புதன், 22 மார்ச், 2017

உ.வே.சா. - 7

கிராமம் பெற மறுத்தது
கி.வா.ஜகந்நாதன்


மார்ச் 21. பாண்டித்துரைத் தேவரின் பிறந்த நாள். 

 உ.வே.சா வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி கி.வா.ஜ. எழுதிய ஒரு கட்டுரை இதோ. ( “என் ஆசிரியப் பிரான்” என்ற நூலிலிருந்து ).  தேவருக்கும் உ.வே.சா.வுக்கும் உள்ள உறவு இதிலிருந்து தெரியும். 
=====

ஆசிரியர் ( உ.வே.சா.) பதிப்பித்த மணிமேகலை, புறப்பொருள் வெண்பா மாலை ஆகியவற்றுக்கு உதவி செய்தவர் இராமநாதபுரம் பொ. பாண்டித்துரைத் தேவர் அவர்கள். அவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை உண்டாக்கிப் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அதோடு செந்தமிழ்’ என்னும் இலக்கியப் பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். அவருடைய தாயார் 1898-ஆம் ஆண்டு இறைவன் திருவடியை அடைந்தார். அது காரணமாக இராமநாதபுரம் சென்று அவரிடம் துக்கம் விசாரித்து வரவேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். அப்போது இராமநாதபுரத்திற்குப் புகைவண்டி ஏற்படவில்லை, மதுரைபோய், அங்கிருந்து வண்டி வைத்துக் கொண்டுதான் இராமநாதபுரம் போகவேண்டும்.

ஆசிரியரும், அவருடைய குமாரரும் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்து, அங்குள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கினா ர்கள். சிறுவயல் ஜமீன்தார் முத்துராமலிங்கத் தேவர் ஆசிரியரிடம் மிக்க அபிமானம் உடையவர். ஆசிரியர் இராமநாத புரத்திற்குப் புறப்பட்டு, மதுரை வந்த செய்தியை அவர் தெரிந்து கொண்டார். ஆசிரியரைப் போய்ப் பார்த்து, இராமநாதபுரம் செல்ல அங்கங்கே தாம் வண்டியை ஏற்பாடு செய்து தருவதாக மனமுவந்து சொன்னர். வண்டியில் அங்கிருந்து புறப்பட்டு, அடுத்துப் பரமக்குடியில் போய்த் தங்கினர். வைகையில் வெள்ளம் வந்துவிட்டதால் அங்கிருந்து உடனே பயணத்தைத் தொடர முடியவில்லை. மூன்று நாட்கள் கழித்தே இராமநாதபுரம் போய்ச் சேர முடிந்தது.

இராமநாதபுரத்தில் பாண்டித்துரைத் தேவர் தங்கியிருந்த அரண்மனைக்குச் சோமசுந்தர விலாசம் என்று பெயர். ஆசிரியர் இராமநாதபுரம் வந்ததை அறிந்து, பாண்டித்துரைத் தேவர், அவர் வசதியாகத் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

இராமநாதபுரத்தில் ஆசிரியர் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார். அதனால் பாண்டித்துரைத் தேவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. பாண்டித்துரைத் தேவர் தமிழில் நல்ல புலமை உடையவர். பன்னூற்றிரட்டு என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். காலையிலும், மாலையிலும் அவரும் ஆசிரியரும் சந்தித்து உரையாடினார்கள். திரு ரா. இராகவையங்கார் முதலிய புலவர்களும் உடன் இருந்தார்கள். ஆசிரியர் பேசும்போது பல இலக்கியத்திலுள்ள நயங்களையும், தம் அனுபவத்தால் தெரிந்துகொண்டசெய்திகளையும் எடுத்துச் சொல்வார்; நயம்பட நகைச்சுவை தோன்றும்படி பேசுவார். அவற்றைக் கேட்பவர்கள் நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.


பாண்டித்துரைத் தேவர் நாள்கள் போகப் போக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார். என்னுடைய தாயார் இறந்து போனதில் எனக்கு ஒரு நன்மை ஏற்பட்டது. தாங்கள் இங்கே வந்து தங்க வேண்டுமென்று எழுதினால் வந்து தங்குவீர்களா? தங்களுக்குத் தமிழ்த் தொண்டே நாள் முழுவதும் இருக்கும். ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்காகத் துக்கம் கேட்க வந்தீர்கள். தங்களோடு சல்லாபம் செய்துகொண்டிருப்பதில் என் அன்னை இறந்துபோன துக்கமே மாறிவிட்டது. நல்லவர்கள் எதைச் செய்தாலும் அது நன்மையையே தரும் என்பதைத் தெரிந்து கொண்டேன். என்னுடைய தாயார் மிகவும் சிறந்தவர். அவருடைய உயர்ந்த குணங்களை எல்லாம் நான் அறிந்து மகிழ்ந்து இருக்கிறேன். அவர் வாழ்ந்திருந்த காலத்திலும் எனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தார்கள். அவர் இறந்த பிறகும்கூட, தங்களை எல்லாம் வரும்படி செய்து என்னைத் தமிழ் அமுதக்கடலில் ஆழ்த்தினர்கள். இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்என்று பாண்டித்துரைத் தேவர் நயமாகப்பேசினர். அந்த ஒரு மாதம் போனதே தெரியவில்லை. தினந்தோறும் பாண்டித்துரைத் தேவர் பல சங்கீத வித்துவான்களை வரவழைத்துக் கச்சேரிகளும், கதாகாலட்சேபங்களும் தொடர்ந்து நடக்கும்படி செய்தார். அவருடைய ஆற்றலையும், சிறப்பையும் அறிந்து புலவர்கள் வியந்தார்கள்.

ஒரு நாள் பாண்டித்துரைத் தேவர் சேதுபதி மன்னரைப் பார்க்கப் போயிருந்தார். மன்னரிடம் பேசிக்கொண்டிருந்தவர் புறப்படும்போது பாஸ்கர சேதுபதி பாண்டித்துரைத் தேவரைப் பார்த்து, 'சாமி, கொஞ்சம் இருங்கள், ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லவேண்டும்' என்று சொன்னார், பாண்டித்துரைத்தேவரைச் சாமி என்று அழைப்பது வழக்கம். எல்லோரும் போன பிறகு மகாராஜா ஒரு கருத்தைத் தெரிவித்தார். அது கேட்டு மிகமகிழ்ந்து, அது மிகவும் பொருத்தமானது என்று பாண்டித்துரைத்தேவர் சொல்லிவிட்டு ஆசிரியர் இருந்த விடுதிக்கு வந்தார்.

ஆசிரியர் அவரை வரவேற்று உட்காரச் சொன்னர். தங்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன்' என்று பாண்டித்துரைத்தேவர் சொன்னவுடன், ஆசிரியர் ஒன்றும் புரியாமல், ஏதாவது புதிய நூலைப் பதிப்பிக்க உதவி செய்யப்போகிறீர்களா?' என்று கேட்டார். ஒரு நூல் அல்ல; பல நூல்களைத் தாங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குத் தங்களுக்குச் செல்வம் அளிக்கக்கூடியவாறு ஒரு கிராமத்தையே தங்கள் பெயரில் எழுதி வைக்க மகாராஜா நினைக்கிறார் என்றார் பாண்டித்துரைத் தேவர், ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டும்' என்று கேட்டார்.

அப்போது பாண்டித்துரைத்தேவர் சொன்னார்; ” நான் இன்று அரண்மனைச்குப் போயிருந்தேன். சேதுபதி அவர்கள் இந்தச் செய்தியைத் தங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். எத்தனையோ பேர்களுக்கு நம்முடைய சம்ஸ்தானத்திலிருந்து நாம் உதவி செய்து வருகிறோம். ஆனா ல் அவர்களோ நமக்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. மாறாக என்னுடைய தந்தையாரைப் பற்றியும், என்னைப் பற்றியும் எவ்வளவோ பழி சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் ஐயர் அவர்களோ நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காமல் நம்மிடத்தில் மிக்க அன்பைக் காட்டிவருகிறார்கள். இந்நாள்வரை அவர்களுக்கு நாம் எந்த விதமான உதவியும் செய்யாமல் இருந்தது பெரிய தவறு. ஆகவே, அவர்களுக்கு இப்போது நம் ஜமீனில் உள்ள ஒரு கிராமத்தையே வழங்கிவிடலாம் என்று தோன்றுகிறது. நான் நேராகச் சொன்னால் அவர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. ஆகையால் அவர்களிடம் நெருங்கிப் பழகுகிற நீங்களே இந்தச் செய்தியை அவர்களிடம் சொல்லி, எப்படியாவது என்னுடைய விருப்பம் நிறைவேறும்படி செய்ய வேண்டும். அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதனால் இதுபோன்ற கொடையைத் தாம் வாங்கிக்கொள்வது சரியாகாது என்று நினைக்கலாம். அதுவே காரணமாக மறுக்கவும் மறுக்கலாம். அப்படியானால் அவருடைய குமாரர் பேரில் அந்தக் கிராமத்தை எழுதி வைத்து விடுகிறேன். எப்படியாவது நம்மாலே ஒரு பெரிய உபகாரம் அந்தக் குடும்பத்திற்குச் சேரவேண்டும். இதை இரகசியமாக வைத்துக் கொண்டு, ஐயரது சம்மதத்தைப் பெற்று எனக்குத் தெரிவிப்பது நல்லது என்று சொன்னார். ஆகவே அதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன்' என்று பாண்டித்துரைத் தேவர் சொன்னவுடன் ஆசிரியருக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஒரு கிராமத்தையே வாங்கிக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் ? நம் தொழிலுக்கும், சாகுபடி செய்வதற்கும், குத்தகை வாங்குவதற்கும் ஒத்து வருமா ? என்றாலும் இவ்வளவு பெரிய கொடையை வாங்கிக் கொள்வதற்கு நாம் என்ன செய்துவிட்டோம் ? நமக்கு என்ன தகுதி இருக்கிறது ?" என்றெல்லாம் எண்ணினார். உடனே ஆசிரியர், ”மகாராஜா அவர்களுடைய எல்லையற்ற அன்பை நான் இதனால் உணர்ந்து கொள்கிறேன். அவர்களே இக் காலத்துக் கர்ணன் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய கருத்தை நான் அவர்களிடமே நேரில் சொல்கிறேன்' என்று சொன்னார்.

அப்படியே மறுநாள் காலையில் ஆசிரியர் பாஸ்கர சேதுபதி மன்னரைப் பார்க்க அரண்மனை சென்றார். தம் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு, தமக்கு நன்றி தெரிவிக்கத்தான் வந்திருக்கிறார் என்று முதலில் மன்னர் எண்ணினார். ஆகவே மகிழ்ச்சியோடு ஆசிரியரை வரவேற்றார்.

மன்னரோடு ஆசிரியர் பேசத் தொடங்கினர். முதலில் எடுத்தவுடன் அதனைச் சொல்லவில்லை. சிறிது நேரம் வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, முடிவில் அது பற்றிச் சொன்னார்.

 'மகாராஜா அவர்கள் சாமி மூலம் (பாண்டித்துரை தேவர்) சொல்லி அனுப்பிய செய்தியை அவர்கள் தெரிவித்தார்கள். அதிலிருந்து மகாராஜா அவர்களுக்கு என்னிடத்தில் எத்தனை அன்பு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். எவ்வளவோ உபகாரங்களைத் தங்களிடமிருந்து நான் பெற்றிருக்கிறேன். எனக்கு இப்போது எதிலும் குறைவு இல்லை. ஆண்டவன் திருவருளினால் கல்லூரியில் எனக்குச் சம்பளம் வருகிறது. எனக்கு அவ்வளவு பெரிய குடும்பமும் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு செட்டாக வாழத் தெரிந்தவன் நான். தாங்கள் வழங்குவதை ஏற்க மறுக்கிறேன் என்று எண்ணக் கூடாது. சமஸ்தா னத்தின் நிலைமை எப்படி இருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். இந்த நிலையில் நான் இப்போது அவ்வளவு பெரிய கொடையைத் தங்களிட மிருந்து ஏற்றால் அது என் மனத்திற்குச் சம்மதம் ஆகாது' என்று சொன்னார்.

அப்போது இராமநாதபுரம் சம்ஸ்தானம் பல விதமான கடன் தொல்லைகளுக்கு ஆளாகியிருந்த நேரம். அதை எண்ணி ஆசிரியர் அவ்வாறு சொன்னார்.


ஆசிரியரது கருத்தை உணர்ந்துகொண்டு ஒரு பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் மெளனமாக இருந்தார் சேதுபதி மன்னர். பிறகு, 'தங்கள் விருப்பம். ஆனால் மேலும் கடனாளியாக என்னைத் தாங்கள் ஆக்கிவிட்டது போன்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்படுகிறது' என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பினார்.

தொடர்புள்ள பதிவுகள் :




1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இன்றைய சூழலில் இத்தகைய நல்லோர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதே நெகிழ்ச்சியும் , நம்பிக்கையும் அளிக்கிறது , நன்றி ......நல்ல குணமுள்ளோர்களை நினைவு கூர்ந்தமைக்கு ............