வியாழன், 15 செப்டம்பர், 2016

கம்பதாசன்

பாட்டு முடியுமுன்னே...
 ராஜ்கண்ணன் 


செப்டம்பர் 15. கவிஞர் கம்பதாசனின் பிறந்த தினம்.

மகாகவி பாரதிக்குப் பின்னர் "சிறந்த தமிழ்க் கவிஞர்' என இந்திய தேசம் முழுவதும் அறியப்பட்டவர் கவிஞர் கம்பதாசன்.

 திண்டிவனம் அருகில் உள்ள உலகாபுரம் என்ற ஊரில் (கம்பதாசனின் தாயாரின் ஊர்) 15.9.1916-இல் பிறந்தார் கம்பதாசன். இவரது தாய் பாலாம்பாள். தந்தை சுப்பராயர். கலையழகோடு களிமண் பொம்மைகள் செய்யும் குடும்பத்தினர் இவர்கள்.

 கம்பதாசனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் அப்பாவு. கவிஞர் சிறுவனாக இருக்கும்போதே அவரது தந்தை குடும்பத்தோடு சென்னை புரசைவாக்கத்துக்கு குடிபெயர்ந்தார்.

 எட்டாம் வகுப்பு வரை பயின்ற அப்பாவு, படிப்பில் நாட்டம் குறைந்ததால் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு நாடகக் கம்பெனிகளை தேடிப் போனார். நாடகத் துறைக்காக தனது பெயரை சி.எஸ். ராஜப்பா என்று மாற்றிக் கொண்டார்.

 அந்த நாள்களில் நாடக உலகில் புகழ்பெற்று விளங்கிய பம்மல் சம்பந்த முதலியார், எம்.என். பாவலர், துரைசாமி நட்டுவனார், "சிற்பக் கலைஞர் ராய் சௌத்ரி போன்றவர்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.

 சங்கரலிங்க கவிராயர் நடத்திய பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடிக்க சி.எஸ். ராஜப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் நாடகங்களில் நடித்ததோடு ஆர்மோனிய கலைஞராகவும் பணிபுரிந்ததால் பாடல் எழுதும் ஆற்றல் அவருக்கு ஏற்பட்டது.

 1934-ஆம் ஆண்டு வெளிவந்த "திரௌபதி வஸ்திராபகரணம்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தார் சி.எஸ். ராஜப்பா. அப்போது அவர் தனது பெயரை கம்பதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

 சீனிவாச சினிடோன் என்ற நிறுவனம் தயாரித்த "சீனிவாச கல்யாணம் (1934) படத்தில் கம்பதாசன் பாடலாசிரியராக அறிமுகமானார். (அவரது முதல் பாடல் இடம் பெற்ற திரைப்படம் "வாமன அவதாரம்' (1940) என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.) தொடர்ந்து "வேணுகானம்' (1941), "ஆராய்ச்சிமணி (1941), "பூம்பாவை' (1944), "மஹாமாயா' (1945), ஞான செüந்தரி (1948), "நாட்டிய ராணி' (1949), "மங்கையர்க்கரசி' (1949), "பிரிய சகி' (1952), "பூங்கோதை' (1953), "தந்தை' (1953), "வானரதம்' (1956), அக்பர் (1961), "குபேரத் தீவு' (1963), "குமார சம்பவம்' (1971) உள்ளிட்ட சுமார் 40 படங்களில் 126 பாடல்கள் எழுதியுள்ளார்.

 கம்பதாசன் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் "பூம்பாவை', "மங்கையர்க்கரசி' ஆகிய இரு படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். "சாலிவாஹனன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். "நாட்டிய ராணி' படத்துக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். "பிரியசகி', "தந்தை' படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

 ஹிந்திப் படவுலகில் இன்றும் மாபெரும் கலைப் படைப்பாகக் குறிப்பிடப்படும் "மொஹல்-ஏ-ஆஸாம்' படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது தமிழுக்காக கம்பதாசன் எழுதிய பாடல்கள் அவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தன.

 "ஆராய்ச்சிமணி' படத்தில் ஒரு நடன மங்கை வேடத்தில் நடித்த நாட்டியக் கலைஞரான சித்ரலேகா மீது (புகழ்மிக்க மலையாளக் கவிஞரான வள்ளத்தோளின் உறவுப் பெண்) கம்பதாசனுக்கு காதல் ஏற்பட்டது. அவரும் கம்பதாசனை விரும்பியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 ஆயினும், அவர்களின் குடும்ப வாழ்வு நெடுநாள்களுக்கு நீடிக்கவில்லை. கம்பதாசனை விட்டு சித்ரலேகா பிரிந்து சென்றார். அவரது பிரிவு கம்பதாசனை நிலைகுலைய வைத்தது.

 காதல் மனைவியின் பிரிவுத் துயர் தாளாமல் கம்பதாசன் கவிதைகளை எழுதிக் குவித்தார். "பாட்டு முடியுமுன்னே / மீட்டிய வீணையைப் / பக்கம் வைத்தே நடந்தாய்' என்று முதல் கவிதையில் தொடங்கி தொடர்ந்து ஏராளமான கவிதைகள் எழுதினார். அந்தக் கவிதைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு "பாட்டு முடியுமுன்னே...' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. அந்த நூலுக்கு கவிஞர் ச.து.சு. யோகியார் ஓர் அருமையான அணிந்துரை வழங்கியுள்ளார்.

 கம்பதாசனின் "கனவு' கவிதைத் தொகுப்பு 1941-இல் வெளிவந்தது. 1945-இல் "முதல் முத்தம்' கவிதை நூல் வெளியானது. இந்நூலுக்கு கவிஞர் பாரதிதாசன் முன்னுரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமல்லாது "கவிதா' என்ற பெயரில் கவிதைக்காகவே ஓர் இலக்கிய இதழையும் நடத்தி வந்தார் கம்பதாசன்.

 1942-இல் கம்பதாசன் "வேளை வந்தது' என்கிற தலைப்பில் எழுதிய ஒரு குறுநாவலை, நாட்டியக் கலைஞர்கள் நட்ராஜ் - சகுந்தலா இருவரும் "நிர்வாணா' என்ற பெயரில் நாட்டிய நாடகமாக நடத்தியுள்ளனர். தொடர்ந்து "அருணோதயம்', "புதுக்குரல்' போன்ற கவிதை நூல்கள் வெளிவந்தன.

 1946-இல் கம்பதாசன் எழுதிய "சிற்பி' எனும் நாடக நூல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து "ஜீவ நாடகம்', "ஆதி கவி' ஆகிய இரு நாடக நூல்கள் வெளிவந்தன. 1947-இல் "படுக்கை அறை' என்னும் குறுநாவலும், "முத்துச் சிமிக்கி' என்னும் சிறுகதைத் தொகுதியும் வெளியாயின.

 1960-இல் புலியூர் கேசிகன் தொகுத்த "கம்பதாசன் கவிதைகள்' நூலும், அதனைத் தொடர்ந்து "கம்பதாசன் கதைகள்', "கம்பதாசன் நாடகங்கள்' ஆகிய நூல்களும் வெளியாயின (அருணா பதிப்பகம்).

 கம்பதாசன் குழந்தைகளுக்காக எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு "குழந்தைச் செல்வம்' (1960) என்ற பெயரிலும், இரு நெடுங் கவிதைகள் அடங்கிய தொகுப்பு "கல்லாத கலை' என்ற பெயரிலும் (1966) மல்லிகைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன.

 கம்பதாசன் இசை நாடக வடிவில் எழுதிய அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலும் பாரதி கலா பவன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

 ஆயினும், இவர் எழுதிய பல கவிதைகளும் வானொலியில் படித்த பல கவிதைகளும் அச்சு வடிவம் பெறாமல் போனது பெருந் துயரமே.
 "தினமணி' நாளிதழின் ஆசிரியராக இருந்த ஏ.என். சிவராமன், கம்பதாசன் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு அவரை ஆதரித்து வந்தார்.

 கம்பதாசனின் கவித்திறனை பாரதிதாசன், ச.து.சு. யோகியார், இசைமேதை நௌஷத், வங்கக் கவிஞர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய போன்ற பலரும் வியந்து பாராட்டியுள்ளனர். வ.ரா., கு.ப.ரா. போன்ற எழுத்தாளர்களும் கம்பதாசனைப் பெரிதும் போற்றினர்.

 1946-இல் சென்னையில் நடந்த எழுத்தாளர்கள் மாநாட்டில் கம்பதாசன் கலந்து கொண்டார். மகாத்மா காந்தி சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்திருந்த அந்த மாநாட்டின் தொடக்கத்தில் ஒரு பிரார்த்தனைப் பாடல் பாட வேண்டும் என்று திடீரென முடிவெடுக்கப்பட்டபோது, அங்கிருந்த கம்பதாசன் உடனே ஒரு பாடலை எழுதி அதனை அவரே மேடையில் பாடவும் செய்தார். அப்போது அவர் மகாத்மா காந்திக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
 கம்பதாசனுக்கு சோஷலிச சித்தாந்தம் மீது மிகுந்த பற்று இருந்தது. அந்த இயக்கத்துக்காக "கொடிப் பாடல்', "தொழிலாளர் இயக்கப் பாடல்' போன்றவற்றை அவர் எழுதியுள்ளார். மேலும், ஜெயப்பிரகாஷ் நாராயணன், அசோக் மேத்தா, ராம் மனோகர் லோகியா போன்ற தலைவர்களும் கம்பதாசனை அறிந்திருந்தனர்.

 காற்றும் நுழைந்திடா வானமென - ஒரு
  கட்டற்று நிற்பவன் கவிஞனன்றோ?
 என்று கம்பீரமாகக் கேட்டவர் கம்பதாசன்.

 ஆயினும், கம்பதாசனின் இறுதிக் காலம் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. காதல் மனைவி சித்ரலேகாவைப் பிரிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் சூசன் என்ற ஒரு பள்ளி ஆசிரியையுடன் வாழ்க்கை நடத்தினார். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், ஏனோ சூசனும் கம்பதாசனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

 தனது இறுதி நாள்களில், நலிந்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையான நூறு ரூபாயைப் பெற்று வாழும் நிலை ஏற்பட்டது கம்பதாசனுக்கு.

 தமிழக அரசு சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் அவருக்கு ஒரு வீடு ஒதுக்கீடு செய்தது. 1968-ஆம் ஆண்டு தமிழக அரசு கம்பதாசனுக்கு "கலைச்சிகாமணி' விருது வழங்கி சிறப்பித்தது.

 1973-ஆம் ஆண்டு மே முதல் வாரத்தில் கம்பதாசன் நோய்வாய்ப்பட்டார். பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு எவருக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை.

 எனவே, அவருக்குக் கட்டில் கூட தரப்படாமல் அவர் வெறுந்தரையிலேயே படுக்க வைக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை தினமும் பரிசோதித்தனர். உடல்நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படவில்லை.

 இப்படியே சில நாள்கள் சென்றன. ஒருநாள் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார் கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி. அப்போது வராண்டாவில் தரையில் படுத்திருந்த கம்பதாசன் அவரை அழைக்க, திரும்பிப் பார்த்த கு.சா. கிருஷ்ணமூர்த்தி அதிர்ந்து போய் விட்டார். கம்பதாசனிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். உடனே புறப்பட்டு நேராகச் சென்று ம.பொ.சி.யை சந்தித்து கம்பதாசன் நிலையை எடுத்துரைத்தார். ம.பொ.சி. உடனே மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு கம்பதாசனுக்கு சிறப்பு படுக்கையில் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

 என்ன செய்து என்ன பயன்? 1973-ஆம் ஆண்டு மே 23-ஆம் நாள் கம்பதாசன் காலமானார். இரக்கமற்ற இயற்கையால் கவிஞனைத்தான் நம்மிடமிருந்து பிரிக்க முடியும். அவர் கவிதைகளை? அவை காலத்தைக் கடந்தும் வாழும்.

 இன்று கவிஞர் கம்பதாசன் பிறந்த  நூற்றாண்டு தொடக்கம்.


 [ நன்றி : தினமணி, 15 செப்டம்பர் 2015 ] 

தொடர்புள்ள பதிவு :

கருத்துகள் இல்லை: