சனி, 13 அக்டோபர், 2018

1164. காந்தி - 47

41. சிறை வாழ்வு
கல்கி



கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ (பாகம்-2) -இல் எழுதிய கடைசி  41-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===



பூனாவுக்குச் சமீபத்தில் எரவாடா என்ற பெயரையுடைய ஊர் ஒன்று இருக்கிறது. அந்த ஊரைப் பற்றியாவது அதில் உள்ள பெரிய சிறைச் சாலையைப் பற்றியாவது அதற்கு முன்பு பலருக்குத் தெரியாது. தெரிந்த சிலரும் அந்த ஊரைப் பற்றி அதிகமாகச் சிந்தித்ததில்லை. திடீரென்று எரவாடா சிறை இந்தியா தேசத்தின் கவனத்தைக் கவர்ந்தது. சரித்திரத்திலே தனக்கு ஓர் இடத்தையும் சம்பாதித்துக் கொண்டது.

காந்திஜியின் விசாரணை, தீர்ப்பு எல்லாம் முடிந்ததும் அவரைச் சபர்மதி சிறையிலிருந்து எரவாடாவிலிருந்த பெரிய சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தார்கள்.

சிறைக் கதவு மூடியதும் மகாத்மாவின் உள்ளத்தில் நீண்ட காலமாக அவரை விட்டுப் பிரிந்திருந்த சாந்தி மீண்டும் வந்து குடிகொண்டது. அவ்வாறே வெளியில் இந்தியா தேசத்தின் நாடு நகரங்களிலும் அமைதி குடிகொண்டிருந்தது.

காந்திஜி ஆறு வருஷம் தண்டனை அடைந்த செய்தி மக்களின் உள்ளத்தில் பெருங் கலக்கத்தை உண்டாக்கியது. ஆயினும் அதன் காரணமாக நாட்டில் எங்கும் கலகம் அல்லது குழப்பம் ஏற்படவில்லை. கடையடைப்பு, ஹர்த்தால் முதலியவையும் நடைபெறவில்லை. இது விஷயத்தில் காந்திஜியின் இறுதிக் கட்டளையை நாட்டு மக்கள் பரிபூரணமாக நிறைவேற்றி வைத்தார்கள்.

"நான் சிறைப்பட்டால் கடையடைப்பு வேண்டாம்; கூட்டமும் வேண்டாம்!" என்று காந்திஜி திருப்பித் திருப்பி வற்புறுத்தியிருந்தது மக்களின் மனதைப் புண்படுத்தியிருந்தது. அதைக் காட்டிலும் சௌரி சௌரா சம்பவங் காரணமாக மகாத்மா மேற்கொண்ட பிராயச்சித்தமும் மக்களின் கண்களைத் திறந்திருந்தது.

'அஹிம்சை' என்று மகாத்மா சொல்வது ஏதோ காரணார்த்தமாக வெளிக்குச் சொல்லும் விஷயம் அல்லவென்பதையும், அஹிம்சை அவருடைய ஜீவிய தர்மம் என்பதையும் மக்கள் அறிந்துகொண்டு விட்டார்கள். அவ்விதம் அறிந்துகொண்டிருந்ததைக் காந்திஜி சிறைப்பட்ட சமயத்தில் நிரூபித்தும் காட்டிவிட்டார்கள்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மாஜி திரும்பி வந்ததிலிருந்து அவர் விஷயத்தில் இந்திய அரசாங்கத்தார் தனி மரியாதையுடனேயே நடந்து வந்தார்கள். அவருடைய நடவடிக்கைகளைத் தடை செய்ய நேர்ந்த காலங்களிலும் சர்வ ஜாக்கிரதையுடன் காரியம் செய்தார்கள். இரண்டு மூன்று தடவை அவரைக் கைது செய்து உடனே விட்டு விட்டார்கள். கோர்ட்டில் விசாரணை நடந்து மகாத்மாவைத் தண்டித்துச் சிறைக்கு அனுப்பியது இதுதான் முதல் தடவை! இந்த விசாரணையின் போது நீதிபதி புரூம் பீல்டு வெகு கண்ணியமாக நடந்து கொண்டார். மகாத்மாவை மிக்க மரியாதையுடன் நடத்தினார். தீர்ப்பிலேயே "மகாத்மா மற்ற சாதாரணக் கைதியைப் போன்றவர் அல்ல" என்பதையும் குறிப்பிட்டார்.

இதனாலெல்லாம் சிறையிலும் மகாத்மாவைச் சரியாக நடத்துவார்கள் என்றும் அவருக்கு அவசியமான சௌகரியங்களைச் செய்து கொடப்பார்கள் என்றும் அனைவரும் எதிர்பார்த்தார்கள். முப்பத்தைந்து கோடி மக்களின் ஒப்பற்ற தலைவரை சிறையிலே அடைத்தாலும், அங்கேயும் சமஅந்தஸ்துள்ள அரசரை நடத்துவதுபோல் அல்லவா நடத்த வேண்டும்! உலகத்தை உய்விக்க வந்த அவதார புருஷர் என்று கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் தலைவரை எவ்வளவு மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று சொல்லவும் வேண்டுமா?

ஆம்; சொல்ல வேண்டியதில்லைதான். இந்திய அதிகார வர்க்கத்தார் எவ்வளவு மோசமானவர்களாயினும் அவர்களுக்குக்கூட இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் எல்லாரும் நினைத்தது தவறு என்று சீக்கிரத்திலேயே தெரியவந்தது! அந்த விஷயத்தை அவர்களுக்கு வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் நேரிட்டது. இந்த அவசியத்தை நேரில் பார்த்து வற்புறுத்திச் சொன்னவர் நம்முடைய தலைவர் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்கள்.

காந்திஜியின் விசாரணை நடைபெற்ற சமயத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் வேலூர் சிறைச் சாலையில் இருந்தார். காந்திஜி சிறைப்பட்ட சில தினங்களுக் கெல்லாம் ராஜாஜி விடுதலையடைந்தார். அவரும் மகாத்மாவின் கடைசிப் புதல்வரான ச்ரி தேவதாஸ் காந்தியும் மகாத்மாவைப் பேட்டி காண்பதற்காகப் பூனாவுக்குப் போனார்கள். சிறையில் மகாத்மாவைக் கண்டு பேசினார்கள். அங்கே கண்டதும் கேட்டறிந்ததும் அவர்களுடைய மனதைப் பெரிதும் புண்படுத்தின. மகாத்மாவைச் சிறையில் சரியானபடி நடத்தவில்லை யென்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். மறுநாள் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியார் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கை விடுத்தார். "எங் இந்தியா" வில் ஒரு கட்டுரையும் எழுதினார். உண்மையுடனும் உணர்ச்சி வேகத்துடனும் எழுதப்பட்ட அக்கட்டுரையின் சாராம்சம் பின்வருமாறு:-

"கைதிக் கூண்டில் நின்ற மகாத்மாவைப் பார்த்து நீதிபதி புரூம்பீல்டு மிக அழகான சில வார்த்தைகளைச் சொன்னார். இதுவரை உங்களைப்போன்ற ஒருவரை நான் விசாரித்ததும் இல்லை; இனி விசாரிக்கப்போவதுமில்லை. இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் உங்களை ஒரு மகா தேசபக்தராகவும் மாபெருந் தலைவராகவும் எண்ணிப் போற்றுகிறார்கள். உங்களுடன் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களும் உங்களை உத்தம இலட்சியங்களையுடைய சத்புருஷர் என்று மதிக்கிறார்கள்.'

"இவ்விதம் நம்முடைய எதிரி என்று நினைக்கக்கூடியவர் பகிரங்கமாகச் சொன்னதிலிருந்து மகாத்மாவின் உடலைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள சிறை அதிகாரிகள் தங்களுக்கு எப்பேர்ப் பட்ட மகா பாக்கியம் கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து நடப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்; அற்பத்தனமான பழி வாங்கும் நோக்கத்துடன் காந்திஜியைச் சிறையில் நடத்த மாட்டார்கள் என்று நம்பினோம். இப்படியெல்லாம் எதிர்பார்த்த தில் மிகப் பெரும் ஏமாற்றம் அடைந்தோம்.

"காந்திஜியின் கடைசிப் புதல்வர் ஸ்ரீ தேவதாஸும் நானும் மகாத்மாவின் விசாரணையின்போது கோர்ட்டில் இருக்கக் கொடுத்து வைக்கவில்லை. எங்கள் கடமையில் ஈடுபட்டிருந் தோம். ஆகையால் ஏப்ரல் 1- மகாத்மாவைச் சிறை விதிகளின்படி பேட்டி கண்டு வருவதற்காகச் சென்றோம். சிறை வாசலில் நின்று இரும்புக் கம்பிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். சில நிமிஷத்துக்கெல்லாம் அரைத் துணி மட்டும் உடுத்த அந்த மெலிந்த உருவம் குதித்தோடி வந்ததைக் கண்டதும் எங்கள் இருதயம் நின்றுவிடும் போலிருந்தது. ஜெயில் சூபரிண்டெண்டின் அறைக்குள் அவரை இட்டுச் சென்று, எங்களையும் அங்கு வரச் சொல்லி அழைத்துச் சென்றார்கள். அதிகார வர்க்க அமுல் சட்டத்தின் பிரகாரம் சிறையின் அரசராகிய சூபரிண்டெண்ட் துரை தம்முடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். மகாத்மாஜியோ நின்று கொண்டே எங்களுடன் பேசும்படி நேர்ந்தது. பேச்சின் நடுவே ஜெயில் சூபரிண்டெண்டும் ஜெயிலரும் அடிக்கடி குறுக்கிட்டபடியால் எங்களுடைய சம்பாஷணையின் நேரமும் எதிர் பார்த்ததைவிட நீண்டு விட்டது.


"என்னதான் மூடி மறைக்கப் பார்த்தாலும் எங்களுக்கு உண்மை இன்னதென்பது தெரிந்து விட்டது. அதனால் அளவில்லா ஏமாற்றமும் உண்டாயிற்று. சிறை அதிகாரிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொறுப்பு எவ்வளவு மகிமை வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ளவில்லை யென்பதைக் கண்டோம். நீதிபதி புரூம்பீல்டின் பண்பாடு இவர்களுக்கில்லை. ஆகையால் காந்திஜி எப்படிப் பட்டவர் என்பதையும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. கெயிஸரையும், நெப்போலியனையும் விட எத்தனையோ மடங்கு உயர்ந்த மகான் என்பதை இவர்கள் அறியவில்லை. உலகமே போற்றி வணங்கக்கூடிய அவதார புருஷர் நம்மிடைய பொறுப்பில் விடப்பட்டிருப்பது நம் பூர்வ ஜன்ம பாக்கியம் என்று இவர்கள் பெருமையடையவில்லை. சோக்ரதர் என்ன, கௌதமபுத்தர் என்ன, ஏசுநாதர் என்ன, இப்படிப்பட்ட மகா புருஷர்களின் வரிசையில் சேர்த்து மண்ணுலகும் விண்ணுலகும் வணங்கக்கூடிய பெரியவருக்குச் சிசுருஷை செய்யும் பேறு கிடைத்ததே என்று எண்ணி இவர்கள் இறும்பூது கொள்ளவில்லை. ஏசுவையும் சோக்ரதரையும் கஷ்டப் படுத்தியவர்கள் அறியாமையில் மூழ்கியவர்கள் ஆனால் காந்திஜி எத்தகையவர் என்பதை அவருடைய எதிரிகள்கூட உணரும்படி உலகப் பிரமுகர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆகவே காந்திஜியைச் சிறையில் கஷ்டப்படுத்தும் இந்த அற்ப அதிகாரிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது இந்தப் பெரும் பொறுப்பை இந்த அற்ப புத்தியுள்ள சிறை அதிகாரிகளிடம் ஒப்புவித்து விட்ட சர்க்காரைப் பற்றித்தான் என்னவென்று கூறுவது!

"காந்திஜி தம்முடைய சொந்தப் படுக்கையை உபயோகிக்கவும் அநுமதிக்கப்படவில்லை. சிறையில் கொடுக்கும் தம்பளியில் படுத்துக் கொள்கிறார். தலையணை கூடக் கொடுக்க வில்லை.

"காந்திஜி பெரும்பாலும் பழ உணவு அருந்தி வாழ்கிறவர் என்பது பிரசித்தம். ஆயினும் சிறையில் அவருக்கு இரண்டு ஆரஞ்சுப்பழம் எண்ணிக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் ரொட்டியும் வெள்ளாட்டுப் பாலும் அளந்து கொடுக்கிறார்கள். இந்தச் சொற்ப உணவைக்கொண்டே காந்திஜியும் வற்றி உலர்ந்து போன உடம்பைக் காப்பாற்றிக் கொள்வார். அவருக்குப் போதிய உணவு தரவில்லையே என்பதற்காக நான் வருத்தப்பட வில்லை. ஆனால் சிறை அதிகாரிகள் இந்தத் தெய்வ மனிதரை அறிந்து நடக்கத் தெரியாத குருடர்களாயிருக்கிறார்களே என்றுதான் வருந்துகிறேன்.

"தூக்குத் தண்டனை கைதிகளை தனி அறையில் அடைத்திருப்பதுபோல் மகாத்மாஜியையும் அடைத்து வைத்திருக்கிறார்கள். இரவில் அறையில் போட்டுப் பூட்டிவிடுகிறார்கள். வராந்தாவில் படுக்கும்படி விட்டால் ஓடிப்போய் விடுவார் என்ற பயம் போலும்! பக்கத்தில் பேச்சுத் துணைக்கு ஒரு மனிதரும் கிடையாது. அவர் வழக்கமாகப் பாராயணம் செய்யும் மதநூல்கள் வேண்டுமென்றால் சர்க்காருக்கு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டுமாம்! படிக்கப் புத்தகமும் இல்லாமல் பேச்சுத் துணைக்கு ஆளும் இல்லாமல் தனி அறையில் மகாத்மாஜியை வைத்திருப்பது என்றால், இதை வெறுங்காவல் என்று சொல்ல முடியுமா? கடுங்காவலை விடக் கேடானது ஆகாதா?

இதெல்லாம் ஏமாற்றமாகவும் துயரமாகவுமே இருக்கிறது. ஆயினும் நம்முடைய பெருந்தலைவரை இந்தக் கஷ்டங்கள் எல்லாம் ஒன்றும் செய்துவிட மாட்டா என்று நாம் ஆறுதல் அடையலாம். அரசாங்கத்தின் அற்பத்தனத்தைக் கண்டு நாம் கோபம் கொள்ளக் கூடாது. அது நம் தலைவரின் போதனைக்கு மாறானது. பொறுமையைக் கடைப்பிடித்து மகாத்மாவின் கட்டளைகளைக் காரியத்தில் நிறைவேற்ற வேண்டும். அதுதான் நமது கடமை."

இவ்விதம் ராஜாஜி விடுத்த அறிக்கையானது தேசமெங்கும் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. அதிகார வர்க்கத்தின் தூங்கும் மனச்சாட்சிகூட விழித்து எழுந்தது. மகா வீரனாகிய நெப்போலியனை ஸெண்ட் ஹெலீனா என்னும் தீவில் சிறைப்படுத்தித் துன்புறுத்திய பழிச்சொல் பிரிட்டிஷாரை ஏற்கனவே அடைந்திருக்கிறது. மகாத்மாவைச் சிறையில் கேவலமாக நடத்தினார்கள் என்னும் அபகீர்த்தியும் தங்களை வந்து அடைவதற்குப் பிரிட்டிஷாரே விரும்பவில்லை. உடனடியாக மகாத்மாவை நடத்தும் விதத்தில் சில நல்ல மாறுதல்கள் ஏற்பட்டன. ஆனால் செய்த தவறை ஒப்புக்கொண்டால் அதிகார வர்க்கத்தின் மதிப்புக்குப் பங்கம் வந்து விடுமல்லவா? ஆகையால் ராஜாஜியின் அறிக்கையில் கண்ட விஷயங்களை மறுத்துச் சர்க்கார் அறிக்கை ஒன்றும் வெளி வந்தது. அதில் காந்திஜிக்குச் சிறையில் செய்து கொடுத்திருக்கும் சௌகரியங்களைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆனால் இம்மாதிரி முழுப் பூசினிக்காயைச் சோற்றில் மறைக்கும் காரியம் ராஜாஜியிடம் பலிக்குமா? மீண்டும் ராஜாஜி விடுத்த அறிக்கையில், சர்க்கார் அறிக்கையை வரிவரியாக எடுத்துப் பிய்த்து வாங்கிவிட்டார். அந்த அறிக்கையில் குறிப்பிட்ட வசதிகள் எல்லாம் தாம் மகாத்மாவைச் சந்தித்த பிறகு செய்து கொடுத்தவையாகவே இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்.

முடிவில் *காந்திஜியைச் சிறையில் நல்லபடியாக நடத்துவதற்கு ஏற்பாடு ஆயிற்று. இதை அறிந்த தேசமக்கள் ஒருவாறு மன அமைதி பெற்றனர்.
-------------
"மாந்தருக்குள் ஒரு தெய்வம்" இரண்டாம் பாகம் முற்றுப் பெற்றது.
====
[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

பி.கு.
” மகாத்மாவின் மகாதியாகம் வரை அதைக் கொண்டுபோய் நிறைவு செய்ய, இன்னும் மூன்று பாகங்களாவது எழுதும்படி இருந்திருக்கும். “மீண்டும் உசிதமான சமயத்தில் மூன்றாம் பாகம் ஆரம்பிக்கப்படும்” என்று கல்கி அறிவித்தார். ஆனால் அந்த உசிதமான சமயம் வரவேயில்லை.”  [ சுந்தா , “ பொன்னியின் புதல்வர்” ] 

இந்தத் தொடரை 8, பிப்ரவரி 48 இதழில் ( காந்திக்கு அஞ்சலி செலுத்திய அதே இதழில் )  தொடங்கினார் கல்கி.

அந்த வருடம் மார்ச் 28-ஆம் தேதி இதழில் கல்கி ‘அலையோசை” என்ற காந்தீய நாவலைத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 18 மாதம் வந்த நாவல் அது. 

கருத்துகள் இல்லை: