செவ்வாய், 16 ஜூலை, 2013

திருப்புகழ் - 8

சந்தத்துள் அடங்கிய கந்தன்
குருஜி ஏ.எஸ்.ராகவன்

’போகாத ஊரில்லை, போற்றாத தெய்வமில்லை’ என்று சொல்லும்படி பாடிய அருணகிரிநாதர் பல ஊர்களில் உள்ள முருகப் பிரானைப் பற்றிப் பல பாடல்களை நமக்கு வழங்கியுள்ளார். ஆனால் சில ஊர்களில் அவர் பாடியவற்றுள் ஒரே ஒரு திருப்புகழ்ப் பாடல் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. அத்தகைய ஒரு ஸ்தலம் தான் ‘கந்தன்குடி’. அதைப் பற்றிக் குருஜி ராகவன் எழுதிய கட்டுரை இதோ!




திருவாரூர் மாவட்டத்தில் ஒரு காட்டுப் பிரதேசம். அங்கே மரங்கள்அடர்ந்திருக்க, அவற்றை மலர்க்கொடிகள் தழுவ, அக்கொடிகளில் பூத்து சிரித்த மலர்கள் தேன் சிந்தி மகிழ... அந்த ரம்மியமான வனத்தை ஒட்டி ஒரு குக்கிராமம். அக்கிராமத்து மக்களின் நிறை செல்வம் ஆநிரைகள். காட்டுப் பகுதியில் அவை மேய்ச்சலுக்குச் செல்வதும், அந்தியில் வீடு திரும்புவதும் வழக்கமாயிருந்தது.

ஒரு செல்வந்தர் வீட்டுப் பசு மட்டும் பின் தங்கித் தாமதமாய் வீடு திரும்பிற்று. பால் கறந்த நேரத்தில் இப் பசுவின் மடி மட்டும் வற்றிக் காணப்பட்டது.

இந்த வினோதம் ஏன் என்று விசாரிக்கப் புறப்பட்ட ஆட்கள், பசுமாடு வனத்திடையே இருந்த பல புற்றுகளுள் குறிப்பாக ஒன்றினை நெருங்கி, அதன் மீது மடியிலிருந்த பாலைச் சொரிந்துவிட்டு வருவதைக் கண்டனர். இந்த ‘அபிஷேகம்’ தினந்தோறும் நடைபெற்று வந்தது!

விஷயம் தெரிந்ததும் ஊர் மக்கள் புற்று இருந்த இடத்தைத் தோண்டினர். அவ்வாறு தோண்டிய பொழுது கிடைத்தது ஓர் அழகான முருகன் சிலை _ வள்ளி _ தெய்வானையுடன் கூடிய உருவம்.  கிராமத்தாரின் மகிழ்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா! அப்போது, அங்கேயே கோயில் அமைப்பதென்று முடிவு செய்து செயல்படுத்தினர். முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டான். மூன்று கால பூஜையும் வழிபாடுகளும் அமோகமாக நடைபெறலாயின.

 கந்தன் விரும்பி குடிகொண்ட இடம் என்பதால் இத்தலம் கந்தன்குடி என்று வழங்கலாயிற்று.  ‘கந்தன் குடி’ என்று சொல்வதிலேயே ஒரு சந்தம் அடங்கியிருக்கிறது. வல்லினமும் மெல்லினமும் கலந்த ஓசை நயம் ‘தந்தன் தன’ என்ற சந்தத்துள் அழகாகப் பொருந்தி உட்காருகிறது.  ஊர்ப் பெயரிலுள்ள இந்த சந்தத்தையே பயன்படுத்தி இவ்வூர் முருகனை அதனுள் பொதித்துத் துதித்துப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்:

எந்தன்சட லங்கம்பல பங்கம்படுதொந்தங்களை
  யென்றுந்துயர் பொன்றும்படி யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
  யென்றும்படி பந்தங்கெட மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
  மண்டும்படி நின்றுஞ்சுட ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
  வண்டன்தமி யன்றன்பவம் ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
  தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு மணியாரம்
சந்தன்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
  சம்புந்தொழ நின்றுந்தினம் விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
  கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே
கண்டன்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
  கந்தன்குடி யின்தங்கிய பெருமாளே.

இன் கனி சுவைசிந்துகின்ற, பொங்கு புனல்களும் தங்கு சுனைகளும் வளப்படுத்துகிற ஊராக கந்தன்குடியை வர்ணிக்கிறார் அருணகிரிநாதர்.

 அங்கே குடிகொண்டிருப்பவனோ ‘கந்தன் குகன் எந்தன் குரு’, சம்புவும் தொழக் கூடியவன், ‘தந்தந்தன’, ‘திந்திந்திமி’ என்று சந்தமெழ அவன் மணியாரங்கள் ஒலித்து அசைந்து கொண்டிருக்கின்றன. உலகியல் பந்தங்கள் அறுபட, நம் நெஞ்சில் குடி கொண்ட வஞ்சம் பொடிபட அவனே, சந்தத்திலுறையும் கந்தனே, வந்து நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

இத் தலம் பேரளம் - காரைக்கால் ரயில் பாதையில் உள்ள அம்பகரத்தூரிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கிறது.  குமரக்குடி என்றும் ஒரு பெயர் உண்டு.  தெய்வானை அம்மை இங்கே கடுந்தவமிருந்து முருகனை அடைந்ததாக புராணம் சொல்கிறது. அச்சமயம் மகளுக்குக் காவலாகவும் துணையாகவும் தனது வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பைரவரையும் அனுப்பி வைத்தானாம் இந்திரன்.  இன்றைக்கும், கந்தன்குடி முருகன் கோயிலில் ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்தைக் கடந்து கொடி மரத்தை நாம் அடைந்தோமானால் மயிலுக்குப் பதிலாக அங்கே யானை வாகனம் இருப்பதைக் காண்கிறோம்.

வெளிப் பிராகாரம் புல் மண்டிக் கிடக்கிறது. உட்பிராகாரத்தை வலம் வருகையில், முதலில் தவக்கோலத்தில் நிற்கும் தெய்வ யானையின் சன்னிதியில் நிற்கிறோம். அவளைப் போல் ஒருமுகச் சிந்தனையுடன் நாமும் முருகனை எண்ண வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.  தவத்துக்கிறங்கி தெய்வானையைத் திருமணம் கொண்ட முருகன், ‘கல்யாண சுந்தரர்’ என்ற திருப்பெயருடன் ஒரு முகமும் நான்கு கைகளுமாகக் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை இருவரும் இருபுறமும் இருக்கிறார்கள். கிழக்கு நோக்கிய சன்னிதி. மயில் உருவம் பொறித்த அழகான பீடத்தின் மேல் நின்ற திருக்கோலம்.

இந்திரன் அனுப்பிய ஐராவதேசுவரர், பைரவர் ஆகியோருக்கு இங்கே சன்னிதிகள் உண்டு. ஈசனும் அன்னையும் விச்வநாதர் - விசாலாக்ஷி என்ற பெயர்களுடன் இங்கு விளங்குகின்றனர்.  ஸ்கந்த புஷ்கரிணி என்ற தீர்த்தமும் ஸ்தல விருட்சமான வன்னி மரமும் உள்ளன.    மிக சிரத்தையுடன் ஐந்துகால வழிபாடு நடக்கிறது இங்கே.  பசுக்கள் பால் பொழிந்து, புதையுண்டு கிடந்த கடவுள் திருவுருவங்களை அடையாளம் காட்டியதாகப் பல கதைகள் உண்டு. பெரும்பாலான கதைகளில் அவ்விடங்களில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பிரதிஷ்டையானதாகவே வரலாறு அமையும். கந்தன்குடி கதை சற்று மாறுபட்டிருந்தாலும் அப்பாவுக்குப் பிள்ளையாகவே முருகன் தப்பாமல் பிறந்திருப்பதைக் காட்டுகிறது!

[ நன்றி: கல்கி ]

கருத்துகள் இல்லை: