சீதா பிராட்டியின் கடிதங்கள்
குமுதினி
குமுதினி ( ரங்கநாயகி) யின் இந்தக் கதை விகடன் தீபாவளி மலர் ஒன்றில் வந்தது என்பது என் நினைவு.
=====
மிதிலாதிபதியான ஜனகரின் பட்டமகிஷிக்கு அயோத்தியிலிருந்து சீதாதேவி எழுதி விடுத்த கடிதம்.
அம்மாவுக்கு அநேக தண்டனிட்டு அடியாள் சீதை வணக்கத்துடன் விக்ஞாபித்துக் கொள்வது.. உபயகுசலோபரி.. நீ அனுப்பின ஆட்களும் ரதமும் வந்தன. தீபாவளிக்கு எங்கள் எல்லோரையும் மிதிலைக்கு வரவேண்டுமென்று நீ ஆக்ஞாபித்ததாகத் தூதுவன் கூறினான். இங்கே நிகழ்வதெல்லாம் அறிந்தால் அவ்விதம் நாங்கள் வருவது எவ்வளவு சிரமமான செய்கையென்று உணர்வாய். மாமனாரவர்கள் சதாகாலமும் ‘மாண்டவியின் மாமியார் கைகேயி தேவி’யின் கிருகத்திலேயே இருக்கிறார். என் மாமியாருக்கு ‘அசாத்தியக் கோபம்’. அதை வெளியே காண்பிக்காமல் பூஜையிலும் பிராம்மண போஜனத்திலும் இறங்கியிருக்கிறார். விடியற்காலயிலேயே எழுந்து ஸ்நாநம் செய்துவிட்டு அவருக்கு உதவி செய்யவேண்டியதாக இருக்கிறது. நாள் முழுதும் வேலை. சற்றும் ஓய்வு கிடையாது.
கலியாணமாகி வந்ததுமே மைத்துனர் பரதரை அவர் மாமா வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். சத்ருக்கனர் விஷயம் தெரிந்ததுதான், அண்ணாவின் பின் ‘வால்’. அவர்கள் திரும்பிவந்து, நாங்கள் எல்லோரும் அனுமதி பெற்றுக் கொண்டு மிதிலைக்குப் புறப்பட்டால் தீபாவளிக்கு வந்து சேர முடியுமோ என்னவோ தெரியாது. சந்தேகமாயிருக்கிறது.
எல்லாம் யோசித்ததில் தீபாவளியை அயோத்தியிலேயே கழிப்பது உத்தமம் என்று உன் மாப்பிள்ளை தீர்மானித்திருக்கிறார். இதைப் பற்றி மாமனாரவர்களிடமிருந்து அப்பாவுக்கு ஒரு கடிதம் வரும்.
எங்களுக்குப் பீதாம்பரங்களை இங்கே அனுப்பு. உன் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பட்டுதான் பிடிக்கிறது. ஆகையால் அதையே வாங்கி அனுப்பவும். இங்கே எங்கள் மாப்பிள்ளை ருச்யசிருங்கருக்குத் தீபாவளிக்காக ஒரு புதுமாதிரி சுவர்ண கங்கணம் செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. அந்த மாதிரி உன் பெரிய மாப்பிள்ளைக்கு ஒன்று அனுப்பு. இதைக் கொண்டு வரும் ஆட்களுடன் அவ்வித வேலை தெரிந்த தட்டான் ஒருவனைக் கூட்டியனுப்பியிருக்கிறேன். இந்த விஷயம் ‘நான் எழுதினதாகத் தெரியவேண்டாம்’.
எனக்கு சிந்தூர வர்ணப் புடவை தயாரித்திருப்பதாக எழுதியிருக்கிறாய். இங்கே அயோத்தியில் எல்லாரும் ரொம்ப நாகரீகமாக துணி உடுத்துகிறார்கள். யவன தேசத்து வர்த்தகர்கள் கொண்டுவரும் பீதாம்பரங்களாம். கரை சின்னதாகப் போட்டு மிக நேர்த்தியாயிருக்கின்றன. நாத்தனார் சாந்தை நீலாம்பர வர்ணத்தில் ஒன்று உடுத்தியிருந்தாள். எனக்கு அது மாதிரி வேண்டுமென்று விருப்பமாயிருக்கிறது. நீ எனக்குக் கலியாணத்தின்போது வாங்கிக் கொடுத்த புடவைகளுக்கெல்லாம் கரை அதிக அகலம். அவைகளை இப்போது எனக்கு உடுத்துவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. எல்லாரும் பரிகாசம் செய்கிறார்கள். அந்த மாதிரி வாங்கி அனுப்பாதே. பூஜ்யரான தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.
விநயத்துடன் இங்ஙனம்
சீதை
2
அம்மாவிற்கு விக்ஞாபனம். க்ஷேமம். உனக்குக் கடிதம் எழுதிய பிறகு நாத்தனார் சாந்தையைப் பார்த்தேன். நீலாம்பர வர்ணம் ஸ்திரமாக இருப்பதில்லையாம். ‘வெளுத்து’ விடுகிறதாம். ஆகையால் எனக்கு அந்த வர்ணத்தில் பீதாம்பரம் வேண்டாம். முதலில் உத்தேசித்தவிதம் சிந்தூரவர்ணப் புடவையையே அனுப்பு. அல்லது தாம்பர வர்ணத்தில் ‘வெளுக்காமலிருக்கும்’ என்ற உத்தரவாதத்துடன் பீதாம்பரம் அகப்பட்டால் வாங்கியனுப்பவும். ஒருமுறை உடுத்திய வர்ணத்தையே திரும்பத் திரும்ப உடுத்துவதென்றால் அலுப்பாயிருக்கிறது. உன் சௌகரியப்படி செய். நான் தொந்திரவு கொடுக்கவிரும்பவில்லை. நீலாம்பர வர்ணம் மட்டும் வாங்காதே..
அடியாள் சீதை
3
அம்மாவிற்கு விக்ஞாபனம். க்ஷேமம். திடீரென்று மாமனாரவர்களுக்கு யோசனை தோன்றியிருக்கிறது. உன் மாப்பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போவதாகச் சொல்கிறார். பந்தலில் உங்கள் ஆசீர்வாதத்துடன் புடவை வைக்கவேண்டுமே.. எந்த மாதிரி அனுப்புகிறாய்? நவமல்லி வர்ணம் நன்றாயிருக்குமா. பந்தலில் வைப்பதாகையால் நன்றாயிருக்கவேண்டும். ‘மான் புள்ளிகள்’ மாதிரி வேலைப்பாடு செய்த புடவைகள் சட்டென்று அகப்படுமா? அல்லது முன்னால் சொல்லிப் போடச் சொன்னால் மட்டும் கிடைக்குமா? குயில் வர்ணம் மயில் வர்ணமெல்லாம் மாமியாரவர்களுக்குப் பிடிக்கிறதில்லை. வ்யாக்ரவர்ணம் வேஷம் போட்டாற் போலிருக்கும். என்ன செய்யப் போகிறாயோ, எனக்குத் தெரியவில்லை. ‘இந்தப் புடவைகளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து என் மூளை கலக்கமடைந்துவிட்டது’. ஒரு ‘தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை’. உசிதப்படி செய்.
உன் பிரிய சீதை.
குறிப்பு:
அல்லது தீபாவளிப் புடவை, பட்டாபிஷேகப் புடவை இரண்டையும் சேர்த்து ஒரு பெரிய புடவையாக வாங்கி அனுப்பு.
4
அம்மாவிற்கு,
ஒரு புடவையும் அனுப்பவேண்டாம். ‘எல்லாம் தீர்ந்துவிட்டது’. நாங்கள் வனவாசம் செய்யப் போகிறோம். பரதருக்குத்தான் பட்டாபிஷேகம். இதைக் கொண்டு வருவபவன் எல்லா விவரமும் சொல்வான். எனக்கு ஒரே ஒரு ‘மரவுரி’தான் இருக்கிறது. காட்டில் மழையில் நனைந்துவிட்டால் கட்டிக் கொள்ள வேறு கிடையாது. ஆகையால் முடிந்தால் ஒரு மரவுரி அனுப்பு. சௌகரியப்பட்டால் வெத்தலும் அப்பளமும் அனுப்பு. உன் அப்பளந்தான் நன்றாயிருக்கிறதென்று மாப்பிள்ளை சொன்னார். நாங்கள் சித்ரகூடத்திற்குப் போகிறோம். இது ஒருவருக்கும் தெரியவேண்டாம். அவசரம்.
சீதை
குறிப்பு:
இனி புடவைகள் வர்ணத்தைப் பற்றி சிந்திக்கவேண்டாம். எனக்கு மனதில் அதிக நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. பெண்களெல்லாருமே வனவாசத்துக்குப் போனால் எவ்வளவு நலம் என்று தோன்றுகிறது. வாழ்க்கையின் கவலையில் பாதி குறைந்துவிடும்.
சீதை
====
[ நன்றி: திவாகர் வெங்கடராமன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக