங்களைத் தூர்த்து மூடினார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகு அந்தக் கிராமத்து ஜனங்கள் கொஞ்சம் வெக்கப்பட்டு ஊரைத் தாங்களே சுத்தம் செய்வதற்கு முன்வந்தார்கள். இந்த மாதிரி பல கிராமங்கள் சுத்தமாயின. இத்தகைய தொண்டு நடந்து கொண்டிருந்த கிராமங்களுக்கு மகாத்மா அடிக்கடி சென்று பார்வையிட்டு வந்தார். அப்போது காந்திஜி அடைந்த ஒரு அனுபவத்தைப் பல பொதுக்கூட்டங்களில் பின்னால் சொல்லியிருக்கிறார். "சத்தியசோதனை" என்னும் தமது சுய சரிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். மனதை உருக்கும் அச்சம்பவம் வருமாறு:-

"பிதிஹர்வா என்னும் சிறு கிராமத்தில் எங்கள் பள்ளிக்கூடம் ஒன்றிருந்தது. அதற்கருகிலிருந்த மற்றொரு சிறு கிராமத்தைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அங்கே நான் கண்ட ஸ்திரீகளில் சிலர் மிகவும் அழுக்கான ஆடை தரித்திருந்தார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைப்பதில்லை யென்று கேட்கும்படி கஸ்தூரிபாயிடம் சொன்னே. அவள் அவ்வாறே அவர்களைப் பார்த்துக் கேட்டாள். அப்போது அந்த ஸ்திரீகளில் ஒருத்தி கஸ்தூரிபாயைத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று கூறியதாவது:

'இங்கே பாருங்கள். வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டி அல்லது அலமாரி ஏதாவது இவ்வீட்டில் இருக்கிறதா? நான் அணிந்திருக்கும் புடவை ஒன்றுதான் எனக்கு இருக்கிறது. அதை நான் எப்படித் துவைப்பேன்? மகாத்மாஜியிடம் சொல்லி இன்னொரு சேலை வாங்கித்தாருங்கள். அப்போது தான் தினந்தோறும் ஸ்நானம் செய்து சுத்தமான ஆடை அணிந்துகொள்வதாக வாக்குறுதி தருகிறேன்.'

இந்நிலைமை ஏதோ அபூர்வமானதென்று எண்ணவேண்டாம். இந்தியக் கிராமங்கள் பலவற்றிலும் உள்ள நிலைமைக்கு இது ஓர் உதாரணமே யல்லாது வேறில்லை. இந்தியாவில் கணக்கற்ற குடிசைகளில் ஜனங்கள் எவ்விதத் தட்டுமுட்டுச் சாமான்களுமின்றி, மாற்றிக்கட்டிக்கொள்ள இரண்டாவது துணியுமின்றி, மானத்தை மூட ஒரே கந்தையுடன் வாழ்கிறார்கள்."

சம்பரான் கிராமங்களில் மகாத்மா அடைந்த மேற்கூறிய அநுபவந்தான் பின்னால் காந்திஜி இராட்டை இயக்கத்தை ஆரம்பிப்பதற்கும், கிராமவாசிகள் தங்கள் சுய தேவைகளைத் தாங்களே பூர்த்திசெய்து கொள்ள வேண்டும் என்னும் இயக்கத்தை நடத்துவதற்கும் மூலகாரணமாயிருந்தது.
** ** **
குடியானவர்களிடம் வாக்குமூலம் வாங்கும் வேலை ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் பதிவாகிவிட்டன. வாக்குமூலங்கள் பதிவு செய்த இடத்தில் சி.ஐ.டி. போலீஸ்காரர்களும் இருப்பார்கள். அதை மகாத்மா ஆட்சேபிக்கவில்லை. சி.ஐ.டி. போலீஸார் இருக்கும்போதே வாக்குமூலம் கொடுக்கச் செய்தால்தான் குடியானவர்களுக்குத் தைரியம் உண்டாகும் என்று மகாத்மா கருதினார்.

வாக்குமூலங்களின் போக்கைத் தோட்ட முதலாளிகள் அறிந்தபோது அவர்களுடைய கோபம் அதிகமாயிற்று. மகாத்மாவின் விசாரணையைத் தடைப்படுத்தி நிறுத்துவதற்குப் பல முயற்சிகள் செய்தார்கள். மகாத்மாவின் கிராமத் தொண்டுக்கும் இடையூறு விளைவிக்கப் பார்த்தார்கள். மூங்கில் புல்லினால் கட்டியிருந்த ஒரு பள்ளிக்கூடக் குடிசைக்கு அவர்களுடைய தூண்டுதலினால் தீ வைக்கப்பட்டது. அதன் பலன் ஒரு விதத்தில் நல்லதே ஆயிற்று. தொண்டர்கள் மூங்கில் புல் குடிசை இருந்த இடத்தில் பள்ளிக்கூடத்துக்காகச் செங்கல் கட்டடம் கட்டி விட்டார்கள்.

பிறகு ஒரு நாள் பீஹார் சர்க்காரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. "உங்களுடைய விசாரணை நீண்டு கொண்டே போகிறதே! சீக்கிரம் முடித்துக் கொண்டு பீஹாரை விட்டுப் போனால் நன்றாயிருக்கும்!" என்பது அக்கடிதத்தின் சாராம்சம்.

"விசாரணை சீக்கிரம் முடிவதற்கில்லை. இரண்டில் ஒன்று செய்து அரசாங்கம் என்னுடைய விசாரணையை நிறுத்திவிடலாம். ஒன்று, குடியானவர்களின் குறைகள் உண்மை என்று ஒப்புக்கொண்டு அவற்றை நிவர்த்திக்க ஏற்பாடு செய்யலாம்.அல்லது, உத்தியோக முறையில் சர்க்காரே குடியானவர்களின் குறைகளை விசாரித்து முடிவு செய்ய ஒரு கமிட்டி நியமிக்கலாம். இந்த இரண்டில் ஒன்று செய்தால் என்னுடைய விசாரணையை நிறுத்திக் கொள்கிறேன்" என்று மகாத்மா பதில் எழுதினார்.

அப்போது பீஹாரின் லெப்டினண்ட் கவர்னராயிருந்தவர் ஸர் எட்வர்ட் கேட் என்னும் நல்ல ஆங்கிலேயர். தம்மை வந்து பார்க்கும்படியாக மகாத்மா காந்திக்கு அவர் கடிதம் எழுதினார். அதன்பேரில் காந்திஜி கவர்னரைப் போய்ப் பார்த்தார். "தங்கள் விருப்பத்தின்படியே சம்பரான் குடியானவர்களின் குறைகளை விசாரித்து நிவர்த்திப்பதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப் போகிறேன். அந்தக் கமிட்டியில் தாங்களும் அங்கத்தினரா யிருக்கவேண்டும்" என்று சொன்னார் ஸர் எட்வர்ட் கேட்.

"கமிட்டியில் அங்கத்தினன் ஆவதால் குடியானவர்களின் கட்சி பேசும் உரிமை எனக்கு இல்லாமற் போய்விடக்கூடாது. கமிட்டியின் முடிவு திருப்திகரமா யில்லாவிட்டால் குடியானவர்களுக்கு யோசனை சொல்லி நடத்தும் உரிமையும் எனக்கு இல்லாமற் போய்விடக் கூடாது. அப்படியானால், நான் கமிட்டியில் இருக்க ஒப்புக்கொள்கிறேன்" என்றார் காந்திஜி.

இந்த நிபந்தனைகளை ஸர் எட்வர்ட் கேட் ஒப்புக்கொண்டார். ஸர் பிராங்க் ஸ்லை என்னும் ஆங்கிலேயர் தலைமையில் சர்க்கார் கமிட்டி நியமிக்கப்பட்டது. அதில் மகாத்மாவும் அங்கத்தினரானார். உத்தியோக முறையில் விசாரணை நடந்தது. குடியானவர்களின் குறைகள் எல்லாம் உண்மையானவையே என்று கமிட்டியார் கண்டார்கள். அநீதிகளை ஒழிப்பதற்குரிய சிபார்சுகளும் செய்தார்கள். அந்தச் சிபார்சுகளை அனுசரித்துச் சீக்கிரத்திலேயே சட்டம் ஏற்பட்டது. நூறு வருஷகாலமாக அந்தப் பிரதேசத்தில் அமுலில் இருந்துவந்த "தீன் கதியா" முறை ஒழிந்தது. இத்துடன் சம்பரான் ஜில்லாவில் தோட்டக் கார முதலாளிகளின் ராஜ்யமும் முடிவுற்றது.

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

2 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இன்றுதான் தங்கள் தளம் காணும் வாய்ப்பு கிடைத்தது. கட்டுரையினைப் படித்தேன்.

Pas S. Pasupathy சொன்னது…

தங்கள்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. மேலும் தொடர்ந்து பதிவுகளைப் படித்துக் கருத்துரைப்பீர்கள் என்று நம்புகிறேன்.