புதன், 20 ஏப்ரல், 2016

பாரதிதாசன் -3

தமிழ்

பாரதிதாசன்

ஏப்ரல் 21. பாவேந்தர்  பாரதிதாசனின் நினைவு தினம்.


அவர் 1914-இல் எழுதிய கட்டுரை ஒன்று இதோ!
==================

தமிழ் பாஷைக்கு ஓர் புதிய நிகண்டு வேண்டும்.

நம் தாய்ப் பாஷையாகிய தமிழ் மொழியானது மராட்டி, வங்காளி பாஷைகளைப் போலச் சமீபத்தில் அதிக விருத்தியடைய வில்லை யென்றாலும், கேவலம் முன்நிலையிலேயே இருந்து விடவுமில்லை. மற்றப் பாஷைகளைப் பேசுபவர்களுள் அப்போதைக்கப்போது சில உத்தம புருஷர்கள் தோன்றித் தத்தம் மொழிகளைச் சீர்திருத்தியும் விருத்தி செய்தும் வருவதையே தங்கள் வாழ்நாளின் பயனென எண்ணி முன்னேற்றமடையும் மார்க்கத்தைத் தேடுகிறார்கள்.

நமது பாஷையிலோ, பண்டிதர்களும், மகா பண்டிதர்களும் நாவலர்களும், புலவர்களும், இன்னும் என்னென்னவோ பட்டங்களைத் தாமாக சூட்டிக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் மாத்திரம் அதிகப்பட்டுக்கொண்டு வந்தார்களே தவிர, அன்னார் பாஷை விஷயமாய் உழைத்துச் சீர்திருத்தியதை மாத்திரம் காணோம். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுக நாவலர் சில இலக்கிய இலக்கணங்களைப் பிழை சோதித்து, அக்காலத்தில் தமிழ் மொழியை மூடிக் கொண்டிருந்த இருளையொருவாறு நீக்கினார். என்றாலும், அதனைப் பின்பற்றி, அத்தொழிலை நடத்தி வரும் உத்தம புருஷர்கள் அதிகமாயில்லை. சமீபத்தில் மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் பண்டை  நூல்களிற் சிலவற்றை ஆராய்ந்து அச்சிடுவித்தார்களானாலும், நம் மொழியில் அருமை பெருமைகளை நோக்க அவர் ஒருவர் செய்தது போதாதென்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

நூலாராய்தலும் வெளியிடுதலுமே தம் நோக்கமாகக் கொண்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் போன்ற சபைகளினால் பொது ஜனங்கள் எவ்வளவு நன்மை அடையலாமென்று எதிர் நோக்கினார்களோ அவ்வளவு நன்மையை அடைந்தார்களில்லை. மற்றும் தமிழ் மொழிக்கண் அக்கரை கொள்ளும் கடமையுடைய மடாதிபதிகளிலோ பெரும்பாலோர் வேறு வழிகளில் திரும்பி விட்டார்கள். இவ்விதம் நம் பாஷையானது தன்னை முன்னுக்குக் கொண்டுவர நாகனற்றுத் தவிக்கும் இக்காலத்தில் அரசாட்சியார் ஒரு லக்ஷ ரூபாய்ச் செலவில் தமிழில் ஓர் விரிவகராதி தயாரிக்க எண்ணங்கொண்டது. தமிழ் மக்களுக்குச் சிறிது சந்தோஷமான சமாசாரமே.

ஆனாலும், அவ்வகராதி எழுதி முடிக்கும் கூட்டத்தில் தமிழில் அதிகப் பயிற்சியில்லாத சீமைப் பாதிரிகளும் சேர்ந்துள்ளதினால் அதன் நன்மையும் எதிர்பார்க்கும் அளவு உண்டாகுமாவென்று மேதாவிகள் சந்தேகிக்கிறார்கள். நம் பாஷையின் நிலைமை இவ்விதமிருக்க, அடுத்த வட பக்கத்திலுள்ள தெலுங்கர்களோ தங்கள் பாஷையைச் சீர்திருத்துமாறு போட்டி போட்டியாய்ச் சபைகளும் சங்கங்களும் ஏற்படுத்திப் பரபரப்புடன் வேலை செய்து வருகிறார்கள். அம்முயற்சியின் கண்கூடான பயனாய் இதுவரையும் அப்பாஷையில் இல்லாததான ஒரு தினசரிப் பத்திரிகை தோன்றிச் செம்மையாய் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் ஊக்கத்தைப் பார்த்தாவது தமிழர்கள் தங்கள் பாஷையின் விஷயத்தில் ஏதாவது கவலை கொள்ளுகிறார்களா வென்றால், அது மாத்திரமில்லை.

நம் தமிழ் மொழியில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொகை நூலாகிய “நிகண்டு” அதன் உற்பத்தி காலத்தில் எவ்விதம் இருந்ததுவோ அப்படியே இன்னும் இருக்கிறது. அதில் ஒரு மொழிக்கு முற்காலத்தில் இரண்டு அர்த்தம் சொல்லப்பட்டிருந்தால் இப்போது அந்த வார்த்தை அரை டஜன் அர்த்தங்களில் உபயோகப்படுகிறது. இருந்தபோதிலும் அந்த அர்த்தங்களை உட்படுத்திப் புதிதாய் வேறு நூல் தயாரிக்க எண்ணினவர்கூட இல்லை. உதாரணமாக, சூடாமணியில், “ஆகவே எலியின் நாமம் ஆம் பெருச்சாளிக்கும் பேர்” என்று ஆகி என்னும் பதத்திற்கு இரண்டே அர்த்தம் சொல்லியிருக்கின்றது. ஆனால் இக்காலத்தில் கொப்பூம், பூனை, பன்றி, சாமரை என்னும் வேறு நான்கு அர்த்தங்களிலும் அதை வழங்குகின்றனர். துப்பு என்னும் பதத்திற்கு “துப்பரக் கூற்றந் தூய்மை துகிர் பகை அநுபவர் பேர்” என்று ஆறே பொருள் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனை நெய், ஆயுதப் பொது, அறிவு, உணவு, குற்றம், சகாயம், சிவப்பு, துணைக்காரணம், பானம், பொலிவு, மிகுதி முதலிய பின்னும் பன்னிரண்டு பொருள்களிலும் வழங்குகின்றனர். உவமையுருபு அதனில் இருபத்துநான்கு சொல்லப்பட்டிருக்க, இப்போது ஐம்பதுக்கு மேற்பட்டவை வழக்கத்திலிருக்கின்றன. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம்.

அது நிற்க, நிகண்டு நூலின் உபயோகம் தமிழர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிற் பயின்று தேர்ந்தவர்களைச் சுற்றித் திரியும் அகராதியென்றே சொல்லலாம். எந்த வார்த்தைக்கு அவர்களை அர்த்தங்கேட்டாலும் புஸ்தகம் தேடித் திறந்து பார்த்துச் சொல்லும் ஜோலியில்லாமல் நின்ற நிலையிலேயே சொல்லக் கூடியவர்களாயிருப்பார்கள். நம் தமிழ்ப் பாஷையிலுள்ள இந்நூலை ஒப்ப மேல்நாட்டில் எந்தப் பாஷையிலும் நூல்கள் கிடையா. அவ்வளவு அருமையும் பெருமையும் பொருந்திய நிகண்டில் இப்போது புதிதாகத் தமிழ்மொழியில் சேர்ந்திருக்கும் பல திசைச்சொற்களையும் பழைய மொழிகளின் நூதன அர்த்தங்களையும் சேர்க்காமல் பண்டுள்ளது போலவே இன்னும் வைத்திருப்பது நல்லதா?

 நாவலர் பதிப்பித்த பிரதியில் புதிதாய் வழங்கும் அர்த்தங்களும் சிலவற்றை உரையிற் சேர்த்திருந்தாலும்  அதனால் நிகண்டு பாடம் பண்ணுவார்க்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. தவிரவும், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்ற கொள்கையோடு இலக்கண நூற்கள் வரவரப் புதுப்பிக்கப்படும்போது இந்தத் தொகை நூலையும் புதுப்பிக்க வேண்டியது அவசியமல்லவா? இதைச் செய்து முடிப்பதற்கு அரசாட்சியின் தயவாவது பொருளுதவியாவது இல்லாமல் முடியாதென்பதுமில்லை. பொருட் செலவு அதிகமாகும் என்பதுமில்லை. சில தனித்தனி வித்துவான்களாவது அல்லது சபைகளாவது பிரயாசை எடுத்துக் கொள்ளுகிறதாயிருந்தால் இந்த விஷயம் திருப்தியாய் முடியக்கூடும். பிற விஷயங்களில் முன்னேற்றமடைய விரும்பும் தமிழர் தங்கள் பாஷை நூல்களைப் புதுப்பிக்காமலிருப்பது எவ்வளவு அவமானம்?

- கனக சுப்புரத்தினம்

(பாரதிதாசன்)

‘சுதேசமித்திரன்’ 26.5.1914,பக்கம் 6-7

[ நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாரதிதாசன்

1 கருத்து:

RV சொன்னது…

https://siliconshelf.wordpress.com/2015/03/03/பாரதிதாசன்/

கருத்துரையிடுக