செவ்வாய், 26 ஏப்ரல், 2016

’அவ்வை ‘ டி.கே.சண்முகம் -1

நாடகத்தில் நகைச்சுவை
டி.கே.சண்முகம்




ஏப்ரல் 26. ‘அவ்வை’ டி.கே.சண்முகம் அவர்களின்  பிறந்த தினம்.
அவருடைய வானொலிப் பேச்சு ஒன்று இதோ!
==============

நான் இங்கே குறிப்பிட விரும்புவது நகைச்சுவை நாடகங்களையல்ல; நாடக மேடையில் எதிர்பாராது நிகழும் சம்பவங்களினால் விளையும் நகைச்சுவையினையே சுட்டிக்காட்டத் துணிகிறேன்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய செய்தி. எங்கள் நாடகக் குழுவில் நடைபெற்ற நிகழ்ச்சி. பொள்ளாச்சி நாடக மேடையில் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதிய ”காலவ ரிஷி”  நாடகம் நடந்து கொண்டிருந்தது.

காலவ முனிவர் ஆற்றின் நடுவே நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மண்டு, கமண்டு என்னும் இரு சீடர்கள். அவர்களும் கரையருகே கண்களை மூடிய வண்ணம் வீற்றிருக்கிறார்கள்.

திரை உருண்டு உயர்ந்ததும் சித்ரசேனன் என்னும் கந்தர்வன், ஊர்வசி சமேதனாய் உல்லாசத்துடன் விமானத்தில் பறந்து வருகிறான். விமானம் ஆற்றைக் கடந்து செல்லும்போது சித்ரசேனன் தன் வாயி லிருந்த தாம்பூலத்தைக் கீழே உமிழ்கிறான். அது ஆற்றில் கண்களை மூடிக் கைகளை நீட்டி நிஷ்டையிலிருந்த காலவ முனிவரின் வலது கரத்தில் விழுகிறது. கரத்தில் ஏதோ விழுந்து நிஷ்டை கலைக்கப்பட்டதும் காலவர் நாற்புலமும் பார்க்கிறார் சினத்துடன் சீடர்களை அழைக்கிறார், பிறகு ஞான திருஷ்டியால் உண்மை அறிந்து ஏதோ சபதம் செய்கிறார். இதன் காரணமாக கிருஷ்ணார்ஜுன யுத்தம் நடக்கிறது. இது நாடகக்கதை.

காலவர் நிஷ்டையிலிருக்கும் நிலையில் காட்சி தொடங்கியது. அன்று காலவராக வேடம் புனைந்து இருந்தவர் திரு. மாதவராவ் என்னும் சிறந்த ஹாஸ்ய நடிகர். சாதாரணமாக வீட்டிலேயேகூட அவருடைய நடவடிக்கைகள் எங்களுக்குச் சிரிப்பூட்டுவதாக இருக்கும். காலவரின் சிஷ்யர்கள் மண்டு, கமண்டு, வேடங்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கே. கே. பெருமாள் இருவரும் நடித்தார்கள். மேலே பறந்து செல்லும் கந்தர்வன் சித்ரசேனனாக நான் நடித்தேன்.

நாடகம் அன்றுதான் முதன்முறையாக நடிக்கப் பெற்றதால், நடிகர்கள் அனைவரும் மிகவும் உணர்ச்சியோடு நடித்தார்கள். மேடையில் குறுக்கே கட்டப் பட்ட கம்பியில் இணைக்கப்பட்டிருந்த ஓர் அட்டை விமானத்தில் நான் ஊர்வசியுடன் பறந்து சென்றேன். ஆற்றின் நடுவே விமானத்தை நிறுத்தித் தாம்பூலத்தையும் உமிழ்ந்தேன். சபையில் ஒரே கரகோஷம். அதைத் தொடர்ந்து பெரும் சிரிப்பு. காட்சியை மக்கள் பிரமாதமாக ரசித்ததாக எண்ணிப் பூரிப்படைந்தேன் நான்.

"அடே மண்டு, கமண்டு' என்று கூச்சலிட்டு, ஆவேசத்துடன. "என் வலக்கரத்தில் உச்சிஷ்டத்தை உமிழ்ந்தவர் யார்?' என அலறினார், காலவராக வீற்றிருந்த நடிகர் மாதவராவ். மண்டுவும், கமண்டுவும்: "ஸ்வாமி' என ஓடி வந்ததும் சபையில் மேலும் சிரிப்பொலி அதிகரித்தது.

திரை மறைவில் மேலே விமானத்திலிருந்த எனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தலையை நீட்டிப் பார்த்தேன். சிஷ்யர்களாக நின்ற என். எஸ். கேயும், கே. கே. பெருமாளும் மாதவராவைப் பார்த்து வாயைப் பொத்தியவாறு சிரிப்புத் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்கள். சீடர்களின் சிரிப்பைக் கண்ட சபையோர் மேலும் கைதட்டிச் சிரித்தார்கள். மாதவராவ், இருந்த இடம் எனக்குத் தெரியவில்லை. இதற்குள் உள்ளேயும் சிரிப்பொலிகள் கேட்கத் தொடங்கின.

என். எஸ். கே. பேச வேண்டும். அவரோ பேச முடியாமல் "ஸ்வாமி! தங்கள்...தங்கள்......' என்று. தவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ” திரை விடுங்கள்', "திரை விடுங்கள்” என்று உள்ளே பல குரல்கள். திரை விடப்பட்டது. விமானம் கீழேயிறக்கப் பட்டது பிறகுதான் எனக்கு உண்மை விளங்கியது.
விமானம் காலவரைக் கடந்து செல்லும்போது, அந்த அட்டை விமானத்தில் நீட்டிக் கொண்டிருந்த, ஓர் ஆணி நிஷ்டையிலிருந்த முனிவரின் நீண்ட கொண்டையோடு கூடிய சடைமுடி டோப்பா'வையும் பூப்போல எடுத்துக் கொண்டு போய்விட்டது. விமானம் மறைந்ததும் நிஷ்டை கலைந்த காலவர் மொட்டைத் தலையில் உச்சிக் குடுமியோடு சபைக்கும் காட்சியளித்தார். உணர்ச்சியோடு வீற்றிருந்த அவருக்குக் கொண்டை பறிபோனதுகூடத் தெரியவில்லை. அவ்வளவு லகுவாக டோப்பாவைக் கொண்டு போயிருக்கிறது ஆணி. இந்த நிலையில் முனிபுங்கவரைப் பார்த்த, சிஷ்யர்களால் எப்படி வாய்திறந்து பேசமுடியும்? ரசிகர்களால்தான் எப்படிச் சிரிப்பை அடக்க முடியும்?

இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் சபையோர் விழுந்து விழுந்து சிரிக்கலாம். நாங்கள் என்ன செய்ய முடியும்? நடிகர்களுடைய நிலை எவ்வளவு கஷ்டம் பாருங்கள். இதாவது நகைச்சுவை நடிகர்கள் கலந்து கொண்ட கட்டம். நகைச்சுவையே இல்லாத உணர்ச்சிகரமான கட்டங்களில்கூட இவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படுவதுண்டு. ஒன்று சொல்லுகிறேன். முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முந்திய சம்பவம். மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நான் நடிகனாக இருந்தேன்.

திருப்பாதிரிப்புலியூரில் ஒரு நாள். அன்று :மனோகரன்' நாடகம். நான் மனோகரனாக நடித்தேன். நாடகம் நடந்து கொண்டிருந்தது
மனோகரனில் முக்கியமான காட்சி. சங்கிலிகளால் கட்டப்பட்டு ஆவேசங் கொண்ட நிலையில் நிற்கிறான் மனோகரன். ” என் மைந்தனா நீ' என்கிறார் தந்தை புருஷோத்தமன்.உடனே மனோகரன் ஆக்ரோஷத்துடன் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு எதிரே நிற்கும் காவலனின் வாளை உருவியபடியே தந்தையின்மீது பாய்கிறான்.

புருஷோத்தமன் பேச்சு முடிந்தது. நான் ”ஆ என்ன சொன்னீர்?’ என்று கர்ஜித்தபடி சங்கிலிகளைப் பிணைத்திருந்த சுருக்குக் கயிற்றை இழுத்தெறிந்து விட்டு எதிரே நின்ற காவலனின் உடைவாளை உருவிக் கொண்டு சிம்மாதனத்தில் வசந்தசேனையுடன் வீற்றிருந்த புருஷோத்தமனை நோக்கிப் பாய்ந்தேன். சபையில் ஒரே சிரிப்பொலி. எவ்வளவு ரசனைக் குறைவான சபையாயிருந்தாலும் சிரிக்கக் கூடிய கட்டம் அல்ல அது. எதிரே சிம்மாதனத்தில் வீற்றிருந்த புருஷோத்தமன் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது. ஒரு வினாடி எனக்கு ஒன்றும் புரியவில்லை.

பிறகு உண்மையை உணர்ந்தேன். என் உயிரே போய் விடும் போலிருந்தது. மனோகரனுடைய அப்போதைய நிலைமை மிகப் பரிதாபகரமானது. விஷயம் என்ன தெரியுமா? காவலனிடமிருந்து நான் உடைவாளை உருவியபோது என் கையோடு வந்தது கத்தியின் கைப் பிடி மட்டும்தான். கத்தி, பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வராமல் காவலனின் உறைக்குள்ளேயே தங்கிவிட்டது.

உணர்ச்சி வேகத்தில் நான் இதைக் கவனிக்க வில்லை. வெறும் கைப்பிடியோடு நின்ற மனோகரனின் நிலையைக் கண்டு யார்தான் சிரிக்க மாட்டார்கள் ? என்னுடைய நிலை மிக மிகப் பரிதாபகரமாக இருந்தது. நான் எப்படிச் சிரிக்க முடியும்? இப்படி மிகப் பரிதாபகரமாக எங்கள் பொறுமையைச் சோதிக்கும் கட்டங்கள் அநேகம் உண்டு.

இன்னொரு பரிதாபத்திற்குரிய சம்பவத்தைச் சொல்கிறேன். 1932ல் ஒருநாள். சந்திரகாந்தா நாடகம் கடந்து கொண்டு இருந்தது. சுண்டூர் இளவரசன் சந்திர வதனாவைப் பலாத்காரம் செய்யப் போய் உதை வாங்கும் கட்டம். நாடகத்தில் இது ஒரு சுவையான காட்சி.

பூங்காவில் சந்திரவதனா உலாவிக் கொண்டு இருக்கிறாள். சுண்டூர் இளவரசன் அங்கு வருகிறான். தனக்கு அவள் மீதுள்ள தணியாத காதலைப் பற்றி விவரிக்கிறான் சந்திரவதனா அவனை விரும்ப மறுக்கிறாள். கடைசியில் காமவெறி கொண்ட இளவரசன் அவளைப் பலாத்காரம் செய்ய முயல்கிறான். சந்திரவதனா கூச்சலிடுகிறாள். அவள் காதலன் ராகவரெட்டி திடீரென்று தோன்றி, சுண்டூர் இளவரசனை அடித்து வீழ்த்திச் சந்திரவதனாவைக் காப்பாற்றுகிறான். காட்சி இவ்வாறு நடைபெற வேண்டும்.
இந்தச் சுவையான காட்சி தொடங்கியது. சுண்டூர் இளவரசன் வந்தார். சந்திரவதனாவிடம் தனது காதலின தன்மையைப் பற்றி அபாரமாக அளந்தார். தமிழில் மட்டுமல்ல. ஆசிரியர் திரு. எம். கந்தசாமி முதலியார் அவர்கள் பயிற்சியளித்திருந்தபடி ஆங்கிலத்திலும் தான் கொண்ட ”லவ்"வைப் பற்றிப் பொழிந்து தள்ளினார். பலிக்கவில்லை. கடைசியாக,

'அட்டியின்றிக் கட்டி
முத்த மிடாவிடில் நானே-உன்னைத்
திட்டம் பலாத்காரம் செய்குவேன்
சத்தியம் தானே'

என்று பாட்டிலேயே சத்தியமும் செய்துவிட்டு சக்திர வதனாவைப் பலாத்காரம் செய்வதற்குப் பாய்ந்தார்.

எங்கே ராகவரெட்டி? காணோம் அவரை. சந்திர வதனாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எதிரே காதலரைக் காணவில்லை. வேறு எங்கிருந்தாவது வரக்கூடுமென நம்பி இளவரசனின் பிடியிலிருந்து திமிறுவதுபோல் சிறிது நடித்தாள். ராகவரெட்டி வரவேயில்லை. திரை மறைவில் பல குரல்கள், ராகவ. ரெட்டியைத் தேடின. முதுகில் அடி விழுவதை எதிர் பார்த்து நின்ற சுண்டூர் இளவரசனுக்கு ஒரே திகைப்பு. பலாத்காரம் செய்யக் கையைப் பிடித்தாயிற்று. வழக்ககம் போல் அறை விழவில்லை. நெருக்கடியான கட்டம். பின்னால் திரும்பிப் பார்க்கவும் கூடாது. என்ன செய்வார் இளவரசன்? சந்திரவதனா பெண் வேடம் புனைந்த ஆணாக இருந்தாலாவது சிறிது அதிகமாக நடிக்கலாம். அதற்கும் வழியில்லை. அவள் நிஜமாகவே பெண். அதிலும் மங்கைப் பருவம் கடந்த பெண். பலாத்காரம் செய்யப் பிடித்த கையை விடவும் முடியாமல் வேறு வழியும் தோன்றாமல் திண்டாடினார் இளவரசன்.

ராகவரெட்டி எங்கோ ஒரு மூலையில் அமைதியாக உறங்குகிறார் என்பது மட்டும் புரிந்தது. அரங்கின் உட்புறம் அமர்க்களப்பட்டது சுபேதார் அண்ணாசாமியாக வேடம் தரித்திருந்த எங்கள் பெரியண்ணா (திரு. டி. கே. சங்கரன்) அவர்களின் குரல் உட்புறம் பயங்கரமாக ஒலித்தது. அவர் கையில் வைத்திருந்த சவுக்கும் யார் மீதோ சாத்துபடி ஆயிற்று. ”பளார்-பளார்’ என்று ஓசையுடன் விழுந்த சில பூசைகளின் ஒலியும் கேட்டது. சந்திரவதனாவும் சுண்டூர் இளவரசனும் மேடையில் பலாத்காரக் கட்டத்தில் நின்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.

சபையோருக்கு ஒருவாறு விஷயம் விளங்கி விட்டது. அவர்களென்ன இதற்காகப் பரிதாபப்படவா செய்வார்கள். விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். நிலையைக் கண்டு சபையிலும் உள்ளேயும் ஒரே களேபரமாயிருந்தது.

திடீரென்று பேய் அறைந்தது போன்ற ஒரு பயங்கரமாக அடி இளவரசனின் முதுகில் விழுந்தது. அவ்வளவுதான். அறைந்தபின் ராகவரெட்டியால் கீழே இழுத்துத் தள்ளப்பட வேண்டிய இளவரசன் அறை பட்டவுடனேயே விழுந்துவிட்டான். ஐயோ பாவம்' நல்ல உறக்கம் கலைக்கப்பட்டதால் உண்டான கோபம்; உள்ளே தான் வாங்கிய பலத்த அடிகளால் ஏற்பட்ட ஆத்திரம், எல்லாவற்றையும் சேர்த்து, சுண்டூர் இளவரசனைப் பலங்கொண்ட மட்டும் தாக்கிவிட்டார், அந்த ராகவரெட்டியார். கீழே விழுந்தபின் மீண்டும் எழுந்து உறுமிவிட்டுப் போகவேண்டிய சுண்டூர் இளவரசன் அன்று எழுந்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு, எப்படியோ ஒருவகையாகத் தட்டுத்தடுமாறி உள்ளேபோய்ச் சேர்ந்தார். பலாத்காரம் செய்யப் போய்ப் பரிதவித்த, அந்த பரிதாபத்துக்குரிய சுண்டூர் இளவரசன் வேறு யாருமல்லன்; அடியேன்தான். கும்பகர்ணனின் சேவையிலிருந்து விடுபட்டு உள்ளே அறையும் பட்டுவந்த உணர்ச்சியில் என்னைப் பேயறை அறைந்த அந்த ராகவரெட்டியார் யார் தெரியுமா? என் அருமைத் தம்பி டி. கே. பகவதி!

நடிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் இவை போன்ற நகைச்சுவைக் கட்டங்கள் மேடையில் அடிக்கடி நிகழ்வதுண்டு. என்ன செய்வது? இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துத்தான் நாங்கள் நடிக்க வேண்டும்.
இன்னொரு அற்புதமான நிகழ்ச்சி. இராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். சீதா கல்யாணத்தில், இராமர் சிவதனுசை வளைக்கும்போது அது ஒடிந்து விடுகிறது. ஜானகி, ராமருக்கு மாலை சூட்டுகிறாள். இது கதை. சபையில் பல அரசர்கள் கூடியிருக்கிறார்க ளல்லவா? அவர்கள் எல்லோரும் முதலில், சிவதனுசை வளைக்க முயல்கிறார்கள். யாராலும் முடியவில்லை. எதிர்பாராதபடி ஒருநாள் சபையிலிருந்த அரசர் ஒருவர் விஷயம் தெரியாமல் வில்லில் கையை வைத்து அது முறிவதற்காக செய்திருந்த சூட்சுமத்தை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். இராமர் வளைக்கும்போது முறிய வேண்டிய வில்லை அந்த அரசரே முறித்து விட்டார். இப்போது நிலைமை என்ன? எப்படிச் சமாளிப்பது? ஜனக மகாராஜா வேடம் புனைந்தவர் ஒரு பழைய நடிகர். அனுபவசாலி. வில் முறிந்ததும் அவர் திகைத்துப் போய் சபையோரின் சிரிப்புக்கிடையே காவலரை நோக்கி, “ சிவதனுசைக் கொண்டு வாருங்கள் என்றால், வேறு ஏதோ ஒரு விளையாட்டு வில்லைக் கொண்டு வந்து விட்டீர்களே. மடையர்களே, போய் சிவதனுசை எடுத்து வாருங்கள்' என்றார் பிறகு காட்சி ஒருவாறு சமாளிக்கப்பட்டது.

நகைச்சுவை மிகவும் சிறப்பான ஒரு பகுதி தான். ஆனால் இந்த மாதிரி எதிர்பாராத நகைச்சுவை ஏற்பட்டு எங்களைத் திண்டாட்டத்தில் வைத்து விடும் போதுதான் மிகவும் கஷ்டமாய் இருக்கும். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் எப்படியாவது சாதுர்யமாகச் சமாளிக்க வேண்டும்.

-சென்னை வானொலி 5-11-1959

தொடர்புள்ள பதிவுகள்:


கருத்துகள் இல்லை: