சனி, 25 மே, 2019

1293. பாடலும் படமும் - 63

மத்ஸ்யாவதாரம் 


திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம்
வேதங்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்டெடுக்க  மீனாய் எடுத்த அவதாரம்.


சிறுத்தசெலு வதனு ளிருந்து
     பெருத்ததிரை உததி கரந்து
          செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே

என்கிறார் அருணகிரிநாதர் “ கறுத்த தலை” என்று தொடங்கும் திருப்புகழில்.

( பொருள்: சிறுத்த செலு அதனுள் இருந்து ... சிறிய மீன் உருவத்தினுள்
அவதாரம் செய்து,

பெருத்ததிரை உததி கரந்து செறித்த ... பெரிய அலை வீசும்
கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த

மறை கொணர நிவந்த ஜெயமால் ... வேதங்களை மீட்டு
வருவதற்காகத் தோன்றிய வெற்றித் திருமால்  )

“இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

பெரும் பிரளயத்தின் போது விஷ்ணு மீன் அவதாரம் எடுத்து, வைவஸ்தமனுவின் குடும்பத்தினரையும், சப்தரிஷிகளையும் காத்து, மீண்டும் பூவுலகில் அனைத்து உயிரினங்களையும் செழிக்க வைத்தார். ”

திருமங்கையாழ்வார் தசாவதாரங்களையும் பாடியுள்ளார்.

முதல் அவதாரத்தைப் பற்றி அவர் பாடிய பாடல்:

வானோர் அளவும் முதுமுந்நீர் 
  வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் 
  கொண்ட தண்தா மரைக்கண்ணன்,
ஆனா உருவில் ஆனாயன் 
  அவனை- அம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே.

( பொருள் : கடல் வெள்ளம் தேவர்களின் எல்லையளவும் பரந்து சென்ற காலத்திலே வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த்  திருவவதரித்து, ஆச்சரியப்படும்படியாக, எல்லாரையும்  பிழைப்பித்தருளின குளிர்ந்த தாமரை போன்ற  திருக்கண்களையுடையவனும் விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை, அழகிய பரந்த விளைவுமிக்க வயல்களை யுடையதும் காடுகள் செறிந்த     பர்யந்தங்களை உடையதுமான திருக்கண்ணபுரத்திலே  அடியேன் கண்டு கொண்டேன்-.) 

மச்ச அவதாரம் : விக்கிப்பீடியா .

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

தசாவதாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக