சனி, 25 ஏப்ரல், 2020

1529. சங்கச் சுரங்கம்: குறிஞ்சிப் பாட்டு

குறிஞ்சிப் பாட்டு 
பசுபதி



 சங்கச் சுரங்கம் -1 ‘ என்ற என் நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை! நூல் கிட்டுமிடம்:
LKM Publication, 10, Ramachandra Street, T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241; கைபேசி : 99406 82929. ]
=====


'காதலர் தின'த்தில் 'ட்ரிங்' என்று அடித்ததுமே,  அது என் இளம் நண்பன் அருணாகத் தான்  இருக்கவேண்டும், வழக்கம்போல் அவனுக்கும் அவன் காதலிக்கும் ஏதோ ஒரு 'காதல் தின' 'லடாய்'  என்றும்  நினைத்துக் கொண்டே தொலைபேசியை எடுத்தேன்; சாக்ஷாத் அருணேதான்! அவனுக்கு உற்சாகத்துடன் நூறாயுசு 'வரம்' நான் கொடுப்பதை, நடுவில் தடைசெய்து  அலறினான் அருண். "சார், அதெல்லாம் அப்புறம்  இருக்கட்டும். இன்றைக்கு என்னை நீங்கள் காப்பாற்றா விட்டால், நான் அல்பாயுசு  தான்! என் 'காதல்' வாழ்க்கை இன்றோடு 'ஹோ கயா' ! சமாப்தி ! அழிஞ்சிடும் ! " என்றான்.

விஷயம் இதுதான். ஒவ்வோர் ஆண்டு 'காதலர் தின'த்திலும், வெவ்வேறு கடினமான நிபந்தனைகளைப் போடுவது அவன் காதலிக்கு வழக்கம். இந்தத் தடவை,  நூறு மலர்களின் பெயர்கள் கொண்ட கவிதை ஒன்றை மாலைக்குள் அவளிடம் 
சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறாளாம்.

"இவ்வளவு  தானே! அது உன் சுயமான கற்பனையாய் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லையே ! நீ பிழைச்சே! போ! நான் அப்படிப்பட்ட ஒரு கவிதை தருகிறேன். உண்மையைச் சொல்லப்போனால்,  இப்படிப்பட்ட கவிதை உலக இலக்கியத்திலேயே தமிழில் தான் இருக்கிறது.  அதுவும் , எனக்குத் தெரிந்து 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்று இது ஒன்றுதான் இருக்கிறது   " என்று அருணைச் சமாதானப்  படுத்தினேன்.

 'அடேயப்பா,  அதென்ன கவிதை' என்று புருவங்களை உயர்த்துகிறீர்களா? சொல்லத்தானே போகிறேன்!

 'குறிஞ்சிப் பாட்டு'  கபிலரின் மிகச் சிறந்த  கவியாரம் . 'பத்துப் பாட்டு'  வரிசையில் 261 அடிகள் உடைய எட்டாவது நூல்.  அதன் இறுதியில் ,  " ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்ததற்குக் கபிலர் பாடியது '  என்று குறிப்பு இருப்பதால், தமிழில் ஆர்வமிருந்த ஒரு வடநாட்டு அரசனுக்குத்  தமிழுக்கே உரிய சிறப்பான அகப்பொருளின் பெருமையை விளக்கக் கபிலர் இயற்றிய பாடல் இது என்பதும் புரிகிறது.

அகப்பொருளை ஐந்து திணைகளாகப் பிரித்தனர் தமிழர். இது தமிழிலக்கியத்திற்கே உரிய ஒரு சிறப்பு. அந்த ஐந்தில் முதல் திணை குறிஞ்சி; குறிஞ்சித் திணையைப்  பற்றிப் பாடும் இலக்கியம் காதலனும், காதலியும் சேர்வதற்குக் காரணமாக
இருப்பவற்றையும், அவர்கள் இன்புற்றிருப்பதையும்  விவரிக்கும்.

" அப்படியானால் , டொராண்டோ  போன்ற மலையற்ற நகரங்களில்  காதலர் சேரமுடியாது என்கிறீர்களா?  நான் ஆல்பெர்டா போன்ற மாகாணத்திற்கு வேலையை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா?" என்று அலறினான் அருண்.

"அசடே! எல்லா இடங்களிலும் காதல் நடைபெறும். ஆனால், இயற்கை பூத்துக் குலுங்கும் மலைப் பிரதேசத்தில் காதலும் செழித்து வளருமல்லவா? அதனால் தான்  " பாட்டுக்கு ஏற்றபடி சுருதி அமைத்துக் கொள்வதுபோல் ,  காதலுக்கு ஏற்ற நிலைக்களனை வகுப்பதால் இலக்கியச் சுவை அதிகரிக்கின்றது " என்று சொல்கிறார்  அறிஞர் கி.வா.ஜகந்நாதன்” என்றேன்.

பாடலின் பொருளைச் சுருக்கிக் கூறத் தொடங்கினேன்.

 " 'அன்னையே! வாழிவேண்டு அன்னை'

என்று தொடங்குகிறது பாடல். தலைவியின் நோய்க்குக் காரணம் தெரியாமல்  வருந்தும் செவிலித் தாய்க்குத் தோழி சொல்வது போல் அமைந்த பாடல். 

களவுக் காதலில் தன் மனத்தைப் பறி கொடுத்த தலைவி , காதலனைச் சில நாளாகப் பார்க்க முடியாதலால், வருந்துகிறாள். தன் காதலை ஊரார் அறிந்தால் என்ன நடக்குமோ  என்ற பயத்தில் அவள் உடலும் மெலிகிறது.

"சார், அந்தக்  காலத்துத் தலைவன் அதிர்ஷ்டக் கட்டை, சார். என் காதலி , நான் ஆறு மாதம் பார்க்கலையென்றாலும்,  தன் உடலைப் பக்கவாட்டுப் பரிமாணத்தில்  நன்றாய்  வஞ்சனை இன்றி  வளர்த்துக் கொண்டே .... வேணாம் , சார் ! நீங்கள் தொடருங்கள் ! "  என்று முனகினான் அருண்.

 தலைவி தோழியிடம் சொல்லியிருந்த காதல் விவரங்களைத் தோழி செவிலித்தாயிடம்  சொல்கிறாள்.   தினைப் புனத்தில் கிளி போன்ற பறவைகளை ஓட்டிவிட்டு, மலையருவியில் நன்றாகக் குளித்துவிட்டு, தங்கள் கூந்தலின் ஈரம் போக உலர்த்திக் கொள்கின்றனர் தலைவியும், தோழியும். பிறகு பாறையின் மேல் பல மலர்களைப் பரப்பினர் .

இந்த இடத்தில். . .

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்குயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கோடு வேரி, தேமா, மணிச்சிகை,
. . .
என்று தொடங்கிக் கபிலர் 35 அடிகளில் 99 மலர்களின் பெயர்களை மலையருவி போலவே  பொழிகிறார்.

'' அற்புதம்! அற்புதம்!  அந்த அடிகளை மட்டும் எழுதிக் கொடுங்கள்; நான் போகிறேன்"  என்றான் அருண்.

" இருடா, அவசரக் குடுக்கை, பாடலின் மீதியைக் கேட்டால்தான் கொடுப்பேன் " என்று தொடர்ந்தேன்.

 மலர்மாலை அணிந்து அசோக மரத்தின் அடியில் அமர்ந்த பெண்கள் முன், தோன்றினான் தலைவன். வில்லும், அம்புமாய் வந்த அவன் பின் சில வேட்டை நாய்களும் வந்தன. நாய்களைக் கண்டு அஞ்சிய பெண்களுக்கு ஆறுதல் சொல்லி,
தான் வேட்டையாடிய விலங்கு ஏதேனும் அப்பக்கம் வந்ததா என்று வினாவுகிறான் தலைவன் .

"சார் ! நான் இல்லாதபோது ஒரு சொறிநாய்ப்பயல் என் காதலியைத் துரத்துகிறான், சார்" என்று இடைமறித்தான் அருண். "அந்தப் பிரச்சினையை அப்புறம் பார்க்கலாம். நீ பேசாமல் முதலில் 'குறிஞ்சிப் பாட்'டைக் கேள்" என்று அதட்டித் தொடர்ந்தேன்.

அப்போது, மதம் பிடித்த யானை ஒன்று ஓடிவந்தது. அம்பினால் அதை ஓடும்படிச் செய்த தலைவன் , தலைவியைத் தழுவி, அவளை என்றும் பிரியேன் என்று உறுதி சொல்லி, அதற்கோர் அடையாளமாக நீரை கையில் எடுத்து ஒரு  கை குடித்தான். அந்த யானை காரணமாகத் தலைவியும், தலைவனும்
காதலில் இன்புற்றதால், இதைக் 'களிறு தரு புணர்ச்சி' என்பார்கள்.

"சார்! 'சொறிநாய் தரு புணர்ச்சி' என்று ஒன்று இருக்கிறதா, சார்? ஒரு நாள் இல்லாவிட்டால், ஒரு நாள், அந்த சொறிநாய்ப் பயலை செருப்பால் அடித்துத் துரத்தத் தான் போகிறேன் சார் " என்று கத்தி, உணர்ச்சி வசப்பட்ட அருணைத் திரும்பச் சமாதானப் படுத்தினேன். மனத்தில் ஒன்று தோன்றிவிட்டால், அந்தப்
பாதையிலிருந்து அருணை இழுப்பது கடினம்.   

 பகல் முழுதும் காதலியுடன் பொழுது போக்குகிறான் தலைவன். மாலை வருகிறது .இந்த இடத்தில் கபிலர் சொல்லும் மாலை வர்ணனை நெஞ்சைக் கவ்வும் . 

'ஏழு குதிரைகள் கொண்ட  தேரைச் செலுத்தும் சூரியன் மேற்கில் மறைகிறான். மான்கள் கூட்டமாக மரத்தின் அடியில் வந்து சேர்கின்றன. பசுக்கள் 'அம்மா' என்ற குரல் கொடுத்துக் கன்றுகளை அழைத்து, கொட்டில்களில் புகுகின்றன.
பனை மடலின் உள்பக்கம் தங்கும், ஊதுகொம்பு போல் ஒலிக்கும் ஆண் அன்றில் பெண் அன்றில் ஒன்றை அழைக்கின்றது. பாம்புகள் தம் மாணிக்கக் கற்களை உமிழ்ந்து,  அவை கொடுக்கும் ஒளியில், இரை தேடப் புறப்படுகின்றன. இடையர்கள் 'ஆம்பல்'  என்னும் பண்ணில் புல்லாங்குழல் ஊதுகின்றனர். ஆம்பல் மலர்களும் மலர்கின்றன. அந்தணர்கள் அந்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். செல்வர்கள் மனைகளில்  பெண்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். காட்டில் உள்ள வேடர்கள், விலங்குகள் வராமல் இருக்க , பரண்மீது தீக்கடை கோலால் நெருப்பு மூட்டுகின்றனர்.  மலையைக் கருமேகங்கள் சூழ்கின்றன. காட்டு மிருகங்கள் 'கல்'லென்று  முழங்குகின்றன. பறவைகள் கூட்டுக்குள் ஆரவாரிக்கின்றன. ' என்று வர்ணிக்கிறார் கபிலர்.  'குறிஞ்சிப் பாட்டில்' முப்பதுக்கு மேல் அழகான உவமைகள்  உள்ளன என்பர் அறிஞர்கள்.   இதனால் தானோ, என்னவோ, 'குறிஞ்சி  பாடக் கபிலர்' என்பார்கள்.


பிறகு, நாடறிய அவளை முறைப்படி மணம் செய்துகொள்வதாக வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டுப் பிரிகிறான் தலைவன். அதற்குப் பின் ஒவ்வோரு நாளும் இரவில் தலைவியைச் சந்தித்து , பேசிப் போவது தலைவனின் வழக்கம்.
வரும்போது, ஊர்க்காவலர்கள் வந்தாலும், நாய்கள் குரைத்தாலும், நிலாவின் ஒளி  மிகுந்தாலும் காதலியைச் சந்திக்காமல் திரும்பிச் சென்றுவிடுவான். அவன் வரும் காட்டு வழியில் உள்ள இன்னல்களை நினைத்துக் கண்ணீர் விடுவாள் தலைவி.

இந்தக் களவுக் காதலின் வரலாற்றைக் கூறி, அந்த இளம் காளைக்குத் தன் தலைவியைத் திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செவிலித் தாயிடம் ஏற்படுத்துகிறாள் தோழி.   

"பின்னே  என்ன? செவிலித்தாய் பெண்ணின் பெற்றொருக்குச் சொல்வாள். அவர்கள் 'சரி என்று   'பூம், பூம்' மாடுகள் போல் தலையாட்டுவார்கள். 'டும், டும், டும்' தான்... நாகஸ்வரம், மூன்று முடிச்சு, தமிழ்ச் சினிமா முடிவுதான் என்று சொல்லுங்கள்?
என்னைப் போலவா? " என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்த அருணிடம்  அந்த மலர்கள் வரும் பகுதியை மட்டும் எழுதிக் கொடுத்தேன்.

இரவு 11 மணி; நான் நினைத்தபடி அருணிடமிருந்து ஒரு தொலை பேசிச் செய்தி. காதலியிடம் சென்று மலர்களின் பெயர்கள் உள்ள 'குறிஞ்சிப் பாட்டின்' பகுதியைப்
படித்தானாம். ஒரே ஒரு பிரச்சினை தான் முளைத்ததாம். கண்குத்திப் பாம்பு மாதிரி மலர்களின் பெயர்களை எண்ணிக் கொண்டே வந்த காதலி, 'எங்கே? 99  தானே? ஒன்று குறைகிறதே"  என்று அவனை வெளியில் தள்ளிக் கதவைத் தாழ்ப்பாள்  போடப் போனாளாம்.

"அட, ரொம்ப சாமர்த்தியமான பெண்ணாய் இருக்கிறாளே ? எப்படிச் சமாளித்தாய்" என்று வியந்தேன்.

"அதான், 'சரோஜா!' என்று உன் பெயரை முதலில் சொல்லித் தானே இந்த மலர்ப் பட்டியலைப் படித்தேன்! நீயே ஒரு மலர் தானே! உன்னையும் சேர்த்தால் நூறு வந்து
விடுகிறதே " என்று சொன்னேன். " 

“ வாயுள்ள பிள்ளை பிழைக்கும்; உண்மைதான். ஆனால், அடுத்த வருஷம் உன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். உடனே , அடுத்த வருடம் ‘மனைவியர் தினம்’ கொண்டாடும் வழியைப் பார் !”  என்று அருணிடம் சொல்லிவிட்டுத் தொலைபேசியைக் கீழே வைத்தேன்.



~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 

பசுபடைப்புகள்
 

 

2 கருத்துகள்:

ELANDHAI சொன்னது…

அற்புதம். கதைபோல சுவையாகச் செல்கிறது

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, இலந்தை.