வெள்ளி, 12 ஜூன், 2020

1560. ஏ.என்.சிவராமன் - 2

ஏ. என். சிவராமன்
அ.ச.ஞானசம்பந்தன்



கம்பன் விழாவிற்குச் செல்லும் காரணத்தால், தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

பத்தாவது வகுப்புவரைமட்டுமே படித்த அந்த அறிஞர் பொருளாதாரம் அரசியல் என்ற துறைகளில் மாபெரும் அறிஞராகவே விளங்கினார். அவர் எழுதிய விவசாயிகள் பற்றிய நூல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வகுப்பு மாணவர்கட்குப் பாடமாகக்கூட வைக்கப் பெற்றிருந்தது. எவ்விதப் படாடோபமுமின்றி என்னிடமும் என் குடும்பத்தாரிடமும் நெருங்கிப் பழகியவர் திரு. ஏ.என்.எஸ். 1960 முதல் சென்னையிலிருந்து என் காரிலேயே காரைக்குடி கம்பன் விழாவிற்குச் செல்லும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். இவர் மிகப் பல ஆண்டுகள் என்னுடன் என் வண்டியிலேயே வீடு திரும்புவார். அந்த மாமனிதரின் எளிமைக்கு ஒர் எடுத்துக்காட்டு பின்வருமாறு:

ஆண்டு சரியாக நினைவில் இல்லை. 1962 அல்லது 1963 ஆக இருக்கலாம். திரு. சிவராமன் தொலைபேசி மூலம் அழைத்து டேய் சம்பந்தா, நான் உன்னுடன் வருகிறேன்என்றார். நான் அப்போது வைத்திருந்தது ஃபியட் கார். ஒட்டுபவர், நான் என்ற இருவர் தவிர, விழாவிற்கு வருவதாக ஆசைப்பட்ட இருவரை அழைத்துச் செல்வதாக ஒப்புக்கொண்டிருந்தேன். வசதி படைத்த சிவராமன், இந்த வண்டியில் ஐந்தாவது ஆளாக வருவதை நான் விரும்பவில்லை. எனவே, முழு விவரத்தையும் அவரிடம் சொல்லி, “நீங்கள் தனியே வாருங்கள்என்றேன். இல்லைடா உன் மடிமேல் ஏறிக்கொண்டாவது, அதில்தான் வருவேன்என்றார். புறப்படும் நாள் வந்தது. என்னுடைய ஒட்டுநர் குப்புசாமியை அழைத்து வண்டியை எடுத்துக் சென்று சிவராமனை அழைத்துவருமாறு வழி சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த என் மனைவி டேய் குப்புசுவாமி, அவரைப் பார்த்தால் மிக்க அப்பாவி மாதிரி இருப்பார். ஜாக்கிரதை, மிக்க மரியாதையுடன் அழைத்து வாஎன்று கூறினாள். இந்த நேரத்தில் என் மனைவி சொன்னது தேவையில்லாதது என்று நான் கருதினேன். ஆனால், பின்னர் நடந்ததை நினைந்து பார்க்கும்பொழுது அவள் சொன்னது எவ்வளவு சரியென்று பட்டது. ஒட்டுநர் ஏ.என்.எஸ் வீட்டிற்குச் சென்றார். பட்டா சாலையில் குப்புறப் படுத்துக்கொண்டு, ஒரு கைக்கு அணையாக ஒரு தலையணையை வைத்துக்கொண்டு வலக்கையால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். அவர் அந்த வீட்டுச் சமையல்காரன் என்று நினைத்து விட்டான் குப்புசாமி. ஒ ஐயரே என்று விளித்து, இன்ன வீட்டிலிருந்து வந்திருக்கிறேன். இந்த வீட்டு ஐயாவை அழைத்துப்போவதற்காக என்று கூறிவிட்டு, காருக்குத் திரும்பிவிட்டான். ஏ.என்.எஸ் அவர்கள் ஒரு ஜமக்காளத்தில் ஒரு தலையணைச் சுற்றிக் கையில் எடுத்துக் கொண்டு வந்து, டிக்கியைத் திறக்குமாறு கேட்டார். ஒட்டுநர் "ஓ ஐயரே, அங்கே படுப்பதற்கு எல்லாம் தருவார்கள். ஐந்து பேர் போக வேண்டும். இந்தப் படுக்கைக்கெல்லாம் இடமில்லை என்று முரட்டுத் தனமாகக் கூறிவிட்டான். நீ சொல்வது சரிதான் என்று கூறிய ஏ.என்.எஸ் படுக்கையை உள் கொண்டு சென்று போட்டுவிட்டார். இனிமேல்தான் வீட்டுக்காரர் பெரியவர் வரப்போகிறார் என்ற நினைப்புடன், குப்புசாமி வண்டியின் கதவருகே மிக்க பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு ஒர் அதிர்ச்சி, யாரைப் பார்த்து ஒ ஐயரே என்று கூப்பிட்டானோ, அதே மனிதர் ஒரு சிறு கைப்பெட்டியுடன்வண்டிக்குள் வந்து அமர்ந்துவிட்டார். கையும் ஓடாமல் காலும் ஓடாமல் வண்டியை ஒட்டிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். வண்டியை நிறுத்திவிட்டு, வாரன் ரோடில் அமைந்திருந்த என் வீட்டின் பின்புறமாகச் சென்று அம்மா, அம்மாஎன்று கத்தினான். முன்புறத்தில் சிவராமனை நானும் என் மனைவியும் வரவேற்றுக்கொண்டிருந்தோம். குப்புசாமியின் குரலைக் கேட்டு என் மனைவி பின்புறம் சென்றாள். ஒட்டுநர் குப்புசாமி பெருந் தவறு நடந்துவிட்டது என்று சொல்லி, நடந்தது முழுவதையும் விவரித்துவிட்டான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, முன்புறம் வந்த என் மனைவி, நடந்தவற்றை அப்படியே சொல்லி, அவன் சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

இந்த விநாடிதான் சிவராமன் என்ற மனிதர் மாமனிதராக வளரும் சூழ்நிலை உருவாயிற்று. விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, டேய் குப்புசாமி என்று அவரே அழைத்தார். மிகவும் பயத்துடன் அவன் அவர் எதிரே வந்து நின்றான். குப்புசாமி, இன்றிலிருந்து போய்த் திரும்புகிற நான்கு ஐந்து நாட்கள் வரை இந்த வண்டி என்னுடையது. நீ என்னுடைய ஒட்டுநர். யார் சொல்வதையும் நீ கேட்கத் தேவையில்லை. நான் சொல்வதுபோல் செய்துவிட்டால் போதும் என்று சொல்லிவிட்டார். பிறகு புத்தம் புதிய ஒரு ரூபாய் தாள் 100 அடங்கிய ஒரு கட்டை அவனிடம் கொடுத்துவிட்டு, இதை வைத்துக்கொள் வண்டிக்குப் பெட்ரோல் எல்லாம் அ.ச. போட்டுவிடுவார். இந்த ரூபாயெல்லாம் எதற்கு என்று நினைக்கிறாயா? வண்டி புறப்படும் முதல் காரைக்குடி போய்ச் சேரும்வரை வேர்க்கடலை, நுங்கு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவற்றைச் சாலையில் எங்கே கண்டாலும், உடனே வண்டியை நிறுத்தி வாங்கிக்கொள். சாப்பிட்டுக் கொண்டே போகலாம் என்று கூறினார். அவர் சொன்னபடியே செய்தோம். காலையில் 9 மணிக்கு சென்னையை விட்டுப் புறப்பட்ட நாங்கள், வேர்க்கடலை, நுங்கு முதலியவற்றை வாங்கித் தின்றுவிட்டு இரவு 8 மணிக்குக் காரைக்குடி போய்ச் சேர்ந்தோம்.

 'தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமனை மிகப் பலருக்குத் தெரியும். ஆங்கிலம், தமிழ், வடமொழி என்ற மூன்றிலும் வல்லவர். நான்கு வேதங்களையும் அத்யயனம் பண்ணச் சொல்லி, அதனைப் பெரிய டேப்புகளில் பதிவு செய்து ஓயாமல் கேட்டுக்கொண்டே இருப்பார். ஒரு ஒட்டுநர் காட்டிய அவமரியாதையையும் மிக அன்புடன் ஏற்றுக்கொண்டு, அவனை ஒரு மகன்போல நடத்திய பொழுது சிவராமன் என்ற மனிதருக்குள் ஒரு மாமனிதர் புகுந்திருப்பதைக் காணமுடிந்தது. ஒரு முறை, காரைக்குடி விழாவில் தாடகையைப் பற்றிப் பேச வேண்டியவர் வரவில்லை என்பதைக் கடைசி நேரத்தில் அறியவந்த கணேசன் என்ன செய்வதென்று தெரியாமல் சிவராமனைக் கேட்டார். அப்பொழுது சிவராமன் முன்னறிவிப்பு இல்லாமல் பேசவேண்டும் என்றால், அந்தப் பய அ.ச. எங்கேயாவது வெற்றிலையைப் போட்டுக்கொண்டு குதப்பிக்கொண்டு இருப்பான். ஒலிபெருக்கியில் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுஎன்றார். இவ்வாறு நடந்தது ஒன்றும் எனக்குத் தெரியாது. கணேசன் என் பெயரைச் சொல்லி அழைத்ததும் எங்கோ இருந்த நான் வேகமாக ஓடிச் சென்றேன். நான் உள்ளே சென்றதும் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், தாடகைபற்றி நான் பேசுவேன் என்று அறிவித்துவிட்டார். வேறு வழியில்லாமல் பேசத் தொடங்கியதால் புதிய சிந்தனை உருவாயிற்று. சட்டம் ஒன்றேயாயினும் கீழ்நீதி மன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்ற மூன்று  ஏன் இருக்கிறது என்று தொடங்கி, சட்டத்தைக் கூறும் சொற்றொடரும் அந்தச் சட்டத்தின் எண்ணிக்கையும் மாறப்போவதில்லை. அப்படியிருக்க மூன்று நீதிமன்றங்கள் ஏன் என்ற வினாவைக் கேட்டு, அதன் பொருளையும் கூறினேன் சட்டம் ஒன்றுதான். ஆனால் அதில் காணப்பெறும் வார்த்தைகளுக்குப் பொருள் கூறும் முறையில் புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. எனவே, ஒரே சட்டத்திற்கு விளக்கம் கூறும் முறையில் (interpretation of law) நீதிமன்றங்கள் பணிபுரிகின்றன என்று கூறிவிட்டு, தாடகையைப்பற்றிப் பேசத் தொடங்கினேன். தாடகை பெண் என்பதால் அவள்மீது அம்பைத் தொடுக்க இராமன் விரும்பவில்லை. இராமனுக்குக் கல்வி போதித்த வசிட்டன், பெண்ணின்மேல் அம்பு எய்யாதே' என்று சொல்லியிருந்தான். அந்தப் பாடம் இராமன் மனத்திடை ஆழமாகப் பதிந்திருந்ததால் அம்பைத் தொட்டாலும் பெண் என மனத்திடைப் பெருந்தகை நினைந்தான் இப்பொழுது விசுவாமித்திரன் உச்ச நீதி மன்றமாகப் பணிபுரிகிறான். 'இராமா, வசிட்டன் சொல்லிக் கொடுத்த பாடம் சரி’, 'பெண்என்றுதான் வசிட்டன் கூறினானே தவிர, யார் பெண் என்று கூறவில்லையே இங்கே பெண் என்ற சொல்லுக்கு விளக்கம் தருவதன்மூலம், விசுவாமித்திரன் இராமன் ஐயத்தைப் போக்குகிறான். வடிவத்தால் பெண் ஆயினும் இவள் பெண் அல்லள் என்று விளக்குவதன் மூலம் இராமன் ஐயத்தைப் போக்கிவிட்டான். வசிட்டன், கீழ் நீதிமன்றம்; விசுவாமித்திரன் உச்ச நீதிமன்றம் பெண்ணின் மேல் அம்பு விடக் கூடாது' என்ற சட்டத்தை விசுவாமித்திரன் மாற்றவில்லை. ஆனால் யார் பெண் என்பதை விளக்குவதன்மூலம், அந்தப் பழைய சட்டத்திற்குப் புதிய விளக்கம் தந்துவிட்டான்.

இதனை இவ்வளவு விரிவாகக் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. எதிரே அமர்ந்திருந்த சிவராமன் இதை நான் கூறி முடித்தவுடன் மேடையின்மேல் எழுந்துவந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ஒலிபெருக்கியின் மூலம் பின்வருமாறு பேசினார். ஏ. கணேசா, இனிமேல் இந்தப் பயலுக்கு எந்தத் தலைப்பும் தந்து பேசச் சொல்லாதே. இப்படித் திடீரென்று கூப்பிட்டுப் பேசச் சொன்னால்தான் புதிய சிந்தனைகள் தோன்றும் என்றார். சிவராமன் என்ற மாமனிதரின் மற்றொரு வெளிப்பாடு இது.

தாம் சிரிக்காமல் பிறரைச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை சிவராமனிடம் நிரம்ப உண்டு. கம்பன் விழா நடைபெறும்பொழுது ஏதோ ஒரு நாளில் திருப்பெருந்துறை சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிவராமன் நினைத்தார். முன்னர்ப் போய்வந்தவன் ஆதலால் எனக்கு ஒரளவு வழி தெரியும் ஒரு ரெயில்வே கேட்டிலிருந்து ஏழு மைல் சென்றால் திருப்பெருந்துறை அடையலாம் என்று நான் கூறினேன். பக்கத்தில் கணேசன் இருந்தார். சிவராம்ஜி இவன் கிடக்கிறான் இவனுக்கு என்ன தெரியும்? நான் சொல்கிறேன். அந்த ரெயில்வே கேட்டிலிருந்து ஒரு மைல் போனவுடன் திருப்பெருந்துறையைக் காணலாம் என்றார். நாங்கள் புறப்பட்டோம். குப்புசாமி தான் வண்டி ஒட்டினான். ரயில்வே கேட் வந்தது. அடே குப்புசாமி! சரியாக ஒரு மைல் போனவுடன் வண்டியை நிறுத்துஎன்றார் ஏ.என்.எஸ். ஒரு மைல் போனவுடன் நட்ட நடு ரோட்டில் வண்டி நின்றது. சுற்று வட்டாரத்தில் எந்த ஊரும் இல்லை. சிவராமன் வண்டியிலிருந்து இறங்கினார். "எல்லோரும் இறங்குங்கள் என்றார். ஒன்றும் புரியாமல் எல்லோரும் இறங்கினோம். சா.க. கணேசன்) சொன்னால், அது எப்படித் தப்பாக இருக்கமுடியும் திருப்பெருந்துறை பூமிக்குள் போய்விட்டது. இப்பொழுது வண்டியைச் சுற்றி வந்து திருப்பெருந்துறை ஈசனுக்கு வணக்கம் செலுத்துவோம்என்றார். அப்படியே அனைவரும் செய்தோம் பிறகு வண்டியில் ஏறிக்கொண்டு டேய் சம்பந்தா, நீ சொன்ன திருப்பெருந்துறைக்கு இனிமேல் போகலாம் என்றார். பிறகு திருப்பெருந்துறை சென்று வழிபட்டுவிட்டு, காரைக்குடி திரும்பினோம். மிக்க ஆவலோடு கணேசன் என்ன சிவராம்ஜி நான் சொன்னபடி திருப்பெருந்துறை சென்றீர்களா, தரிசனம் செய்தீர்களா? என்று கேட்டார். ஒரு சிறிதும் சிரிப்பில்லாமல் நீ சொன்ன திருப்பெருந்துறைக்கும் சென்றோம். இந்தப் பயல் ஏழு மைல் தூரத்தில் உள்ள திருப்பெருந்தறைக் கோயிலைக் காட்டினான். அந்தத் திருப்பெருந்துறையையும் தரிசனம் செய்தோம். ஒரு சின்ன வித்தியாசம். நீ சொன்ன இடத்தில் இருந்த அத்திருப்பெருந்துறை முழுவதும் பூமிக்கு அடியில் போய்விட்டது. நீ தவறு சொல்லமாட்டாய் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பதால் அந்த இடத்தில் இறங்கி சுற்றிவந்து வழிபட்டோம். இந்தப் பயல் காட்டிய புதிய திருப்பெருந்துறையையும் தரிசனம் செய்துவந்தோம். - இத்தனைக்கும் ஒரு புன்சிரிப்புக்கூட இல்லாமல் பேசினார் சிவராமன். அந்த மாமனிதரின் மற்றொரு பக்கம் இது.

இவையனைத்தும் ஒரு புறமிருக்க, சிவராமன் அவர்கள் மூலமாக இறைவனே எனக்கொரு பேருதவி செய்தான். அதை இங்கே விவரிப்பது இன்றியமையாததாகும். அமரர் கிருஷ்ணசாமிப் பிள்ளை திருமதி உருக்குமணி அம்மாள் என்ற தம்பதியர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தந்து பன்னிரு திருமுறைக் கட்டில்என்ற ஒன்றை நிறுவினர். அதன் சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக அந்த அமைப்பின் கிளையாகக் காஞ்சியில் நிலவிய தத்துவத் துறையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். பெரிய புராணத்தைப் பற்றிய ஒர் ஆய்வை மேற்கொண்டிருந்தேன். நல்ல வடமொழி அறிஞரும் வேத விற்பன்னருமாகிய அமரர் டாக்டர் நஞ்சுண்டன் என்னுடன் பணிபுரிந்தார். அவரிடம் ரிக்கு வேதம், கிருஷ்ண யசுர் வேதம் ஆகியவற்றை ஒரளவு பயின்றுவந்தேன். கிருஷ்ண யசுர் வேதத்தின் நான்காவது பிரபாடகத்தின் இறுதியில் அமைந்துள்ள ஸ்ரீருத்ரம்பற்றி ஒரு நெடிய ஆய்வை மேற்கொண்டேன். அந்த மூன்று ஆண்டுகள் உழைப்பின் பயனாகப் பெரிய புராணம் ஒர் ஆய்வு' என்ற நூலை எழுதி முடித்தேன். ஸ்ரீருத்ரம்பற்றிய ஆய்வு அந்த நூலில் இடம்பெற்றாலும், இது எந்த நேரத்தில் யாரால் எப்படி யாகமாகச் செய்யப்பெற்றது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே, 1985ல் பெரியபுராணம் ஒர் ஆய்வு 800 பக்கங்களுக்கு மேல் உள்ள பெருநூலாக வெளிவந்தாலும் பூரீருத்திரத்தின் அடிப்படையென்ன என்பதுபற்றி அப்பதிப்பில் ஒன்றும் எழுத முடியவில்லை. இக்குறை என்மனத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது.

ஏ.என்.சிவராமன் அவர்கள் கிருஷ்ண யசுர் வேதத்தைப் பெரிய ஒலி நாடாக்களில் பதிவு செய்து, எங்குச் சென்றாலும் அதை எடுத்துச்செல்வது வழக்கம். ஒய்வு நேரங்களில் அதை இயந்திரத்தில் ஏற்றித் தன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக இயர் போனைப் (ear phones) பயன்படுத்திக் கேட்டுக்கொண்டேயிருப்பார். ஒரு முறை கம்பன் விழாவிற்காகக் காரைக்குடியில் கம்பன் மணிமண்டபத்தில் நாங்கள் தங்கியிருந்தபொழுது யசுர் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்களே, ஸ்ரீ ருத்திரம் எங்கே எப்பொழுது செய்யப்பெற்றது என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன். புன்சிரிப்புடன் "சம்பந்தா ஒவ்வொரு ஒலி நாடாவும் 1200 அடிநீளமுள்ள ஒலிநாடாக்கள். இதுபோல் பத்தொன்பது ஒலிநாடாக்கள் உள்ளன. இதில் எங்கே போய்க் கண்டு பிடிப்பதுஎன்றார். எப்படியாவது தாங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்றவுடன், ஒரு விநாடி கண்ணை மூடிக்கொண்டிருந்து விட்டு, "சம்பந்தா! நீயும் கண்ணை மூடிக்கொண்டு ஒலிநாடாக்கள் வரிசையாக இருக்கும் இந்தப் பெட்டியில் கையை வைத்து ஒன்றை எடுஎன்றார். "சிவராமா இது என்ன கொடுமை! நீங்கள் கிளிஜோசியக்காரனும் அல்லர். நான் ஜோசியம் கேட்க வந்தவனும் அல்லன் என்று சொல்லிச் சிரித்தேன். இதற்குள் எங்களைச் சுற்றி ஐம்பது பேருக்குமேல் கூடிவிட்டனர். அதுபற்றியே கவலைப்படாத சிவராமன் அவர்கள் "சம்பந்தா! நான் சொல்லுகிறபடி செய் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்என்றார். வேறு வழியில்லாமல், ஆண்டவனை மனத்தில் நினைத்துக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு ஒரு ஒலிநாடாவை எடுத்து அவரிடம் தந்தேன். ஒலிபெருக்கியை காதில் மாட்டிக் கொண்டு நாடாவை இயந்திரத்தில் சுழலவிட்டார்.

அவர் முகம் மலர்ந்துவிட்டது. சம்பந்தா! நீ அதிர்ஷ்டக்காரன். நீ கேட்டது கிடைத்துவிட்டதுஎன்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். சற்றும் எதிர்பாராத ஒர் அதிசயம் அன்று காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் காலை எட்டுமணியளவில் நடைபெற்றுவிட்டது. பல ஆண்டுகளாக நான் தேடிய வேதத்தின் ஒரு பகுதி இப்பொழுது கைமேல் கிடைத்துவிட்டது. கருட சயனம் என்ற ஒரு யாகம் ஆயிரத்தெட்டு (1008) செங்கற்களைக் கருட வடிவில் புதைத்து அதன் வயிற்றுப் பகுதியில் இருந்துகொண்டு செய்யப்பெறுவதாகும். யாகத்தைப் புரியும் ஆச்சாரியன் வயிற்றுப் பகுதியில் அமர்ந்துவிட்டான். பணம் தந்து யாகம் நடத்தும் தலைவன் வெளியே இருந்துகொண்டு 'யாகத்தைத் தொடங்கலாமா? என்று கேட்கிறான். அப்பொழுது ஆச்சாரியன் பின்வருமாறு விடைகூறுகிறான். ஏனைய யாகங்களில் உருத்திரனுக்கு அவிஸ் இல்லாததுபோல இந்த யாகத்திலும் அவனுக்கு அவிஸ் கிடையாது. ஆனால் மிகக் கொடியவனாகிய ருத்திரன் இந்த யாகம் நிறைவேறாமல் ஏதாவது குழப்படி  செய்துவிடுவான். எனவே, அவனைத் திருப்திப்படுத்தும் முறையில் இந்தக் கருடப் பறவையில் இடது இறக்கைக்கு வெளியே அவனுக்கு ஒரு ஹோமம் செய்ய வேண்டும். இந்த யாகத்தில் பயன்படுத்தக்கூடாத பொருள்களைக் கொண்டே அந்த ஹோமத்தைச் செய்ய வேண்டும். இந்த யாகத்தில் செப்புப் பாத்திரத்தைப் பயன்படுத்துகிறோம். மண் சட்டியைத் தொடவே கூடாது இந்த யாகத்தில் காராம்பசுவின் பாலைப் பயன்படுத்துகிறோம். ஆட்டுப்பால் பக்கத்தில்கூட வரக்கூடாது. இந்த யாகத்தில் பாலை நெருப்பில் எடுத்துச் சொரியும் சுரு' என்ற கரண்டிபோல மாவிலையைப் பயன்படுத்துகிறோம். எருக்கலையைத் தொடவே கூடாது. இப்பொழுது இடப்புற இறக்கைக்கு வெளியே அமர்ந்து கொண்டு, ருத்திரனுக்கு ஒரு ஹோமம் செய்யப் போகிறேன். மண்சட்டியில் ஆட்டுப்பாலை நிரப்பிக் கொண்டு, மாவிலைக்குப் பதிலாக எருக்கிலையைப் பயன்படுத்தி, ஸ்ரீ ருத்திர மந்திரங்களைச் சொல்லி உருத்திரனுக்கு இதைச் செய்துவிட்டால் அவன் திருப்தியடைந்துவிடுவான். எனவே, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்என்று கட்டளையிட்டான் ஆச்சாரியன்- என்ற பகுதி ஸ்ரீருத்திரத்தின் அநுவாகமாக உள்ளது என்பதை அன்று எனக்குத் தெளிவுபடுத்தியவர் ஏ.என்.சிவராமன் அவர்களே யாவார். அவர் தந்த விளக்கத்தைச் சற்று விரிவாக எழுதிப் பெரிய புராணம் ஒர் ஆய்வு என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் பிற்சேர்க்கை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். இந்தப் பேருபகாரத்தைச் செய்தவர் ஏ.என்.சிவராமன் என்ற மாமனிதரே யாவார்.



தொடர்புள்ள பதிவுகள்:

ஏ.என்.சிவராமன்

3 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

வல்லமை கொண்ட மனிதர் திரு .சிவராமன்.ஏ.என்.எஸ்
ஒரு மறக்க முடியாத அற்புதம். நன்றி.

Settaikkaran சொன்னது…

சார், இவர்தானே why, the Vietnam War? எழுதியவர்?

Pas S. Pasupathy சொன்னது…

I am sorry, but I don't know. Google search does not seem to show such a book.If you get a link to such a book, let me know.