வெள்ளி, 15 ஜூன், 2012

‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்

'தமிழ்ப் பாட்டி’ 
‘கர்நாடகம் ‘ 



தமிழில் முதல் பேசும் படம்: காளிதாஸ்.  அந்தத் திரைப்படம் அக்டோபர் 31, 1931 -இல் சென்னையில் வெளியானது என்று தெரிகிறது.

கல்கி’ கிருஷ்ணமூர்த்தி நவம்பர் 16, 1931 ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘காளிதாஸ்’ படத்தைப் பற்றி, “தமிழ்ப் பாட்டி’ என்ற தலைப்பிலும், ‘கர்நாடகம்’ என்ற பெயரிலும் ஒரு விமர்சனம் எழுதினார். அது இதோ!:
======
பூர்வ ஜன்மத்தில் என்ன பாவஞ்செய்தேனோ தெரியவில்லை; கொஞ்ச நாளாய் அடிக்கடி சென்னைப் பட்டணம் போகவேண்டி வருகிறது. இந்தத் தடவை சென்னைக்குச் சென்றபோது, நகரமெல்லாம் ஒரே அல்லோல கல்லோலமாயிருந்தது. இடை விடாத மழை, சாக்கடைத் தேக்கம், கும்பி நாற்றம், மோட்டார் சேறு, தீபாவளி பண்டிகை, காலணா பத்திரிகை முதலியவைகளோடல்லாமல், புதிதாக 'தமிழ் டாக்கி' வந்திருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அறிந்தேன்.
ஸ்ரீமதி டி.பி.ராஜலக்ஷ்மி





ஸ்ரீமதி டி.பி.ராஜலக்ஷ்மி அம்மாளை இது வரையில் நாடக மேடையில் பார்த்திருக்கிறீர்கள். இப்போது டாக்கியில் வந்து பாருங்கள்' என்று எங்கே பார்த்தாலும் விளம்பரங்கள் காணப்பட்டன. உண்மையென்னவென்றால், நாடகமேடையிலாகட்டும் நடனசாலையிலாகட்டும், அந்த அம்மாளை அதற்கு முன் நான் பார்த்தது கிடையாது. (சொல்ல வெட்கமாய் இருக்கிறது; அவர் பெயரைக் கேள்விப்பட்டது கூட இல்லை. இதனால் அந்த அம்மாளுக்கு ஒருவிதக் குறைவுமில்லை என்பதை அறிவேன். மகாத்மா காந்தி, ’சார்லி சாப்ளின்’ என்பவரைப் பற்றித் தாம் கேள்விப்பட்டதே கிடையாது என்றார். இதனால் காந்திக்குக் குறைவே தவிர, சாப்ளினுக்குக் குறைவுண்டா? ஆகையால் வெட்கப்பட வேண்டியது நான்தான்.)







'இதுவரையில்தான் பார்க்கவில்லை; இப்பொழுதாவது பார்த்து விடலாம்' என்று தீர்மானித்தேன். ஒரு நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு போனேன். பார்த்தேன்; கண்ணில் ஜலம் வரும் வரை பார்த்தேன். திரையில் விழுந்த சலன ஒளி, வைர நகைகளின் ஜொலிப்பு, தூய வெள்ளைப் பற்களின் பளபளப்பு ஆகியவற்றினால் கண் கூசும் வரையில் பார்த்து பிரமித்து நின்றேன்.





ஓகோகோ! மறந்து போனேனோ? 'டாக்கி' என்றாலே வெளியூர் நேயர்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 'டாக்கி' என்பது ஆங்கில வார்த்தை. 'டாக்' என்றால் பேச்சு. பேசும் சினிமா படக் காட்சிகளுக்கு 'டாக்கி' என்று சொல்கிறார்கள். 'தமிழ் டாக்கி' என்று கலப்பு மொழி பேசுவதற்கு என்னுடைய தமிழ் அபிமானம் இடங்கொடுக்கவில்லை. எனவே, 'தமிழ்ப் பேச்சி' என்று பெயர் கொடுக்கலாமென்று முதலில் தீர்மானித்தேன். ஆனால், நான் பார்த்த 'பேச்சி' உண்மையில் 'பாட்டி'யாயிருந்தது. அதாவது, தமிழ்ப் பேச்சு அதில் கிடையாது. விசாரித்ததில், அது தெலுங்கு பாஷை என்று அறிந்தேன். முதலிலும் நடுவிலும் கடைசியிலும் சில தமிழ்ப் பாட்டுக்கள் பாடப் பெற்றன. ஆகையால் நான் பார்த்து, கேட்டு, அனுபவித்த காலட்சேபத்திற்கு, 'தமிழ்ப் பாட்டி' என்று பெயர் கொடுப்பதே பொருத்தமென்று தீர்மானித்தேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிடில் 'தெலுங்குப் பேத்தி' என்று வைத்துக்கொள்ளுங்கள்.





'முன்னுறை' என்று பெரிய கொட்டை எழுத்தில் 'தமிழ்ப் பாட்டி' ஆரம்பமாயிற்று. தமிழ்க் காதல் கொண்ட என் நண்பரின் நெஞ்சில் அந்த ''கரம் ஈட்டியால் குத்துவது போலிருந்தது. ''ஐயையோ! எத்தனையோ அவசரச் சட்டங்கள் போடுகிறார்களே? தமிழ்க் கொலையைத் தடுப்பதற்கு ஒரு சட்டம் போட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?'' என்றார். அத்தகைய சட்டம் பிறந்தால், தமிழ்நாட்டில் உள்ள எத்தனை பத்திரிகாசிரியர்கள், பாடகர்கள் முதலியோருக்குப் பிழைப்புப் போய்விடுமென்று எண்ணியபோது, பெரிய 'காபரா' அடைந்தேன். 'அது போகட்டும். இது என்ன முன்னுரை? எதற்கு முன்னுரை? பார்ப்போம்' என்றேன். அந்த விஷயம் இந்த நிமிஷம் வரை எங்களுக்கு விளங்கவே இல்லை.


பிறகு, ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி அம்மாள் மேடைக்கு வந்து, அதாவது திரையில் வந்து, பாடத் தொடங்கினார்கள். அம்மாளின் பற்களைப் பற்றி முன்னம் புகழ்ந்து சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்களுடைய தொண்டையைப் பற்றி அப்படிச் சொல்வதற்கில்லை. கூடிய சீக்கிரம் அவர்கள் நல்ல டாக்ட ராய்ப் பார்த்துத் தொண்டையை ஆபரேஷன் செய்து குரலைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றிற்று. ஆனால் பக்கத்திலிருந்த நண்பர், ''இல்லை, இல்லை! அவர் குரல் வெகு நன்றாயிருக்கும். டாக்கி இயந்திரத்தின் தப்பு'' என்றார். இயந்திரத்தின் மீது எப்போது பழி விழுந்ததோ, அதற்கு மேல் ஒன்றும் பேசுவதற்கில்லை. இயந்திரத்துக்கு ஆபரேஷன் செய்யமுடியாதல்லவா?


ஸ்ரீமதி ஐந்தாறு தடவை மறைந்து மறைந்து புதிய புதிய உடைகளுடன் வந்து பாடினார். அதில் தேசியப் பாட்டு ஒன்று. 'கை ராட்டினமே காந்தி கை பாணம்' என்று ஆரம்பிப்பது. இந்தப் பாட்டைப் பாடியபோது சபையோர் ஆனந்த பரவசமாகிவிட் டார்களென்று சொல்லலாம். அதிலும், அம்மாள் பாடிக்கொண்டே இராட்டை சுற்றுவது போல் வெறுங் கையைச் சுற்றிக்காட்டியபோது, சபை யோரின் சந்தோஷ ஆரவாரத்தைச் சொல்லமுடியாது. 'இராட்டை சுற்றுவது இவ்வளவு சுலபமா?' என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.


கதராடையின் பெருமையை அம்மாள் உதாரண ரூபமாகவும் விளக்கியது வியக்கத்தக்கதாயிருந்தது. சுமார் இருபது முறை அம்மாள் வெவ்வேறு விதவிதமான வர்ண முள்ள பட்டு, சரிகை உடைகளை அணிந்து வந்தார். தேசியப் பாட்டு பாடும்போது மட்டும் வெள்ளைச் சேலை தரித்திருந்தார். ''பார்த்தீர்களா? இது கதர்'' என்றார் நண்பர். ''கதர் என்பதாக பாவனை'' என்றார் பக்கத்தில் இருந்தவர். சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் டாக்கியில் நடிக்கப் போகலாம் என்று எனக்குத் தோன்றிற்று. பிரசங்கத்துக்கு வரும் போது மட்டும் கதர் அணிந்து வருவோருக்கு இப்போது தேசிய மேடையில் இடமில்லாமல் போய்விட்டதல்லவா? அவர்கள் ஏன் 'டாக்கி' திரைக்கு போகக்கூடாது?


ஆமாம்! டாக்கியில் அதுதான் விசேஷம். அங்கே நடிகர்தான் சர்வாதிகாரி. சபையோர் பல்லை இளித்துக்கொண்டு உட்கார்ந் திருக்க வேண்டியதுதான். நாடக மேடையில் வரும் நடிகரின் பாட்டோ கூத்தோ சபையோருக் குப் பிடியாவிட்டால், ''உள்ளே போ! உள்ளே போ!'' என்று மரியாதையாக எடுத்துச் சொல்லலாம். டாக்கியில் இந்த ஜம்பமெல்லாம் பலியாது. ஒரு பாட்டுப் பாட ஆரம்பித்துவிட்டால், அதை நடுவில் நிறுத்த உங்கள் முப்பாட் டன் வந்தாலும் முடியாது. நீங்கள் வேண்டுமானால் காதைப் பொத்திக் கொள்ளலாம்.


'ஒன்ஸ்மோர்' விஷயமும் இப்படித்தான். நீங்கள் என்னதான் கரடியாய்க் கத்தினாலும் உபயோகமில்லை. உதாரணமாக, ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி அம்மாள் அன்ன நடை போட்டு அற்புத நடனம் செய்தபோது 'ஒன்ஸ்மோர்' சத்தம் என்னையறியாமல் அடி வயிற்றிலிருந்து தொண்டை வரை வந்துவிட்டது. நல்லவேளையாக, அவ்விடத்திலேயே அதை இறுக்கிப் பிடித்து அமுக்கிவிட்டேன். எனக்குப் பின்னால் யாரோ ஓர் அசல் பட்டிக்காட்டுப் பேர்வழி உட்கார்ந்திருந்தார். அவர், ''ஆஹா! எங்கள் ஊரில் பெண்கள் வரட்டி தட்டுவதற்காகச் சாணம் மிதிப்பார்கள். எவ்வளவோ நன்றாயிருக் கும். அதைவிட அல்லவா இது அழகாயிருக்கிறது?'' என்றார். அவருடைய ரஸிகத் தன்மை, பட்டணங்களில் வசிக்கும் படித்த மனிதர்கள் பலருக்கு இல்லையே என்று எண்ணிப் பரிதபித்தேன்.


பாட்டு, தேசியப் பாட்டு, அன்பிற்கினிய பாட்டு, (இதற்கு என்ன அர்த்தமென்று சொல்வோ ருக்குக் காலணா பத்திரிகை ஒன்று இனாம்.) நடனம் முதலி யவை முடிந்த பிறகு, நாடகம் ஆரம்பமாயிற்று. கல்வியில் நமக்கு மிஞ்சியவர் இல்லை என்று கர்வங் கொண்டிருந்த ஒரு ராஜ கன்னிகைக்கு, நுனிமரத்திலிருந்து அடிமரத்தை வெட்டும் ஓர் இடைப் பையனைக் கலியாணம் செய்துவைக்கிறார்கள். மகா பண்டிதன் என்றெண்ணிக் கலியாணம் செய்துகொண்ட கணவன் உண்மையில் மகா மூட சிகாமணியென்பதைப் படுக்கை அறையில் மணமகள் காண்கிறாள். பிறகு, காளி மாதாவைத் தோத்திரம் செய்கிறாள். மாதாவின் அருளால் உண்மையிலேயே அம் மடையன் மகா வித்வானாகி விடுகிறான்.


இடைப் பையன் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டும் காட்சி நன்றாயிருந்தது. ஆனால், வெட்டிய கிளை கீழே விழும் காட்சியைக் காட்டாமல் ஏமாற்றிவிட்டார்கள். வெள்ளைக் காரனுடைய சினிமாவாயிருந்தால் இப்படிச் செய்வார்களா? ஐந்து மைல் உயரத்திலிருந்து ஆகாய விமானம் எரிந்து விழும் காட்சியைக்கூட அல்லவா காட்டுகிறார்கள்? இதுதான் போகட்டுமென்றால், இடைப் பையன் வெட்டிய கிளை ஒரு பெரிய மண்டப தூண் அளவு பெரிதாயிருந்தது. பையன் தரையிலும், கிளை அவன் மேலும் கிடக்கும் அடுத்த காட்சியில், அந்தக் கிளை சுண்டு விரல் பருமனாய் மாறிவிட்டது.


ஸ்ரீமன் கங்காளராவ் எம்.ஏ. அவர்கள் இடைப் பையன் வேஷத்திற்குத் தகுதியுள்ளவராகவே தோன்றினார். அவருடைய முகமானது சாக்ஷாத் மூட சிகாமணித் தோற்றமளித்தது. காளிமாதா பிரசந்நமாகி இடைப் பையன் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதிய பிறகு, அவன் மகா பண்டிதனாகி விடுகிறானல்லவா? பண்டிதனானதும் முகத் தோற்றம் மாறுதலடைய வேண்டுமே? அதுதானில்லை. அதே அசட்டுச் சிரிப்பு; அதே..!


கடைசியாக நடந்த குறத்தி நடனத்தைப் பற்றி ஒரு வார்த்தை! அடுத்த தடவை, குறவன் - குறத்தி நடனம் செய்ய நேர்ந்தால், அசல் குறவன் ஒருவனையே சுலபமாய் அமர்த்திக் கொள்ளலாமென்று தெரிவித்துக்கொள்கிறேன். 'டாக்கி'யில் குறவனாய் வந்தவன் உண்மையில் குறவனாகவே காணப் படவில்லை. பாவம்! சோற்றுக்கில்லாத குறவர்களுக்கு ஒரு நாளும் அவ்வளவு பெரிய தொந்தி, தொப்பை இராது. சாதாரணமாய் பட்டணங்களில் பிராமணார்த்தம் சாப்பிடும் சாஸ்திரிகளுக்கும், மிட்டாய்க் கடை வைத்திருக்கும் சேட்டுகளுக்கும், லேவாதேவி செய்யும் செட்டியார்களுக்கும்தான் அவ்வளவு பெரிய தொந்தி இருக்கும். குறவர்கள் ஒல்லியாயும், கட்டமைந்த சரீரமுடையவர்களாயும் இருப்பார்கள். இதைக் கவனிக்கும்படி கேட்டுக்கொண்டு, இந்த அரும் பெரும் மதிப்புரையை முடிக்கின்றேன்.
======


பின்குறிப்பு 1:

’கர்நாடகம்’ என்ற புனைபெயரை முதன்முதலில் இந்தக் காளிதாஸ் திரைப்பட விமர்சனத்தில் தான் பயன்படுத்தினார் கல்கி. பிறகு, தன் ‘ஆடல் பாடல்’ பத்தியையும் அதே புனை பெயரில் எழுதத் தொடங்கினார். அதனால்,  “ ‘ஆடல் பாடல்’ பகுதிக்கும் , “கர்நாடகம்” என்ற பெயருக்கும் காரணகர்த்தா டி.பி.ராஜலக்ஷ்மி என்ற அம்மாளே” என்று ஒருமுறை வேடிக்கையாக எழுதியிருக்கிறார் ‘கல்கி’

பின்குறிப்பு 2:


'காளிதாஸ்' படத்துக்கான விகடனின் விமர்சனம் குறித்து வேறொரு பத்திரிகை யில் வெளியான கருத்துக்கு, 'என்ன, எங்கே, எப்பொழுது?' பகுதியில் இடம் பெற்ற விளக்கம்...

பலே பேஷ்! 'தமிழ்ப் பாட்டி'
பலே பலே பேஷ்!
'ம்யூஸ்மென்ட் வீக்லி' என்னும் வாரப் பத்திரிகை, 'வெறுப்பான வியாசங்களைப் பிரசுரிக்கப்படாதென்று நமது சகலபாடியான ஆனந்த விகடனைக் கேட்டுக் கொள்ளுகிறோம்' என்று எழுதியிருக்கிறது. அது குறிப்பிடும் 'வெறுப்பான' வியாசம், சென்ற இதழில் வெளியான 'தமிழ்ப் பாட்டி' என்ற வியாசமாகும். 'பேரும் புகழும் வாய்ந்த நம் தமிழ்நாட்டு நடிகரை நம் சகலபாடியான ஆனந்த விகடன் என்ற மாதாந்தரப் பத்திரிகையில், 'தமிழ்ப் பாட்டி' என்னும் தலைப்பின் கீழ் கண்டித்து எழுதியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது' என்று அது எழுதுகிறது.

உண்மைதான். யாரையாவது, எதையாவது உள்ளதை உள்ளபடி சொல்லிக் கண்டித்து எழுதியதைப் படிக்க வருத்தந்தான் உண்டாகும். இது அஹிம்ஸா தர்மத்துக்கு விரோதமல்லவா?ஆகவே, விகடன் கூறுவதைக் கேளுங்கள்!


மிஸ். டி.பி.ராஜலக்ஷ்மி நடித்த 'காளிதாஸ்' என்னும் பேசும் படக்காட்சி நன்றாயிருந்தது. மிக நன்றாயிருந்தது. ரொம்ப நன்றாயிருந்தது. எவ்வளவோ நன்றாயிருந்தது! எவ்வளவு நன்றா யிருந்ததென்று சொல்லமுடியாது. அளவுக்கு மீறி நன்றாயிருந்தது. ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் சொல்ல முடியாது. மிக மிக மிக, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றாயிருந்தது. போதுமல்லவா?

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி : படைப்புகள்

கினிமா செண்ட்ரலின் கதை ( ஆங்கிலம் )

’காளிதாஸ்’ பற்றி ராண்டார் கையின் நினைவுகள் (ஆங்கிலம்)

4 கருத்துகள்:

ananth சொன்னது…

:-)))

இடையே காணும் விளம்பரத் துணுக்கொன்றில் உள்ள ‘பாதி கெஜட் காட்சிகளும்.. ’ என்பது எதைக் குறிக்கும்?

Pas S. Pasupathy சொன்னது…

It is Pathe News . ( News Reels shown along with main film) See :
https://en.wikipedia.org/wiki/Path%C3%A9_News
https://www.youtube.com/watch?v=RKX7hlqrpHU

usharaja சொன்னது…

hilarious review indeed

rajagopalan

Unknown சொன்னது…

Nandri
. Kalkiyin mudal takki vimarisanam!!!