தமிழர் கலைகள்
மா. இராசமாணிக்கனார்
===
தமிழின் பழைமை
இன்று உலகில் பேசப்படும் மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம். இவற்றுள் காலத்தாற் பழைமையும், இலக்கிய வளத்தால் பெருமையும் பெற்றுள்ள மொழிகள் ஆறு. அவை கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், வடமொழி, சீனம், தமிழ் என்பன என்று மொழியாராய்ச்சியாளர் கூறுகின்றனர். இன்றுள்ள தமிழ் இலக்கண நூல்களுள் மிக்க பழமையானது தொல்காப்பியம். அஃது இன்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமுன் செய்யப்பட்டது. ஏறத்தாழ ஆயிரத்து அறுநூறு நூற்பாக்களைக் கொண்ட அப்பேரிலக்கணம் செய்வதற்கு அதற்கு முற்பட்ட இலக்கியங்கள் மிகப் பலவாக இருந்திருத்தல் வேண்டுமல்லவா? எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப் படுவதுபோல இலக்கியத் திலிருந்து எடுக்கப்படுவதுதானே இலக்கணம் ! எனவே, தமிழ் இலக்கியத் தோற்றம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்பது தெளிவாதல் காண்க. அப்பழைய இலக்கியங்கள் இன்று காணுமாறில்லை. ஆனல் அவற்றின் சத்தாகத் தொல்காப்பியம் இன்று விளங்குகின்றது. அப்பெரு நூலைக் கொண்டும் சங்ககாலப் (கி. பி. 300-க்கு முற்பட்ட) பிறநூல்களைக் கொண்டும் பழந்தமிழர் வளர்த்த கலைகளைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.
“கலை” என்பது யாது ?
மனிதனது உள்ளத்தைத் தன்வயப்படுத்திப் பெருக்கெடுத்து வெளிப்படும் ஆற்றலே கலை என்பது. இந்த ஆற்றல் காவியமாகவும் ஒவியமாகவும் சிற்பமாகவும் எழில் மிகுந்த கட்டடமாகவும் வெளிப்படலாம். இவ்வாற்றல் இசையாகவும் வெளிப்படும் , இசைக்குரிய கருவிகளை ஆக்கவும் பயன்படும். இவ்வாற்றலே நடனக்கலையையும் நாடகக்கலையையும் தோற்றுவித்தது ; பேரெழில் மிகுந்த தாஜ்மஹால் கட்டடத்தையும், கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் அஜந்தாச் சிற்பங்களையும் தோற்றுவித்தது. அபிநயத்தின் வாயிலாக உள் உணர்ச்சிகளைக் காட்ட வல்லதும் இவ்வாற்றலே. சுருங்கக் கூறின், கலை என்பது கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை என்னும் பல கலைகளுக்குப் பிறப் பிடமானது. இக்கலை உணர்ச்சி இல்லாதார் விலங்கு உணர்ச்சி உடையவரேயாவர்; மனிதப் பண்பு அற்றவரே யாவர்.
கட்டடக் கலை
ஒரு நாட்டு மக்களது உயரிய நாகரிகத்கை உணர்த்தி நிற்பவற்றுள் கட்டடக்கலையும் ஒன்றாகும். பல்லவர் காலக் கட்டடக் கலையை அவர்கள் அமைத்த குடைவரைக் கோவில்களிலிருந்தும் காஞ்சி கயிலாசநாதர், வைகுந்தப் பெருமாள் கோவில்களிலிருந்தும் நன்கு அறியலாம். மலைச்சரிவினைக் குடைந்து தூண்களையும் மண்டபங்களையும் அமைத்தல் எளிதான செயலன்றே ! பாறையையே கோவிலாகக் குடைந்து அமைத்தலும் செயற்கரிய செயலன்றோ? கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுதலும் அறிய செயல்தானே ! திருச்சுற்றுச் சுவர் முழுதும் சிறு கோவில்களாக மாற்றிச் சிற்பங்களை அமைத்து வைக்கப்பட்டுள்ள கயிலாசநாதர் கோவில் பல்லவர் காலக் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தஞ்சை இராசராசேச்சரம், கங்கைகொண்ட சோழேச் சரம், திரிபுவன வீரேச்சரம், தாராசுரத்தில் உள்ள இராச ராசேச்சரம் என்னும் கோவில்களில் அமைந்துள்ள அற்புத வேலைப்பாடு சோழர்காலக் (கி. பி. 900-1300) கட்டடக் கலைத் திறனை உலகறியச் செய்வனவாகும். தஞ்சை இராச ராசேச்சரத்தில், சிவலிங்கம் உள்ள கருவறையின்மேல் பல அடுக்குகள் அமைத்துக் கட்டப்பட்ட விமான அமைப்பு வியந்து போற்றத் தக்கது. அவ்விமானம் 13 கோபுர மாடிகளை உடையது ; 216 அடி உயரமுள்ளது. உச்சியில் 25 அடி சதுர வடிவமுள்ள தளக்கல் போடப் பட்டுள்ளது. அதன் நிறை 80 டன். அக்கல்மீது கலசமும் அதன் தூபியும் அமைந்துள்ளன. தளக்கல்லை மேலே உயர்த்த நான்குமைல் தொலைவிலிருந்து சாரம் போடப்பட்டதாம். நவீன இயந்திரங்கள் இல்லாத அக் காலத்தில் இவ்வற்புத வேலைப்பாடு நடைபெற்றதெனின், தமிழருடைய கட்டடக் கலைத்திறனை என்னென்பது ! தாராசுரம் சிவன்கோவில், குதிரைகள் பூட்டிய உருளைகள் உள்ள தேர் போன்ற அமைப்புடையது. பக்கத்திலுள்ள அம்மன் கோவிலின் முன்மண்டபம் நீரில் மிதக்கக் கூடிய தெப்பம்போல அமைந்துள்ளது. -
சோழர்க்குப் பின்வந்த விசயநகர ஆட்சியிலும் மதுரை நாயக்கமன்னர் ஆட்சியிலும் தஞ்சை மகாராட்டிரர் ஆட்சியிலும் கட்டடக்கலை நன்கு வளர்ச்சியுற்றது. மதுரை மீனுட்சியம்மன் கோவிலும் புதுமண்டபமும் திருமலை நாயக்கர் மகாலும் நாயக்கர் காலக் கட்டடக் கலைத் திறனை உலகறியச் செய்வன. ஆயிரக்கால் மண்டபங் களுள் பெரும்பாலன நாயக்கர் காலத்தவை. தஞ்சையில் உள்ள ஏழடுக்கு அரண்மனை மகாராட்டிரர் காலத்துக் கட்டடக்கலை உயர்வை அறிவிப்பதாகும். ஆர்க்காடு முதலிய இடங்களில் உள்ள அழகிய மசூதிகள், கர்நாடக நவாப் காலத்திய கட்டடக்கலை உணர்வை உணர்த்துவன வாகும்.
சிற்பக்கலை
மனிதன் தான் காட்ட விரும்பும் பொருள்களின் உருவங்களை மரத்திலோ கல்லிலோ பிறவற்றிலோ அமைத்தல் சிற்பமாகும். இக்கலை கற்காலத்திலிருந்தே தோற்றமானது. இக் கலைஉணர்ச்சி படிப்படியாக வளர்ச்சிபெற்று வந்தது. இறந்த வீரனது உருவத்தைக் கல்லிற்பொறித்து அதனை நட்டு வழிபடுதல் பண்டையோர் வழக்கம். இது மிக்க விளக்கமாகத் தொல்காப்பியத்தில் கூறப்படுகின்றது. சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் உருவத்தைச் செய்து கோவிலில் வைத்து வழிபட்டான் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. பின்வந்த பல்லவர் காலத்தில் சிற்பக்கலை மிக உயர்ந்து காணப் பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள இரதங்களில் உள்ள உருவச் சிற்பங்களும் பாறைச் சிற்பங்களும் பல்லவர் காலத்தில் எழுந்த தமிழரது சிற்பக்கலைத்திறனை நன்கு காட்ட வல்லன.
பின்வந்த சோழர் காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலிலும் கங்கைகொண்ட சோழேச்சரத்திலும் அமைந் துள்ள சிற்பங்கள் கண்டு மகிழத்தக்கவை. ஏறத்தாழப் பதினான்கடி உயரமுள்ள வாயிற் காவலர் உருவச் சிற்பங்கள் வியத்தகு வேலைப்பாடு கொண்டவை. விசாரசர் மருக்கு உமா தேவியுடன் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் அவரது தலையில் கொன்றை மாலையைச் சூடி அவர்க்குச் சண்டீசப்பதம் அருளும் காட்சியைப் புலப்படுத்தும் சிற்பம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கவல்லது.
இஃது ஏறத்தாழத் தொள்ளாயிரம் ஆண்டுகட்குமுன் செய்யப்பட்டதாயினும், நேற்று மாலை தான் செய்யப்பட்டது என்று கூறத்தக்க பேரழகோடு விளங்குகிறது எனின், சோழர்காலச் சிற்பத்திறனை என்னென்பது! பின் வந்த விசய நகர ஆட்சியிலும் நாயக்க மன்னர் ஆட்சியிலும் அமைந்த சிற்பங்களைக் கோவையை யடுத்த பேரூரிலும் தாரமங்கலத்திலும் மதுரைப் புது மண்டபத்திலும் திண்டுக்கல்லையடுத்த தாடிக்கொம்பிலும் காணலாம்.
ஓவியக் கலை
பல்லவர்கால ஓவியக்கலை நுட்பத்தைச் சித்தன்ன வாசல் குகைக் கோவிலில் உள்ள நடிகையர் ஒவியங்களைக் கொண்டும் மேற்கூரை ஒவியங்களைக் கொண்டும் தெளி வாக அறியலாம். ஒவிய ஆராய்ச்சி நிபுணரான வட நாட்டு அறிஞர் பலர் இவ்வோவியங்களில் அமைந்துள்ள வேலை நுட்பத்தை உளமாரப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் வரையப்பெற்ற இவ்வோவி யங்கள் இன்றளவும் கண்கவரத்தக்க நிலையில் இருத்தலைக் காண, இவற்றைத் தீட்டிய ஓவியக்கலைவாணரது தொழில் திறமை வெள்ளிடை மலைபோல் விளக்கமாகின்றது.
பின்வந்த சேர்ழர் காலத்தில் ஓவியக்கலை எவ்வாறு இருந்தது என்பதைத் தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள ஒவியங்கள் இனிது விளக்குகின்றன. இறைவன் சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்ட வரலாறு தஞ்சைப் பெரிய கோவில் சுவரில் ஒவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. சோழர்கால ஆடல் பாடல் மகளிரை உணர்த்தும் ஓவியம் அழகு வழியத் தீட்டப்பட்டுள்ளது. இவ்வோவியங்களிலிருந்து அக்கால ஆடவர் பெண்டிர் அணிவகைகளும் உடைவகைகளும் கூந்தல் ஒப்பனைகளும் பிறவும் நன்கு அறியலாம். நாயக்கர் கால ஓவியக்கலை மாண்பை மதுரை மீனாட்சியம்மன் கோவிற் சுவர்கள்மீது வரையப்பட்டுள்ள திருவிளையாடற் புராண ஒவியங்களைக் கொண்டு உணர லாம். இவை அக்கால மக்களுடைய உடைச் சிறப்பையும் அணிவகைகளையும் பிறவற்றையும் நன்கு உணர்த்த வல்லன.
இசைக் கலை
தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதனுல் தமிழர் இசைத்தமிழை நடுநாயகமாக வைத்துப் போற்றி வந்தனர் என்பது தெளிவன்றாே ? சங்க காலத்தில் இசைத்தமிழ் நூல்கள் பல இருந்தன; இசைத்தமிழ்ப் புலவர் பலர் இருந்தனர். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் முதலிய ஏழிசைகளையும் முல்லைப்பண் முதலிய பண்வகைகளையும் சங்க நூல்களில் பரக்கக் காணலாம். யாழ், முழவு, தண்ணுமை, குழல் முதலிய இசைக்கருவிகள் மிகப் பலவாகத் தமிழகத்தில் வழக்கில் இருந்தன. இசைத்தமிழைப் போற்றிவளர்த் தவர் பாணர் என்பவர். பாணரும் பாடினியரும் தமிழரசரால் பாதுகாக்கப்பட்டனர். எனவே, இசைத்தமிழ் நன்கு வளர்ச்சியுற்றது. நாயன்மார் காலத்தில் தமிழிசை செல்வாக்குப் பெற்றிருந்தது. விசயநகர ஆட்சிக் காலத்தில்தான் கருநாடக இசை தமிழகத்தில் கால்கொண் டது. அது முதல் தமிழிசை மறைந்து கருநாடக இசை தமிழகம் முழுதும் பரவியது. இராசா சர் அண்ணுமலைச் செட்டியார் அவர்களது பெருமுயற்சியால் இப்பொழுது தமிழிசை மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றது
நடனக் கலை
இசையோடு இணைந்து நிற்பது நடனம். மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நடனம். உள்ளத்து உணர்ச்சி உடம்பில் புலப்படுதலே மெய்ப்பாடு. தொல்காப்பியத்தில் இதுபற்றிய ஓர் இயலே இருக்கின்றது. ஒன்பது வகைச் சுவைகளையும் கைகால் அசைவுகளாலும் முகத்தோற்றத்தாலும் தெரிவிப்பதே நடனம். இக்கலைக்கு மிகுந்த விறல் (திறமை) வேண்டும். இங்ஙனம் விறல் தோன்ற நடித்தவள் விறலி எனப்பட்டாள். இவ்விறலியர் பாணரை யடுத்தே வள்ளல்களை நாடிச் சென்று நடித்துப் பரிசும் புகழும் பெற்றனர். இவர்தம் பேரழுகும் கலைத்திறனும் சங்க நூல்களில் சிறப்பாகப் பேசப்படுகின்றன. மாதவி ஆடிய நடனம் சிலப்பதிகாரம்-அரங்கேற்று காதையில் செவ்விய முறையில் பேசப்படுகின்றது. பல்லவர் காலத்து நடனக்கலையை அறிய நடனச் சிற்பங்களும் நடிகையர் ஒவியங்களும் பெருந்துணை புரிகின்றன. சித்தன்ன வாசலில் உள்ள நடிகையர் ஒவியங்கள், அக்கால நடன மாதருடைய கூந்தல் ஒப்பனை, அணிச் சிறப்பு, உடைச் சிறப்பு முதலியவற்றை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குகின்றன.
பிற்காலத்தில் பரதகாட்டிய முறையைப் பெருங் கோயில்களில் உள்ள எண்ணிறந்த சிற்பங்களைக் கொண்டு உணரலாம். தில்லையில் உள்ள சிவகாமி யம்மன் கோவிலிலும் மேலைக்கோபுர வாயிலிலும், திருவண்ணுமலைக் கோபுரவாயிலிலும் இவ்வகை நடனச் சிற்பங்கள் மிகப் பலவாகக் காண்கின்றன. இந்நடிகக் கலையை ஒரு தனிக் கூட்டத்தார் நெடுங்காலமாக வளர்த்து வந்தனர். இன்று இக்கலை பல வகுப்பாராலும் ஆவலோடு கற்கப்படுகின்றது. வாழையடி வாழையாக வந்த கூத்தியர் இனம், தேவதாசி முறை ஒழிப்பால் சீரழிந்துவிட்டது. இன்று இம்மரபைச் சேர்ந்த கூத்தியரை அரங்கிற் காணுதல் முயற் கொம்பாகிவிட்டது.
நாடகக் கலை
இசையும் நடனமும் இணைந்து ஆங்காங்கு உரை நடை நிகழவருவது நாடகம். இக்கலையும் பல நூற்றாண்டு களாக இந்நாட்டில் வளர்ந்து வந்ததேயாகும். பூம்புலியூர் நாடகம், இராசராச நாடகம், இராசராசேச்சர நாடகம் எனப் பல நாடகங்கள் சோழர்காலத்தில் நடைபெற்று வந்தன என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். சோழ மன்னர் நாடக ஆசிரியர்க்குப் பரிசும் பட்டமும் வழங்கிப் போற்றிவந்தனர். சங்க காலத்தில் நாடகம் கூத்து என்ற பெயருடன் இருந்தது; கூத்தர் நாடக மாடுவர்; கூத்தியர் நாடகமாடும் பெண்மணிகள். தஞ்சை மாவட்டத்துக் கபிஸ்தலத்தில் கூத்தாடியர் தெரு இன்றும் இருகின்றது. இக்கலை பிற்காலத்தில் - மகாராட்டிர மன்னர்கள் காலத்தில் நன்கு வளர்ச்சி பெற்றது. . சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் என்பது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல நாடகங்கள் தோன்றி நாடகக்கலையை நன்கு வளர்த்தன. இவ்விருபதாம் நூற்றாண்டில் டி. கே. எஸ். சகோதரர்களும் பிறரும் நாடகக் கலையை நலமுற வளர்த்து வருகின்றனர். இந்த ஐவகைக் கலைவாணர்க்கும் நமது உளங்கனிந்த பாராட்டு உரியதாகுக.
தொடர்புள்ள பதிவுகள்:
மா. இராசமாணிக்கம்; விக்கிப்பீடியாக் கட்டுரை
மா.இராசமாணிக்கனார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக