வியாழன், 25 மே, 2017

730. மு.சி.பூரணலிங்கம் பிள்ளை - 1

திறனாய்வுச் செம்மல் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை
முனைவர் வே.மாணிக்கம்


மே 25. பூரணலிங்கம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.
====
தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர் பூரணலிங்கம் பிள்ளை.

இவர் நம் மண்ணின் மரபுகளையும், மக்களின் அறிவியல் சிந்தனைகளையும், இயற்கையோடு இணைந்த வழிபாட்டு நெறிமுறைகளையும் உயர்த்திப் பிடித்தார். பிற்காலத்தில் திராவிட  இயக்கம் கையிலெடுத்த பல கொள்கைகளுக்கு இவர்தான் முன்னோடியாகத் திகழ்ந்தார் எனலாம்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமான நன்செய் வயல்கள் சூழ்ந்த "முந்நீர்ப்பள்ளம்" என்னும் கிராமத்தில் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தார். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய "பூரணலிங்கம்" என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த சைவர்கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி, ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1902ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பாடத்தை நீக்க முயன்றபோது பூரணலிங்கம் பிள்ளை அதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்தார்.

1885ஆம் ஆண்டு பூரணலிங்கனார் பரிதிமாற்கலைஞரையும் அழைத்துக் கொண்டு ஹர்சன் பிரபுவைச் சந்தித்து செம்மொழியாகும் தகுதி தமிழுக்கே முழுமையாக உள்ளது என வாதிட்டார். தமிழ்மொழியின் தொன்மையையும், உலக மனித இனத்தை ஒன்றென அன்பு கொள்ளும் நாகரிகத்தையும், இயற்கையோடு இணைந்து சிந்திக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகளையும், பல்வேறு மொழிகளுக்குத் தாயாகிய போதும் தன் தனித்தன்மை குன்றாத இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்டு விளங்குவதையும் தொகுத்து அரசுக்கு அவர் மனு அளித்தார். தமிழைச் செம்மொழியாக்க வேண்டிய தேவையை ஊர் ஊராகச் சென்று அவர் முழங்கினார்.

பூரணலிங்கம் பிள்ளை எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். "கருணாமிர்தசாகரம்" போன்ற அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களைக் கூட முழு மூச்சில் வாசித்து முடிப்பார். இவர் எழுதுவதிலும் வல்லவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது "ஞான போதினி" என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் "நீதி" என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.

தமிழ் நாட்டில், தமிழரின் பண்பாட்டையும், அறிவியல் சிந்தனைகளையும், தொழில் நுட்பங்களையும், மரபுகளையும், பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கும் வகையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வலியுறுத்தி எழுதியும், பேசியும் வந்தார். இவற்றின் பயனாக பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு இராமநாதபுரம் மன்னர் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். அம்முயற்சியின் விளைவே இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

பூரணலிங்கனாரின் படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழி மாற்றம், சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது.

இளமையில் கற்ற தமிழ்க் கல்வியும், தமிழறிஞர்களின் நட்பும்தான், இவரைத் தமிழ்ப் பற்றாளராக மாற்றின.

மேலப்பாளையம் பள்ளியில் பயிலும்போது, சுந்தரம் பிள்ளையிடம் இலக்கணமும் முத்துசாமிப் பிள்ளையிடம் திருக்குறளும் பயின்றார்.

பிற்காலத்தில், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர்
கோவை சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.

தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியா" என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற ஆங்கில நூலை எழுதினார்.

"பத்துத் தமிழ் முனிவர்கள்" என்ற நூலில் மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள சமயச் சான்றோர் பதின்மர் வரலாற்றையும், அவர்களுடைய தத்துவங்களையும் விளக்கியுள்ளார்.

இவர் எழுதிய, இராவணப் பெரியோன், சூரபதுமன் வரலாறு ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை. பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும் ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆசிரியர் பணியிலிருந்து 1926இல் ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளத்திற்குத் திரும்பி வந்த பின் பல்வேறு கட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1940) வழி நடத்தினார். உயர் ஜாதி அல்லாத மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் உழைத்ததை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் எழுதிய கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.

மனித குலத்தார் அனைவருக்கும் தன்னலத்திற்கு அப்பால் சமூக நீதிக்கான ஒரு இலட்சிய வாழ்க்கை இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டியவர் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை. அவ்வாறு வாழ்ந்த பூரணலிங்கம் பிள்ளை, தமது 81வது வயதில், 1947ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

அவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவரது தமிழ்ப் பணிக்கும், தமிழ் உணர்வுக்கும் அளிக்கப்பட்ட உயரிய மரியாதையாகும்.

[ நன்றி:- தினமணி]

தொடர்புள்ள பதிவு
மு. சி. பூரணலிங்கம் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: