செவ்வாய், 15 நவம்பர், 2016

சங்கீத சங்கதிகள் - 99

அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்
(இசைப்புலமையில் ஒரு புது மலர்ச்சி)
பி.ஸ்ரீ


நவம்பர் 15. முத்தையா பாகவதரின் பிறந்த நாள்.

 தமிழறிஞர் பி.ஸ்ரீ.  எழுதிய ஒரு கட்டுரை இதோ!
==================

காந்தியடிகள் சத்தியாக்கிரகம் தொடங்கிய ஆறாவது ஆண்டிலே கரூருக்குப் போயிருந்தபோது ஆண்டிப்பட்டி மீன்தாரான பெத்தாச்சி செட்டியார் என்ற வள்ளல் இவரிடம் நம்ம ஊர் சாமி பேரில் தாங்கள் ஒரு கீர்த்தனையும் பாட வில்லையே' என்று குறைப்பட்டுக் கொண்டார். அதற்குப் பாகவதர், நாளையே பாடுவேன்' என்று பதில் சொன்னார்.

கரூர்ச்சிவன் கோயிலில் உள்ள தெய்வத்திற்குப் பசுபதீச்வரர் என்று திருப்பெயர். பாகவதர் சொன்னபடி றுநாளிலேயே "சரவணபவா ஸம யமீதிரா" என்ற கீர்த்தனையை இயற்றிப் பாடிக் காட்டினார். அது ஒரு புதுமையான பண்ணழகோடு பாடப்பட்டது. அந்த ராகத்திற்கு அந்த ஸ்வாமியின் பெயரையே இட்டு மகிழ்ந்தார்.

இசை மேதையான பாகவதர்

கீாத்தனம் கேட்டார் செட்டியார். அவருக்கு ராகமும் கொடுத்தார் முத்தையா பாகவதர். தற்காலத்தில் தமிழிசை இயக்கம் தோன்றிய பின் கீர்த்தனங்கள் இயற்றுவது சாதாரணமாகி விட்டது. ஆனால் தனித்தன்மையும் கவர்ச்சியும் இனிமையுமுள்ள ராகங்களை உண்டாக்குவது எளிதன்று. "டைம்ஸ் ஆஃப் இந்தியா" போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகத் தொண்டாற்றியுள்ள ஏ.ஸி. ரங்கராஜன்-இசைத்துறையிலும் தமிழிலும் ஒருங்கே ஈடுபாடு கொண்டவர்- சங்கீதச் செய்திகளையும் மற்ற செய்திகளைப் போல் எடுத்துச் சொல்லும் பேராற்றல் பெற்ற சுவைஞர் ஆவர்.

இசையுலகில் ஓர் ஆணி முத்தைப்போல் திகழ்ந்த முத்தையா பாகவதரைப் பற்றி மேலே சொன்ன செய்தியை வெளியிடும் போது, அத்தகைய செயற்கருஞ் செயல் பெரும் புலமையும் ஆழ்ந்த அனுபவமும் உள்ள பெரியோர்களால் தான் இயலும் என்று கூறியுள்ளார்.
உதாரணமாக ராமசுவாமி தீட்சிதரையும், பட்டணம் சுப்பிரமணிய ஐயரையும் சுட்டிக் காட்டுகிறார். தீட்சிதர்  ஹம்ஸத்வனி ராகத்தை உண்டாக்கினார். சுப்பிரமணிய ஐயர் *கதனகுதூகலம்" என்ற பண்ணைப்  படைத்தார் அந்தக் காலத்திலே.

அண்மையில், அதாவது காந்தியுகத்தில், பாரதி வாழ்ந்த காலத்தில் காயக சிகாமணி முத்தையா அரிய கீர்த்தனைகள்  பல இயற்றியிருப்பதோடு வள்ளல் பெத்தாச்சி கீர்த்தனை இல்லையே என்று குறைப்பட்டுக்கொள்ள, அக் குறை நிறைவு பெற  கீர்த்தனத்துடன் ராகம் ஒன்றையும் படைத்து உதவினார் இது முத்தையா பாகவதர் என்ற இசை மேதையின் ஒரு சிறப்பியல்பு.

பாரதியும் முத்தையா பாகவதரும்

20-ஆம் நூற்றாண்டில் காந்தியடிகள் தேசியப் பேரவைக்குத் தலைமை பூண்டதிலிருந்து, சிதம்பரனார் தோற்றுவித்து சற்று தடைப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட உணர்வு தழைத்தோங்கி வந்தது. அதைத் தமிழகத்தில் தம் இசைப்பாக்களால் செழித்து வளரச் செய்த தேசிய இசைக் கவிஞர் பாரதியார். அவருக்கு ஒரு நண்பராக இருந்தார், முத்தையா பாகவதர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் கீர்த்தனை பாடும் அளவிற்கு இசைப்புலமை பெற்றிருந்தார். அவரும் கீதத் தமிழ் என்னும் நூல் இயற்றிய K M. பாலசுப்பிரமணியமும் எனது நண்பர்கள். அவர்களைப் போல் அரிகேச நல்லூர் பாகவதரையும் நான் அறிந்திருக்கிறேன். நான் பத்திரிகை நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அரிகேசநல்லூருக்குப் போய் முத்தையா பாகவதரின் இசை விருந்தோடு பொங்கல் முதலான சித்திரான்ன விருந்துகளையும் அனுபவித்திருக்கிறேன். அவற்றுக்கிடையே பாரதியார் பாடல்களைக் குறித்தும் பேசிக் கொண்டிருப்போம்.

ஒரு சமயம் பாரதியார், *ஜெயமுண்டு பயமில்லை மனமே!என்ற தமிழ்க் கீதத்தைப் பண்ணமுதமாகப் பொழிந்து கொண்டிருந்தார். முத்தையா பாகவதரும் அப்போது உடன் இருந்து அனுபவித்தார். பாரதியார் பாடி நிறுத்தியதும் பாகவதர் மெல்ல அவரிடம் போய், "சுப்பையா உன்னுடைய பண்களில் கடைசியாக ஒன்றைப் பாடி, "அலை பட்ட கடலுக்கு மேலே" என்ற இறுதிப் பகுதியைப் பாடினாயே, அந்தப் பண் இந்திய இசை வகை ஒன்றையும் சேர்ந்ததாகத் தெரியவில்லையே, அது என்ன சங்கதி?" என்று கேட்டார்.

"அது பிரெஞ்சு இராணுவப்பண்" என்று பதில் அளித்தார் பாரதி. கர்நாடக இசைப் புலவர்கள் அதை அனுபவித்த போதிலும் திகைத்து நின்றார்கள். முத்தையா பாகவதரோ பாரதியைத் தழுவிக் கொண்டு "முத்து ஸ்வாமி தீட்சிதர் போன்ற பேராழமுள்ள அனுபவப் புலமையை அல்லவா உன்னிடம் காண்கிறேன்" என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

[ நன்றி: “ தமிழ் மணிகள்” பி.ஸ்ரீ ]  


தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக