செந்தமிழ்க் களஞ்சியம் "மே.வீ.வே."
டாக்டர் ப.சரவணன்
ஆகஸ்ட் 31. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் பிறந்த தினம்.
"இலக்கணத் தாத்தா" என்று அறிஞர் பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. தமிழ்த்தொண்டே தம் தொண்டு எனக் கொண்டுழைத்த அவர், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை மரபைச் சார்ந்தவர். ஒரு பெரிய நிறுவனம் சாதிக்க வேண்டிய, சாதிக்க முடியாத அருந்தமிழ்ப் பணியை ஆற்றி மறைந்தவர்.
மே.வீ.வே. சென்னை, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில் 1896 ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார். தமது இளமைக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் வறுமையின் காரணமாகக் கல்வியைத் தொடர முடியவில்லை. அப்போது சென்னை வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே. அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகவும், அஞ்சலகத்திலும், வழக்குரைஞர்களிடத்தும் உதவியாளராகவும் பணிபுரிந்தார். என்றாலும், தமிழார்வம் காரணமாக கா.ர.கோவிந்தராச முதலியாரிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கலாநிலையம் சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவுப் பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். அதன்பின்பு வித்துவான் தேர்வில் வெற்றி கண்டு பட்டம் பெற்றார்.
1920ல் சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீஷியல் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாகப் பணியை விட்டு விலக நேர்ந்தது. எனினும் பணியினை துறந்தாரே அன்றி தமிழைத் துறக்கவில்லை. 1928ல் தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் தேர்வு, வித்துவான் தேர்வு முதலியவற்றிற்குரிய தனி வகுப்புகளை நடத்தி வந்தார். தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மட்டும் பாடம் சொல்லித் தரும் இன்றைய ஆசிரியர்களைப் போல் அல்லாமல் தமது மாணவர்கள் அறிஞர் பலரும் வியக்கும்படி புலமைப் பெற்றுத் திகழ வேண்டும் என்று விரும்பியவர் மே.வீ.வே. அவர் தமது மாணவர்களை நோக்கி,
"வித்துவான் பட்டம் பெற்றீர்கள். அதனைக் காற்றில் பறக்கவிடும் பட்டமாக்காதீர்கள். மேன்மேலும் பயின்று தக்க அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; பிறருக்கும் வழங்குங்கள். வழியில் கேட்ட ஐயத்திற்கு வீட்டில் விடை எண்ணாதீர்கள். தக்கவாறு பொருள் உணர்ந்து கேட்போர் ஐயமற வெளியிடுங்கள்," என்று கூறுவதிலிருந்து தமது மாணாக்கர் எப்படித் திகழ வேண்டும் என்று விரும்பினார் என்பதை அறியலாம்.
புரசை - லுத்ரன் மிஷன் பள்ளிப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்த குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக இவர் பணியாற்றிய போது ஜெர்மானியர் பலருக்கும் தமிழ் போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரிடம் தமிழ் பயின்ற ஜெர்மானியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், டாக்டர். ஸ்டாலின், டாக்டர். கிராபே (இவர் பெரிய புராணத்தை ஜெர்மனியில் மொழிபெயர்த்த எல்வின் மகள்), ஹில்டகார்டு மற்றும் பலர். இதேபோல, செக்.நாட்டு திராவிட மொழி ஆராய்ச்சியாளர் டாக்டர் கமில் சுவலபிலும் மே.வீ.வே.யின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவலபில், மே.வீ.வே. மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் என்பதை அவர் எழுதிய தமிழகச் சித்தர்களைப் பற்றிய "The Poets of the Powers" என்னும் நூலில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு "எனது குரு" என்று குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற மே.வீ.வே. பாடம் போதிக்கும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் எழுதுவதிலும் இவருக்கு இணை இவரே. டாக்டர். உ.வே.சா. கூட தாம் பதிப்பிக்கும் நூல்களில் சில குழப்பங்களுக்கு மே.வீ.வே.வையே நாடினார் என்பதும் இங்கே பதிவு செய்யக் கூடிய விஷயமாகும்.
தமிழ் மொழியை தொல்பொருள் ஆராய்ச்சியாக ஆராய்ந்த சிற்பி மே.வீ.வே. அரசாங்க இலக்கிய - இலக்கண பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகத் தமது இறுதிக் காலம் வரை இவர் இருந்துள்ளார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
மே.வீ.வே. தாமாக முயன்று பதிப்பித்த நூல்கள்;
இறையனார் அகப்பொருள், தொல்.சொல் (நச்சர் உரை), தஞ்சைவாணன் கோவை, வீரசோழியம், யாப்பருங்கலம், அஷ்டபிரபந்தம், யசோதரகாவியம், நளவெண்பா முதலியன.
இலக்கண உலகில் இவர் பதிப்பித்த யாப்பருங்கலக்காரிகை இன்றும் அறிஞர்களால் போற்றப்படுகிறது. இதற்கு இணையான ஒரு பதிப்பு இன்றுவரை இல்லை என்றே கூறலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள்பதிப்பு செய்துள்ளது. இவர் பதிப்பாளராக மட்டுமன்றி படைப்பாளராகவும் இருந்துள்ளார்.
பத்திராயு(அ) ஆட்சிக்குரியோர், திருக்கண்ணபிரானார் அற்புதவிளக்கு,
குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு, அரிச்சந்திர புராணச் சுருக்கம்,
அராபிக்கதைகள், முதலியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இது தவிர; அம்பலவாணன், இளங்கோவன் என்னும் இரு புதினங்களையும் படைத்துள்ளார்.
இவரது பதிப்புப்பணி - படைப்புப்பணி குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. பின்வருமாறு கூறுகிறார்;
"திரு.வேணுகோபாலப்பிள்ளை விளம்பரமின்றி ஆரவாரமின்றி, அமைதியில் நின்று தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்வோருள் ஒருவர். திரு.பிள்ளை, நூல்களைப் பிழையின்றி பதிப்பிப்பதில் பெயர் பெற்றவர். இவரது தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மைச் செய்யும் பெற்றி வாய்ந்தது." (நவசக்தி 8.4.1938).
திருத்தமான செயல்களுக்கு அடிப்படை மொழியே. மொழி செப்பமாக இல்லாவிட்டால் கருதிய எச்செயலும் கருதியபடி நடவாது என்பதை உணர்ந்த மே.வீ.வே. மொழியில் பிழை நேராதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார். "தமிழ் நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பிழையின்றி திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதே என் வாழ்வின் குறிக்கோள்" என்னும் அவரின் கூற்றே இதற்குப் போதிய சான்று.
1939-45ல் உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் சென்னையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் பாதிப்புக்குள்ளான பலர் பல்வேறு இடங்களில் சிதறினர். மே.வீ.வே. காஞ்சிபுத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் அவரது தமிழ்ப்பணி ஓயவில்லை. "கச்சித் தமிழ்க் கழகம்" என்னும் ஓர் அமைப்பை நிறுவி பலருக்கும் தமிழ் உணர்வை ஊட்டினார். அத்துடன் சீவகசிந்தாமணி குறித்து நெடியதோர் சொற்பொழிவாற்றினார். இவரது பேச்சைக் கேட்ட பலரும் இவரை சமண மதத்தவர் என்றே எண்ணலாயினர். அதனால்தான் திரு.வி.க. "சிந்தாமணிச்செல்வர்" என்னும் பட்டமளித்து இவரைப் பாராட்டினார். சுவாமி விபுலானந்த அடிகளும் "உமது தமிழறிவு நாட்டிற்குப் பயன்படுவதாகுக," என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.
இது தவிர;
செந்தமிழ்க்களஞ்சியம் (அறிஞர் அண்ணா வழங்கியது),கன்னித் தமிழ்க்களஞ்சியம், கலைமாமணி ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் மே.வீ.வே.க்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.
படிப்பது, எழுதுவது, பதிப்பிப்பது, பாடம் சொல்லித்தருவது என்ற வட்டத்துக்குள்ளேயே தமது வாழ்நாளைக் கழித்தவர். எந்த ஒரு நூலையும் நன்கு படித்து தேர்ந்த பின்னரே அதைப் பற்றிய கருத்தையோ விளக்கத்தையோ கூறும் இயல்புள்ள இவர், அரைகுறையாகப் படித்துவிட்டு கருத்துக் கூறுவது தவறு என்று பிறருக்கு அறிவுரை கூறுவார்.
தமிழ் இலக்கிய உலகில் 89 ஆண்டுகள் வரை உலவிய மே.வீ.வே. 4.2.1985 அன்று இரும்புண்ட நீரானார். நல்லவர்கள் உதிப்பதும் - மறைவதும் நன்நாளில் என்பதற்கேற்ப இவர் கோகுலாஷ்டமியில் பிறந்து தைப்பூசத்தில் மறைந்தார். இவரது பெருமையை பறைசாற்றும் வகையில் ஜெர்மனி கோல் பல்கலைக்கழகம் இவரது பெயரைச் சூட்டி கெளரவித்தது. தமிழக அரசு இவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தது.
இவை அனைத்தினூடே கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் எழுதிய "பாவலர் போற்றும் மகாவித்துவான் மே.வீ.வே." என்னும் தொகுப்பு நூல் இவரது புகழை இன்றளவும் பேசிக்கொண்டிருக்கிறது.
[ நன்றி: தினமணி ]
தொடர்புள்ள பதிவுகள்:
மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை : விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக