ரமணானந்தத்தில் திளைத்த தேசியக்கவி முகவை முருகனார்
லா.சு.ரங்கராஜன்
ஆகஸ்ட் 28. முகவைக் கண்ண முருகனாரின் நினைவு தினம்.
முகவைக் கண்ண முருகனார் (1890-1973) என்ற வரகவிராயரைப் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், 1910-1924 கால கட்டத்தில் ஒரு தேச பக்த கவிஞராகத் தமிழ் நாடெங்கும் பிரபலமாக அறியப்பட்டார். சம காலத்தியவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு இணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர் தேசியக்கவி முருகனார்.
பாரதியாரின் தேசிய இயக்கப் பாடல்களின் முதல் தொகுப்பு "ஸ்வதேச கீதங்கள்' என்ற தலைப்பில் 1908-இல் வெளியாயிற்று. கவி முருகனாரின் "ஸ்வதந்திர கீதங்கள்' என்ற பாடல் தொகுப்பு, 1918-இல் நூல் வடிவம் பெற்றது. அது வெளியாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே "தேசிய சிந்தனை செறிந்த மகாகவிராயர்' என்று புகழ்ந்துரைக்கப்பட்டார் முருகனார்.
"மகாத்மா காந்தி பஞ்சகம்' என்ற தலைப்பில் தாம் எழுதிய "வாழ்க நீ எம்மான்...' என்று தொடங்கும் பாடலை, 1918-இல் சென்னைக் கடற்கரையில் திலகர் கட்டத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் பாரதியார் தமது கணீர்க் குரலில் உரக்க ஒலித்து, மக்களைச் சிலிர்க்க வைத்தாரல்லவா? அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே காந்திஜியைப் போற்றி கவி முருகனார் இயற்றிய,
""தானந் தழைத்திடுமே தன்மஞ் செழித்திடுமே
ஞானம் பழுத்திடுமே ஞானமெலாம் ஊனமிலாச்
சாந்தி யுபதேசித்த சன்மார்க்க சற்குருவாம்
காந்தி நன்னெறி நடக்குங்கால்''
என்ற பாடல் உடனடியாய் தமிழ்நாடெங்கும் பிரபலமாயிற்று. தென்னிந்தியர் அனைவரும் இந்திமொழி கற்க வேண்டும் என முதன்முதலாக வாதிட்டவர் கவி முருகனாராகத்தான் இருக்க வேண்டும். இது குறித்து, அவரது "ஸ்வதந்திர கீதங்க'ளில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
பிற்காலத்தில் தமிழ் இலக்கியத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில் சங்கத் தமிழ் நடையில் கவிதை மழை பொழிந்தவர். ஐந்து வயது வரையில் ஊமைபோல் வாய் திறவாமல் இருந்த இவர், பின்பு தமிழ்மொழியின் மீதிருந்த ஆர்வம் காரணமாக அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் என்பர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் (ராமநாதபுரத்துக்கு மற்றொரு பெயர் முகவை) ஓர் எளிய அந்தணர் குடும்பத்தில், 1890-ஆம் ஆகஸ்டு மாதம், கிருஷ்ணய்யர்-சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த தேதி அறியக்கிடைக்கவில்லை. இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆரம்பக்கல்வியை ஸ்காட் மிஷன் பள்ளியில் படித்தார். இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார்.
கல்லூரி நாள்களிலேயே அவருக்கிருந்த அபரிமித தமிழ்ப்பற்றின் விளைவாக, தமது பெயரை முருகனார் என்று தூய தமிழாக்கிக் கொண்டார். பிறந்த இடம் முகவை என்பதால், "முகவைக் கண்ண முருகனார்' என்ற பெயரில் பிரபலமானார்.
கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஓரிரு ஆண்டுகள் ராமநாதபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமித் தேவர் என்பவருக்கு திருக்குறள் கற்பிக்க நியமனம் பெற்றார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.
பிறகு தமது மனைவி மற்றும் விதவைத் தாயார் சகிதம் சென்னை நகருக்கு இடம் மாறி, நார்விக் மகளிர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்போது தேசியப் பாடல்கள் பல இயற்றிப் பிரபலமாகி வந்தார்.
அந்தக் காலகட்டத்திலேதான் ஸ்ரீரமண மகரிஷியின் எளிய அத்வைத உபதேசம் தாங்கிய "நான் யார்?' என்ற சிறு நூலை 1922-இல் படிக்க நேர்ந்தது. படித்ததும் பரவசமானார். அதே ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியை (1879-1950) தரிசித்து, சமைந்து நின்றார். தேசபக்திக் கனல் மங்கி சாம்பல் பூத்தது. ஆன்மிக எழுச்சி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், ராவ்பகதூர், வ.சு.செங்கல்வராயப் பிள்ளை, எஸ்.சச்சிதானந்தம் பிள்ளை, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆஸ்தானப் புலவர் ரா.ராகவையங்கார் போன்ற மகா மேதைகள் எல்லாம் போற்றிப் பேசியும், பாடியும் புகழும் அளவுக்கு ஓர் ஒப்புயர்வற்ற தமிழ் அறிவாற்றலைப் பெற்றிருந்தார் முருகனார். ராவ்சாஹிப், மு.ராகவையங்கார் முதலான தமிழ் வல்லுனர்களுடன் தமிழ்ச் சொல்லகராதிக் (Lexicon) குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்த நூற்றாண்டின் சங்கப் புலவர் என்றே முருகனார் இவர்களால் போற்றப்பட்டார்.
1926-இல் தமது அருமை அன்னை மறைந்ததும், கடைசி உலகப்பற்றும் அறுந்தது. தமிழ்ப் பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார். வீடு வாசல் துறந்தார். தனியாகத் திருவண்ணாமலை சென்று ஸ்ரீரமணரின் காலடி பணிந்து, தன் வயமிழந்தார். புற வாழ்வை அறவே துறந்தார். கடைசிவரை ரமண மகரிஷியின் பரம பக்தராய், ஒரு துறவியாய் ரமணரின் நிழலாகவே வளைய வந்தார் முருகனார். ரமணரைச் சரணடைந்து, தேச பக்தியைத் துறந்து, ரமண பத்தியில் ஆன்ம அனுபூதி பெற விழைந்ததைப் பற்றி சற்றே சிலேடை கலந்த பாடலொன்றில் பதிவு செய்துள்ளார்.
திருவண்ணாமலையில், 1926-ஆம் ஆண்டு முதற்கொண்டு ஸ்ரீரமண தரிசனத்தைவிட்டு முருகனார் அகலவேயில்லை. உண்டிப் பிட்சை (உஞ்சவிருத்தி) எடுக்க ஆசிரமத்தை விட்டு வெளியே சென்ற நேரம் தவிர, நாள் முழுவதும் ஆசிரமத்து தியான மண்டபத்திலேயே சமைந்து கிடந்தார்.
பல்வேறு பக்தர்கள் மற்றும் வருவோர்-போவோர் மகரிஷி ரமணரிடம் எழுப்பிய ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்கள், கேள்விகள் அவற்றுக்கு மகரிஷி அளித்த பதில்கள், தெள்ளிய அறிவுரைகள் யாவற்றையும் முருகனார் மெüன சாட்சியாகச் செவிமடுத்தார். மகரிஷி பெரும்பாலும் தமிழிலேயே சுருக்கமாக விடையளிப்பது வழக்கம். இவ்வாறு ரமணர் தெள்ளிய உபதேச வாசகங்களையும், எளிய ஆன்ம விசாரத் தத்துவ சாரத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக்கொண்டு அவற்றைக் கருத்துச் செறிவான செந்தமிழ்ச் செய்யுள்களாகச் செதுக்கலானார். அவ்வப்போது மகரிஷி ரமணரிடமும் காண்பித்து, அவரது ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்றுவந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களைப் புகுத்தி, பாடலைப் புனரமைத்தார்.
இவ்வாறு கோத்தமைத்த நூலே "குருவாசகக் கோவை' என்பது. மொத்தம் 1,282 நாலடி வெண்பாக்கள் கொண்ட நூல். அவற்றுள் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை. இக் கோவை, குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது. ஆன்மிகர்களுக்கும், தமிழைச் சுவைக்கக் கூடியவர்களுக்கும் என்றென்றும் இலக்கிய மணம் வீசும் பாமாலையாக அமைந்துள்ளது. ஆனால், இன்றளவில் பரவலாக அறியப்படவில்லை என்பது வருந்தத்திற்குரியது. இப்பாடல்கள் அனைத்தையும் ரமண சித்தாந்தச் சிற்பியும், காந்திய மாமேதையுமாகத் திகழ்ந்த பேராசிரியர் கே.சுவாமிநாதன் (1896-1994), கவிதை, பொருள் நயம் சிறிதும் குன்றா வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்துள்ளார்.
1928-இல் முருகனாரின் முயற்சியால், ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் ஒன்றுதிரட்டப்பட்டுச் சீரமைத்துத் தொகுக்கப்பட்டன. இவையே "உள்ளது நாற்பது' என்ற தலைப்புடன் ஓர் அரும் பெரும் நூலாயிற்று. சாத்திர நூல்களைத் தவிர, ஸ்ரீரமண சந்நிதி முறை, ஸ்ரீரமண தேவமாலை, ஸ்ரீரமண சரணப்பல்லாண்டு, ஸ்ரீரமணானுபூதி முதலிய அரிய தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும், ரமண-அனுபூதி பற்றி முருகனார் தாமாகப் புனைந்துள்ள நூற்றுக்கணக்கான பாடல்கள் மூலம் மனங்கடந்து வியாபிக்கும் தூய உணர்வுப் பிரபஞ்சத்தில் சஞ்சரித்துத் தாம் லயித்த பரமானந்தப் பிரக்ஞையை வெவ்வேறு கோணங்களில் விவரித்துள்ளார்.
முகவை முருகனார் இயற்றிய இந்த "ஸ்ரீரமண சந்நிதி முறை' நூலை "திருவாசகம் நிகரே' என்று பகவான் ஸ்ரீரமணர் புகழ்ந்துள்ளார். "என்றைக்கு குருவாசகக் கோவையும் ஸ்ரீரமண சந்நிதி முறையும் முருகனாரிடமிருந்து வெளிவந்தனவோ, அன்றே முருகனார் தலையாய அடியவர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார்' என்றும் கூறியிருக்கிறார்.
பதினான்காயிரம் (14,000) பாக்கள் இயற்றிய முருகனாரின் பாடல்கள், "ரமண ஞான போதம்' என்ற தலைப்பில் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டு சாதனை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரமண மகரிஷி 1950-இல் மகா நிர்வாணம் எய்திய பிறகு 23 ஆண்டுகாலம் முருகனார் வாழ்ந்து, ஆன்மிகப் பாக்களை சரமாரியாகப் புனைந்து வந்தார். சுமார் 30,000-க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார். கடைசி ஆண்டுகளில் ரமணாசிரமத்திலேயே தங்கியிருந்து, ஆன்மிக நாட்டத்துடன் அணுகுவோர்க்கு தெள்ளிய விளக்கங்கள் அளித்து வந்தார்.
ரமண மகரிஷியிடம் தாம் தம் கவிதைகளில் வெளிப்படுத்திய பக்திக்குப் பன்மடங்கு மேலாகத் தம் சொந்த வாழ்வில் அப் பரபக்தியை வெளிப்படுத்தி, வாழ்ந்து காண்பித்த முருகனார், 1973-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28-ஆம் தேதி பகவான் திருவடிகளில் ஒன்றுகலந்தார். இவரது சமாதி ரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
இராமநாதபுரத்தில் பிறந்து, வசித்த முருகனாரது இல்லம், அன்னாரது நினைவகமாக "ஸ்ரீமுருகனார் மந்திரம்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, ரமண பக்தர்கள் வணங்கும் ஒரு புனிதத் தலமாக விளங்கிவருகிறது. தேசியக் கவியாகவும், வரகவியாகவும் திகழ்ந்த முருகனாரது தமிழ்த் தொண்டும் புகழும் ஸ்ரீரமணர் புகழ் பாடும் இடமெல்லாம் நிலைத்திருக்கும் என்பது உறுதி.

[ நன்றி : தினமணி ]
தொடர்புள்ள பதிவுகள்:
1 கருத்து:
மாமனிதர் மாமேதை முருகனார். தமிழ் வளம் கொட்டி இருந்தது இவரிடம். தமிழகம் இவரை கொண்டாட இயலாமல் போனது தமிழகத்தின் இழப்பு.
கருத்துரையிடுக