வியாழன், 12 மார்ச், 2020

1491. கதம்பம் - 10

சுவாமி சித்பவானந்தர் 10மார்ச் 11. சுவாமி சித்பவானந்தரின் பிறந்த தினம்.
====
ஸ்ரீராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவியும், சிறந்த கல்வியாளருமான சுவாமி சித்பவானந்தர் (Swami Chidbhavanandar) பிறந்த தினம் இன்று (மார்ச் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் (1898) பிறந்தார். வீட்டில் ‘சின்னு’ என்று அழைக்கப்பட்டார். தந்தை சித்தவைத்தியர். வானசாஸ்திரம், ரசவாதம் போன்ற அரிய கலைகளிலும் வல்லுநர்.
* ஆத்துப்பொள்ளாச்சி, பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர், கோவை ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளி யில் பயின்றார். தன்னைவிட சிறிய பிள்ளைகளுக்கு ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுத் தந்தார். சிறுவயது முதலே பல சாதுக்களின் வழிகாட்டுதல் கிடைத்தது.
* சத்குரு சுவாமிகள் இவரிடம் பல நூல்களைத் தந்து, உரக்கப் படிக்கச் சொல்லி கேட்பார். வெளிநாடு சென்று படிக்க, கப்பல் பயணம், பாஸ்போர்ட் ஏற்பாடுகளுக்காக சென்னை வந்தபோது சுவாமி விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது இவரது மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

* வெளிநாடு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டார். விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நூல்களைப் படித்தார். 1920-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதம், அறிவியல், தத்துவம் பயின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல புலமை பெற்றார்.
* தாயின் மறைவால் வேதனை அடைந்தவர், மன அமைதிக்காக அவ்வப்போது மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சென்றுவந்தார். ஆன்மிகத்திலும், துறவறத்திலும் நாட்டம் பிறந்தது. கல்லூரிப் படிப்பை முடிக்காமலேயே ராமகிருஷ்ண மடத்தின் சுவாமிகளுடன் 1923-ல் கல்கத்தா சென்றார்.
* பேலூர் மடத்தில் சிவானந்த மகராஜ் இவருக்கு பிரம்மச்சர்ய தீட்சை அளித்து ‘திரயம்பக சைதன்யர்’ என்று பெயர் சூட்டினார். நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். 1926-ல் ஊட்டி ராமகிருஷ்ண மடத்தில் ஸ்வாமி சிவானந்தர் இவருக்கு சன்னியாச தீட்சை அளித்து ‘சுவாமி சித்பவானந்தர்’ என்று பெயர் சூட்டினார்.
* யோகம், தியானம், சாஸ்திரம், புராணங்கள், உபநிடதம், கீதை மற்றும் பல மொழிகள் கற்றார். உதகை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக 1930 முதல் 1940 வரை இருந்தார். ஸ்ரீரங்கம் அடுத்த திருப்பராய்த்துறையில் ஆரம்பப் பள்ளி தொடங்கினார். அங்கு ராமகிருஷ்ண தபோவனத்தை 1942-ல் நிறுவினார்.

* குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப்பள்ளி, விவேகானந்த மாணவர் விடுதி என அடுத்தடுத்து ஏராளமான கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். மதுரை அருகே உள்ள திருவேடகத்தில் 1964-ல் ராமகிருஷ்ண மடம் தொடங்கப்பட்டது. பெண்களுக்கான சாரதா தேவி சமிதியும் தொடங்கப்பட்டது.* ஆன்மிகப் பணிகள், சொற்பொழிவுகள், கல்வி நிலையங்கள் அமைத்தல், சமூக சேவை இவற்றோடு தலைசிறந்த படைப்பாளியாகவும் மலர்ந்தார். ‘தர்ம சக்கரம்’ என்ற மாத இதழை 1951-ல் தொடங்கினார். இதிகாசங்கள், வேதாந்த நூல்கள், பகவத்கீதை, திருவாசகம் ஆகியவற்றுக்கான உரைகள், சிறுவர் கதைகள், நாடகம், தத்துவ விளக்கம், உரைநடை என 130-க் கும் அதிகமான நூல்களைப் படைத்துள்ளார்.

* 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். சுவாமி ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் செய்திகளைத் தமிழகத்தில் பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தவரும் ‘பராய்த்துறை மேவிய பரமபுருஷர்’ எனப் போற்றப்படுபவருமான சுவாமி சித்பவானந்தர் 87-வது வயதில் (1985) மகாசமாதி அடைந்தார்.
[ நன்றி: இந்து தமிழ் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக