வெள்ளி, 1 ஏப்ரல், 2016

தி.வே.கோபாலையர் -1

இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர் 

செந்தலை ந.கவுதமன்

ஏப்ரல் 1. தமிழறிஞர் தி.வே.கோபாலையரின் நினைவு தினம்.    ” பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் ஒருவேளை அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை - தி.வே.கோபாலையர் இருந்தால் போதும்! அவர் நினைவிலிருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும்''
தமிழறிஞர் பலரும் இப்படி ஒருமுகமாய் போற்றுமளவுக்கு "மாந்தக்கணினி' யாகத் தமிழுலகை வலம் வந்தவர் தி.வே.கோபாலையர்.
ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், புலமையாளர், ஆய்வாளர், பன்மொழிப்புலவர் எனப் பல நிலையிலும் தம்மையும் தம் புலமையின் ஆளுமையையும் தொடர்ந்து வெளிப்படுத்தியவர்.
மன்னார்குடியில், 1925-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி வேங்கடராமய்யர்-இலக்குமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் ஆறுபேர். தம்பியர் நால்வர். தங்கையர் இருவர்.
அரசுப் பணியில் எழுத்தராக இருந்தவரின் மூத்த மகனாகப் பிறந்த இவர், திருவையாறு அரசர் கல்லூரியில் நான்காண்டுகள் பயின்று, 1945-இல் புலவர் பட்டக் கல்விகற்று மாநில அளவில் முதல் மாணவராகத் தேறினார். 1951-இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டமும் 1958-இல் ஆனர்சு பட்டமும் பெற்ற இவர், இரண்டிலும் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்க "பண்டிதர்' தேர்வை 1953-இல் எழுதி, அதிலும் முதல் மாணவராகத் திகழ்ந்தார்.
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், திருக்காட்டுப்பள்ளி சிவகாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றிய தி.வே.கோபாலையர், 1963-இல் புலவர் கல்வியை முதன்முதலில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் ஆனார். இவரைப் பொறுத்தவரை ஆசிரியர், பேராசிரியர், முதல்வர் எல்லாப் பதவியும் ஒன்றுதான்.
மரபுவழித் தமிழாசிரியர்களில் இவரே கடைசித் தலைமுறை! குருகுலக் கல்வி போலத்தான் இவர் வகுப்பறை இருக்கும். வலுவான தமிழறிவும் ஆர்வமும் உள்ளோர் மாணாக்கர்களாய்க் கிடைத்துவிட்டால், கால எல்லை பாராமல் கற்பித்துக்கொண்டே இருப்பார். முடியில்லாத தலையை அவ்வப்போது இடக்கையால் தடவி விட்டுக்கொள்வார். அடுத்தநொடி தமிழ் வெள்ளமாய் இவர் நாவிலிருந்து பாய்ந்து வரும்.
"என்ன பாடம்?' என்று கேட்டபடி வகுப்பறைக்குள் நுழைவார். நூலின் பெயரைச் சொல்வோம். "எந்தப் பகுதி?' என்பார். நினைவூட்டுவோம். ஒருகாலைக் குத்துக்கால் இட்டபடி நாற்காலியில் அமர்ந்து கொள்வார். புத்தகத்தைத் தொடமாட்டார். பக்கம் பக்கமாய் புத்தகம் இவர் மனக்கண்ணில் விரிந்து நகர்ந்தபடி இருக்கும்.
தொல்காப்பியம், சங்க இலக்கியம் என எதைக் கற்பித்தாலும் வரிமாறாமல் தொடர்ந்து சொல்லும் ஆற்றல் பெற்றவர். வயது வேறுபாடின்றி எல்லாச் செய்திகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வார்.
தொல்காப்பிய உரைகள் அனைத்தும் இவர் நாவிலிருந்து தொடர்ச்சியாய் வந்து விழும். நச்சினார்க்கினியர் மீது மட்டும் இவருக்குத் தனிப்பற்று உண்டு.
""கராத்தின் வெய்யது தோள்'' எனத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வருகிறதே! எனக்கே புரியவில்லை. மாணவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?'' என்று உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் இவரிடம் ஐயம் கேட்பார்கள்.
ஐயம் எழுப்பிய பேராசிரியரை அமைதியாய் உற்றுப் பார்த்தபடி தி.வே.கோபாலையர், ""கராத்தின் என்பது பிழை. "காரத்தின் என்பதே சரி. புண்ஆற சித்த மருத்துவத்தில் காரத் துணிதானே வைப்பார்கள்! "திணைமாலை நூற்றைம்பது' என்ற நூலில் உள்ள வரி அது. ஏடெழுதுவார் செய்த பிழையால் "கராத்தின்' என இன்றும் பிழையாகப் பதிப்பிக்கப்படுகிறது'' என்று கூறுவார்.
எந்த ஐயம் எழுப்பப்பட்டாலும் எளிதாகக் கடந்து செல்வார். ஆராய்ச்சித் துளிகளை வெகு எளிதாக பேச்சில் வீசியபடி இருப்பார். "நின்' என்பதற்குப் பன்மை "நீம்'. சீவகசிந்தாமணியில் மட்டும்தான் அதற்குச் சான்று உள்ளது. "நீமே வென்றி' என்ற பாடலை இசையோடு பாடிக்காட்டுவார்.
சீவகசிந்தாமணி மற்றும் கம்பராமாயணம் முழு நூலையும் இவர் வாய்மொழியாகவே பாடல்களை வரிசை மாறாமல் பாடுவார். தொல்காப்பிய நூற்பாக்களை உரையாசிரியர் அனைவரின் உரைகளோடும் சேர்த்தே கூறுவார்.
தமிழோடு ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி முதலிய நூல்களையும் படித்தபடி இருப்பார். தேவைப்பட்டால் மட்டுமே வகுப்பில் அவற்றை அரிதாகத் தொட்டுக்காட்டுவார். பெரும்புலவர் என்ற நினைப்போ, முதல்வர் என்ற ஆரவாரமோ இல்லாமல் எப்போதும் எங்கும் நடந்தேதான் செல்வார். எதிர்ப்படும் மாணவர்களிடம் இயல்பாகப் பேசிப்பழகும் குணமுடையவர்.
இவர் முதல்வராய்ப் பணியாற்றிய திருவையாறு அரசர் கல்லூரியில் இருமுறை இவரை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. இருமுறையும் இவர் பணி நீக்கத்துக்கு ஆளானார். நிறைகுடமாகத் திகழ்ந்த இவர், நிம்மதியாக ஆசிரியப் பணியாற்றிய காலம் மிகவும் குறைவுதான்!
 இரண்டாம் முறை பணிநீக்கத்துக்கு ஆளானபோது, கல்லூரிப் பணியையே இவர் கை கழுவினார். புதுவை பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தில் 1979-இல் ஆய்வாளராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கி, தமது 82-ஆம் வயது வரை நிம்மதியாக அங்கேயே பணியைத் தொடர்ந்தார்.
பின்னர், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இலக்கண நூல் பதிப்பாசிரியர் ஆனார். நன்னூல் பதிப்பின் வழியாக 1835-இல் தொடங்கிய தமிழ் இலக்கணப் பதிப்பு மரபை, 1970-க்குப் பின் வளப்படுத்தும் வாய்ப்பை தி.வே.கோபாலையர் பெற்றார்.
இலக்கண விளக்கம் (1972), இலக்கணக் கொத்து (1973), பிரயோக விளக்கம் (1973) முதலான நூல்கள் இவரால் பதிப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு நூலைப் பதிப்பிக்கும் முன்பும் அதன் ஓலைச்சுவடிகளையும் அச்சு நூல்களையும் ஒன்றுதிரட்டி ஒப்புநோக்கி, அதில் தமக்குச் சரி எனப்படுவதை மட்டும் மூலமாக வைப்பது இவரின் பதிப்பு முறை.
தமிழ், வடமொழி இருமரபிலும் தேர்ந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்த காரணத்தால், இலக்கண உலகில் செம்பதிப்புகளையும், பயன்பாட்டுப் பதிப்புகளையும் உருவாக்கிய மிகச்சிறந்த பதிப்பாசிரியராக தி.வே.கோபாலையரால் புகழ்பெற முடிந்தது. இவரது வாழ்நாள் சாதனையாகத் திகழ்வது, சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட (24.10.2005) "தமிழ் இலக்கணப் பேரகராதி' பதினேழு தொகுப்புகள்தான்.
இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொல்காப்பியம் செம்பதிப்பு - 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. கம்பராமாயணம் தொடர்பாக ஏழு நூல்களை எழுதியுள்ளார். மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்புக்கும், சேனாவரையம் பிரெஞ்சு மொழி பெயர்ப்புக்கும், "சோழர் கலைப்பணி' ஆங்கில நூலின் தமிழாக்கத்துக்கும் இவரின் பன்மொழிப் புலமை பயன்பட்டுள்ளது.
புதுவையில் வாழ்ந்த தி.வே.கோபாலையர், 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி காலமானார்.
இலக்கண ஐயம் எழும்போதெல்லாம், தி.வே.கோபாலையர் பெயரும் சேர்ந்தே எழும் சூழல், இன்னும் நெடுங்காலத்துக்குத் தொடரும்.

[ நன்றி: தினமணி ] 

கோபாலய்யரின் ஒரு நூலுக்கு “தினமலரில்” வந்த மதிப்புரை: வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, தி.நகர், சென்னை- 17. (பக்கம்:232)

பண்டைத் தமிழ் இலக்கண நெறிகளினின்றும் விலகி இக்காலத் தமிழ் கெட்டுக் கிடக்கிறது. ஏடெழுத்தாளரும் மேடைப் பேச்சாளரும் பல்கியுள்ள இந்நாளில் எழுத்திலும் பேச்சிலும் பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. அப்பிழைகளையெல்லாம் நுட்பமாக சுட்டிக் காட்டித் தொல்காப்பிய இலக்கண அடிப்படையில் பல செய்திகளை நூற்கடல் இலக்கணக் கடல் தி.வே.கோபாலய்யர் இந்நூலுள் தந்துள்ளார்.

இருபுலவர், பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்றாற் போல் வருவனயாவும் பிழையாம். புலவர் இருவர், ஆழ்வார்கள் பன்னிருவர், நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்றாற் போல் தொடர்களை அமைத்தல் வேண்டும். இவ்வாறே சில நண்பர்கள், பல பெரியோர்கள் என்பன போல் வருவனவற்றை நண்பர்கள் சிலர், பெரியோர்கள் பலர் என்றே அமைத்திடல் வேண்டும்.
உயிர் எழுத்துக்களையும்"யா' எனும் எழுத்தையும் முதலாக உடைய அஃறிணைச் சொற்களின் முன், ஒன்று என்பதைக் குறிக்க ஓர் எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஓர் அரசு, ஓர் இல்லம், ஓர் யானை என்பன வழாநிலை (பிழையற்றன). ஒரு உலகம் எனல் பிழை. அன்றியும் ஓர் அரசன் எனலும் பிழை; அரசன் ஒருவன் எனல் வேண்டும்.

இவ்வாறு தொடங்கி, அது என்னும்சுட்டுச்சொல், அஃது என்னும் சுட்டுச்சொல் இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அன்மை, இன்மை இவற்றின் உண்மைப் பொருள் என்ன? இன்மை, உடைமை, உண்மை இவற்றிடையே உள்ள வேறுபாடுகள் எவை? என்பன போல் பற்பல இலக்கண விளக்கங்கள், நூற்பாக்களோடு இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அன்புள்ள, பணிவுள்ள என்றெழுதிடல் தவறு, அன்புடைய பணிவுடைய என்றே எழுதிடல் வேண்டும்.
வேண்டும் எனும் சொல்லுக்கு எதிர்மறையாக வேண்டாம் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. இலக்கண நெறிப்படி இச்சொல் வேண்டா என்று தான் இருக்க வேண்டும். இந்நாளில் ஒழிக! வாழ்க! என்றெல்லாம் முழக்கமிடுகின்றனர். ஒழிதல் என்னும் சொல்லின் சரியான பொருள் எஞ்சியிருத்தல், "ஒழிய' என்பது தவிர்த்து என்றும், "ஒழியா' என்பது நீங்கா எனும் பொருளிலும் வரும்.

ஈ, ஐ என்பன இடைச்சொற்களாக எவ்வாறு பயன்பட்டன என்றும், வேற்றுமை உருபுகள் இல், இன் எனும் இரண்டின் வேறுபாடு என்ன என்றும் எடுத்துக்காட்டுகளோடு விளக்கப் பட்டுள்ளது. அளபெடைகள் பற்றிய ஆராய்ச்சி, உத்திகள் பற்றிய விரிவான செய்திகள், நூலுள் வரக்கூடாத பத்துக்குற்றங்கள், தொல்காப்பியத்துள் "சிதைவுகள்' என்று சொல்லப்படுதல் ஆகியனப் பற்றியெல்லாம் ஆராயப்பட்டுள்ளது.
எள் என்று இந்நாளில் குறிப்பிடும் உணவுப் பொருளின் பழைய சொல் "எண்' என்பதாம். எண் எனில் எட்டு என்றும், எண்ணிக்கை என்றும் பொருள் தருவதோடு, பழைய இலக்கியங்களில் எள் எனும் உணவுப் பொருளையும் குறித்துள்ளமை காணலாம். எண்+நெய்=-எண்ணெயாயிற்று.

இவ்வாறு தமிழறிஞர்களுக்கும் பயன்படக்கூடிய பல நுட்பமான செய்திகள் இந்நூலில் எழுதப்பட்டுள்ளன. அரியநூல் இது; அனைவரும் அறிய வேண்டியவை ஆயிரம் உண்டிதனில், படித்துப் பயனடைவோ
மாக 

5 கருத்துகள்:

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

வெகு அருமையான கட்டுரை! இப்பேர்ப்பட்ட அறிஞரைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! அந்த நூல் பற்றிய மதிப்புரையில் இருந்த தகவல்களும் பயனுள்ளவையாய் இருந்தன.

Innamburan S.Soundararajan சொன்னது…

.இவரைப் பொறுத்தவரை ஆசிரியர், பேராசிரியர், முதல்வர் எல்லாப் பதவியும் ஒன்றுதான்.

மரபுவழித் தமிழாசிரியர்களில் இவரே கடைசித் தலைமுறை! '

நூற்றுக்கு நூறு உண்மை அவரை பற்றிய festschrift ஐ பத்திரமாக காப்பாற்றி வருகிறேன். அவருடைய சிஷ்யை ஏவா வில்டன் கையெழுத்து இட்டுக் கொடுத்தார்.
இன்னம்பூரான்

Pas Pasupathy சொன்னது…

Rajagopalan Vengattaramayer சொன்னது ...
சைவ நூல்கள் மட்டுமன்றி தமிழ் வைணவ சமய நூல்களிலும் ஆழ்ந்த புலமைபெற்ற திரு கோபாலையர் பல வைணவ மாநாடுகளுக்கு த் தலைமை ஏற்று நடத்திய பெருமை உடையவர்...பத்து ஆண்டுகளுக்கு மேல் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றவன் நான். என்னுடை ய பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரஞ்சு இலக்கிய வரலாறு நூலுக்கு அவர் தந்த அணிந்துரை எனக்கு கிடைத்த பேறு

Jean-Luc Chevillard சொன்னது…

See interview at
http://202.168.158.134/audio/videos.php
(link is ocasionally down, due to router problem)

Pas Pasupathy சொன்னது…

Thanks, JLC.

கருத்துரையிடுக