16. அப்துல்
லா.ச.ரா
நண்பர் பகவன்தாஸின் வீட்டு வேலைக்காரன் அப்துல்லை ”அஞ்ஞான வாசத்தில் அர்ச்சுனன்” என்று வர்ணிக்கிறார் லா.ச.ரா. அ-அ என்ற மோனையால் மட்டுமல்ல, ” பிராசம் மட்டுமல்ல, பொருளிலும் பொருத்தமான அளபெடை அர்ச்சுனன்தான்” என்கிறார் விடாப்பிடியாக. ஏனென்று அறிய, மேலே படியுங்கள்.
இது ‘சிந்தா நதி’யில் 16-ஆவது அத்தியாயம்.
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்; ஓவியம்: உமாபதி ]
தொடர்புள்ள பதிவுகள்:
லா.ச.ராமாமிருதம் படைப்புகள்
லா.ச.ரா
நண்பர் பகவன்தாஸின் வீட்டு வேலைக்காரன் அப்துல்லை ”அஞ்ஞான வாசத்தில் அர்ச்சுனன்” என்று வர்ணிக்கிறார் லா.ச.ரா. அ-அ என்ற மோனையால் மட்டுமல்ல, ” பிராசம் மட்டுமல்ல, பொருளிலும் பொருத்தமான அளபெடை அர்ச்சுனன்தான்” என்கிறார் விடாப்பிடியாக. ஏனென்று அறிய, மேலே படியுங்கள்.
இது ‘சிந்தா நதி’யில் 16-ஆவது அத்தியாயம்.
- என் நண்பர் பக்வன்தாஸ். அவரை பற்றித் தனிப்பட எழுதவே விஷயம் இருக்கிறது. அவரை நினைத்ததுமே முந்திக் கொண்ட இடைச் செருகல் இது.
என் நண்பர் தாஸ், வசதிகள் படைத்திருந்தும், ஒழுங்காக வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏனோ அவருக்கு ராசியில்லை. சமையற்காரன் சரியாக அமைவதில்லை. ஒன்று வந்த இரண்டு வாரங்களுக்குள் அவனுக்கு வேலை வேறெங்கேனும் கிடைத்துவிடும். சொல்லிக் கொள்ளாமலே கம்பி நீட்டிவிடுவான். அல்லது சமையல் அவனுக்குச் சரிப்படாது. அவனே நின்றுவிடுவான். அல்லது-
இவரும் சாமான், பதார்த்தம் வாங்கக் கொடுக்கும் பணத்துக்கு அதிகணக்கன். ஒரு சோடா குடிச்சேன் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார். அது சாக்கில் தர்க்கம் முற்றி, அவன் தன் கணக்கைப் பைசல் பண்ணச் சொன்னால், அந்த நேரம்வரை அவன் சம்பளம் ரூ.17.31 என்று கணக்காகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு பைசாவை இப்போ அது செல்லுபடியில் இல்லை எப்படியேனும் தேடிப்பிடித்து அப்படித்தான் கணக்குத் தீர்ப்பார். கணக்கில் தன் சூரத்தனத்தைக் காட்ட அல்ல. இது அவருடைய கொள்கை.
போகிறவனை இரு என்று தடுக்கமாட்டார். தானாகவும் வேலையிலிருந்து நீக்கமாட்டார். இதுவும் கொள்கையைச் சேர்ந்ததுதான்.
எப்படியோ மாதம் பாதி நாள் புஹாரியிலிருந்து பிளேட் வரவழைத்தாகணும். நித்தியப் படிக்கு அவருக்கு அசைவ உணவு இல்லாமல் முடியாது.
சொந்த வீட்டுக்காரர், மாடியில் வாசம். கீழே அலுவலகம்.
ஒருநாள் அவருடைய நண்பர் ஒருவர், சமையலுக்கு ஒரு ஆளைச் சிபாரிசு செய்தார். ஸிந்தி எனக்கு எங்கே புரியும் கிளுகிளு கடகட- தண்ணிரின் ஓட்டம் போன்ற ஓசை பாஷை. கூட வந்திருந்தவன்மேல் என் பார்வை சென்றது.
அஞ்ஞாத வாசத்தால் அருச்சுனன்- இந்தச் சொற்றொடர் உடனே எனக்குத் தோன்றுவானேன்?
25, 26 இருந்தால் அதிகம். கறுகறு புருவங்களடியில் சாம்பல் நிறத்தில் தணல் விழிகள். அவை மேல் கவிந்த நீண்ட நுனி சுருண்ட ரப்பைகள். கூரிய மூக்கு. கூரிய மோவாய். ஜாதி வேட்டைநாயின் கம்பீர அமைதி,
பரிச்சயம் முடிந்து, மாடிக்குச் செல்ல அவனைப் பணித்ததும், ஸேட்ஜிக்கு அவன் அடித்த ஸல்யூட்டில் ராணுவப் பயிற்சி தெரிந்தது.
அவனுக்கு மாற்று உடை இருந்ததாகத் தெரியவில்லை. வந்தபடியே தங்கி விட்டான். முன் பணம் கொடுத்து எசமான் உதவினாரோ என்னவோ?
உடனே அவன் காரியங்களில் இறங்கிய லாகவம், வியக்கத் தக்கதாயிருந்தது.
அடுத்த நாளிலிருந்தே என் நண்பரின் நாட்கள் துளிர்ப்பு கண்டு, பரிமளமும் வீசத் தொடங்கின.
அவனுடைய சமையல்! சமையலா அது? "அம்ருத்
ராமா, அம்ருத்!"
அப்போ அஞ்ஞாத வாசத்தில் நளன்.
நானே பார்த்தேன். அடுப்பிலிருந்து சுடச்சுட சப்பாத்தியைத் தோசைத் திருப்பியில் கொண்டு வந்து அவர் கலத்தில் போடுகையில், அவன் பொன்னிறம், தங்கத் தகடு லேசு, கத்தரித்து எடுத்தாற் போன்ற வட்டம், பார்க்கவே வாயில் ஜலம் ஊறிற்று. கூடவே அவன் சிக்கனை அதன் மேல் வடிக்கிறானே! இல்லாவிடில் நானும்....
"ராமா, இந்த ஆள் செய்யற நான்-விஜ் டிஷஸ் இங்கே இல்லை. சிங்கப்பூர், ஜப்பானில், பெரிய ஓட்டலில் இவன் ட்ரெயினிங் எடுத்திருக்கணும். ராமா, ஐ ம் லக்கி."
சமான்களின் கணக்கை அவன் சீட்டில் குறித்து, சீட்டுமேல் சில்லரையையும் ஸேட் எதிரில் வைத்துவிட்டு, அவன் பாட்டுக்கு மேல காரியத்துக்குப் போய்விடுவான். அனாவசிய சகஜம் கொண்டாடவில்லை. பேச்சிலே கொஞ்சம் பிகுதான்.
இதெல்லாம் கிடக்கட்டும். இவை அவன் வேலை.
மொட்டை மாடியில் வேப்ப மரத்திலிருந்து, ஜமக்காளம் விரித்தாற் போன்று உதிர்ந்திருந்த பூ, இலை, சருகு, செத்தையை அப்புறப்படுத்தி, வீட்டுக்கு ஒட்டடை அடித்து, சோப்பும் பினாயலும் பக்கெட்டில் கரைத்து வாரம் ஒரு முறை மாடி பூரா அலம்பி,
அது அதுக்கு அதனதன் இடம்.
அடுக்கி, சீர்படுத்தி,
நாற்காலி, சோபாக்களுக்கு உறை மாற்றி,
படுக்கையை வெய்யிலில் காய வைத்து உதறி,
திரும்பப் போட்டு,
(கட்டின பெண்டாட்டி, 'உங்களுக்கெல்லாம் சமைத்துப் போடணும்னு என் தலையெழுத்தா? என்று கேட்கிற நாள் இது!)
மூக்கைச் சிந்திவிட்டு, ஈரத்தால் முகம் துடைத்து, பவுடர் அப்பி, முதுகைத் தட்டி, முத்தம் கொடுத்தாற் போல, வீட்டுக்கே ஒரு முகப்பு கண்டதும்-
சேட்டுக்கு ஐஸ் வைக்கும் நோக்கத்தில் ஈதெல்லாம் செய்ததாகத் தோன்றவில்லை. அவனுக்கு அடிப்படையாக அசுத்தத்துக்கும் அவலக்ஷணத்துக்கும் இருந்த அஸஹிப்புதான் காரணம் என்று நினைக்கிறேன்.
தினமும் இரண்டு வேளை குளியல். ஒரு சமயம் தற்செயலாய் அவன் உடம்பைத் துவட்டிக்கொண்டே குளியலறையிலிருந்து வெளிப்படுவதைக் காண நேர்ந்தது. உடலின் ஒரு தோல் வயண்டாற்போல அப்படியா ஒரு செங்கதிரொளி நிறம்? பதினாறு கால் மண்டபத் தூண் ஒன்றிலிருந்து சிற்பம் உயிர்த்துப் புறப்பட்டாற்போல் தேகக்கட்டு, பென்சில் கோடுபோல் துளிர்மீசையில் லேசான தங்கச் செவ்வரி படர்.
ஒரு நாள் இரவு எல்லா வேலையும் முடிந்து, நண்பரும், நானும் அவருடைய அறையில் பேசிக்கொண்டிருக்கையில், -அப்படி நான் வெகுநேரம் தங்குவதுண்டு- என் வீடு அவர் வீட்டுக்கு மூன்று வீடுகள் தாண்டி அடுத்த தெருவில் மூன்றாவது வீடு, மொட்டை மாடியிலிருந்து ஒரு தீர்க்கமான குரல் பாட்டில் புறப்பட்டது.
இரவின் அந்த முதிர்ந்த வேளைக்கு, அகண்ட வான் வீதியில், மேகங்கள் அற்ற, நக்ஷத்ரங்களின் துணையுமின்றித் தளித்து நின்ற முக்கால் நிலவில்,
வேப்ப மரத்தினின்று உதிர்ந்த பூவர்ஷத்தில்,
ஒளியும், நிழலுமாய் மரத்தின் இலைகள், பூமியில் வீழ்த்திய பிரம்மாண்டமான கோலத்துக்கு,
குளிர்ந்த ஸன்னமான காற்றின் நலுங்கலில்,
குரல் ஒருவிதமான அசரீரமும், அமானுஷ்யமும் கொண்டு,
சினிமா பாட்டுத்தான்- (முகல்-இ-ஆஸாம்?)
எங்களுக்கு எலும்பே கரைந்து விடும்போது....
அவர் கண்களில் ஸ்படிகம் பளபளத்தது.
இவன் யாவன்? இது பிறவி அம்சம், ஸாதக விளைவு அல்ல.
இத்தனை வளங்கள் இவனுக்கு வழங்கியிருக்கும் இயற்கை, கூடவே வறளி விள்ளலால் தலையில் விதியை எழுதியிருப்பானேன்?
அதுதான் ப்ரஞ்ச லீலா.
அஞ்ஞாத வாசத்தில் நளன்....
இல்லை.
அஞ்ஞாத வாசத்தில் அர்ச்சுனன்.
பிராசம் மட்டுமல்ல. பொருளிலும் பொருத்தமான அளபெடை அர்ச்சுனன்தான் சரி. இதுதான் என் இஷ்டம். போங்களேன்; கடைசி எடையில் இஷ்டம்தான் இலக்கணம். இலக்கணத்தையே மாற்றி அமைக்கும் இலக்கணம்.
ஆபீசுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தேன்.
"ஸேட் கையோடு அழைத்துவரச் சொன்னார்....' என்று பையன் வந்தான். அவர் வாசலில் கோலி விளையாடும் பையன், போனேன். எனக்குக் கொஞ்சம் சிடு சிடுப்புத்தான். ஏற்கெனவே 'லேட்.'
நான் உள்ளே நுழைகையில், யாரோடோ பேசிவிட்டு அப்போதான் போனைக் கீழே வைத்தார். அவர் முகம் மிக்க கலவரமடைந்திருந்தது. மிக்க மிக்க.
"ராமா, ஸேஃப் துறக்கவில்லை."
இதென்ன அவ்வளவு முக்கியமான சமாச்சாரமா? நான் என்ன செய்ய? ஆனால் நான்தான் அவருக்கு மந்திரி.
"கம்பெனிக்குப் போன் பண்ணினா, ஆள் வரான்," என்று சோபாவில் சாய்ந்தேன்.
"நோ, நோ, ராமா, யு டோண்ட் அண்டர்ஸ்டாண்ட். இது சீரியஸ் 45 வருஷம் ஸ்மூத் ஆகத் திறந்து மூடறேன். இன்னிக்கு சாவி சிக்கிக்கிட்டு டர்ன் பண்ணமாட்டான். கம் ஹியர்."
சாவியை நுழைக்கும் சந்தைச் சுட்டிக் காண்பித்தார். சுற்றும் உள்ளேயும் கீறல்கள். ஒருவரை யொருவர் திருதிருவென விழித்தோம்.
மேல் இருந்து ஆள் இறங்கி வரும் சத்தம். பீங்கான் பிளேட்டில் மெத்தென இரண்டு 'தோசா'.... மேலே வெளுப்பாய்ச் சட்னி, சட்னி மேல் உருகிக் கொண்டிருக்கும் நெய்யின் பளபளப்பு.
மேஜை மீது வைத்துவிட்டு, ஆபீஸ் அறையைத் தாண்டியதும் குஷியாக விசில் அடித்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.
பக்வன்தாஸின் நண்பர் வந்துவிட்டார். இருவரும் தனியாகத் தங்கள் பாஷையில் குமைத்தனர். பெல்லை அழுத்தி அவனை வரவழைத்து, விசாரணை தொடங்கிற்று விசாரணையா அது? இரண்டு வார்த்தைகள். ஏதோ வந்தவர் கேட்டார். ஹிந்தியும் அறியேன். அவன் ஏதோ இல்லையென்று தலையை ஆட்டினான். இவர் திடீரென எழுந்து மூர்க்கமாக அவன் முகத்தில் இரண்டு குத்து. அதிலிருந்து அவன் தேறுவதற்குள் வயிற்றில் ஒன்று. நான் முகத்தைப் பொத்திக் கொண்டேன். பக்வன்தாஸுக்கு முகம் சுண்ணாம்பாக வெளுத்துவிட்டது. தடுக்க முயன்றார். முடியவில்லை. அந்த மனுஷனுக்கு வெறி பிடித்துவிட்டது. தான் சிபாரிசு பண்ணின ஆள் என்கிற ரோஷம். பையன் கூழாகிவிடுவான் என்று பயமாகி விட்டது.
என் நண்பர் அவசரமாகப் போன் பண்ணினார். பத்துக் கட்டடம் தாண்டினால் போலீஸ் ஸ்டேஷன்.
நிமிஷமாக வாசலில் ஜீப் நின்றது. ஒரு இன்ஸ்பெக்டரும், இரண்டு சிவப்புத் தலைப்பாக்களும் இறங்கினார்கள். "மிஸ்டர் பக்வன்தாஸ், க்யா ஹூவா?" பையனைப் பார்ததும் இன்ஸ்பெக்டருக்கு முகமே மலர்ந்தது. "அரேரே பழைய புள்ளின்னா!" பட்சத்துடனேயே அவன் தோள் மேலே அவர் கை விழுந்தது என்று சொல்லலாமா?
இரண்டு கைகளையும் சேர்த்துப் பூட்டு ஏறிவிட்டது.
ஒரு கணம் எசமானனும், வேலைக்காரனும்- கண்கள் சந்தித்தன.
கவித்வம் சொரியும் துயரக் கண்கள்.
"ஸாரி அப்துல்...."
உயிரின் ஒருமை, ஆத்மாவின் கெளரவம் வெளிப்படும் விதம், தன்மை, வேளை பற்றி இன்னமும் திகைப்பில் இருக்கிறேன்.
சிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் சுடர்.
* * *
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்; ஓவியம்: உமாபதி ]
தொடர்புள்ள பதிவுகள்:
லா.ச.ராமாமிருதம் படைப்புகள்
3 கருத்துகள்:
பிராசம் என்றால் என்ன பொருள்? படிக்கச் சுவையாக இருந்தது; ஆனால், இன்னமும் ஏன் அர்ச்சுனன் என்கிறார் என்று புரியவில்லை!
பிராசம் ( வடமொழியில் ப்ராசம்) = சீர்களில் வரும் எழுத்தொற்றுமை = Rhyme.
இந்த இடத்தில் மோனை என்று கொள்ளலாம். >> இன்னமும் ஏன் அர்ச்சுனன் என்கிறார் என்று புரியவில்லை!>> :-)) அவரவர் விருப்பப்படி பொருள் கொள்ளலாம். அதுதானே லா.ச.ரா! :-) அப்துல்லின் அழகான சரீரத்தாலோ, என்னவோ?” சிற்பம் உயிர்த்துப் புறப்பட்டாற்போல் தேகக்கட்டு” இல்லையா?
விளக்கத்திற்கு நன்றி.
கருத்துரையிடுக