சனி, 6 அக்டோபர், 2018

1160. காந்தி - 46

40. தண்டனை
கல்கி



கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் 1948  வந்த   40-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

ஆமதாபாத் செஷன்ஸ் கோர்ட்டில் 1922-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 18-ஆம் தேதி அந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாபெரும் விசாரணை நடந்தது. முப்பது கோடி மக்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்த மகத்தான தலைவர் கைதிக் கூண்டிலே நின்றார். அவர் பெயர் ஸ்ரீ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அன்னிய நாட்டிலிருந்து வந்த அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவர் நீதிபதியின் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவர் பெயர் மிஸ்டர் ஸி. என். புரூம்பீல்டு ஐ. சி. எஸ்.

மேற்படி வழக்கு விசாரணையின் விவரங்கள் பத்திரிகையில் வெளியானபோது கைதிக் கூண்டிலே நின்றது மகாத்மா காந்தியா அல்லது பிரிட்டிஷ் சர்க்காரா என்றும் சந்தேகம் தோன்றும்படி யிருந்தது.

பாவம்! ஜில்லா ஜட்ஜ் மிஸ்டர் புரூம்பீல்டு திணறிப் போனார்! அவருடைய திணறலுக்கு அறிகுறி அவர் கூறிய தீர்ப்பில் தெளிவாக இருந்தது. பம்பாய் சர்க்காரின் அட்வகேட் ஜெனரல் ஸர். ஜே.டி. ஸ்ட்ராங்மான் அரசாங்கத்தின் சார்பாக மேற்படி வழக்கை நடத்தினார். எதிரிகளான காந்தி மகாத்மாவுக்கும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கருக்கும் வக்கீல் கிடையாது. எதிர் வழக்காடுவதாக அவர்களுக்கு உத்தேசமேயில்லை.

ஆரம்பத்தில் நீதிபதி குற்றப் பத்திரிகை வாசித்துக் காட்டினார். "எங் இந்தியா" வில் எழுதிய மூன்று கட்டுரைகளக்காக எதிரிகள் பேரில் 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அரசாங்கத்தின் பேரில் துவே ஷத்தை உண்டாக்குதல், வெறுப்பை வளர்த்தல் அநீதியைப் பெருக்குதல் ஆகியவை மேற்படி பிரிவின்கீழ் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்கள். இவற்றின் கருத்தை நீதிபதி விளக்கிச் சொல்லிவிட்ட, "மிஸ்டர் காந்தி!" நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? அல்லது விசாரிக்கப்பட விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.

மகாத்மா:- குறிப்பிட்ட குற்றங்கள் எல்லாவற்றையும் செய்ததாக ஒப்புக் கொள்கிறேன். குற்றப் பத்திரிகையில் அரசரின் பெயரை குறிப்பிடாமல் விட்டிருக்கிறது. இது சரியான காரியம்.

நீதிபதி:- மிஸ்டர் பாங்கர்! நீங்கள் குற்றவாளி என்று ஒப்புக் கொள்கிறீர்களா! அல்லது கோர்ட்டில் விசாரணை கோருகிறீர்களா?

பாங்கர்:- குற்றவாளி என்று ஒப்புக்கொள்கிறேன்.

இந்தக் கட்டத்தில் அட்வகேட் ஜெனரல் ஸர் ஜே.டி. ஸ்ட்ராங்மான் குறுக்கிட்டார். "எதிரிகள் குற்றவாளிகள் என்று ஒப்புக்கொண்ட பொதிலும் முழு விசாரணையையும் நடத்த வேண்டும் என்ற நான் கோருகிறேன். சாட்சிகள் விசாரிக்கப் படவேண்டும்" என்றார்.

நீதிபதி:- நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. எதிரிகள் குற்றவாளி என்று ஒபபுக்கொண்ட பிறகு சாட்சி விசாரணை எதற்கு? தண்டனை விஷயம் தீர்மானிக்கப் படவேண்டும். அது சம்பந்தமாக நீங்கள் சொல்வதையும் மிஸ்டர் காந்தி சொல்வதையும் கேட்கத் தயாராயிருக்கிறேன்.

இதைக் கேட்டுக் காந்திஜி புன்னகை புரிந்தார். விசாரணைச் சடங்குகள் அவசியமில்லை என்னம் அபிப்பிராயமே மகாத்மாவுக்கும் இருந்தது. பிறகு ஸர் ஜே.டி. ஸ்ட்ராங்மான் எதிரிகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்குக் காரணங்களை எடுத்துச் சொன்னார். குறிப்பிட்ட இந்த மூன்று கட்டுரைகளும் ஏதோ யோசியாமல் எழுதப்பட்ட விஷயங்கள் அல்லவென்றும், நெடுநாளாகவே மிஸ்டர் காந்தி அரசாங்க துவேஷப் பிரசாரம் செய்து வந்திருக்கிறார் என்றும் எடுத்துக் கூறினார். "எங் இந்தியா" பத்திரிகையிலிருந்து இன்னும் சில கட்டுரைகளைத் தம் கட்சிக்கு ஆதாரமாகக் குறிப்பிட்டார். "இந்தக் கட்டுரைகளில் மிஸ்டர் காந்தி அஹிம்சையை வற்புறுத்தி யிருக்கிறார் என்பது உண்மைதான். அதனால் ஏதேனும் பிரயோஜனம் உண்டா? இந்தக் கேள்விக்குச் சௌரி சௌராவிலும், சென்னையிலும், பம்பாயிலும் நடந்த சம்பவங்கள் பதில் சொல்லுகின்றன. இந்தச் சம்பவங்களினால் எவ்வளவோ பேர் கஷ்ட நஷ்டங்களை அடைந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்துக் கோர்ட்டார் தண்டனையைத் தீர்மானிக்க வேண்டும்" என்று கூறி முடித்தார்.

நீதிபதி:-- மிஸ்டர் காந்தி! தண்டனை சம்பந்தமாக நீங்கள் ஏதாவது சொல்லிக்கொள்ள விரும்புகிறீர்களா?

காந்திஜி:-- நான் ஒரு வாக்கு மூலம் கொடுக்க விரும்புகிறேன்.

நீதிபதி:-- வாக்குமூலத்தை எழுத்தில் எழுதிக்கொடுத்து விட்டால் ரிகார்டில் சேர்த்துக் கொள்வேன்.

காந்திஜி:-- வாக்கு மூலம் எழுதியிருக்கிறேன். கோர்ட்டில் படித்துவிட்டுக் கொடுத்து விடுகிறேன்.

மகாத்மாவின் விருப்பத்தின்படி வாக்கு மூலத்தைக் கோர்ட்டில் படிப்பதற்கு நீதிபதி சம்மதம் கொடுத்தார்.

எழுதியிருந்த வாக்கு மூலத்தைப் படிப்பதற்கு முன்னால் மகாத்மா வாய்மொழியாகச் சில வார்த்தைகள் சொன்னார்.

"அட்வகேட் ஜெனரல் என்னைப்பற்றி கூறியவற்றை நான் முழுதும் ஒப்புக்கொள்கிறேன். இப்போதுள்ள அரசாங்க முறையின் மீது அப்ரீதியை உண்டாக்குவதில் நான் அளவில்லாத ஆத்திரம் கொண்டிருந்தேன். "எங் இந்தியா"வுக்கு ஆசிரியராவதற்கு முன்னாலேயே இந்த வேலையை ஆரம்பித்து விட்டேன். பம்பாய், சென்னை, சௌரி-சௌரா சம்பவங்களுக்கு என் பேரில் அட்வகேட் ஜெனரல் பொறுப்புச் சுமத்துவதையம் நான் ஒப்புக்கொள்கிறேன். நெருப்புடன் விளையாடுகிறேன் என்பது எனக்குத் தெரிந்துதான் இருந்தது. அஹிம்சை என்னுடைய மதத்தின் முதற்கொள்கை; கடைசிக் கொள்கையும் அதுவே. ஆனாலும் என்னுடைய தேசத்துக்கு மகத்தான தீங்கிழைத்த ஆட்சி முறையை என்னால் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. ஆகவே இந்தப் போரில் துணிந்திறங்கினேன். என்னுடைய நாட்டு மக்கள் சில இடங்களில் வெறி கொண்டு பயங்கரச் செயல்களை நிகழ்த்திவிட்டார்கள். அதன் பொறுப்பை நான் தட்டிக் கழிக்க விரும்பவில்லை. இந்தக் குற்றத்துக்கு அதிகமான தண்டனை எதுவோ அதை எனக்கு விதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ..... "

உலக சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நடை பெற்றிருக்கின்றன. ஆனால் எந்தக் கோர்ட்டிலாவது, எந்த வழக்கிலாவது, இப்படிக் 'குற்றவாளி' என்று கைதிக்கூண்டில் நின்றவர் ஒருவர், "எவ்வளவு அதிகமான தண்டனை உண்டோ அதை எனக்கு அளிக்க வேண்டும்!" என்று கேட்டதுண்டா? கிடையாது. இத்தகைய விந்தை இந்தப் புண்ணிய பூமியிலே தான் நடந்தது. ஆமதாபாத் செ ஷன்ஸ் கோர்ட்டில் 1922-ஆம் வருஷம் மார்ச்சு 18 - ஆம் தேதி நடந்தது.

காந்திஜி பின்னர் தாம் எழுத்து மூலம் ஏற்கனவே தயாரித்திருந்த வாக்கு மூலத்தைப் படித்தார். அந்த வாக்கு மூலத்தில், தாம் எப்படிப் பூரண இராஜ விறுவாசியாகத் தமது வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக ஏமாற்றமடைந்து, முடிவில் அரசாங்கத்தின்மேல் விரோதத்தைப் பரப்புவதையே தம்முடைய வாழ்க்கை இலட்சியமாகக்கொள்ள நேர்ந்தது, என்பதை விவரித்தார்.

அந்த வாக்கு மூலத்தில் காந்திஜி கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் சத்தியத்தின் ஒளியினால் சுடர்விட்டுப் பிரகாசித்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளையும் இந்திய மக்களின் மாசுகளையும் ஒருங்கே தகிக்கும் அக்கினி ஜ்வாலையாக அந்த வாக்குமூலம் திகழ்ந்தது.

"தென்னாப்பிரிக்காவில் 1893-ஆம் ஆண்டில் என்னுடைய பொது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. அந்த நாட்டில் பிரிட்டிஷ் அதிகாரத்துடன் எனக்கேற்பட்ட முதல் அனுபவம் அவ்வளவு சந்தோஷகரமாயில்லை. நான் இந்தியனாயிருந்த காரணத்தினால் எனக்கு மனித உரிமைகளே இல்லை என்று அறிந்தேன்.



இதனால் நான் திகைப்படைந்து விடவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி நல்ல ஆட்சிதான் என்றும், இந்தியர்களை நடத்தும் முறை அதில் ஏற்பட்ட சிறு கேடு என்றும், அந்தக் கேட்டைப் போக்கிவிடலாம் என்றும் நம்பினேன். ஆகையால் சர்க்காருடன் மனப்பூர்வமாக ஒத்துழைத்தேன்.

1899-ல் போயர் யுத்தம் ஏற்பட்ட போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கே அபாயம் நேர்ந்தது. அந்த நிலைமையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு என் மனப் பூர்வமான ஊழியத்தை அளித்தேன். போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகத் தொண்டர்படை திரட்டினேன். 1906-ஆம் ஆண்டில் ஸூலூ கலகத்தின்போதும் அத்தகைய ஊழியம் புரிந்தேன். இந்த ஊழியங்களுக்காகத் தென்னாப் பிரிக்கா சர்க்கார் எனக்கு மெடல்கள் வழங்கினர். இந்திய சர்க்காரும் 'கெய்ஸரி ஹிண்ட்' தங்கப் பதக்கம் எனக்கு அளித்தார்கள். இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் யுத்தம் மூண்ட போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். லண்டனில் வசித்த இந்தியர்களைக்கொண்டு யுத்த சேவைக்குத் தொண்டர் படை திரட்டினேன். கடைசியாக 1918-ல் டில்லியில் நடந்த யுத்த மகா நாட்டில் லார்ட் செம்ஸ்போர்டு செய்த விண்ணப்பத்தை முன்னிட்டு, என் உடல் நலம் கெட்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், கெயீரா ஜில்லாவில் சேனைக்கு ஆள் திரட்டும் வேலை செய்தேன். இந்த ஊழியங்களையெல்லாம் நான் செய்த போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் என்னுடைய நாட்டாருக்குப் பூரண சம அந்தஸ்துக் கிடைக்கப்போகிறதென்று எதிர்பார்த்தேன்.

ராவ்லட் சட்டத்தின் மூலம் எனக்கு முதலாவது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அச்சட்டம் என்னுடைய ஜனங்களின் சுதந்திரத்தை அடியோடு பறிப்பதாயிருந்தது. பிறகு பஞ்சாப் பயங்கர சம்பவங்கள் தொடர்ந்தன. இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பிரிட்டிஷ் முதல் மந்திரி அளித்த வாக்குறுதி காற்றில் விடப்பட்டதையும் கண்டேன்.

இவ்வளவுக்கும் பிறகு கூட, அமிருதசரஸ் காங்கிரஸில் மாண்டகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை ஒப்புக்கொண்டு நடத்திவைக்க வேண்டும் என்று நான் போராடினேன். அதன் மூலம் பஞ்சாப்-கிலாபத் அநீதிகளுக்குப் பரிகாரம் கிடைக்கும் என்று நம்பினேன்.

என்னுடைய நம்பிக்கை பாழாயிற்று. பஞ்சாப் கொடுமைகளுக்குக் காரணமாயிருந்த அதிகாரிகள் அவர்களுடைய உத்தியோகங்களில் நீடித்திருந்தார்கள். புதிய சீர்திருத்தங்களின் மூலம் இந்தியாவின் செல்வம் மேலும் சுரண்டப்படும் என்பதும் இந்தியாவின் அடிமைத்தனம் நீடிக்கும் என்பதும் தெளிவாயின."

பிரிட்டிஷ் ஆட்சியினால் இந்தியா அடைந்துள்ள தீங்குகளை மகாத்மா விவரித்து விட்டும் மேலும் கூறியவதாவது:-

"இந்திய மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக ஏற்பட்ட சட்டங்களுக்குள்ளே 124-ஏ முதன்மை ஸ்தானம் வகிக்கிறது. இந்திய மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான தேச பக்தர்கள் பலர் மேற்படி சட்டத்தின்கீழ்ச் சிறைப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இந்தச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப் பட்டதை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். தனிப்பட்ட அதிகாரி யார் பேரிலும் எனக்கு வெறுப்பு கிடையாது. அரரரிடத்திலும் எனக்கு அப்ரீதி கிடையாது. ஆனால் இந்தியாவில் முன் நடந்த எந்த ஆட்சியைக் காட்டிலும் அதிக தீங்கு செய்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சி முறையை வெறுப்பது என்னுடைய கடமை. இந்த ஆட்சி முறையில் விசுவாசம் வைப்பது பாவம். எனக்கு விரோதமான சாட்சியங்களாகக் குறிப்பிட்ட கட்டுரைகளை எழுதியது நான் செய்த பெரும் பாக்கியம்.

சட்டப் பிரகாரம் நான் செய்திருப்பது பெருங்குற்றந்தான்; ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் அது என்னுடைய பரம தர்மம். ஆகவே நீதிபதியாகிய தாங்கள் என்னை குற்றமற்றவன் என்று கருதினால் தங்களுடைய உத்தியோகத்தை ராஜினாமா செய்ய வேண்டும். என்னைக் குற்றவாளி என்று கருதினால் சட்டப்படி அதிகமான தண்டனை எது உண்டோ, அதை அளிக்கவேண்டும்"

இவ்விதம் மகாத்மா காந்தி உலக சரித்திரத்திலேயே பிரசித்தி பெறக்கூடிய வாக்குமூலத்தைப் படித்து முடித்தார். சற்று நேரம் கோர்ட்டில் நிசப்தம் நிலவியது. கோர்ட்டில் இம்மாதிரி வாக்கு மூலத்தை யாரும் அதுவரை கேட்டதுமில்லை; கேள்விப்பட்டதுமில்லை.

பின்னர், நீதிபதி புரூம்பீல்டு தமது கடமையை நினைவு படுத்திக்கொண்டு ஸ்ரீ சங்கர்லால் பாங்கரைப் பார்த்து நீங்கள் ஏதாவது சொல்லப்போகிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு ஸ்ரீ பாங்கர், "குறிப்பிட்ட கட்டுரைகளை அச்சிட்டுப் பிரசுரித்தது என்னுடைய பாக்கியம் என்று கருதுகிறேன். நான் குற்றவாளி என்று ஒப்புக்கொள்கிறேன். தண்டனையைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை" என்றார்.

நீதிபதி புரூம்பீல்டு பின்வரும் தீர்ப்பை எழுதிக் கோர்ட்டில் படித்தார்:-

"மிஸ்டர் காந்தி! குற்றவாளி என்று ஒப்புக்கொண்டதால் என்னுடைய வேலையை ஒரு விதத்தில் சுலபமாக்கிவிட்டீர்கள். ஆனாலும் உங்களுக்குத் தண்டனை என்ன கொடுப்பது என்பது எந்த நீதிபதியையும் திணறச் செய்யக் கூடிய கடினமான பிரச்னைதான். சட்டமானது மனிதர்களுக்குள் பெரியவர்கள் சின்னவர்கள் என்ற பேதம் காட்டக்கூடாது. ஆனபோதிலும் நான் விசாரித்திருக்கிற அல்லது விசாரிக்கக் கூடிய பிற குற்றவாளிகளுடனே உங்களை ஒன்றாகப்பாவிப்பது இயலாத காரியம். கோடிக் கணக்கான உங்கள் தேச மக்கள் உங்களை மாபெரும் தலைவராகவும் மகத்தான தேச பக்தர் என்றும் கருதுகிறார்கள் என்பதை நான் மறந்துவிட முடியாது. உங்களுடைய அரசியல் கொள்கைகளுடன் மாறுபட்டவர்களும் உங்களை உயர்ந்த இலட்சியங்களுடைய உத்தம புருஷராகக் கருதுகிறார்கள். எனினும் நான் உங்களை ஒரே ஒரு முறையில்தான் பார்க்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் சட்டத்துக்கு உட்பட்ட பிரஜை; சட்டத்தை மீறிக் காரியம் செய்ததாக நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் பலாத்காரத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்து வந்திருப்பதை நான் மறந்துவிட வில்லை. பல சமயங்களில் பலாத்காரம் நிகழாமல் தடுப்பதற்கும் முயன்றிருக்கிறீர்கள். ஆனாலும் உங்களுடைய அரசியல் பிரசாரத்தின் இயல்பும், யாரிடையே பிரசாரம் செய்தீர்களோ அவர்களுடைய இயல்பும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்தும் உங்களுடைய பிரசாரம் பலாத்காரத்திலேயே வந்துமுடியும் என்பதை எப்படி நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தீர்கள் என்பதை என்னால் அறிந்து கொள்ளவே முடியவில்லை.

உங்களைச் சுதந்திரமாக விட்டுவைப்பது எந்த அரசாங்கத்துக்கும் முடியாத காரியமாக செய்துவிட்டீர்கள். இதைக் குறித்து இந்தியா தேசத்தில் உண்மையாக வருத்தப்படாதவர்கள் யாருமே இல்லை. உங்களுக்கு நான் செலுத்தவேண்டிய கடமையையும் பொது நன்மைக்காக நான் செய்யவேண்டிய கடமையையும் சீர்தூக்கிப் பார்த்துத் தண்டனை விஷயமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். பன்னிரண்டு வருஷங்களூக்கு முன்னால் கிட்டத்தட்ட இதே விதமான வழக்கு ஒன்று இதே சட்டத்தின் கீழ் நடைபெற்றது. பால கங்காதர திலகரின் வழக்கைச் சொல்லுகிறேன். அவர் மீது முடிவாக விதிக்கப்பட்ட தண்டனை ஆறு வருஷம் வெறுங்காவல். ச்ரி திலகருடன் உங்களை ஒப்பிட்டு நடத்துவது நியாயமே என்று நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். ஒவ்வொரு குற்றத்துக்கும் இரண்டு வருஷம் வீதம் மொத்தம் ஆறு வருஷம் வெறுங்காவல் தண்டனை உங்களுக்கு அளிப்பது என் கடமை என்று கருதி அவ்விதமே தீர்ப்பளிக்கிறேன். ஆறு வருஷத்துக்கு முன்னதாகவே இந்தியாவின் நிலைமையில் ஏற்படும் மாறுதலினால் உங்களுடைய தண்டனைக் காலத்தைக் குறைத்து அரசாங்கம் உங்களை விடுதலைசெய்வது சாத்யமானால் அதன்பொருட்டு என்னைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி வேறு யாருக்கும் இராது."

இந்தியாவை அரசு புரிய வந்த ஆங்கிலேய அதிகாரிகளில் ஒரு சிலர் தீர்க்க திருஷ்டியும் பெருந்தன்மையும் படைத்தவர்களாயிருந்திருக்கிறார்கள். அவர்களில் மிஸ்டர் புரூம்பீல்டும் ஒருவர். மகாத்மாவின் பெருமையையும் அவருடைய தலைமையில் இந்தியா சுதந்திரம் அடையப் போகிறது என்பதையும் ஒருவாறு மிஸ்டர் புரூம்பீல்டு உணர்ந்திருந்தார். அத்தகைய உத்தம புருஷரைத் தண்டிக்க வேண்டி யிருக்கிறதே என்று கஷ்டப்பட்டுக் கொண்டே அவர் தீர்ப்பளித்திருப்பது நன்றாய்த் தெரிகிறதல்லவா?

பின்னர், ஸ்ரீ சங்கர்லாலுக்கு ஒரு வருஷம் வெறுங்காவலும் ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிபதி அளித்தார். தீர்ப்பைக் கேட்ட பிறகு காந்திஜியும் தம்முடைய திருப்தியைப் பின் வருமாறு தெரிவித்துக் கொண்டார்:-

"ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். லோகமான்ய பாலகங்காதரதிலகருடன் என்னை ஒப்பிட்டுக் கூறியதைப் பெறற்கரும் பேறாகவும் கருதுகிறேன். எனக்குத் தாங்கள் கொடுத்திருக்கும் தண்டனையைக் காட்டிலும் குறைவாக வேறு எந்த நீதிபதியும் கொடுத்திருக்க முடியாது. தாங்கள் என்னை நடத்தியதைக் காட்டிலும் மரியாதையாக யாரும் நடத்தி யிருக்கவும் முடியாது!"

இதைக் கேட்டுவிட்டு நீதிபதி புரூம்பீல்டு கோர்ட்டை விட்டுச் சென்றார். மனதில் பெரும் பாரத்துடனேதான் அவர் சென்றிருக்க வேண்டும். காந்திஜியோ முகமலர்ச்சியுடன் தம்மைச் சுற்றி நின்றவர்களைப் பார்த்தார். ஆசிரம வாசிகளும் நண்பர்களும் அவருடைய பாதங்களைத் தொட்டு விடை பெற்றுக் கொண்டார்கள். இப்படிச் செய்கையில் சிலர் கண்ணீர் விட்டார்கள்; சிலர் விம்மி அழுதார்கள். காந்திஜி ஒவ்வொருவருக்கும் ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லி தைரியப்படுத்தினார். ஸ்ரீ சங்கர்லால் பாங்கரும் புன்னகையுடன் விளங்கினார். அவர் குதூகலமாயிருப்பதற்குக் கேட்பானேன்? உலக சிரேஷ்டராகிய உத்தம புருஷருடன் கைதிக் கூண்டில் நின்று தண்டனை அடைந்து சிறை செல்லுவதற்கு எவ்வளவு அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்?

நண்பர்கள் அனைவரும் மகாத்மாஜி வற்புறுத்தியதன் பேரில் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றார்கள். பிறகு போலீஸார் மகாத்மாவையும் ஸ்ரீசங்கர்லால் பாங்கரையும் சபர்மதி சிறைக்குக் கொண்டு போனார்கள்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: