புதன், 9 ஆகஸ்ட், 2017

799. பாடலும் படமும் - 19

சந்திரன் 
கி.வா.ஜகந்நாதன்

[ ஓவியம் : எஸ்.ராஜம் ] 
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் 
கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் 
வங்கண் உலகளித்த லான்'   - சிலப்பதிகாரம் 

ஒவியத்தில் சதுரமான பீடத்தின்மேல் அமைந்த ஆசனத்தில் சந்திரமூர்த்தி வீற்றிருக்கிறான். அந்தப் பீடம் உள்ள தேர், இரண்டு சக்கரங்களும் பத்துக் குதிரைகளும் உடையதாக இருக்கிறது. கையிலே வெள்ளை அல்லியை எந்தி, உடம்பெல்லாம் அணிகள் அணிந்து, பன்னிற மாலை வேய்ந்து, முடி புனைந்து விளங்குகிறான் மதிக்கடவுள். தண்மையும் மென்மையும் அமைதியும் உருவாக விளங்கும் அவனுடைய திருமுக மண்டலத்துக்குப் பின் ஒளி வட்டம் ஒளிர்கிறது. வெண்குடை, இடத்தே ஓங்கி நிற்க, அதன் மேல் சிங்கக் கொடி பறக்கிறது. கர்க்கடக ராசிக்கு உடையவன் இவன் என்பதை அருகில் உள்ள நண்டு குறிக்கிறது.

சந்திரனை அடுத்து ரோகிணி இருக்கிறாள். அவளருகே உள்ள நட்சத்திரம் அவள் நட்சத்திர மங்கை என்று காட்டுகிறது. சந்திரனின் அதிதேவதையாகிய நீர், இங்கே நீர்மகளாக நீர்ப்பரப்பின்மேல் தோற்று கிறாள். அவனது இடப்புறத்தே பிரத்தியதி தேவதையாகிய கெளரி, குழற் கோலம் திகழ வீற்றிருக்கிருள். பின்னே மேருமலை, நிழல்போலத் தோன்றுகிறது. சந்திரன் நிசாகரன் ஆதலின் இரவின் கருமையையே நிலைக்களமாக வைத்து, ஒவியர் இதைத் தீட்டியிருக்கிறார். முகிற்கணம் சிதறிய வானத்தையும் அந்த நிலைக்களத்திலே காண்கிறோம்.

எல்லாம் எழில் உருவாக அமைய, இடையே அமுத எழில் பொங்க, அருளொழுகு கண்ணும் சாந்தம் மலரும் முகமும் உடைய வெண்மதித் தேவன் வீற்றிருப்பது இனிய காட்சி.

தண்ணென் நிலவால் சராசரத்துக் கின்புதவிக் 
கண்ணெகிழும் பூங்குவளை கட்டவிழ்த்து-விண்ணவர்கள் 
ஆரமுதம் உண்ண அருளோ டொளிபரப்பிச் 
சீருறுவான் திங்கட்புத் தேள்,
                         

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக