செவ்வாய், 21 மே, 2019

1290. கரிச்சான் குஞ்சு - 1

கரிச்சான் குஞ்சு - நாராயணசாமி
சு.இரமேஷ்


2019. இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம்.
====

தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழுதாமல் வடமொழி சார்ந்த தத்துவ விசாரணையில் ஈடுபடும் எழுத்துத் திறனைக் கொண்டிருந்தவர் கரிச்சான் குஞ்சு.இவர் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் தம் திறனை வெளிப்படுத்தியவர்.


கரிச்சான் குஞ்சு என்று அனைவராலும் அறியப்பட்ட இவரின் இயற்பெயர் நாராயணசாமி.


1919ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தைச் சேர்ந்த சேதனீபுரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை இராமாமிருத சாஸ்திரி, தாய் ஈஸ்வரியம்மாள்.கரிச்சான் குஞ்சு இளமையிலேயே தந்தையை இழந்தவர். வறுமை நிறைந்த குடும்பம். இராஜலட்சுமி, ருக்மணி, நாகராஜன், சுந்தரராமன் ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள். இராஜலட்சுமி மட்டும் இவருக்கு மூத்தவர்.

8 வயது முதல் 15 வயதுவரை இவர் (பெங்களுரில்) வடமொழியும், வேதமும் பயின்றார். பின்னர் மதுரை, இராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும், வடமொழியும் கற்று "வித்வான் சிரோமணி" ஆனார்.

கு.ப.ரா., புதுமைப்பித்தன், மெளனி, நா.பிச்சமூர்த்தி போன்றோரின் எழுத்துகளை மணிக்கொடியில் பார்த்த கரிச்சான் குஞ்சு, அவர்களைப் போலத் தாமும் எழுத வேண்டுமென ஆசைப்பட்டார். 1940-இல் "ஏகாந்தி" என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான "மலர்ச்சி" கலைமகள் இதழில் வெளிவந்தது. கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா.வோடு நெருங்கிப் பழகியவர். அவரது புனைவுகளால் ஈர்க்கப்பட்டவர். கு.ப.ரா., "கரிச்சான்" என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார்.

கு.ப.ரா., மீது கொண்ட அன்பினால், தம் பெயரை "கரிச்சான் குஞ்சு" என்று மாற்றிக்கொண்டார்.

கரிச்சான் குஞ்சு, 1940 - 43 வரை சென்னை இராமகிருஷ்ணா பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1943 - 45 வரை கும்பகோணம் நேட்டிவ் பள்ளியிலும், 1945 - 47 வரை தஞ்சை மாவட்டம் விஷ்ணுபுரம் உயர்நிலைப் பள்ளியிலும் பணியாற்றியுள்ளார். இறுதியாக, 1948 - 77 வரை மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

சென்னையில் இருக்கும்போது தி.ஜா.வும் இவரும் ஒன்றாகத் தங்கியிருந்தனர். தி.ஜா. இவருக்கு தூரத்து உறவினர். கரிச்சான் குஞ்சுவுக்கு 19வது வயதில் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் வாலாம்பாள். தீராத நோயின் காரணமாக மனைவி இறந்துவிட, தி.ஜா.வின் வற்புறுத்தல் காரணமாக சாரதா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அப்போது இவருக்கு 28 வயது; சாரதாவுக்கு 17 வயது. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள்.

கரிச்சான் குஞ்சு அடிப்படையில் ஆங்கிலக் கல்வியைக் கற்கவில்லை என்றாலும், ஆங்கிலம், இந்தி, வடமொழி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை பெற்றவர். இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜா., தஞ்சாவூரைச் சேர்ந்த சுவாமிநாத ஆத்ரேயன் ஆகிய நால்வரும் கு.ப.ரா.வின் எழுத்துகளால் கவரப்பட்டு கதை எழுதத் தொடங்கியவர்கள். எப்பொழுதும் கு.ப.ரா.வுடனேயே இருப்பார்கள். திருச்சியில் கவிஞர் திருலோகசீதாராம் நடத்திய "சிவாஜி" இதழில் கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதினார். தவிர, "கலாமோகினி" இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாயின.

காதல் கல்பம், குபேர தரிசனம், வம்சரத்தினம், தெய்வீகம், அன்றிரவே, கரிச்சான் குஞ்சு கதைகள், சுகவாசிகள், தெளிவு, கழுகு, ஒரு மாதிரியான கூட்டம், அம்மா இட்ட கட்டளை ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்புகள். இவைதவிர, "பசித்த மானிடம்" என்ற நாவலையும் எழுதியுள்ளார். இந் நாவல்தான் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. "சங்கரர்", "கு.ப.ரா.", "பாரதி தேடியதும், கண்டதும்" என்னும் மூன்று வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார். ஆனந்த வர்த்தனன் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். "சுகவாசிகள்" என்னும் இவரது குறுநாவல் "மனிதர்கள்" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. சாகித்திய அகாதெமி, "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் இவருக்கும் இடமளித்து பெருமை சேர்த்துள்ளது.

"தன்னையே அழித்துக்கொள்ளும் அடக்கம் மிகுந்தவர்" என்று நண்பர்களால் பாராட்டப்பட்ட கரிச்சான் குஞ்சு, 1992ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி இயற்கை எய்தினார்.{ நன்றி:- தினமணி, http://www.heritagewiki.org/  }

தொடர்புள்ள பதிவுகள்:

கரிச்சான் குஞ்சு

2 கருத்துகள்:

ஜீவி சொன்னது…

கரிசான் சாரின் நினைவுகள் என்றுமிருக்கும். தினமணியில் வந்த கட்டுரையா? சரி. நீங்களாவது

தேவி பிரசாத் சட்டோபாத்தியாவின் 'What is true and relevant in Indain Philosophy' நூலை தமிழில் அழகாக இவர் மொழியாக்கம் செய்திருப்பதை நீங்களாவது சொல்லியிருக்கலாம்.

Pas S. Pasupathy சொன்னது…

@ஜீவி. நன்றி. >>ஆனந்த வர்த்தனன் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.>> என்று கட்டுரை சுருக்கிச் சொல்கிறது. இப்போது ஒரு நூல் அட்டையைச் சேர்த்துள்ளேன். சரியா?

கருத்துரையிடுக