புதன், 2 ஆகஸ்ட், 2017

794. பொழுதே விடியாமற் போ! : கட்டுரை

பொழுதே விடியாமற் போ!
பசுபதி



காலை விடிந்தால் கழுத்தில் கயிறு!

நீதிபதியின் தீர்ப்பைக் கேட்ட பிரதாபன் அதிர்ந்து போனான்.
முடியரசு ஒன்று குடியரசாக மாறின பிறகு, அங்கே சென்றிருந்த பிரதாபன் பொய்வழக்கு ஒன்றில் மாட்டிக் கொண்டுவிட்டான். எப்படி இந்த இக்கட்டிலிருந்து தப்பிப்பது என்று தீவிரமாய் யோசித்தான். “பொழுது விடிந்தால் தானே என்னைத் தூக்கிலிடுவார்கள் பொழுதே விடியாமற் போனால் ?…” என்று நீதிபதியிடம் கேட்டான். “உன்னால் சூரியன் உதிக்காமல் இருக்கச் செய்யமுடிந்தால் செய்யேன்!’ என்று கோபத்துடன் சொல்லிச் சென்றார் நீதிபதி.  

ஊரிலிருந்த பல பேருக்கு ஒரு பயம். பிரதாபனுக்கு ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு மந்திர சக்தி உண்டோ ?

இரவு முழுதும் பிரதாபனைக் காவலாளிகள் கண்காணித்தனர். பிரதாபனோ இரவு முழுதும் ஏதோ மந்திரம் செய்வதுபோல் இருந்தான். பிறகு திடீரென்று, ஒரு வெண்பாவைப் பாடினான்.. அந்தக் காலத்தில் வெண்பாவைச் சங்கராபரணம் ராகத்தில் தான் பொதுவாகப் பாடுவார்கள்; பிரதாபன் எந்த ராகத்தில் பாடினானோ, தெரியவில்லை. ஆனால், அவன் சாபம் கொடுப்பதுபோல் பாடிய வெண்பாவைக் கேட்ட சில காவலாளிகளுக்கு உள்ளூற ஒரு திகில் ஏற்பட்டது.

பிரதாபன் பாடிய வெண்பா:
  
முடியரசன் போனபின்பு மூர்க்கரெல்லாம் கூடிக்
குடியரசென் றோர்பெயரைக் கூறிநெடிய
பழுதே புரியுமிந்தப் பாழூ ரதனிற்
பொழுதே விடியாமற் போ!     

என்ன ஆச்சரியம்! அடுத்த நாள் காலையில் சூரியன் உதிக்கவில்லை! பயத்தில் நடுங்கிய ஊரார் உடனே நீதிபதியிடம் ஓடி அவரைத் திட்டினர். அவரும் ஓடிவந்து, பிரதாபனிடம் மன்னிப்பு வேண்டி, சாபத்தை நீக்கும்படி வேண்டினார். பிரதாபனும் இன்னொரு வெண்பாப் பாடினான்.

வாடு பயிர்க்குவரு மாமழைபோல் நைந்துருகு
நாடுமக வுக்குதவு நற்றாய்போல்நாடு
முழுதே யழுதேங்க மூடுமிருள் நீங்கப்
பொழுதே விடிவாயிப் போது.

என்ன அதிசயம்! சூரியன் மெல்ல  எழத் தொடங்கினான் !
இந்தச் சம்பவம் எங்கே நடந்தது என்று கேட்கிறீர்களா? தமிழின் முதல் நாவல் என்று புகழப்படும்பிரதாப முதலியார் சரித்திரத்தில் தான்! எப்படி நடக்க முடியும் என்கிறீர்களா? சூரிய கிரகணம் எந்த நாள் வரும் என்பதைக் கணிக்கத் தெரிந்தவன் பிரதாபன். எப்போது கிரகணம் தொடங்கும், எப்போது விலகும் என்பதை அறிந்த பிரதாபன் அந்த உண்மையைச் சாமர்த்தியமாய்ப் பயன்படுத்திக் கொண்டான்! ( தற்காலக் கதாநாயகர்கள் போலன்றி, வெண்பாவும் இயற்றத் தெரிந்தவன் பிரதாபன்! )

இப்படிச் சூரிய கிரகணம் பிடிக்கும் நேரம் அறிந்த கதாநாயகர்கள் அதை அறியாத எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் சம்பவங்களைப் பல ஆங்கில நாவல்கள் சித்திரித்து உள்ளன. மார்க் ட்வெய்னின் “ Connecticut Yankee in King Arthur’s Court”,  ரைடர் ஹேகார்ட்டின் ( Rider Haggard)  King Solomon’s Mines போன்றவற்றில் இவை உள்ளன. ஆனால், தமிழ் மொழிக்கே உரிய, தமிழ்நாட்டின் கவிதைப் பொக்கிஷமான வெண்பாவைப் பயன்படுத்தி , மாயூரம் வேதநாயகம் பிள்ளை இந்த இயற்கை நிகழ்ச்சியை, அறிவியலுக்குப் பொருந்தும்படி  கதைப்படுத்தியது அவருடைய திறமைக்கும், வெண்பாப் புனையும் ஆற்றலுக்கும் ஓர் எடுத்துக் காட்டு! கதையின் ஊற்றுக் கண் எதுவாயினும், நாவலின் இந்தக் கட்டத்தில் ஓர் அக்மார்க்தமிழ் மணம் கமழ்கிறது , பார்த்தீர்களா? அது வெண்பாக்கள் செய்யும் ஜாலம் !

நாவலில் இன்னோரு அழகான வெண்பாவும் வருகிறது! மேற்கண்ட நிகழ்ச்சியைத் தன் மனைவி ஞானாம்பாளிடம் பிரதாபன் சொல்ல, அவள் குலுங்கக் குலுங்கச் சிரித்துவிட்டுக் கணவனின் சாமர்த்தியத்தை மெச்சி ஒரு வெண்பாப் பாடுகிறாள்! ( அட! கதாநாயகிக்கும் வெண்பா இயற்றத் தெரிந்திருக்கிறதே! )

தீயே சுடுமென்பார்! தண்ணீர் குளிருமென்பார்!
ஈயே பறக்குமென்பார்; இன்னமுந்தான்பாய்காகம்
சுத்தக் கறுப்பென்பார் சூழ்கொக்கு வெண்மையென்பார்
அத்தானைப் போல்சமர்த்தர் யார்?

என்ன உரிமையுடன் கணவனிடம் கொஞ்சல்! பரிகாசம் ததும்பும் நக்கல்! பார்த்தீர்களா?  

முதல் தமிழ் நாவலில் மிளிரும்,  அதன் ஆசிரியரே இயற்றிய  இந்த மூன்று பாக்களும்  தமிழ் நாவல் இலக்கியத்தில் பொதுவில் காணப்படாத மூன்று வெண்பா முத்துகள்.


[ ‘இலக்கிய வேல்’ மே 2017 இதழில் வெளியான கட்டுரை ] 

தொடர்புள்ள பதிவுகள்:

5 கருத்துகள்:

Babu சொன்னது…

மிகவும் அருமையானகட்டுரை.தமிழ் மொழிக்கு வாசகர்கட்கு நீங்கள் ஆற்றும் சேவை மகத்தானது.மனமார்ந்த வாழ்த்துக்கள். -பாபு

Sridharan Balaraman சொன்னது…

மிகவும் அருமையான பதிவு! வெண்பாக்கள் அபாரம்! கதையைத்தேடிப்படிக்க மனம் விழைகின்றது!

Unknown சொன்னது…

Beautiful. Thank you Sir for bringing these Pearls.

KAVIYOGI VEDHAM சொன்னது…

ஆகா என்ன அழகு என்ன சாமர்த்யம் கதாநாயகன் + கதாசிரியனின் வசனம் பிரமிக்க வைக்கிறது, வாழ்க தமிழின் திறம் கவியோகி வேதம்

usharaja சொன்னது…

அருமையானக்கருத்துக்கு மிக்க புலமையான விளக்கம்!
மிக்க புதுமை!