பாரதி புகழ் பரப்பிய பரலி சு.நெல்லையப்பர்
செப்டம்பர் 18. பரலி சு.நெல்லையப்பரின் பிறந்த தினம்.
50/60-களில் பாரதி சங்கக் கூட்டங்கள் பல சென்னையில், தி.நகரில் வாணி மகாலில் நடைபெறும்.அப்போது பல முறைகள் அவரைப் பார்த்திருக்கிறேன். இதோ தினமணியில் வந்த ஒரு கட்டுரை:
=========
ஆனந்தவிகடன்' உரிமையாளர் எஸ்.எஸ்.வாசனிடம் "கல்கி' கிருஷ்ணமூர்த்தியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பரலி சு.நெல்லையப்பர். இல்லாவிட்டால், ஒருவேளை "கல்கி'யின் பெருமை தமிழ்நாட்டுக்குத் தெரியாமலே போயிருக்கலாம்.
ஏராளமான புலவர்களைப் பெற்றெடுத்த பொருநை வளம் சேர்க்கும் மண்ணில், திருநெல்வேலிக்கு அருகே பரலிக்கோட்டை என்ற சிற்றூரில், சுப்பிரமணியம் பிள்ளை-முத்துவடிவு அம்மையாருக்கு 1889-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி பிறந்தார்.
பாரதியாரால் "தம்பி' என்றழைக்கப்பட்ட பரலி சு.நெல்லையப்பரின் பெருமை பரவலாகத் தெரிந்திராத நாள்கள்.÷உரிமையுடன் பாரதி, "தம்பி' என்று பரலி சு.நெல்லையப்பரை அழைத்ததுபோல் மற்றும் யாரையாவது அழைத்திருக்கிறாரா என்று தெரியாது.
1908-ஆம் ஆண்டு கப்லோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கப்பல் கம்பெனியில் பரலி சு.நெல்லையப்பர் குமாஸ்தா வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள் சிதம்பரனாரைச் சந்திக்க பாரதியார் அவர் வீட்டுக்கு வந்தபோதுதான் முதன்முதலில் பரலி சு.நெல்லையப்பர், பாரதியாரைச் சந்தித்தார்.
""ஓய்! நம்மோடு வாரும்'' என்றவாறு பாரதியார், இளைஞர் நெல்லையப்பர் கரத்தைப் பற்றி வெளியே அழைத்துக்கொண்டு சென்றார். தன்னை உரிமையுடன் கரம் பற்றி அழைத்துச் சென்றவர் பாரதியார் என்று அப்போது நெல்லையப்பருக்குத் தெரியாது. பிறகு பாரதியார் தங்கியிருந்த அறையில், கிருஷ்ணசாமி அய்யரின் உதவியுடன் அச்சிடப்பட்டிருந்த பாரதியாரின் சுதேச கீதங்களைப் படித்த பிறகே, தன்னை அழைத்துச் சென்றவர் சுப்பிரமணிய பாரதியார் என்பதறிந்தார். கப்பல் கம்பெனிப் பணிகளில் மூழ்கியதால் பாரதியாரைப் பற்றி நெல்லையப்பருக்கு நினைக்க நேரமில்லை. பிறகு அவரைச் சில காலம் கழித்தே சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
பரலி சு.நெல்லையப்பரைப் பற்றி தமிழ் மக்கள் அறிய வாய்ப்பு இல்லாதபோது, நீலகண்ட பிரம்மசாரியைப் பற்றி எவ்வாறு அறியமுடியும்! புதுவையில் பாரதியின் குழுவில் இருந்த பல மேதைகளுள் நீலகண்டரும் ஒருவர். திருநெல்வேலி ஆஷ் துரை வழக்கில் சம்பந்தப்பட்ட நீலகண்டரை - நீலகண்ட பிரம்மசாரி என்று அழைப்பார்கள். சென்னையில், நெல்லையப்பர் தற்செயலாக அவரைச் சந்தித்தார். சிதம்பரனாருக்கு அரசு அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் கொடும் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு இளைஞர் நெல்லையப்பர் அடுத்து என்ன செய்வது என்று திகைத்தார். தூத்துக்குடியிலேயே நீலகண்டரை அறிவார்.
அவரைச் சந்தித்த அந்த நேரம் நெல்லையப்பர் வாழ்க்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
புதுச்சேரி பத்திரிகைத் தொழிலில் தான் ஈடுபட்டிருப்பதாகவும், விரும்பினால் அவருக்கும் பத்திரிகையில் வேலை கிடைக்கும் என்றும், "உடனே என்னுடன் புறப்படலாம்' என்றும் நீலகண்டர் தெரிவித்தார்.
மகாகவி பாரதியின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தவர் பரலி சு.நெல்லையப்பர். நீலகண்ட பிரம்மசாரியுடன் புதுவை சென்ற நெல்லையப்பர், பாரதியாரைச் சந்தித்தார். தூத்துக்குடியில் சந்தித்த பிறகு இரண்டாவது முறையாக இப்போதுதான் சந்திக்கிறார். ஆனால், இம்முறைதான் பரலி நெல்லையப்பர், பாரதியாரை முழுமையாக அறிந்தார். அதற்கு வழி வகுத்த நீலகண்டரை நாம் மிகவும் பாராட்ட வேண்டும்.
பாரதியார் ஆசிரியராக இருந்த "விஜயா' என்ற நாளிதழிலும் "சூரியோதயம்' என்ற வார இதழிலும் பாரதியாருக்கு உதவியாக - துணையாசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு நெல்லையப்பருக்குக் கிடைத்தது. இதழிகளின் துணை ஆசிரியராகத் தொண்டாற்றும் வாய்ப்பைவிட, புதுவையில் பல மேதைகளை அறிமுகப்படுத்தி கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது.
இளைஞர் நெல்லையப்பரின் சுறுசுறுப்பு, அழகிய கையெழுத்து, அச்சுக் கோர்த்தவற்றைப் பிழையறப் பார்க்கும் திறமை போன்றவை பாரதியாரை மிகவும் கவர்ந்தன. அதற்கு முன்பே, விடுதலை வேள்வியில் நம்பிக்கையுடன் தொண்டாற்றக்கூடிய "நம்பிக்கைக்குரிய வீரர் இந்த இளைஞர்' என்று முடிவும் செய்துவிட்டார் பாரதியார்.
புதுவையில் இருக்கும்போதுதான் பாரதியார் பல புதிய இலக்கியங்களைப் படைத்தார். பாஞ்சாலி சபதத்தின் முதல் பகுதி புதுச்சேரியில்தான் வெளியாயிற்று; பாரதியார் தம் புதிய படைப்புகளை நெருங்கிய நண்பர்களுக்குப் படித்துக் காட்டுவது வழக்கம். குறிப்பாக பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பகுதியைத் தனக்குப் படித்துக் காட்டினார் என்ற விவரங்களையும் பரலியாரின் நூல் மூலம் அறியமுடிகிறது.
பாரதியாரின் நூல்கள் அச்சாகும்போது அதன் அச்சுப்பிழையைத் திருத்தும் பணியைப் பரலி சு.நெல்லையப்பரே செய்துவந்தார்.
சென்னையில் பல இடங்களில் வேலைக்கு முயன்ற நெல்லையப்பர், இறுதியில் "லோகோபகாரி' பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். லோகோபகாரி இதழில் சேர்ந்தவுடனே புதுவையில் இருந்த பாரதியாருடன் தொடர்பு கொண்டார். அப்போது சுதேசமித்திரன் பத்திரிகைக்கு மட்டுமே, பாரதியார் கட்டுரைகள் எழுதிவந்தார். நெல்லையப்பரின் வேண்டுகோளின்படி லோகோபகாரி இதழுக்கும் பாரதியார் எழுதத் தொடங்கினார்.
பெரும்பாலும் பாரதியாரைப் பற்றிய உரையாடல் நடைபெறும். "பாரதி' என்றொரு இதழில், (பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நடத்தியது) பிற்காலத்தில் பணியாற்றியபோது பாரதியாரின் புகழ்பெற்ற கவிதைகளான "செந்தமிழ் நாடெனும் போதினிலே', "பாருக்குள்ளே நல்ல நாடு', "பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார்' போன்ற புகழார்ந்த கவிதைகளை, தான் "பாரதி' இதழில் வெளியிட்டதையும் பெருமையாகக் கூறுவார் பரலியார்.
பிற்காலத்தில், நெல்லையப்பரைத் தன் குருவாக மதித்துப் பழகிய எதிரொலி விசுவநாதன் என்ற இளைஞர் (அப்போது) நெல்லையப்பர் கூறிய பல செய்திகளை "பாரதியின் தம்பி' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் ஒன்றுதான் பரலி சு.நெல்லையப்பரின் பாரதி தொண்டையும், பாரதியார் பாடல்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்டதையும் தெளிவாகக் கூறுகிறது. அவர் அருமை பெருமை தெரிந்த பலருள் இளைஞர் எதிரொலி விசுவநாதனும் ஒருவர்.
புதுவையிலிருந்து பாரதியார் அனுப்பும் பாடல்களை நூல் வடிவில் அச்சிட எந்த அச்சகமும் அந்தக் காலத்தில் துணியவில்லை. ஆங்கில அரசாங்க அடக்கு முறைக்கு அஞ்சினர். "இந்தியா' என்ற அச்சுக் கூடத்தின் உரிமையாளர் சீனுவாச அய்யங்கார் அச்சிட்டுக் கொடுக்க முன்வந்த செய்தியை நெல்லையப்பர் கூறி, "இங்கே அருகிலுள்ள அரண்மனைக்காரன் தெருவில்தான் அந்த அச்சுக்கூடம் இருந்தது' என்றும் தெரிவித்தார்.
1917-ஆம் ஆண்டில், பாரதியின் "கண்ணன் பாட்டு'
பரலியார் எழுதிய முகவுரையுடன் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன.
திரு.வி.க, வ.வே.சு. ஐயர் இவர்களுக்குப் பிறகு 1919-இல் நெல்லையப்பர், "தேசபக்தன்' இதழில் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றினார். அந்தக் குறுகிய காலத்தில் கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது.
எந்தப் பத்திரிகையில் பணியாற்றச் சென்றாலும் பாரதியார் பாடல்களை வெளியிடவும் அச்சிடவும் மறுப்பதில்லை நெல்லையப்பர். 1919-இல் தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்றார். தேசபக்தன் மூலமாக பாரதியார் பாடல்களை அச்சிட்டு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். அதனால், தமிழ் நாடெங்கும் பாரதியார் பாடல்கள் பரவின. தமிழர்களிடையே தேசிய உணர்வு மீண்டும் பொங்கலாயிற்று.
பரலி சு.நெல்லையப்பர், தன் குருநாதரைப் போலவே வளமாக வாழ்க்கையை நடத்தவில்லை.
தூத்துக்குடியிலும், புதுவையிலும், சென்னையிலுமாக பாரதியார் பணி, பத்திரிகைப் பணி, பாரதியார் நூல்களை வெளியிடும் பணி என்றே தன் முழு உழைப்பையும் இரவு பகல் பாராமல் நல்கியதால், திருமண நினைவே வராமல், பிரம்பசாரியாகவே காலத்தைக் கழித்தார்.
இறுதி நாள்களில் பொது வாழ்க்கையில் பின்னடையவில்லை. பாரதியார் சங்கம், சைதாப்பேட்டை பாரதி கலைக்கழகம், தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் என்று தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அவர்களிடையே பேசுவதும், இளைஞர்களை உற்சாகப்படுத்துவமாக சுறுசுறுப்பாக இருந்தார்.காந்தி மகானிடமும் மிகுந்த பக்தி கொண்ட நெல்லையப்பர், 1941-இல் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். 1908-லும் ஒருமுறை சிறை சென்றிருக்கிறார். பலாத்காரக் கொள்கையில் இளவயதில் ஈடுபாடு கொண்ட பரலியாரை அகிம்சாவாதியாக மாற்றியவர் பாரதியே!
பாரதியின் உயர் நண்பர்கள் என்ற பட்டியலில் - கம்பருக்குச் சடையப்ப வள்ளல் போல முதலில் இடம் பெறும் சிறந்த பத்திரிகையாளரான பரலி சு.நெல்லையப்பர், 1991-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். மகாகவியின் பெயருள்ள வரை பரலி சு.நெல்லையப்பர் பெயரும் நிலைத்து நிற்கும்.
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக