ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

புதுமைப்பித்தன் -1

தமிழ்ச் சிறுகதையின் தந்தை "புதுமைப்பித்தன்'

மு.பரமசிவம்

ஏப்ரல் 25. புதுமைப் பித்தன் பிறந்த தினம்.  அவர் நினைவில், தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!
=============மனிதன்! என்ன கம்பீரமான வார்த்தை!'' என்றார் இலக்கிய மேதை மாக்சிம் கார்க்கி.

 ""வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா!'' என்றார் கம்பர்.

 ""மனிதன், அவன் ஒரு புழு!'' என்றார் புதுமைப்பித்தன். அதுதான் அவர் வாழ்க்கையில் கண்ட விரக்தி, வேதனை, சகிப்புத்தன்மை எல்லாம் அவரை அப்படிப் பேசவைத்தது.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி சொக்கலிங்கம்-பர்வதம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் விருத்தாசலம்.

 தொடக்கக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணிபுரிந்த அவருடைய தந்தை ஓய்வு பெற்றதால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்ப நேர்ந்தது. அங்குள்ள ஆர்ச் யோவான் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார். 6 வயதிலேயே தாயை இழந்தார்.

 பின்னர், நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.,) பட்டம் பெற்று, பாரதி அன்பர் வ.ரா.வின் உதவியுடன் பத்திரிகை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1933 முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து - நைந்துபோன பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில் கதைகளைப் படைத்தார்.

 உலக இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படிப்பதில் வல்லவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரைகள், விமர்சனம், ஓரங்க நாடகம், மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பல படைப்புகளை வழங்கியுள்ளார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான்.

 நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன். ""கருத்தின் வேகத்தையே பிரதானமாக்கிக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது'' என்று புதுமைப்பித்தன் கூறியுள்ளார்.÷

 ""எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்தை உயிரோடு, உணர்ச்சியோடு பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த நடை, கையாளும் நடையின் பெருமிதத்துக்கு ஏற்ப மிக ஆழ்ந்த விஷயம்; கதையின் உருவமும் பூரணத்துவம் பெற்றது. உருவமும் கதைப்போக்கும் தனித்தன்மை பெற்றவை'' என்று புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றி கு.அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 1933-இல் இவருடைய முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்' காந்தி இதழில் வெளிவந்தது. 1934-இல் இருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. மணிக்கொடியில் வெளிவந்த முதல் சிறுகதை "ஆற்றங்கரைப் பிள்ளையார்'.

 இவரது நூல்கள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், புதிய ஒளி, காஞ்சனா, அன்று இரவு, ஆண்மை, விபரீத ஆசை, சித்தி முதலிய ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவரது அனைத்து சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் பிறமொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பல கதைகள் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன. "உலகத்துச் சிறுகதைகள்' என்ற நூலில், ரஷ்யா, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹாலந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளின், மொழிகளின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

 பதினைந்து ஆண்டுகளே எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில் கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத் தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

 "பொன்னகரம்' கதையில் வரும் அம்மாளு கணவனுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க, தன் கற்பை விலைபேசினாள் என்பது கதையின் கருத்து. இப்படிக் கருத்து மோதல் கதைகளையும், பிரச்னைகளை எழுப்பும் கதைகளையும் எழுதியது போலவே, "தினமணி'யில் "ரசமட்டம்' என்கிற பெயரில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி சிலரது மனதைப் புண்படுத்தியும், சிலரது மனதைப் பண்படுத்தியும் இருக்கிறார்.

 ஒரு காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் பேனா, கூர்மைமிக்க போர்வாளாக இலக்கிய உலகில் சுழன்று சுழன்று வீசியிருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு சமூக சிந்தனையாளர். ஏழை எளியவர்கள் படும் துன்ப துயரங்களைக் கண்டு கண்ணீர் வடித்தவர். அதற்கு சாட்சி "நாசக்காரக் கும்பல்' என்ற கதை. இக்கதையில் சோஷலிசம், எதார்த்தவாதம், காந்தியம், சாதியம் அனைத்தும் ஒன்றாகச் சங்கமித்து நிலப்பிரபுத்துவத்தின் ஆணவத்தை அடக்க முஷ்டியை உயர்த்துகிறது. 1936-ஆம் ஆண்டு எழுதப்பட்டது இக்கதை. அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஜமீன்களும், நிலப்பிரபுத்துவமும் சரிந்துகொண்டிருந்த காலம். இந்த எதார்த்த நிலையை எழுச்சியுடன் எடுத்துக்காட்டியுள்ளார் புதுமைப்பித்தன்.

 ""வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை'' (குறள்-872)

 என்னும் குறளின் கருத்துக்கு ஏற்ப, புதுமைப்பித்தன் புரட்சிப் பித்தனாக மாறி சமூகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை, அநியாயங்களைக் கண்டு இலக்கிய நயத்துடன் எதார்த்தமாக எழுதிக்காட்டினார். 1933-இல் திருவனந்தபுரம் சுப்பிரமணியம் மகள் கமலாவை மணந்தார். இவர்களுக்கு தினகரி என்கிற ஒரே ஒரு பெண் வாரிசு. அந்த அம்மையார் இன்று நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

 புதுமைப்பித்தன் திரையுலகிலும் கால்பதித்தார். மூன்று ஆண்டுகள் வசனகர்த்தாவாக இருந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த "ராஜமுக்தி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் புதுமைப்பித்தன்தான். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காந்தியடிகள் சுடப்பட்டு, இந்திய மக்கள் சோகத்தில் இருந்த நேரத்தில் புதுமைப்பித்தன் பூனாவில் இருந்தார். அந்தச் சமயத்தில் அவரின் நோய் உச்சத்தில் இருந்தது. உடனே மனைவியின் ஊரான திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அங்கு சிதம்பரம் என்பவர் புதுமைப்பித்தனுக்கு உதவிகள் பல செய்தும் பலனில்லாமல் போனது. 1948-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 2002-ஆம் ஆண்டு இவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அண்மையில் நடந்த தமிழ்ச் சிறுகதை கருத்தரங்கம் ஒன்றில், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதம் நடந்தது. ஆனால், முன்பே சொல்லிவிட்டார் தமிழறிஞரும் இலக்கியவாதியுமான டாக்டர் மு.வரதராசனார், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை புதுமைப்பித்தன்' என்று!

[ நன்றி : தினமணி ] 

தொடர்புள்ள பதிவுகள்: 
புதுமைப்பித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக