பாண்டிபஜார் பீடா
அசோகமித்திரன்
மார்ச் 23, 2017 அன்று அசோகமித்திரன் காலமானார்.
அவருடைய கதை ஒன்று இதோ! பாண்டி பஜார் என் ‘பேட்டை’யாகவும் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்!
==
''ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... முதல் போணியாகட்டும்' என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான்.
''ஏன்... என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?'' என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா.
இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி வெங்கையாவிடம் கொடுத்தான் கோபாலகிருஷ்ணா. கடை கல்லாப்பெட்டியில் சில்லறை இல்லை. அவன் சட்டைப் பையில் இருந்து அரை ரூபாய் நாணயத்தை எடுத்து, வெங்கையாவிடம் கொடுக்க வந்தான்.
'உன்கிட்டேயே இருக்கட்டும். நாளைக்குப் போணி' எனச் சொல்லிவிட்டு, பாண்டிபஜார் பக்கம் வந்தார் வெங்கையா.
அப்போதுதான் ஒவ்வொரு கடையாகத் திறந்துகொண்டிருந்தார்கள். கீதா கபேயும் அதன் பக்கத்தில் இருந்த வெற்றிலை பாக்குக் கடையிலும் மட்டும், ஜனங்கள் அதிகம் தென்பட்டார்கள். 'பீடாக்கடைக்காரனிடம் வீம்பு காட்டியிருக்க வேண்டாம்’ என, வெங்கையாவுக்குத் தோன்றியது. அந்த எட்டணா இருந்தால், டிபன் - காபி சாப்பிட்ட பிறகு பீடாவைப் போட்டுக்கொள்ளலாம். வெங்கையா காத்திருந்தார்.
பிரமாண்டமான பழைய கார் ஒன்று, தடபுடவென சத்தம் போட்டுக்கொண்டு கீதா கபே முன்னால் வந்து நின்றது. சி.எஸ்.ஆர் இறங்கினான். வெங்கையாவைப் பார்த்துவிட்டான். வெங்கையா அவனிடம் சென்றார்.
'இன்னும் இந்தக் கார் உன்னை விட மாட்டேங்குது' என்றார்.
காரை ஓட்டி வந்த டிரைவர் சி.எஸ்.ஆரிடம், 'சார், சரியா ஒம்பது மணிக்கு என்னை விட்டுடணும். இல்லாட்டி வண்டியை இங்கேயே விட்டுட்டுப் போயிடுவேன்' என்றான்.
'பயப்படாதே. காபி சாப்பிட்ட அப்புறம் வீட்டுக்குப் போயிடலாம்' என்றான் சி.எஸ்.ஆர்.
'ஒவ்வொரு தடவையும் இதையேதான் நீ சொல்ற!'
சி.எஸ்.ஆர்., வெங்கையா பக்கம் திரும்பினான்.
'ஐயா, நமஸ்காரம்.'
'உனக்கும் வீட்ல காபி கிடைக்கலையா?'
'பணம் சம்பாதிச்சுண்டு வந்தா, வீட்ல காபி என்ன, பூரிக்கிழங்கே கிடைக்கும். இப்போதைக்கு எனக்கு 'ராம-ஹனுமான் யுத்தம்’ படம் மட்டும்தான் இருக்கு. இன்னும் ஒரு படம் வந்தா, இந்தக் காரை வித்துத் தொலைச்சுடுவேன். ஆயிரம் ரூபா கிடைக்கும்.'
இருவரும் கீதா கபேயினுள் நுழைந்தார்கள். அங்கு இருந்த இரண்டு மூன்று பேர் அவர்களைப் பார்த்து 'யார் இவர்கள்?’ என நினைவுபடுத்திக்கொள்ள முயல்வது தெரிந்தது.
சி.எஸ்.ஆர் சொன்னான்...
''நம்ம புரொடியூசர்களுக்கு நம்ம நினைவே வராமல் இருக்கலாம். ஆனா, பப்ளிக்குக்கு நாம இன்னும் ஸ்டார்கள்தான்.'
'எனக்குத் தெரியும்பா. 'ஜீவிதம்’ வந்தப்போ, அந்த வசுந்தரா பொண்ணைவிட உன்னைத்தான் எல்லாரும் நினைச்சு நினைச்சுச் சிரிச்சாங்க.'
'முகூர்த்தமெப்புடு பொம்மக்கா?'
'அதோ ஆள் வந்துட்டார். சி.எஸ்.ஆர்., எங்கிட்ட ஒரு காசு கிடையாது.'
'பயப்படாதே. நான் பாத்துக்கிறேன். அப்பா கண்ணா... இரண்டு பிளேட் இட்லி, சாம்பார்.'
'இப்போ பீடாக்கடைக்காரன்கூட, நான் நெருங்கினாலே கடனுக்குனுதான் நினைக்கிறான். நீ சொல்றே ஸ்டார்னு... நல்ல ஸ்டார்!'
இட்லி, சாம்பார் வந்தது. சி.எஸ்.ஆர் இன்னும் கொஞ்சம் சாம்பார் வரவழைத்து, இட்லியை சாம்பார் சாதம் மாதிரி செய்தான். பிறகு, அரை அரை ஸ்பூனாக எடுத்துச் சாப்பிட்டான். வெங்கையாவுக்கு வருத்தமாக இருந்தது. பணம் வந்தபோது, ஏன் கொஞ்சம் ஜாக்கிரதையா இல்லை? வெங்கையாவாவது மூன்று படங்கள் எடுத்தார். சி.எஸ்.ஆர்., அவனாக ஒரு படம்கூட எடுக்கவில்லை.
இருவரும் ஒரு கப் காபி சொல்லி அதைத் டம்ளரும் டபராவுமாகக் குடித்தார்கள். பில்லுக்குப் பணம் கொடுத்தான் சி.எஸ்.ஆர். இருவருமாக வெளியே வந்தபோது ஒரு பிச்சைக்காரன், ''ஐயா தர்மதுரைங்களா... பிச்சை போடுங்க' என்றான்.
சி.எஸ்.ஆர்., வண்டி அருகே சென்றான்.
'வர்றீங்களா, உங்களை வீட்ல விட்டுட்டுப் போறேன்.'
''இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நிக்கிறேன். எவனாவது கர்ணன் மாதிரி வருவான்.'
சி.எஸ்.ஆர் போய்விட்டான். வெங்கையா இன்னும் சிறிது தூரம் நடந்து கேரளா ஹேர் டிரெஸ்ஸர்ஸ் கடை அருகே சென்றார். அவர் கடைக்குச் சென்று முடி வெட்டிக்கொண்டு மாதக்கணக்கில் ஆயிற்று. அங்கே முடி வெட்டிக்கொள்ள வரும் இளைஞர்களில் பாதிப்பேர் அந்த சலூனில் சிதறிக்கிடக்கும் சினிமா பத்திரிகைகளுக்குத்தான் வருவார்கள். இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் சினிமா என்றால் அவ்வளவு பைத்தியம்.
''ஐயா!'
வெங்கையா திரும்பிப் பார்த்தார். பளிச்சென்ற சட்டை-பேன்ட் அணிந்துகொண்டு ஓர் இளைஞன், அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.
'என்னப்பா இது... தெருவுல எல்லாம்...'
'உங்களை எங்கே பார்த்தாலும் இப்படி வணங்கலாம் ஐயா. நேத்துகூட வணங்கினேன். நீங்க கவனிக்கல.'
'நேத்தா?'
'ஆமா... ஐயா.'
வெங்கையா சற்றுச் சங்கடமாக உணர்ந்தார்.
'ஐயா... நீங்க ஏன் இந்த 'மீசைக்காரனுக்கு மீசைக்காரன்’ மாதிரி படத்துல நடிக்க வர்றீங்க? உங்க அருமை பெருமை தெரியாதபடி
பத்து கௌபாய்களோடு உங்களையும் ஒரு கௌபாயா நிக்கவெச்சுட்டாங்க.'
வெங்கையா, 'உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டார்.
'நான் ரங்காராவ் அசிஸ்டென்ட்... சவுண்டு இன்ஜினீயர் ரங்காராவ்.'
வெங்கையா திகைத்து நின்றார்.
'ஆமா ஐயா. அவரும் ரொம்ப வருத்தப்பட்டுண்டார்.'
'அவர் புதுசா?'
'ரெண்டு மூணு வருஷங்கள் இருக்கும். அவர் அமெரிக்காவுல படிச்சுட்டு வந்தவர். அங்கே உங்க படங்களைத்தான் பாடமா சொல்லித்தருவாங்களாம்.'
''நான் பெரிசா என்ன பண்ணிட்டேம்பா? பாடுவேன்...'
'அதான் ஐயா... அங்கே பாட்டுனா தனியா நிக்கும். நீங்க பாடி எல்லார் மனசையும் உருக வெச்சுடுறீங்க. பால்முனியெல்லாம் ஆச்சர்யப்பட்டாங்களாம். உங்களைக் கூப்பிடுறதா இருக்காங்களாம்.'
'உன் பேர் என்ன?'
'சிட்டிபாபு.'
'சிட்டிபாபு, இப்படி ஓரமா வா. இந்த மாதிரி பேச்செல்லாம் நான் நிறையக் கேட்டிருக்கேன். இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது.'
'எங்க அம்மாவுக்கு நீங்கதான் யோகி வேமனா.'
வெங்கையாவுக்கு எரிச்சலாக இருந்தது.
''ரொம்ப சரி... இப்போ வேமனாவும் ஒண்ணுதான் கௌபாயும் ஒண்ணுதான். நேத்து அந்த புரொடியூசர் என் பாட்டுக்கும் நடிப்புக்கும் கூப்பிடலை. அவருக்கு என் மேலே ரொம்ப மரியாதை உண்டு. எனக்கு ஒரு காதுல இருந்து இன்னோரு காது வரைக்கும் மீசை வெச்சு, பேன்ட், கட்டம் போட்ட சட்டை எல்லாம் போடுறதுக்கு ரொம்ப வருத்தப்பட்டார். அவர் எடுக்கிற படங்கள் எல்லாம் பைத்தியக்காரத்தனமாத்தான் இருக்கும். நேத்து எனக்கு மட்டும் நூறு ரூபா கொடுத்தார். மளிகைக் கடை, வீட்டு வாடகை எல்லாம் தீர்த்து, கொஞ்சம் பருப்பும் உப்பும் வாங்கிப்போட முடிஞ்சது. பால் பாக்கிதான் இருக்கு.'
'அதை நான் தீர்த்திடுறேன் ஐயா. இப்போ எங்கே இருக்கீங்க... திருமலைப்பிள்ளை வீடுதானே?'
'அதெல்லாம் போய் ரொம்ப நாள் ஆச்சு. இப்போ கமலா கோட்னிஸ் வீட்ல ஒரு ரூம்ல இருக்கேன். நல்ல பொண்ணு. அந்த வீடும் போயிடப்போறது. வெளிக் கதவுல நோட்டீஸ் ஒட்டிட்டான்.'
''நீங்க பேங்க் லோன் வாங்கித்தான் கஷ்டப்பட்டீங்கனு சொன்னாங்க.'
'உனக்கு இன்னிக்கு வேலை கிடையாதா?'
'இன்னிக்கு ரங்காராவ் சாருக்கு கால்ஷீட் இல்லை. நான் அடுத்த தெருவுல இருக்கிற மேன்ஷன்லதான் இருக்கேன். ஐயாவைப் பார்த்துட்டு ஓடிவந்தேன்.'
''சந்தோஷம். நான் கிளம்புறேன்.'
''ஐயா... சின்ன உதவி.'
'நான் என்ன உதவி பண்ண முடியும்?'
'ஒண்ணு, உங்க பால் கணக்கைத் தீர்க்க எனக்கு அனுமதி தரணும். ரெண்டு, எங்க வீட்டுக்கு வரணும்.'
'நீ ரூம்லதானே இருக்கே?'
'எங்க வீடுனா சித்தூர்ல ஐயா. உங்க ஊர்தான். எங்க சார் கார்லயே போயிட்டு வந்துடலாம். எங்க அப்பா - அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.'
'நீ அப்பா - அம்மா மேல இவ்வளவு பக்தி வெச்சிருக்கியே! உன் குடும்பம் பேர் என்ன?'
'என் அப்பா - அம்மாவைப் பார்த்தா உங்களுக்குத் தெரிஞ்சுபோயிடும்.'
'உன்கிட்டே ஒண்ணு சொல்லிடணும். நான் பேங்க் லோன் வாங்கி, அதைச் சரியாத் திருப்பித் தராததுனால, அந்த மேனேஜருக்குத்தான் ரொம்பக் கஷ்டம். அவரை ஒரு சின்ன ஊருக்கு மாத்திட்டாங்க. அவருக்குத் தெரியும், தெய்வத்துக்குத் தெரியும் நாங்க யாரையும் ஏமாத்தலைனு. படத்தை உடனே ரிலீஸ் பண்ண முடியலை. அவர் உதவி பண்ணலைன்னா,
'பக்த ராம்தாஸ்’ படம் வந்திருக்காது.'
'எங்க அம்மாவுக்கு நீங்கதான் ராம்தாஸ், வேமனா, ரமண மகரிஷி எல்லாம்.'
'ரமண மகரிஷியைப் பார்த்திருக்கியா?'
'இல்லை ஐயா.'
'நீ குழந்தையா இருக்கிறப்பவே, அவர் சமாதி ஆகிருப்பார்.'
'ஆமா ஐயா. எங்க குடும்பமே அவரை சாமியா கும்பிடுவாங்க.'
'நீ ஒரு சினிமாக்காரப் பையனாவே இல்லையே!'
'ஒரு நிமிஷம் இருங்க ஐயா. எங்கிட்டே மோட்டார் சைக்கிள் இருக்கு. உங்களை வீட்டுல விட்டுட்டு, பாலுக்கு ஏற்பாடு பண்றேன். ஆனா, எனக்கு ரெண்டு மூணு நாள் ஆஃப் இருக்கிறப்ப, நீங்க சித்தூர் வரணும். முடிஞ்சா நம்ம சவுண்டு இன்ஜினீயரையும் கூட்டிண்டு போகலாம்.'
''அவரை எதுக்குத் தொந்தரவு பண்ணணும்?'
'அவர் ரொம்பப் பெருமையா நினைப்பார் ஐயா.'
வெயில் தெரிய ஆரம்பித்ததோடு அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் சேர ஆரம்பித்தது.
'சிட்டிபாபு, நான் கிளம்புறேன். இன்னொரு நாள் பார்ப்போம்.'
'ஒரு நிமிஷம் இருங்க ஐயா. இதோ மோட்டார் சைக்கிள் கொண்டுவந்துடுறேன்.'
பத்து நிமிடங்கள் கழிந்தது. சிட்டிபாபுவைக் காணோம். அவன் வர மாட்டான். ஆனால், என்னவெல்லாம் பேசிவிட்டான்! வெங்கையா, வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்தார். பிரகாசம் தெருவும் கிழக்கு மேற்கு. நல்ல வெயில் தொடங்கிவிட்டது. முடிந்தவரை நிழலாகப் போனார்.
ஆனால் அவன் வந்தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக