ஞாயிறு, 13 நவம்பர், 2016

வல்லிக்கண்ணன் -2

சில முன்னோடிப் பத்திரிகைகள்
வல்லிக்கண்ணன்


நவம்பர் 12. வல்லிக்கண்ணன் அவர்களின் பிறந்தநாள்.

’தமிழில் சிறுபத்திரிகைகள்’  என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை இதோ.
பாரதி முதல் மணிக்கொடி வரை இருந்த இதழ்களைப் பற்றிய ஒரு தொகுப்பு. 1900-30 களின் காலம். 

=====

மொழியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், இலக்கியத்தில் புதுமையும் வளமும் சேர்க்கவும் விரும்பும் படைப்பாளிகள், தங்கள் சோதனை முயற்சிகளை எல்லாம் பிரசுரிப்பதற்குத் தங்களுக்கென்று தனிப் பத்திரிகை தேவை என்று கருதுவது இயல்பாக இருந்து வருகிறது. வசதி உள்ளவர்கள் ஏதாவதொரு காலகட்டத்தில் சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்துவதும், அதுவே பெரும் சோதனையாக அமைந்து விடுவதும் நியதியாக அமைந்துள்ளது.

சொல்லில், பொருளில், சொல்லும் முறையில் புதுமைகள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியா’, ’சக்கிரவர்த்தினி என்ற பத்திரிகைகளை நடத்தினார்.

தமிழ் நாவலுக்கு முதன் முதலாக இலக்கிய அந்தஸ்து அளித்த படைப்பாளி எனும் சிறப்பைப் பெற்றுள்ளவர் பி. ஆர். ராஜமையர், ’கமலாம்பாள் சரித்திரம்' என்ற நாவலை எழுதிய அவர் 'விவேக சிந்தா மணி என்றொரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார். அதில் அவர் தொடர்கதை, கட்டுரைகள் முதலியன எழுதினார்.

ராஜமையர் காலத்திலேயே வாழ்ந்து, பத்மாவதி சரித்திரம் நாவலை எழுதிப் புகழ்பெற்ற பெருங்குளம் ஆ. மாதவையா சமூக சீர்திருத்த நோக்குடன் வேறு பல நாவல்களும் குசிகர் குட்டிக் கதைகளும் எழுதினார். தமது எழுத்துக்களைப் பிரசுரிப்பதற்காக அவர் பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகையை நடத்தினார். இது 1924-ல் பிரசுரமாயிற்று என்று தெரிகிறது.

தமிழ்ச் சிறுகதைக்கு முக்கிய வடிவம் தந்த முதல்வரும், தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முன்னோடியுமான வ. வே. சு. ஐயர் உலக இலக்கியங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். உலக இலக்கியங்களைத் தமிழ்நாட்டினருக்கு அறிமுகப்படுத்துவதற்காகவும், தமிழிலும் மேல்நாட்டு இலக்கியங்களுக்கு இணையாகக் கூடிய படைப்புக்களை ஆக்க வேண்டும் என்ற ஆசையோடும் அவர் பால பாரதி' என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.

வ. வே. சுப்பிரமணிய ஐயர் நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுவதைத் தமது முக்கிய லட்சியமாகக் கொண்டிருந்தார். அதே அளவுக்கு, தமிழ் மறுமலர்ச்சியிலும், இலக்கியம், கலைகள் வளர்ச்சியிலும் அவர் அக்கறை காட்டினார்.

இந்நோக்கங்களைச் செயல்படுத்தும் திட்டத்தோடு அவர் சேர்மா தேவியில் குருகுலம் நிறுவினார். அங்கிருந்துதான் பாலபாரதிவெளி வந்தது. (சேர்மாதேவி என்ற ஊரின் சரியான பெயர் சேரன்மாதேவி ஆகும் ).

தனது இணையற்ற பேராற்றல் குலைந்து போயிருக்கும் தமிழுக்கு அதன் இயற்கையான முதன்மை ஸ்தானத்தைத் தந்து, புராதனக் கலை களைப் போலவே இக்காலத்துக் கலைகளுக்கும் அதைப் பெரியதோர் நிலையமாக ஆக்க வேண்டுமென்பதும், மக்களுக்குப் பூரணமான கல்வி-அதாவது, இலக்கியக் கல்வியோடு விசுவ கர்ம கலைகளும் கற்பிக்க வேண்டுமென்பதுமே. அந்நோக்கத்திற்கேற்ப, இப்பத்திரிகையில் சீனத்தினின்று பெருதேசம் வரையிலுள்ள சகல நாடுகளிலும் பூத்த இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த முயலுவோம். புதிய கதைகளையும், உயர்ந்த பாஷாந்திரங்களையும் கலாப்பிரியர் ஆனந்திக்கும்படி இப்பத்திரிகை தாங்கி நிற்கும்என்று ஐயர் அறிவித் துள்ளார். பழைய இலக்கியங்களில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியத் தையும் அவர் வலியுறுத்தினார்.

இப்பத்திரிகைகள் எல்லாம் சிலகாலமே வெளிவந்தன. பரவலான விநியோகம் பெற்றிருக்கவுமில்லை. எனினும், எந்த நோக்கத்துக்காக அவை தோன்றினவோ, அதை இறுதிவரை செயல்படுத்தி வாழ்ந்தன.
இப்பத்திரிகைகளின் ஒன்றிரு இதழ்கூட இப்போது யாரிடமாவது இருக்குமா என்பது சந்தேகம்தான்.

'விவேக சிந்தாமணி இதழை நான் பார்த்ததில்லை. பஞ்சாமிர்தம்பத்திரிகையின் ஒன்றிரு இதழ்களையும் பால பாரதியின்இதழ்கள் பலவற்றையும் பார்க்கவும் படிக்கவும் எனக்கு 1936-ல் வாய்ப்பு கிட்டியது.

பாலபாரதி இலக்கியத் தரமான பத்திரிகையாக இருந்தது. கதை, இலக்கியம் பற்றிய கட்டுரைகள் என்று பல்வேறு விஷயங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

அடுத்து சுதந்திரச் சங்குஎன்ற பத்திரிகையைக் குறிப்பிட வேண்டும். சங்கு சுப்பிரமணியன் அதன் ஆசிரியர். 1930களின் ஆரம்ப வருடங்களில், காலணா விலையுள்ள வாரப் பத்திரிகையாக அது வளர்ந்தது. காந்திய லட்சியத்துடன், தேச விடுதலைப் போராட்டத்தில், 'சங்கு தீவிர மான பங்கு ஆற்றியது. விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த கட்டுரைகளே அதில் வந்து கொண்டிருந்தன. அதன் விளைவாக, பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைக்கு அது இலக்காயிற்று.

பின்னர், 1932-ல் சுதந்திரச் சங்கு மீண்டும் தோன்றியது. தமிழ்த் தொண்டுதான் சங்குக்கு மூச்சுஎன்று அறிவித்து வளர்ந்த அது மாதம் இருமுறை வெளிவந்தது. தி. ஜ. ரங்கநாதன் ( தி. ஜ. ர. ) அதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

சமூகப் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள், சிந்தனைகள், ’சங்குவில் இடம் பெற்றிருந்தன. வ. ரா. ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், சிட்டி ஆகியோர் அதில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகள் சில வும் அதில் இடம் பெற்றுள்ளன. சி. சு. செல்லப்பாவின் கதை சுதந்திரச் சங்குவில்தான் பிரசுரமாயிற்று. அதன் பிறகு அவ்வப்போது அவர் அதில் கதை எழுதி யுள்ளார்.

சுதந்திரச் சங்கு என்ற இலக்கியப் பத்திரிகையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது அதன் ஆசிரியர் பக்கம் ஆகும். சங்கு ஆசிரியர் புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டி னார். திறமையைக் கண்ட இடத்து, அதை வரவேற்றுப் பாராட்டி அதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யோசனைகள் கூறி ஆதரித்தார். தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள், உரைநடை பற்றிய கருத்துக்கள், கட்டுரை சம்பந்தமான சிந்தனைகள் - இப்படிப் பலவகை களிலும் பயனுள்ள விஷயங்களை ஆசிரியர் பக்கம் எடுத்துச் சொன்னது. சங்கு சுப்பிரமணியமும் தி. ஜ. ர. வும் இத்தகைய எண்ணங்களை எழுதி வழிகாட்டியிருக்கிறார்கள்.

1930களின் ஆரம்ப கட்டம் அரசியல் விழிப்பு மிகுந்திருந்த காலம். மகாத்மா காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. அரசியல் போராட்டத்துடன் சமூகச் சீர்திருத்தமும் மொழி வளர்ச்சியும் வலியுறுத்தப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் இந்திய நாட்டின் பல மொழிகளிலும் மறு மலர்ச்சி வேகம் பெற்றிருந்தது. அதற்காகப் பல பத்திரிகைகள் பாடுபட் டன. தமிழிலும், சுதந்திரச் சங்கு வுடன் காந்தி, ஜெயபாரதி போன்ற சிறு பத்திரிகைகள், காலணா விலையில் மக்களைத் தொட முயன்று வந்தன.

அந்தக் காலகட்டத்தில்தான் மணிக்கொடிஎன்ற வார இதழும் தோன்றியது. 1933 செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த வார ஏடு மணிக்கொடி அரசியல் பத்திரிகையாகத்தான் செயலாற்றியது. ஆரம்பத்தில் கே. சீனி வாசன், வ. ரா., டி. எஸ். சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அது இயங்கியது.

வார இதழின் ஆரம்பகாலத்தில் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. வ. ரா, டி. எஸ். சொக்கலிங்கம், சீனிவாசன் கட்டுரைகள் புதுமையாகவும் சிந்தனை வேகத்துடனும் அமைந்தன. தமிழில் புது முயற்சியான நடைச்சித்திரம் என்பதை வ. ரா. இதில் தொடர்ந்து எழுதினார்.
வாழ்க்கையில் காணப்படுகிற பல தொழில்துறை நபர்களையும் பற்றிய விவரணைச் சித்திரங்கள் இவை. அங்காடிக் கூடைக்காரி, மார்க்கட் மாணிக்கம், காவல் காத்தான், கான்ஸ்டபிள் சுப்பையா, தரகர், ஒட்டல் சிப்பந்தி என்று பலரையும் பற்றிய சுவாரஸ்யமான சொல்லோவி யங்கள். இவை பின்னர் நடைச்சித்திரம் என்ற தொகுப்பாக வெளி யிடப்பட்டன. அப்புறம், பல வருஷங்களுக்குப் பிறகு, இவைதான் வாழ்க்கைச் சித்திரம்' என்று மறுபதிப்பாகப் பிரசுரம் பெற்றுள்ளன.

சிட்டி, ந. ராமரத்னம், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி முதலி யோர் முதலில் கட்டுரைகளே எழுதினார்கள். கால ஓட்டத்தில் மணிக் கொடி வார ஏடும் சிறுகதைகளுக்கு இடம்தர முன்வந்தது.
பின்னர், பத்திரிகையின் கூட்டுப் பொறுப்பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் மணிக்கொடி நிற்க நேரிட்டது. மணிக்கொடி என்ற இலட்சியக் கூடாரம் மன வேறுபாடு என்ற பெருங்காற்றினாலே டேராத் துணி காற்றோடு போக, முளைகளும் பிய்த்துக்கொண்டனஎன்று கே. சீனிவாசன் சொன்னதாக, பி. எஸ். ராமையா மணிக்கொடி காலம் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பிறகு, 1935 மார்ச் முதல்- பி. எஸ். ராமையாவின் பெரும் முயற்சியால், மணிக்கொடி கதைப் பத்திரிகையாக வெளிவந்தது. சாதனைகள் புரிந்த அதன் வளர்ச்சி தனி வரலாறு ஆகும்.


[ நன்றி: ’தமிழில் சிறுபத்திரிகைகள்’ நூல் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

KRISH.RAMADAS சொன்னது…

இன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண்ணன் அவர்களின் பிறந்த நாள். அவரை நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அவர் எழுதிய "சரஸ்வதி காலம்" என்ற புத்தகத்தை இணையத்தின் மூலம் படிக்கத் துவங்கினேன்.

உள்ளே அத்தனையும் பொக்கிஷங்கள். மணிக்கொடி காலம் முதல் சரஸ்வதி காலம் வரை கட்டுரைகள் நீள் வடிவம் பெறுகின்றன. மணிக்கொடி துவங்கி ஒவ்வொரு ஆண்டாக வெளிவந்த சிற்றிதழ்களை எல்லாம் வரிசைப்படுத்தி இலக்கிய உலகை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் சிற்றிதழ்களின் பரிணாம வளர்ச்சியை அவர் வெளிக் கொண்டு வந்துள்ள விதம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. புதிதாக இந்த துறையில் நாட்டம் கொண்டு படிப்பவர் கூட எளிதாக புரிந்து கொள்ளும் எழுத்து நடையில் உள்ளது.
அந்த இதழ்களையெல்லாம் இங்கே நான் வரிசைப் படுத்துகின்றேன்.

1. மணிக்கொடி
2. சூறாவளி
3. கிராம ஊழியன்

4.பாரத தேவி
5. திருமகள்
6. ஹனுமான்
7. சக்தி
8. மனிதன்
9. முல்லை
10.குமரி மலர்
11.நவசக்தி
12.சந்திரோதயம்
13.சிந்தனை
14.தேனீ
15.காதம்பரி
16.சாந்தி
17.சரஸ்வதி.

இன்னும் பலப் பல. இத்தனையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இருக்க முடியாது. அந்த இதழ்கள் இலக்கிய வெளியில் ஆற்றியுள்ள சாதனைகள் ஈடு இணையில்லாதது. அத்தகைய பொக்கிஷங்கள் புதையுண்டு போக விடலாமா.

இந்த இதழ்களை வைத்திருக்கும் நண்பர்களே, உங்கள் பொற்பாதம் தொட்டு வேண்டுகின்றேன், இந்த இதழ்களை பி.டி.எப். பிரதியாக மாற்றி வெளியிடுங்கள். உலகம் முழுக்க தமிழ் வாசகர்களுக்கு கொண்டு செல்லுவோம். அதற்கு சிற்றிதழ் உலகம் தளம் உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.

உங்களிடம் எத்தனை இதழ்கள் உள்ளதோ அதை மாற்றுங்கள். அதற்கு காலத்தால் அழிவில்லாமல் இருக்கும். உங்கள் புகழை உலகம் முழுதும் கொண்டு செல்லும். விரைவில் சிற்றிதழ்களின் பி.டி.எப். ஹப் ஆகா மாற இருக்கும் சிற்றிதழ்கள் உலகம் தளம் உங்கள் பெயருடன் உலக வாசகர்களுக்கு கொண்டு செல்லும் என்ற உத்திரவாதத்தை அளிக்கின்றேன்.

வாருங்கள் நண்பர்களே, நம் இலக்கிய பொக்கிஷங்கள் புதையுண்டு போகாமல் புற வெளிக்கு கொண்டு வருவோம். அதன் புகழை உலகெங்கும் கொண்டு செல்வோம்.



















படங்கள்: பொள்ளாச்சி நசன் அய்யா அவர்களுக்கு நன்றி.
கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி.
12.11.2016.


Kasi Nagarajan சொன்னது…

அருமையான முயற்சி -- பழைய இலக்கியங்களின் பெருமை உலகறிய செய்ய வேண்டும் -- வாழ்க தமிழ் !