செவ்வாய், 25 டிசம்பர், 2018

1200. நாமக்கல் கவிஞர் -5

இயேசு கிறிஸ்து
நாமக்கல் வே.ராமலிங்கம் பிள்ளை

[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 

தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
  துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
  மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
  அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
   நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.

நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
  நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
  காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
  புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
  குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.

[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 


ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
  ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
  தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
  பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
  இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!

[ ஓவியங்கள்: நன்றி: https://www.facebook.com/FrescoRajam/  ]

தொடர்புள்ள பதிவுகள்:

நாமக்கல் கவிஞர்

1 கருத்து:

RSR சொன்னது…

"ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!"
**********************************************
அருமை ! அருமை! அருமையிலும் அருமை!
ஓவியமும் அற்புதம்.
இனிய கிருஸ்துமஸ் செய்திக்கு நன்றி.