புதன், 21 அக்டோபர், 2020

1662. வ.சுப. மாணிக்கம் - 2

தனிப்பாடல்கள்
வ.சுப.மாணிக்கம்
===
( 1958-இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) 

இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக்கு என்றும் வரவேற்பு உண்டு. மின் விளக்கு வந்ததற்காக அகல் விளக்கு இல்லாமல் போயிற்றா? வானூர்தி வந்ததற்காக வண்டிக்கு இடம் இல்லையா? தொடர்கதைகள் ஒருபுறம் தோன்றச் சிறுகதைகளும் ஒருபுறம் தோன்றவே செய்யும். பலவுறுப்பு நாடகங்கள் இருப்ப, ஒருறுப்பு நாடகங்களும் இருக்க்வே செய்யும். தொடர்நிலைக் காப்பியங்கள் ஒப்பத் தனிப்பாடல்களுக்கும் ஒருமொழியில் இடம் உண்டு. மேலும் இலக்கியம் வளர்ந்த நெறியை நோக்கின், தனிப்பாடல்களே ஒருமொழியில் முன் தோன்றின என்பதும், இவற்றின் அடிப்படையில் தொடர்நிலைச் செய்யுள் என்னும் பெருங்காப்பியங்கள் பின் தோன்றின என்பதும் விளங்கும். எப்பெரும் புலவனும் முதலில் தனிப்பாடல் எழுதிப் பழகித்தானே பேரிலக்கியம் செய்யப் புறப்பட்டான் என்ற படிமுறையையும் எண்ணுங்கள். மொழி என்னும் கட்டிடத்துக்கு இலக்கணம் அடித்தளம் என்றால், காப்பியங்கள் துண்கள் என்றால், நாடக நூல்கள் மேன்மாடங்கள் என்றால், நாடோடிப் பாடல்கள் காற்று வரும் காலதர்கள் என்றால், தனிப் பாடல்கள் படிக்கட்டுகள் என்று சொல்லலாம். -
தனிப்பாடல் என்பது யாது? நடந்த ஒரு தனி நிகழ்ச்சியை அல்லது மனத்துத் தோன்றிய ஒரு தனிக் கருத்தைப் பற்றிப் பாடுதல்.தனிப்பாடல்கள் கற்பனை குறைந்தன;ஆனால் கவர்ச்சி மிகுந்தன. மறைவு இல்லாதவை; ஆனால் உண்மை தழுவியவை. உறுதி தளர்ந்தவை; ஆனால் உணர்ச்சி செறிந்தவை. ஆதலின் இப்பாடல்கள் மக்கள் மனத்துப் பதிந்து பேச்சோடு பேச்சாகக் கலந்து விடுகின்றன. செந்தமிழும் நாப்பழக்கம். கொடையும் பிறவிக்குணம், கற்றது கைம்மண்ணளவு, பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி, மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும் என்பன போலும் பல தனிப்பாடற் பகுதிகள் மக்கள் பேச்சுக்கிடையில் வழங்குவதக் கேட்கின்றோம்.
இடைக்காலத் தமிழ்ப்புலவர்கள் நிகண்டுகளை வரப்பண்ணிச் சொல்வளம் மிக்க செல்வர்களாக விளங்கினர். பல செல்வர்கள் செல்வத்தையே பொருளெனக் கருதி எண்ணி இருப்புப் பார்த்து மகிழ்வதுபோல, இந்தச் சொற்செல்வர்களும் சொற்களையே புலமையெனக் கொண்டு யாப்பு நயம் பாடி மகிழ்ந்தனர். எவ்வெழுத்திலும் பாட்டுத் தொடங்குவோம்; எவ்வெழுத்திலும் பாட்டை முடிப்போம்; எதிரி வியக்கும்படி பாட்டுக் கட்டமுடியும் என்று செய்யுட் பந்தயத்தில் ஈடுபட்டார்கள். உடலைப் பரத நடிகை பொருளுக்குத் தக வளைப்பது போலத் தமிழ் மகளை இப்புலவர்கள் தாம் விரும்பிய யாப்புக்குத்தக வளைத்தனர்.
சிவப்பிரகாசர்
துறைமங்கலம் சிவப்பிரகாசர் முந்நூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். கற்பனைக் கருவூலம் என்று பெயர் பெற்றவர். திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், நால்வர் நாண்மணிமாலை முதலாய பல நூல்களின் ஆசிரியர். தந்தையை இளம்பருவத்திலேயே இழந்த இவர் தம்முயற்சியால் கல்விப் புலமை எய்தினார்; இயற்றமிழை நன்கு கற்க விரும்பித் தருமபுர ஆதீனத்தை அடைந்தார்; வெள்ளியம்பலவாணர் என்னும் ஆசிரியரை அணுகினார். அம்பலவாணர் சிவப்பிரகாசரின் சொற்பயிற்சியையும் பாடல் இயற்றும் யாப்பும் பயிற்சியையும் அறிய விரும்பினார். மேடைமீது ஏறியவுடன் சொற்பொழிவாற்றும் உடனடிப் பேச்சுப் போட்டியை நாம் இன்று நடத்துவதுபோல்,உடனடிப் பாட்டுத்தேர்வொன்றைச் சிவப்பிரகாசருக்கு ஆசிரியர் அன்று நடத்தினார். “ஒரு பாட்டை ‘கு’ என்று தொடங்கி 'கு' என்று முடி மேலும், 'ஊருடையான்’ என்ற தொடரைப் பாட்டுக்கிடையில் வை” என்று ஒரு கேள்வி விடுத்தார். கேள்விக்குச் சிவப்பிரகாசர் உடனே இயற்றிய பாட்டானது,
குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழல்
முடக்கோடு முன்னம் அணிவார்க்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்.
ஊருடையான் என்னும் உலகு.

என்பதாம். குடக்கு எனத் தொடங்கி உலகு என முடிதலால் முடிதலும் இறுதியும் ‘கு’க்கள் வருதல் காண்க. ஊருடையான் என்று ஆசான் கொடுத்த ஒரு தொடரை ஊர் உடைஆன் எனப் பிரிவு செய்துகொண்டு சிவனுக்கு ஊராவது தில்லை, உடையாவது புலித்தோல், ஏறும் ஊர்தியாவதுகாளை என்று பொருளமைத்து இளமையிலேயே தம் மதி நுட்பத்தை வெளிப்படுத்தினார் சிவப்பிரகாசர்,
யாப்புவிளையாட்டு
காய் என்று எடுத்து இலை என முடித்தல், கொட்டைப் பாக்கு என்று எடுத்துக் களிப்பாக்கு என முடித்தல், கரி என்று எடுத்து உமி என முடித்தல், ஐந்து 'டு’க்கள் வரத் தொடுத்தல் என்றவாறு புலவர்கள் பாடல்கட்டி விளையாடுகிறார்கள். இன்னவிளையாட்டில் ஒட்டக்கூத்தர்கூட ஒரு சமயம் தோற்றுப்போனார்."மதி அல்லது பிறை என்றசொல் ஒரடிக்குள் மூன்றிடத்து வரப் பாடுக என்று ஒளவை கொடுத்த வினாவுக்கு, 'பிள்ளை மதிகண்டு எம்பேதை பெரிய மதியும் இழந்தாளே” எனப்பிள்ளைமதி பெரியமதி என்று இரண்டு மதிகள் வரவே ஒட்டக்கூத்தரால் பாடமுடிந்தது. “ஒட்டா ஒரு மதி கெட்டாய்” என்று ஒளவை இகழ்ந்து, புகழேந்திப் புலவரை நோக்கினாள். வெங்கட்பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே எனப் பிறைச் சொல் மூன்று ஒரடிக்குள் வருமாறு பாடிப் புகழேந்தியார் வெற்றி பெற்றார் என அறிகிறோம்.
அஞ்சற்றலைகள் தொகுப்பது, நிழற்படம் எடுப்பது, ஒவியம் வரைவது இன்று பலர்க்குப் பொழுது போக்காக இருத்தல் போல, செய்யுள் இயற்றல் என்பது பண்டப் புலவர்க்கு ஒரு பொழுது போக்காகும்.
இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும்
அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ
என்று அளக்கின்றார் காளமேகம்.
மூச்சு விடுமுன்னே முந்நூறும் நானூறும்
ஆச்சென்றால் ஆயிரம்பாட் டாகாதோ
என்று விரிக்கின்றார் அதிமதுரக் கவிராயர்.
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் எந்தன் உளம்
என எதனைப் பெறவும் ஒரு பாட்டு என்று எளிய பண்ட மாற்றாக மதிக்கிறார் ஒளவை. ஒருவர் முன்னிரண்டடிகளைப் பாடுவது; இன்னொருவர் பின்னிரண்டடிகளை முடிப்பது என்பது புலவர் கண்ட ஒரு யாப்பு விளையாட்டு. இரட்டையருள் குருடர் இரண்டடி பாடிநிறுத்திக் கொள்வார்; பிற்பகுதியை முடவர் பாடி முடித்து விடுவார். இஃது ஒருநிலை. வேறு சில பாடல்கள் உள. ஒருவர் முற்பகுதியைப் பாட அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொருவர் அவர் கருத்தை மாற்றுவதற்காக மிக விரைந்து பிற்பகுதியைப் பாடிவிடுவார். எவ்வளவு யாப்புப் பயிற்சியிருந்தால் இங்ஙனம் முந்திக் கொண்டு பாடவரும் என்று எண்ணிப்பாருங்கள்!
சோழன்புலமை
ஒட்டக்கூத்தர் குலாத்துங்கசோழன் அவைப்புலவர் ஆவர். இவர்சோழன் அகவாழ்க்கையிலும் அரசியல்வாழ்க்கையிலும் நெருங்கிய தொடர்புகொண்டவர். சோழன் ஆட்சிச் சிறப்பை நேரில் அறிந்தவர். இவன் ஆட்சியில் ஆராய்ச்சிமணி அசையவில்லை:இவன்குடையோவ்பரந்து விரிந்தது என்று பலர் சூழ்ந்த அவை முன் பாராட்ட விரும்பிய ஒட்டக்கூத்தர்,
- ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெலாம்
நீடுங் குடையைத் தரித்த பிரான்இந்த நீணிலத்தில்
என்று பாடி வருவதைக் கேட்டான் குலோத்துங்கன். தன் செவ்விய ஆட்சிக்கு ஒட்டக்கூத்தரே துணை என்பதை உட்கொண்டான். மேலும் தன் ஆசான் என்பதையும் நினைந்தான். ஒட்டக்கூத்தர்பால் தான் கொண்டுள்ள நன்மதிப்பையும் பெரும் பணிவையும் காட்ட இதுவே காலம் என்று துணிந்தான். தான் அரசன் என்பதைச் சிறிதும் எண்ணாது புலவருள் தலையாய ஒட்டக்கூத்தரின் அடியவன், மாணாக்கன் என்று சொல்லிக் கொள்ளத் துடித்தான் குலோத்துங்கன். புலவர் மேலிரண்டடிகளை முடிப்பதற்கு முந்தி,
பாடும் புலவர் புகழொட்டக் கூத்தர் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழனென் றேஎன்னைச் சொல்லுவரே
என்று செய்யுளை முடித்துவிட்டான். இதனால்இடைக் காலத்துத் தமிழ்ப் புலவன் பெற்றிருந்த அரசியற் செல்வாக்கு ஒருபுறம் விளங்க, இடைக் காலத் தமிழ் வேந்தன் பெற்றிருந்த தமிழ் வன்மையும் விளங்கக் காண்கின்றோம்.
சொற்சிலம்பம்
தனிப்பாடற் புலவர்கள், நமக்கு உரைநடை போல எண்ணிப்பாராதே செய்யுள் செய்வதை ஒருபொழுது போக்காகக் கொண்டனர் என்று கண்டோம். வைக்கோலுக்கும் யானைக்கும் பொருத்தம், மீனுக்கும் பேனுக்கும் பொருத்தம், திருமாலுக்கும் கடிகாரத்துக்கும் பொருத்தம் என்ற முறையில் பொருத்தப் பாடல்கள் செய்வதையும் ஒர் இன்தொழிலாகக் கருதினார்கள்.
சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை
ஐங்கரர்க்கு மாறுதலைய யானதே!
என்ற வகையில் புணர்ச்சி விதியுள் புகுந்து ஒசைநயம் காட்டுவதையும் ஒருவிளையாட்டு வினையாகப் பயின்றார்கள். வழக்கில் மக்கள் அடிக்கடி பேசும் சிறப்பில்லாத சொற்களுக்குக்கூட, சுவைததும்பும் பாட்டு வடிவம் கொடுக்குமுடியும் என்று நிகரற்ற தம்மொழித்திறத்தை மிகத்தெளிவாகக் காண்பித்தார்கள். தனிப்பாடல்கள் இலக்கியவுலகில் உரைநடையை ஒக்கும். ஆதலால் காப்பியங்களில் தள்ளுபடியாகும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தனிப்பாடலில் நல்வரவு உண்டு. ஆத்தாள், அக்காள், கண்ணாலவோலை, சும்மா, வண்ணான், அம்பட்டன், தேங்குழல், அப்பம்,தோசை முதலான சொற்களைக் கொண்டு எத்துணையோ தனிப்பாடல்கள் இனிமை தருகின்றன.
தனிப்பாடல் செய்தாருள் சொக்கநாதப் புலவரும் ஒருவர் இவர் முருகனை நோக்கி, கொடிய இம்மானிடவுடம்பு தவஞ்செய்து இளைத்துக்காய்ந்த சுக்குப்போல் ஆகவேண்டும்; அதன்பின் சுடுகாட்டில் வெந்தால் என்ன கேடு? இவ்வுடலை மீண்டும் கொள்ள யாரும். விரும்பமாட்டார்கள்; சிறந்த வீட்டின்பத்தை நீர் அருளுக நான் இக்காயத்தை என்றும் தேடமாட்டேன்’ என்று வேண்டுகின்றார். திருவேரகத்து எழுந்தருளியிருக்கும் முருகனுக்குச் செட்டி என்பது பெயர். செட்டி என்றால் வணிகனையும் குறிக்குமன்றோ! இவ்வணிகச் சொல்லை.அடிப்படியாக வைத்துச் சொக்க நாதப்புலவர் ஒர். உருவகம் புனைகின்றார். அவர் உருவக வெண்பாவில் வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற மளிகைச் சொற்கள் நயமான கவியாக ஆவதைக் கேளுங்கள்:
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் கமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே.
ஒரு மொழியின் இலக்கியம் இடையறாது வளர்கின்றது என்பதற்கும், ஒரு மொழிமக்கள் நீண்ட கலையுணர்ச்சி யுடையவர்கள் என்பதற்கும் காலந்தோறும் எழுகின்ற தனிப்பாடல்களே கண்ணாடியாகும். கற்றார் எல்லாரும் காப்பியங்கள் செய்துவிட முடியாது. ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்பொழுது தனிப்பாடல்கள் பாடி வாழ்க்கையில் அறிவின்பம் நுகரலாம். இவ்வின்பமும் சிறந்த இலக்கிய இன்பமேயாகும்

தொடர்புள்ள பதிவுகள்:


5 கருத்துகள்:

தமிழ்ப்பூ சொன்னது…

No reference of Kalamegam.I do wonder.

Pas S. Pasupathy சொன்னது…

இருக்கிறதே?
>>>இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும்
அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ
என்று அளக்கின்றார் காளமேகம்.>>>

alagan சொன்னது…

பதிவுக்கு நன்றி...செம்மல் மாணிக்கனரின் வானொலி ஒலிப்பதிவு எங்காவது கிடைக்குமா...

Pas S. Pasupathy சொன்னது…

அவருடைய குடும்பத்தாரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து விசாரிக்கவும்.

Pas S. Pasupathy சொன்னது…

http://drvspmanickam.blogspot.com/ - அவருடைய அறக்கட்டளையிடம் விசாரிக்கவும்.