வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சொற்களைச் சுவைப்போம் - 1: அகரம் முதல் னகரம் வரை!

அகரம் முதல் னகரம் வரை !

பசுபதி




தமிழில் ‘அ’ முதல் ‘ஔ’ வரை 12 உயிரெழுத்துகள்: ‘க்’ முதல் ‘ன்’ வரை 18 மெய்யெழுத்துகள். அதனால் ‘அ’ முதல் ‘ன்’ வரை என்றால் தமிழ் முழுதும் என்றாகி விடுகிறது அல்லவா?

இதைத் தான் திருக்குறளும் சொல்கிறதோ? ஏனென்றால், முதல் குறள் ‘அ’ வில் தொடங்குகிறது ; 1330-ஆவது குறள் ‘ன்’ என்று முடிகிறது.

’அமுதசுரபி’  இதழ் 2012 ஜூன் மாதத்தில்    ‘அ’வில் தொடங்கி ‘ன்’ இல் முடிக்க வேண்டும்  என்று ஒரு வெண்பாப் போட்டி வைத்தது .

நான் நினைத்தேன்:

முதல் இரண்டு குறள்களையே ஒரு தனிச்சொல் சேர்த்து , ஒரு நாலடி நேரிசை வெண்பாவாய் எழுதினால், அதுவே  ‘அ’ வில் தொடங்கி ‘ன்’ -இல் முடியுமே !

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - சகலமும்
கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்


’அ’ முதல் ‘ன்’ வரை என்ற கருத்தைச்  சாமர்த்தியமாய் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தியது ‘ஆனந்தபோதினி’ பத்திரிகை.  ( 1932-இல்) அங்கே வந்த இராஜு செட்டியாரின்  ஒரு நாவலின் விளம்பரத்தைப் படித்துப் பாருங்கள் ! நான் சொல்வது உங்களுக்குப் புரியும்!




உங்களுக்குப் பிடித்த ‘அ***ன்’ வார்த்தை என்ன?

எனக்குப் பிடித்த ஒரு சொல் ‘அங்குஸ்தான்’ !
 ‘க்ரியா’ வின் தற்காலத் தமிழ்அகராதியில்
இருக்கும் இந்தச் சொல்லுக்குப் பொருள்: 

( தைக்கும்போது குத்தாமல் இருக்க) விரல் நுனியில் அணியும் உலோக உறை.
ஆங்கிலத்தில் ‘திம்பிள்’ ( thimble) .
 

இந்தச் சொல் எப்படி வந்தது ? யார் முதலில் பயன்படுத்தினார்கள்? எனக்குத் தெரியாது!

[  நண்பர் பாலசுப்பிரமணியன் சொல்லுவது போல்: வடமொழிச் சொல் ‘அங்குஷ்ட’ ; தமிழ் அகராதியில் ‘அங்குட்டம்’ ( பெருவிரல்)  ]

உங்களுக்குத் தெரிந்த மிக நீண்ட ‘அ**ன்’ பெயர் என்ன?

அறவாழிஅந்தணன், அடியார்க்குநல்லான்,  அனந்தபத்மநாபன், அனந்தநாராயணன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன, அல்லவா?  இவற்றில் கடைசிப் பெயருக்குப் பின் ஒரு சுவையான  ‘கதை’ இருக்கிறது. தமிழ் நாவல் முன்னோடி அ.மாதவய்யாவின் மூத்த மகன் மா. அனந்தநாராயணன். நீதிபதியாகப் பணி புரிந்தவர். கலாரசிகர்.   “சில்வர் பில்க்ரிமேஜ்” ( Silver Pilgrimage) என்ற நூலை எழுதியவர். ஜான் அப்டைக் ( John Updike) என்ற பிரபல ஆங்கிலக் கவிஞர் ‘அனந்தநாராயணன் ‘ என்ற பெயரில் உள்ள ஓசையில்  மோகம் கொண்டு ஒரு கவிதையே பாடியிருக்கிறார் !   அந்தக் கவிதையை இங்கே பார்க்கலாம்.


சுவையான ‘அ**ன்’ சொற்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்! 

இது போதும், இப்போது!

பி.கு:

நண்பர் பாலசுப்பிரமணியன் ஒரு நீண்ட ‘அ**ன்’ பெயராய் , ‘அகணிதகுணகணபூஷணன்’ என்பதை முன்வைத்ததும் ( பதிவின் பின்னூட்டமாய் வந்துள்ள கருத்துகளைப்  படிக்கவும்) , மீண்டும் யோசித்தேன்!

ஸம்ஸ்கிருதத்திலிருந்து வந்த ‘அகாதன்’ ( வஞ்சகன், புரட்டன்) என்ற சொல் சில தமிழ் அகராதிகளில் காணப்படுகிறது. இதுதான் மிக நீண்ட பெயர் என்று நினைக்கிறேன்.

ஏன் தெரியுமா?

முதல் எழுத்துக்கும், கடைசி எழுத்துக்கும் நடுவே ‘காத’ தூரம் உள்ளதல்லவா? :-))

~*~o0O0o~*~ 


தொடர்புள்ள பதிவுகள்:
சொல்விளையாட்டு


         

16 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

வணக்கம் அய்யா,
அருமையான் பதிவு. நிறைய சொல்லலாம்
அறிவானந்தன்
அன்பபானவன்
அறிவழகன்

அன்றே சொன்னான்
அரும் பாடு பட்டான்.


மிக்க நன்றி நன்றி நன்றி

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, சார்வாகன்!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமை அருமை

இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன்..

நல்லதொரு வலைப்பக்கத்தைக்கண்ட மனநிறைவு என்னுள்..

Pas S. Pasupathy சொன்னது…

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, குணசீலன் அவர்களே!

N.Balasubramanian சொன்னது…

ஒரு பழைய ஆங்கிலக் குழந்தைக்கதையில் வரும் சித்திரக்குள்ளன் பெயர் ரம்ப்பெல்ட்டில்ட்ஸ்கின். அக்கதையின் பழைய தமிழாக்கத்தில் அதற்கீடாகக் காணும் பெயர் :- ’அகணிதகுணகணபூஷணன்’!

N.Balasubramanian சொன்னது…

ankus is 'ankuca' in skt and ankucam in Tamil - parallel to the 'goad' with for an elephant

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, பாலு சார்!
'அங்குலியம்’ ( மோதிரம்) என்ற சொல்லிலிருந்து அங்குஸ்தான் வந்திருக்குமோ என்று நினைத்தேன்.

அகணிதகுணகணபூஷணன் --> அமர்க்களம்!

N.Balasubramanian சொன்னது…

1. என் பெயர் பாலசுப்பிரமணியன்

2. I am reminded of the longest word in English: SMILES!

Pas S. Pasupathy சொன்னது…

>>I am reminded of the longest word in >>English: SMILES!

:-))

N.Balasubramanian சொன்னது…

angusthaan, on second thoughts, wd appear to be rather from Skt angushTa [thumb]travelled through Persiam/Urdu

Pas S. Pasupathy சொன்னது…

N.Balasubramanian சொன்னது…
>>angusthaan, on second thoughts, wd appear to >>be rather from Skt angushTa [thumb]travelled >>through Persiam/Urdu

அதே, அதே, சபாபதே!

Unknown சொன்னது…

அன்புள்ள ஐயா,

தமிழ் ROT123/ROT163 முயற்சிகளின்போது DDSA Lexicon சொற்பட்டியலையும் தமிழ் Wikipedia கட்டுரைகளையும் தரவிறக்க நேர்ந்தது. அவற்றில் தேடியதில்:

Lexicon:
அக்கினியாராதனைக்காரன் (12 எழுத்துகள்)
அருப்புச்சரிக்கடுக்கன் (13)

தமிழ் Wikipedia:
அருட்செல்வப்பேரரசன் (12)
அபராசிதவர்மபல்லவன் (13) [அபராசிதவர்மபல்லவமன்னன்(16) என்றும் விரிக்கலாமோ?]

Wikipedia-வில் அராபினோஃபுரானோசில்சிடோசைன்(14) போன்ற சொற்களும் கிடைத்தன!

அன்புடன்,
அர்விந்த்
http://mstamil.com

குருநாதன் ரமணி சொன்னது…

'அண்டபகிரண்டச்சண்டிகேசுவரன்' (17 எழுத்துகள்) என்னும் பெயரை, நீண்ட அ**ன் பெயராக முன்வைக்கிறேன்.
ரமணி

ஓதியரசு சொன்னது…

அய்யன். அருளாளன், அகத்தீசுரன், அரியவன், அரசன்,அன்பன் அரசன் அன்னியன் அகமுடையான் அப்பன்

Unknown சொன்னது…

அறம்போலாமாசிவிலரேசுசகதீசன் என்று ஏசுவை போற்ற கேட்டிருக்கிறேன்.

Pas S. Pasupathy சொன்னது…

சகதீசன் என்று முடிவதைப் பார்த்தால் ஒரு சொல் என்று தோன்றவில்லை. பொருள் தெரிந்தால் ஒரு சொல்லா என்று பார்க்கலாம்.