வெள்ளி, 28 செப்டம்பர், 2018

1158. லா.ச.ராமாமிருதம் -17: சிந்தா நதி - 17

22. சாக்ஷி : கற்பூரம் 
லா.ச.ராமாமிருதம்




அப்போது எனக்கு வயது ஆறு இருக்கலாம். ராயப்பேட்டையில் முத்து முதலித் தெருவில் குடியிருந்தோம்.

எதிர் வீட்டுப் பின் கட்டில், ஒரு தச்சனார் குடும்பம். பின்கட்டு பெரிய கட்டு. அதில் குடும்பமும் பெரிய குடும்பம். அப்பா தச்சனார், அம்மா தச்சனார், மூன்று பிள்ளைகள் தச்சனார்- அவர்கள் சம்சாரம். பெரியவர் வாட்டசாட்டமாக, வண்டு விழியும் கிருதா மீசையுமாய்ப் பின்னால் நான் பார்த்த சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி கம்பீரமாக அகன்ற நெற்றியை அரைப் பங்குக்கு மேல் அடைந்த தென்கலை நாமம்.




வீட்டினுள்ளேயே முற்றத்தில் தகரக் கொட்டகை போட்டு அதுதான் பட்டறை. மூன்று மகன்களைத் தவிர இரண்டு சின்னப் பையன்கள் வேலை செய்தார்கள். இவர்களுடைய உற்பத்தி அனேகமாகக் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான், சமையலறைப் பண்டங்கள்பொம்மை வண்டி, சொப்புகள் மரப்பாச்சி, உப்பு மரவை, அரிவாமணை, துருவலகாய், மத்து, மனை, ஸ்டுல், இத்யாதி, பெரிய சாமான்களில் இறங்குகிற மாதிரி அவர்களிடம் சாதனங்கள் இல்லை. பண்ணவும் தெரியுமோ தெரியாதோ?

இங்கு நான் எப்படிச் சேர்ந்தேன்? எதிர் வீடுதானே! பின்கட்டுக்கு அடிக்கடி போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். இதெல்லாம் எப்படிச் செய்யறது? என்று அவர்களைத் தொணப்புவேன். அண்ணா-அப்பாவை அண்ணாவென்றுதான் அழைப்போம் அண்ணாவும் தச்சரும் ஒருநாள் அளவளாவுகையில், 'பையன் உங்கள் தொழிலில் அக்கறை காட்டுகிறான்; சும்மா உங்களிடம் வந்துபோய்க் கொண்டிருக்கட்டுமா?' என்று கேட்டு, அவரும் உடனேயே சம்மதித்தார். நான் பள்ளிக்கூடம் இன்னும் சேரவில்லை. வீட்டிலேயே சொல்லிக் கொடுத்து எழுதப் படிக்கத் தெரியும்.

ஐயர் வீட்டுப் பையன் பட்டறையில் வேலை செய்வதில் அவர்களுக்கும் பெருமை. ("வெள்ளைக்காரன் தோத்தான், என்ன நிறம் பாத்தியா' எனக்கு ஒரு இடத்துக்கு வேளையாகப் போய், வேளையாகத் திரும்பி வருவதாக ஒரு ஒழுங்கு படிபட்டுமே! பின் என்ன, தச்சுத் தொழிலா என் பிழைப்பாக இருக்கப்போகிறது? ஏதோ பொழுது போக்கு.

தாத்தா பட்டறையில் உட்கார்ந்து நிரந்தரமாக வேலை செய்யமாட்டார். ஏன் செய்யனும்? மேல் பார்வை பார்ப்பார். தப்புத் திருத்துவார். சத்தம் போடுவார். கோபத்தில், கல்யாணமான தன் பையன்களைச் சில சமயங்களில் கைமிஞ்ச அஞ்சமாட்டார். பட்டறையிலேயே ஒரு ஒரமாக ஒரு குட்டி விமானத்தில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் பெருமாளுக்குப் பூஜை செய்வார். சின்ன விக்ரகங்கள். அவருடைய தாத்தா நாளிலிருந்து இருக்கிறதாம். இரண்டு பக்கங்களிலும் தேவிகள். சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நாழிகை கட்டைக் குரலில் துதிகள் பாடிக் கொண்டிருப்பார். திடீரெனத் தோத்திரங்கள் அடங்கி, குறட்டை பட்டறையைத் துரக்கும்.

இவர்கள் உற்பத்தியை விற்பனை செய்யக் கடை யென்று ஒன்று எங்கோ வைத்திருந்தார்கள். என்றாலும், அது ஒழுங்காக வேலை செய்த மாதிரித் தெரியவில்லை. ஆங்காங்கே கோயில்களில் நடக்கும் பிரம்மோற்சவங்களில் அவர்கள் விரித்த கடையையே நம்பியிருந்தார்கள். கபாலி கோயில், பார்த்தசாரதி கோயில், கந்தசாமி கோயில் தவிர, ஒரு ஐந்தாறு மைல் வட்டாரத்தில், பட்டணத்தில் அவர்களுக்குத் தெரிந்தபடி வெவ்வேறு மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் கோயில்கள் இருந்தன. இரவு எப்படியும், மிச்ச சரக்குடனும், வசூலுடனும் வீடு திரும்பி விடுவார்கள். முற்பகல் வேளைக்குப் பையன்கள் பட்டறையில் இருப்பார்கள். பிற்பகலில் வியாபாரத்தைக் கவனிப்பார்கள்.

மாலை விளக்கு வைக்கும் நேரத்துக்கு, அல்லது இரவு வீடு திரும்பியதும் விற்பனைத் தொகையை அப்பாவிடம் ஒப்புவிப்பார்கள். அவர் வெகு ஜாக்கிரதையாக எண்ணி, உள்ளே அலமாரியில் பூட்டி வைத்துக் கொள்வார்.

அன்றாடச் செலவுக்கு, அரிசியிலிருந்து எண்ணெய் வரை, அவருக்கும் பாட்டிக்கும் ஆயிரம் தர்க்கங்களுக்கிடையே அலமாரியிலிருந்து வழங்குவார். கடை கண்ணிக்குப் போவதெல்லாம் பாட்டிதான். ஆட்சி, இன்றைய பாஷையில், இரும்புக் கரம்தான். ஐயாவுக்கு நடந்தது, இதுவும் இன்றைய பாஷை தான்.

வெள்ளிக்கிழமையன்று மாலை பெருமாளுக்கு விசேஷ பூஜை, தேங்காய், சீப்புப் பழம், பொரிகடலை நிவேதனம். பட்டறையில் வேலை செய்வோருக்குப் பட்டுவாடா, பையன்களுக்குக் கைச் செலவுக்குத் தலா இரண்டனா. எனக்குக் கிடையாது. காசு வாங்கக் கூடாதுன்னு ஆத்தில உத்தரவு. பொரிகடலை போனாப் போறது. கொடுத்தா வாங்கிக்கோ நீயே மொக்க வேண்டாம். உன் தம்பிகளுக்கும் கொடு.

இங்கே நான் என்ன வேலை செய்தேன்னு யாரும் கேட்கமாட்டேங்கறாளே! சரி, நானே சொல்றேன்.

காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு, பட்டறைக்கு வந்துவிடுவேன். சுவரில் எல்லோரையும்போல் ஆணியில் சொக்காயை மாட்டிவிட்டுச் சக்கரம் வெட்டுவேன்.

அதாவது, ஒரு மெல்லிசுப் பலகையில் ஒரு வட்டம் பென்சிலால் போட்டுக் கொடுத்துவிட்டார். அந்தக் கோட்டு மேலேயே விளம்பின மாதிரி உளியால் செதுக்கிக் கொண்டே போகணும், வெட்டிக் கொண்டிருக்கையிலேயே விண்டுபோகும். போவட்டும், இன்னொண்ணு வெட்டு.

உளி பிடித்து, அதன்மேல் கொட்டாப்புளியால் தட்டுவதில் கண்டிப்பாகத் தனிக் குஷிதான். டொக் டொக், லொட் லொட்- இதுதான் என் வேலை.

அனேகமாக, கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை என்கிற மாதிரிதான்.

இது தச்சன் பட்டறை. ஆனால் பலன் என்னவோ ஒண்ணுதான்.

அபூர்வமாக, ஒன்று பூரா வட்டம் கண்டுவிட்டால் என்னைக் கட்டிப் பிடிக்க முடியாது.

("மூஞ்சியிலே செழுப்பு எப்படி ஏறுது பார்த்தியா?")

அன்னிக்குக் கனாவுலே நான் வெட்டின சக்கரம், மாட்டு வண்டி சக்கரம் பெரிசுக்கு. அதன் சிரங்குப் பொருக்கு விளிம்புடன் வந்து கிறுகிறுன்னு சுற்றும்.

நான் வெட்டின சக்கரம். விஷ்ணு சக்கரம்.

ஒரு நாள்.

காலை. அப்போதுதான் பட்டறையில் கூடியிருக்கிறோம்.

அறை உள்ளிருந்து பெரியவர் வெளிப்பட்டார் என்னென்னவோ வாயில் வந்தபடி பிதற்றிக்கொண்டு. அம்மா! அந்த மாதிரிக் கோபத்தை நான் பார்த்ததில்லை உடம்பெல்லாம் ஆடுகிறது. வேட்டி அவிழ்ந்து போனது தெரியவில்லை. அவரைப் பிடிக்க முயன்று, முடியாமல் பாட்டி அவர் தோளில் தொங்குகிறாள். வாயில் துரை தள்ளுகிறது.

என்ன ஆச்சு? என்ன நடந்தது?

எங்களுக்குள்ளேயே கிசுகிசுவில், படிப்படியாக என் குழந்தை அறிவுக்குப் புரிந்தவரை, நேற்று எண்ணி, அலமாரியில் பூட்டி வைத்த பணத்தில், பத்து ரூபாயைக் காணோமாம்.

"பூ!" யாரேனும் உதட்டைப் பிதுக்கறேளா?

அப்போ, பவுன் பதின்மூன்று ரூபாய்க்கு வித்தது. இப்போ விலை ரூ.2000-

அந்நாளைய பத்து ரூபாய் பாய்ந்த வேகத்தையும், வீச்சையும் இதைவிட ருசுப்படுத்த எனக்குத் தேவை யில்லை. மேலே போகிறேன்.

பெரியவர் புயல் வீசுகிறார். சாமான்கள் உருள்கின்றன. மகன்கள் மேல் தனித் தனியாகப் பாய்கின்றார்.

"இருங்க நைனா! பொறுங்க நைனா சாந்தமாவுங்க நைனா!" மூத்தவன் கெஞ்சுகிறான். "தயவு செய்து கேட்டுக்கங்க! நீங்க எண்ணி வெக்கறதுலே கணக்குப் பிரண்டு போயிருக்கலாமா? இல்லே, உங்கள் குறிப்பேடுலே கூட்டல் கழித்தல்லே-"

"என்னடா பேமானி, எனக்குக் கணக்கு சொல்லித் தரவா வரே!" நோட்டைத் தூக்கி அவன் முகத்தில் சுழற்றி அடித்தார். "ஒரு பத்து ரூபா நோட்டுடா!

நேத்திக்கு ரூவா சில்லரையோடு பிஸ்கட் டப்பியிலே வெச்சிருக்கேன், இன்னிக் காலையிலே காணம்னா, எனக்குப் பாடம் படிக்க வரானே! அந்த நோட்டிலே, ராஜா தலையிலே மச்சம் மாதிரி ஏதோ துரு இருந்தது. சுரண்டிப் பார்த்தேன் வரல்லே. சரி, நாளைக்குப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். என்னடா, எனக்குக் காதா குத்தறே! கடுக்கன் தொங்குது பார்த்தியா?"

இன்னும் என்னென்னவோ புதுசு புதுசா அர்த்தம் புரியாத வார்த்தைகள். இப்போ புரிகிறது. ஆனால் சொல்வதற்கில்லை.

விசாரணை, வீட்டுப் பெண்டிரையும், பிள்ளைகளையும், கூட்டாயும், தனித் தனியாகவும், உள்ளே கூப்பிட்டும் பட்டறையிலுமாக நடக்கிறது.

"நேத்திக்கு மறதியா அலமாரிக் கதவுலேயே சாவி நின்னுபோச்சு. இருந்தால் என்ன? இது குடும்பமா, குடித்தனமா? இதென்னடா வீடு! எத்தினி நாளா, இந்த சமயத்துக்கு எவன்டா காத்திருந்தான்? என்னால் ஜெரிக்கவே முடியல்லியே!"

இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்குமாக அலைகிறார்; திகைத்து நிற்கிறார். கண்களில் காங்கை அடிக்கிறது. மனிதன் மாறிவிட்டான்.

பெருமாளுக்குப் பூஜை நடக்கவில்லை சாமி வாயில் மண். ஏன், வீட்டில் எல்லார் வாயிலுமே அதுதான். அடுப்பு ஒழுங்காகப் புதைந்ததோ? அன்றைய வயிறு அலும்பலுக்குப் பணம் கேட்க யாருக்குத் தைரியம் இருக்கு?

மத யானை, நெருங்கவே பயமாயிருக்கே! குளிக்கக் கூட இல்லை.

இத்தனை நாழிக்கு இட்லிக்கடை நடந்துகொண்டிருக்கும். சட்டினி, சாம்பார், சர்க்கரையுடன் குழந்தைகள் கண்டபடி வாரியிறைத்துக் கொண்டு.

இருக்கிற ஒன்று அரை அரிசியைத் திரட்டிப் பொங்கி, நீராகாரத்தைக் கலக்கி- அது ஆண்களுக்கு ஆச்சு. பெண்கள்?

பாட்டி அவரிடம் இரு கைகளிலும் பயபக்தியுடன் ஏந்திக் கொணர்ந்த தம்ளரை அப்படியே தட்டி வீசி அடித்தார்.

பட்டறையில்தான் என்ன வேலை நடக்கும்? பேசவே அஞ்சினோம்.

மத்தியானச் சாப்பாட்டுக்கு நான் போய்த் திரும்பி வந்தபோது, அவர் விமானத்துக்கெதிரே, கண்ணை மூடிய வண்ணம், நிமிர்ந்த முதுகுடன் அசைவற்று உட்கார்ந்திருந்தார்.

மணி ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு- அப்படியே தூங்கிப்போயிட்டாரா? தூங்க முடியுமோ?

ஐந்தரை, ஆறு மணி வாக்கில், கலைந்தார். ஏதோ முடிவுக்கு வந்தாற் போல் முகத்தில் ஒரு தெளிவு.

பிள்ளைகளை விளித்தார். எதிரே வந்து நின்றனர்.

"துட்டை நீங்க எடுக்கல்லே இல்லியா?"

மூவரும் சேர்ந்தாற்போல் தலையை ஆட்டினர்.

"சரி, பெருமாளுக்குக் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்து அணையுங்க."

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மூவருக்கும் முகம் ஒரே மாதிரியாக வெளிறி விட்டது.

"நான் செய்யற மாதிரியே செய்யணும். ருக்மிணி, குத்து விளக்கை ஏத்து."

விளக்கை ஏற்றுகையில், கிழவிக்குக் கை நடுங்கிற்று. சுடர் குதித்தெழுந்தது. நாங்கள் பையன்கள் பார்த்துக் கொண்டு நின்றோம்.

பெரியவர், கற்பூர டப்பாவிலிருந்து கணிசமான ஒரு கட்டியெடுத்து, பெருமாளுக்கு எதிரே வைத்து ஏற்றினார்.

"அலமாரியிலிருந்து சத்தியமா, நான் ரூபாய் எடுக்கல்லே!" என்று உரக்கக் கத்திக் கையைப் பட்டென்று தட்டினார். கற்பூரம் அவிந்து விக்ரஹம் பொட்டென விழுந்தது. எடுத்து நிமிர்த்தினார்.

"உம், பாண்டுரங்கா- ஆகட்டும்!"

பட்டெனத் தட்டி, பெருமாள் குப்புறக் கவிழ்ந்ததும், எனக்குப் பயத்தில் அரை நிஜார் நனைந்துவிட்டது.

"விஜய ரங்கா! அடுத்தது," பட் பகீர்-

"ரங்கநாதா!"

முடிந்தது.

பெரியவர், அங்கேயே இழைப்புளி பெஞ்சில், இடுப்பு வேட்டியை முகம்வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு காலை நீட்டி விட்டார்.

"போங்கடா போங்க. இங்கே என்ன வேடிக்கை பார்த்துகிட்டு! இன்னிக்கு இனிமேல் வேலை கிடையாது."

அன்றிரவு படுக்கும்வரை, ராத்திரி, வீட்டில் எனக்கு இதே பேச்சுத்தான். அம்மா எனக்கு விபூதி இட்டாள்.

மறுநாள் காலை, பட்டறைக்குக் கிளம்ப, சொக்காயைத் தலைமேல் மாட்டிக்கொள்கையில் ஜேபியிலிருந்து ஏதோ பறந்து விழுந்தது. அதைப் பார்த்ததும் எனக்குப் பயமாப்போச்சு,

"அண்ணா! அண்ணா!" அலறினேன். அண்ணா வந்தார். ஒரு நொடியில் புரிந்துகொண்டுவிட்டார். என் கையைப் பிடித்துக் கொண்டார்.

"பயப்படாதே. நானும் வரேன்."

பெரியவர் தனியாக இருந்தார். எங்களைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்று எதிரே அமரச் சொன்னார்.

அண்ணா அவரிடம் கையை நீட்டினார்.

நோட்டைப் பிரித்து, இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு, வெகுநேரம் அதையே வெறித்துக் கொண்டிருந்தார். பிறகு- "நான் குழந்தையைச் சந்தேகிக்கிறேன்னு நினைக்கிறீங்களா?"

"நாயக்கர்வாள், இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? நோட்டு கெட்டுப்போனது. உங்கள் குடும்பச் சொந்த விஷயம். அது அகப்பட்டது என் பையன் சொக்காய்ப் பையில். அவரவர் மனசு அவரவருடையது. உள்ளே புகுந்தா பார்க்க முடியும்? இந்த சந்தேகம் இருக்கே, இது ராமாயண காலத்திலிருந்தே வேலை செய்கிறது."

மறுபடியும் மெளனம்.

அவர் விழிகளிலிருந்து ரெண்டு பெரிய துளிகள் புறப்பட்டு வழிந்து, மோவாயில் உதிர்ந்தன.

"சாமி, எடுத்ததோடு அல்லாமல் ஒரு குழந்தை பழி ஆவட்டும்னு அதன் மேலே சுமக்கற அளவுக்கு இந்த வீட்டுலே கலி தனியா முத்திப்போச்சு, நஷ்டம் எனக்குப் பெரிசு இல்லே. துரோகம்தான் தாங்க முடியல்லே. சரி, போய் வாங்க."

அன்று நான் பட்டறைக்குப் போகல்லே. அன்றிலிருந்தே போகல்லே.

அன்று மாலை, எதிர்வீட்டு வாசலில் ஒரு ஜட்கா வந்து நின்றது. பெரியவரும் பாட்டியும் ஏறிக்கொண்டனர். வண்டி கொள்ளவில்லை.

போய்விட்டார்கள்.

திரும்பி வரவேயில்லை.

சிந்தா நதியில் ஒர் அலையெழுச்சி.
--------------------------
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

Bhanumathy Venkateswaran சொன்னது…

என் பொக்கிஷத்தில் உள்ள புத்தகங்களில் சிந்தா நதியும் ஒன்று. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிக்க கசக்குமா என்ன? எப்படிப்பட்ட மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் நம் நாட்டில்!! பகிர்வுக்கு நன்றி.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி. ஓவியத்துடன் படிப்பது மேலும் ரசிக்கத் தக்க அனுபவம் இல்லையா?