புதன், 12 டிசம்பர், 2018

1192. சங்கச் சுரங்கம்: தீம்புளி நெல்லி

 தீம்புளி நெல்லி 
பசுபதி[ ‘ சங்கச் சுரங்கம் -3 ‘ என்ற என் புதிய நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை! நூல் கிட்டுமிடம்:
LKM Publication, 10, Ramachandra Street, T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241; கைபேசி : 99406 82929. 
;  சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் [ Stalls 492,493] வாங்கலாம்.
கூடவே என் சங்கச் சுரங்கம் -1, 2 தொகுதிகளும் அங்கே கிட்டும். ] 

[ சங்கச் சுரங்கம் -3 -இன் பொருளடக்கம் ]

========


எனக்கு உச்சி குளிர்ந்து விட்டது. குளிர வைத்தவள் என் தமிழ் மாணவி மஞ்சுளா. தொலைபேசி மூலம் அவள் கேட்ட வேண்டுகோள் தான் காரணம். 
” சார், நீங்கள் போன மாதம் நெல்லிக்கனி வரும் ஒரு சங்கப் பாடல் பற்றி எங்களுக்குச் சொன்னீர்களே? அதை மீண்டும் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்து விளக்கிச் சொல்ல முடியுமா?”  என்று கேட்டாள் மஞ்சுளா. வாரமொரு முறை என் வீட்டிற்கு வந்து அவள் சங்கப் பாடல் ஒன்றைக் கேட்பதே பெரிய விஷயம்? மீண்டும் கேட்பதா? என்ன விஷயம் என்று விசாரித்தேன். 
“ஒன்றும் இல்லை, சார். எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் புதிதாகச் சித்த, இயற்கை மருந்துகள், ஊறுகாய், மூலிகைப் பொருள்கள் போன்றவற்றை விற்கும் ஒரு கடை தொடங்கி இருக்கிறார். முக்கியமாக அவருக்கு ஊரில் ஒரு நெல்லிக்காய்த் தோப்பே இருப்பதால் நெல்லிக்காய் இருக்கும் சகல பொருள்களையும் --- ஊறுகாயிலிருந்து திரிபலா போன்ற மருந்துகள் வரை ---- அவர் விற்க எண்ணியிருக்கிறார். நம் ஊரில் அவர் கடையை அறிமுகம் செய்ய  என் தந்தையும், நானும்  பல நண்பர்களை எங்கள்  வீட்டிற்கு அழைத்திருக்கிறோம். அடுத்த வாரம் , ஞாயிறன்று ஒரு சிறு மதிய உணவு. நெல்லிக்காய்ச் சாதம்,  சாம்பார், பச்சடி, ஊறுகாய் என்று உணவு ‘சகலம் நெல்லிக்காய் மய’மாய். இருக்கும்! அப்போது முதலில், உணவுக்கு முன், நீங்கள் அந்த நெல்லிக்காய்ப் பாடலை எல்லோருக்கும்  சொன்னால் நன்றாய் இருக்குமே என்று கேட்டேன்!  அப்புறம் …. ஜெயா மாமிக்குச் சொல்லுங்கள், உணவுக்குப் பின் இரண்டு ஊறுகாய் பாட்டில்களும், ஒரு பை நிறைய நெல்லிக்காய்களும் எல்லோருக்கும் உண்டு! “ என்றாள் மஞ்சுளா.  

பின்னே என்ன? ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்தது,  எனக்குக் கிட்டப்போகும்  நெல்லிக்காய் ஊறுகாயை விடவா பெரிய விஷயம்? ( அடடா, “உங்கள் மாணவி தானே? மேலும் இரண்டு பாட்டில்கள் கேளுங்களேன்?” என்று ஜெயா அப்போது சொன்னது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. )   
அடுத்த வாரம். ஞாயிறு. எனக்குத் தெரிந்த பல தம்பதிகள்  மஞ்சுளா வீட்டில் கூடி இருந்தனர்.  அங்கிருந்த இளைஞர்கள் அவளுடைய கல்லூரி நண்பர்கள் போலும். ”சரி, என் பேச்சைக் கேட்டால் ஒருவேளை மேலும் சில மாணவர்களை என் தமிழ் வகுப்பிற்குச் சேர்க்க முடியுமோ” என்று எனக்கு ஒரு நப்பாசை பிறந்தது. 

தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினேன்.
“ நான் குறிப்பிடப் போகும் பாடல் குறுந்தொகையில் உள்ளது. மதுரைக் கண்டரதத்தன் என்ற புலவரின் இந்த ஒரு பாடல் தான் அந்நூலில் உள்ளது.  
பனிக் காலத்தில் வருவேன் என்று சொல்லிப் போனான் ஒரு தலைவன். இன்னும் வரவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள் அவள் தோழி. 

“ தலைவன் குறித்த பருவத்தில் நிச்சயம் வருவான்! கவலைப் படாதே! வட திசையிலிருந்து வீசும் வாடைக் காற்று மேகங்களைத் தென்திசையில் துரத்தும். அப்படிப்பட்ட தண்பனிக் காலத்தில் தலைவன் உன்னை விட்டு விட்டு எப்படி தனியாக இருப்பான்? நிச்சயம் உன்னிடம் வருவான்! அவனுடைய நாட்டில் மரையா என்ற ஒரு வகை மானினம் உள்ளது. தன்னினத்து பெண்மானிடம் மிகுந்த ஆசையுடைய அந்த மரையா இனத்து ஆண்மான் முதலில் நிறைய  நெல்லிக் காய்களைத் தின்னும். பிறகு, மலையில் உள்ள சுனை நீரில் விழுந்திருக்கும் மலர்களைத் தன் மூச்சுக் காற்றால் விலகச் செய்து, பின் அந்நீரைக் குடிக்கும். முதலில் உண்ணும்போது  புளிப்பாக இருக்கும் நெல்லிக்காய் நீரைக் குடித்தவுடன் இனிக்கும் அல்லவா? அந்த நெல்லிக்காய் போன்றதுதான் தலைவனுக்கு உன்னிடம் உள்ள காதலும்! முதலில் புளிப்பது போல் இருந்தாலும் கடைசியில் இனிக்கும்! “ என்கிறாள் தோழி.     


புரி மட மரையான் கரு நரை நல் ஏறு 
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது 
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து 
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன் 
நம்மை விட்டு அமையுமோ மற்றே -- கைம்மிக 
வட புல வாடைக்கு அழி மழை 
தென் புலம் படரும் தண் பனி நாளே ?
     --   மதுரைக் கண்டரதத்தன்,  குறுந்தொகை, 317 
[ நரை – பெருமை, வெண்மை ; வாடை – வடகாற்று ] 

பொழிப்புரை: விரும்புகின்ற அழகுடைய மரையா என்ற மானினத்தின் கருமையும், பெருமையும் உள்ள நல்ல ஆண் மான் , இனிய புளிப்புடைய நெல்லிக் காயைத் தின்னும். பிறகு அருகில் (நீரில்) உள்ள தேன்நிரம்பிய  அழகிய மலர்களைத் தன் சூடான மூச்சால் விலக்கி, பிறகு உயர்ந்த மலையில் உள்ள சுனை நீரைக் குடிக்கும். அத்தகைய நாட்டுடைய தலைவன், வாடைக் காற்றால் மேகங்கள் தெற்கில் போகும் தண்பனிக் காலத்தில் நம்மை விட்டுப் பிரிந்திருப்பானா? இல்லை, நிச்சயமாய் இங்கு வருவான் . “ 

என் பேச்சு முடிந்ததும் யாவரும் கைதட்டினர். பிறகு  மஞ்சுளா  எழுந்து நின்று, “சூப்பர், சார்! புளிக்கும் நெல்லிக் காய் தின்றுவிட்டு ‘ஜில்லென்று ‘ தண்ணீரைக் குடித்தால் இனிப்பாக மாறும் என்று அந்தக் காலத்தில் ஆண்மானுக்குக் கூடத் தெரிந்திருக்கிறதே ! ‘ என்றாள் . கூட்டத்தில் இருந்த பெண்கள் கூட இருந்த ஆண்களைப் பார்த்துக் கேலியாக நகைத்தனர்.   
”ஆம், இந்தக் காலத்தில் , இங்கிருக்கும் பெண்மான்களுக்கும் அது தெரிந்திருக்கும் அல்லவா? “ என்றேன் நான்.

சில இளைஞர்களும், பெண்களும் கைகளைத் தூக்கி “நாங்கள் அப்படிச் செய்த அனுபவமே இல்லையே? நெல்லிக்காய் ஜாம் ஒன்றைத்தான் ரொட்டியில் தடவிச் சாப்பிட்டு எங்களுக்குப் பழக்கம்! எப்போதாவது நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறோம்! அவ்வளவுதான்! ” என்று சொல்லவே, மஞ்சுளா உடனே அங்கே மருந்துக் கடை முதலாளி கொண்டு வைத்திருந்த ஒரு கூடையிலிருந்து நெல்லிக் காய்களையும், ‘ஐஸ் வாட’ரையும் அவளுடைய நண்பர்கள் யாவருக்கும் கொடுத்தாள். ( ஏனோ தெரியவில்லை - - மஞ்சுளா மட்டும் நெல்லிக்காய் தின்னவும் இல்லை, நீர் குடிக்கவும் இல்லை என்பதைக் கவனித்தேன்.) ’தீம் புளி நெல்லி மாந்தி’ நீர் குடித்த எல்லோரும் தங்களுக்கு இனிப்புச் சுவை தோன்றியதை ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில், மஞ்சுளா என்னிடம் வந்து, “ சார், மன்னிக்கவும், நீங்கள் இங்கிருந்து எல்லோருடன் பேசிவிட்டு , நிதானமாக உணவு அருந்திவிட்டு, மெதுவாகப் போகவும். நானும் என் நண்பர்களும் பக்கத்தில் உள்ள ஒரு தமிழ்ச் சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இப்போது போய்விட்டுப் பிறகு வந்து சாப்பிடுகிறோம். வயிறு கொஞ்சம் காலியாய் இருக்கும் போதுதான் சரியாகப் பாட முடியும் . அதனால் தான்” என்றாள்.

 ” ஓ? அப்படியா? தாராளமாய்ப் போ! போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்! ஆனால், நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு, குளிர்நீரைக் குடித்து விட்டுப் போனால் , பலருக்கும் தொண்டை கட்டிக் கொண்டு, பாட முடியாமல் போகுமே! “ என்றேன்.

“உஷ்! சார், மெள்ளப் பேசுங்க, சார்! அதனால் தானே நான் இன்று இந்த விருந்தை ஏற்பாடு செய்தேன்? நான் மட்டும் நெல்லிக்காயும் சாப்பிடவில்லை! ‘ஐஸ் வாட’ரும் குடிக்கவில்லை!” என்று சொல்லிக் ‘களுக்’ கென்று சிரித்தாள் மஞ்சுளா.

அடப் பாவமே! ’என் ‘ சங்கப் பாடல் இப்படியா பயன்பட வேண்டும்? ~*~o0O0o~*~
தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 
2 கருத்துகள்:

Govindaraju Arunachalam சொன்னது…

குறுந்தொகைப் பாடல் விளக்கம் புதுமையாக உள்ளதே! அருமை! அருமை!

Pas Pasupathy சொன்னது…

நன்றி. முழு நூலுக்கும் ஒரு ம்திப்புரை எழுதுங்கள், கவிஞர் இனியன் அவர்களே!

கருத்துரையிடுக